மீகா 3
3
தலைவர்களும் இறைவாக்கினர்களும் கண்டிக்கப்படுதல்
1அப்போது நான் சொன்னதாவது:
“யாக்கோபின் தலைவர்களே;
இஸ்ரயேல் மக்களின்#3:1 மக்களின் – குடும்பத்தின் ஆளுநர்களே கேளுங்கள்.
நீதியை அறிந்திருப்பது உங்கள் கடமையல்லவா,
2ஆனால் நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையையே நேசிக்கிறீர்கள்.
என் மக்களின் தோலையும்,
அவர்களது எலும்புகளிலிருந்து சதையையும் கிழித்து எடுக்கிறீர்கள்.
3என் மக்களின் சதையைச் சாப்பிட்டு,
அவர்களின் தோலையெல்லாம் உரித்து,
எலும்புகளைத் துண்டுகளாக நொறுக்குகிறீர்கள்.
சட்டியில் போடும் இறைச்சியைப் போலவும்,
பானையில் போடும் சதையைப் போலவும் அவர்களை துண்டுகளாக்குகிறீர்கள்.”
4ஆனாலும், நாட்கள் வருகின்றன.
அப்போது நீங்கள் உதவிக்காக கர்த்தரை நோக்கி கூக்குரலிடுவீர்கள்.
ஆனால் அவர் பதிலளிக்கவே மாட்டார்.
அக்காலத்தில் நீங்கள் செய்த தீமையான செயல்களுக்காக
அவர் தமது முகத்தை உங்களுக்கு மறைத்துக்கொள்வார்.
5கர்த்தர் சொல்வது இதுவே:
எனது மக்களைத் தவறாய் வழிநடத்துகின்ற
“பொய் இறைவாக்கினர்களைக் குறித்துச் சொல்கின்றதாவது,
ஒருவன் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தால்,
‘சமாதானம்’ என்று பிரசித்தப்படுத்துகிறார்கள்.
அவ்வாறு கொடுக்காவிட்டால்,
அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆயத்தமாகிறார்கள்.
6ஆதலால் தரிசனங்கள் அற்ற இரவும்,
குறிபார்க்க முடியாத இருளும் அவர்கள்மீது வரும்.
பொய் இறைவாக்கினர்களுக்குச் சூரியன் மறைந்து,
பகலும் அவர்களுக்கு இருண்டு போகும்.
7தரிசனம் காண்பவர்கள் வெட்கப்பட்டுத் தலைகுனிவார்கள்.
குறிசொல்பவர்கள் அவமானம் அடைவார்கள்.
இறைவனிடமிருந்து பதில் கிடைக்காதபடியால்,
அவர்கள் எல்லோரும் தங்கள் முகங்களை மூடிக்கொள்வார்கள்”
என்று கர்த்தர் சொல்கின்றார்.
8ஆனால் நானோ யாக்கோபுக்கு அவன் மீறுதலையும்,
இஸ்ரயேலுக்கு அவன் பாவங்களையும் அறிவிக்கும்படி,
கர்த்தரின் ஆவியானவரால் வல்லமையுடன் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
அவர் என்னை நீதியினாலும்,
பலத்தினாலும் நிறைத்திருக்கிறார்.
9ஆகவே யாக்கோபின் வம்சத் தலைவர்களே,
இஸ்ரயேல் மக்களின் ஆட்சியாளர்களே,
நீதியை உதாசீனம்செய்து,
நியாயமானவற்றையெல்லாம் புரட்டுகிற நீங்கள் இதைக் கேளுங்கள்.
10இரத்தம் சிந்துதலினால் சீயோனையும்,
கொடுமையினால் எருசலேமையும் நிர்மாணிக்கின்றவர்களே, கேளுங்கள்.
11உங்கள் தலைவர்கள் இலஞ்சம் பெற்று தீர்ப்பு வழங்குகிறார்கள்.
உங்கள் மதகுருக்கள் வருமானத்துக்காகப் போதனை செய்கின்றார்கள்.
உங்கள் இறைவாக்கினர்கள் பணத்துக்காகக் குறிசொல்கின்றார்கள்.
ஆயினும் அவர்கள் கர்த்தர்மீது நம்பிக்கையுள்ளவர்கள் போல் காண்பித்தவாறு,
“கர்த்தர் நம் மத்தியில் இல்லையோ?
பேராபத்து நமக்கு உண்டாகாது”
என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
12ஆகையால் உங்களின் பொருட்டு,
சீயோன் வயலைப் போல உழப்படும்,
எருசலேம் மண்மேடுகளாகும்,
ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மீகா 3: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.