மீகா 2
2
மனிதனின் திட்டம்
1இரவில் தங்கள் கட்டில்களில் விழித்திருந்து தீமையான சூழ்ச்சிகளைச் செய்து,
அநியாயத்தைத் திட்டமிடுகிறவர்களுக்கு ஐயோ பேரழிவு,
அதைச் செய்யத்தக்க பலம் அவர்களில் இருப்பதனால்,
விடிகாலைப் பொழுதாகின்றபோது அதைச் செயல்படுத்துகிறார்கள்.
2அவர்கள் வயல்களில் ஆசைகொண்டு,
அவற்றைப் பறித்துக்கொள்கிறார்கள்.
வீடுகளையும் அநீதியாய் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஒருவனுடைய வீட்டையும், அவனுடைய உரிமைச் சொத்தையும் ஏமாற்றிப் பறிக்கிறார்கள்.
3ஆகையால் கர்த்தர் சொல்கிறதாவது:
“இந்த மக்களுக்கு எதிராக ஒரு பேராபத்தைத் திட்டமிட்டிருக்கிறேன்,
அதிலிருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது.
இனிமேல் நீங்கள் பெருமையாய் நடக்கவும் முடியாது.
ஏனெனில் அது பேரழிவின் காலமாயிருக்கும்.
4அந்தநாளில் மக்கள் உங்களைக் குறித்து கேலிப் பாடல் பாடி,
இவ்வாறு புலம்புவார்கள்:
‘நாம் முற்றிலும் பாழானோம்;
நமது மக்களின் உடைமைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.
கர்த்தர் நம்மிடமிருந்து அதை எடுத்துக்கொள்கிறார்!
நம் வயல்வெளிகளை நம்மை சிறைப்பிடித்த எதிரிகளுக்கு கொடுக்கின்றார்.’ ”
5ஆதலால் நிலத்தைச் சீட்டுக்குலுக்கிப் போட்டு பாகம் பிரித்துக் கொடுக்க,
கர்த்தரின் சபையில் உங்களில் ஒருவனும் இருக்க மாட்டான்.
பொய் தீர்க்கதரிசிகள்
6அந்த மக்களின் தீர்க்கதரிசிகள் என்னை நோக்கி,
“தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம்” என்கின்றார்கள்
“இவற்றைக் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம்.
எந்த அவமானமும் எங்களுக்கு நேரிடாது”
என்றும் என்னிடம் சொல்கின்றார்கள்.
7மேலும் யாக்கோபின் வழித்தோன்றல்களே#2:7 வழித்தோன்றல்களே – வீட்டாரே, நீங்கள்:
“கர்த்தரின் ஆவியானவர் கோபம் கொண்டுள்ளாரோ?
அவர் இவ்வாறானவற்றைச் செய்கின்றவரோ?”
“நீதியான வழியில் நடக்கிறவனுக்கு
என் வார்த்தைகள் நன்மையைச் செய்யாதோ?
என்று அவர் சொல்கின்றார் அல்லவா?”
என்றும் சொல்கிறீர்கள்.
8அதற்கு கர்த்தரின் பதில்:#2:8 அதற்கு கர்த்தரின் பதில் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது
அண்மைக்காலமாக என் மக்கள்
ஒரு பகைவனைப் போல் எழுந்திருக்கிறார்கள்.
நீங்கள் போரிலிருந்து திரும்பி வரும்போது,
பயமின்றி கடந்து போகின்றவனிடமிருந்து
பெறுமதியான அங்கியைக் களைந்து கொள்கின்றீர்கள்.
9என் மக்களுள் இருக்கும் பெண்களை,
அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த வீடுகளிலிருந்து நீங்கள் துரத்திவிடுகிறீர்கள்.
அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்தும்
என் ஆசீர்வாதங்களை என்றென்றுமாய் எடுத்து விடுகின்றீர்கள்.
10எழுந்து போய் விடுங்கள்,
இது உங்கள் இளைப்பாறுதலின் இடமல்ல,
ஏனெனில் இது உங்கள் பாவங்களால் கறைப்பட்டு
திருத்த முடியாத அளவு பாழாய்ப் போய்விட்டது.
11என் மக்களே, பொய்யனும் வஞ்சகனுமான ஒருவன் உங்களிடம் வந்து,
“உங்களுக்கு அதிக திராட்சைரசமும், மதுபானமும் கிடைக்கும் என்று
நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்”
என்பானாயின்
அவனே உங்களுக்கு ஒரு சரியான தீர்க்கதரிசி.
மீட்புக்கான வாக்குறுதி
12யாக்கோபே, ஒருநாளில் உங்கள் எல்லோரையும்
நிச்சயமாகவே நான் ஒன்றுசேர்ப்பேன்,
இஸ்ரயேலில் எஞ்சியோரை நிச்சயமாகவே நான் ஒன்றுகூட்டுவேன்.
தொழுவத்தின் செம்மறியாடுகளைப் போலவும்,
மேய்ச்சல் நிலத்தின் மந்தைகளைப் போலவும் நான் அவர்களை ஒன்றாகக் கொண்டுவருவேன்.
அந்த இடம் மக்களால் நிறைந்திருக்கும்.
13தடைகளை உடைத்து அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறவர்,
அவர்களுக்கு முன்பாகச் செல்வார்;
அவர்கள் வாயிலை
உடைத்துக்கொண்டு வெளியேறுவார்கள்.
அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்பாகக் கடந்து போவார்;
கர்த்தரே அவர்களின் முன் நின்று வழிநடத்திச் செல்வார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மீகா 2: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.