யோவேல் 2

2
கர்த்தரின் நாள்
1சீயோனிலே#2:1 சீயோனிலே – சீயோன் என்பது எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டிருந்த மலையின் பெயர். எக்காளம் ஊதுங்கள்,
என் பரிசுத்த மலையிலே எச்சரிக்கையின் ஒலியை எழுப்புங்கள்.
நாட்டில் வாழும் அனைவரும் நடுங்குவார்களாக!
ஏனெனில், கர்த்தரின் நாள் வருகின்றது,
ஆம், அது நெருங்கி வந்திருக்கின்றது.
2இருளும் மனச்சோர்வும் நிறைந்த நாள் அது,
மேகமூட்டமும் காரிருளும் சூழ்ந்த நாள் அது.
அந்திவேளையில் மலைகளின்மீது இருள் பரவுவது போல்,
வலிமைமிக்க பெரும்படையொன்று வருகின்றது!
இதுபோன்ற படை முற்காலத்தில் இருந்ததுமில்லை,
இனிவரும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை.
3அவற்றுக்கு முன்பாக இருக்கும் அனைத்தும் தீக்கிரையாகின்றன,
அவை கடந்து சென்ற பின்னால் தீச்சுவாலை பற்றியெரிகின்றது.
அவை கடந்து வருவதற்கு முன்னர் ஏதேன் தோட்டத்தைப் போலிருந்த நாடு,
அவை கடந்து சென்ற பின்னர் பாழான வெளியைப் போலிருக்கின்றது.
அவற்றிலிருந்து தப்புவது எதுவுமேயில்லை.
4அவை குதிரைகளின் தோற்றமுடையவை;
அவை போர்க்குதிரைகளைப் போல் பாய்ந்தோடுகின்றன.
5தேர்களின் இரைச்சலைப் போன்ற சத்தத்துடனும்,
காய்ந்த சருகுகளை எரிக்கும்போது எழுகின்ற சத்தத்துடனும்,
யுத்தத்துக்கு அணிவகுக்கும் வலிமைமிக்க படையைப் போன்று
அவை மலைகளின்மீது பாய்ந்து வருகின்றன.
6அவற்றைக் கண்டதும் நாடுகள் நடுங்கும்;
அனைவரது முகமும் அச்சத்தால் வெளிறிப்போகும்.
7அவை இராணுவ வீரர்களைப் போன்று முன்னேறுகின்றன;
போர்வீரர்களைப் போன்று நகர மதில்களில் ஏறுகின்றன.
அவை தங்கள் பாதையிலிருந்து விலகாமல்
நேராக அணிவகுத்துச் செல்கின்றன.
8அவை ஒன்றையொன்று இடித்துக்கொள்ளாமல்,
ஒவ்வொன்றும் தன் வழிதவறாமல் செல்கின்றன.
அணிவகுப்பைக் குலைக்காமல்
போராயுதங்களை முறியடித்து முன்னேறுகின்றன.
9அவை நகரத்தை நோக்கி விரைகின்றன,
நகர மதில்கள்மீது ஓடுகின்றன.
வீடுகளுக்குள் ஏறுகின்றன,
அவை திருடர்களைப் போன்று யன்னல் வழியே நுழைகின்றன.
10அவற்றின் முன்பாக பூமி நடுநடுங்குகின்றது,
வானங்கள் அதிர்கின்றன.
சூரியனும் சந்திரனும் இருளடைகின்றன,
நட்சத்திரங்கள் ஒளி தருவதை நிறுத்துகின்றன.
11கர்த்தர் தமது படையின் முன்பாக நின்று முழக்கமிடுகிறார்.
அவருடைய படையணி எண்ணற்றது,
அவருடைய கட்டளைப்படி செய்வதற்கு
வல்லமைமிக்கது.
கர்த்தரின் நாள் பெரிதும்
பயங்கரமுமானது.
அதை யாரால் சகிக்க முடியும்?
மனம்மாறுங்கள்
12ஆகையால், “இப்பொழுதேனும் உங்கள் முழு மனதுடன் என்னிடம் திரும்புங்கள்;
உபவாசித்து அழுது புலம்பி, துக்கத்துடன் வாருங்கள்”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
13உங்கள் உடைகளைக் கிழிக்க#2:13 உடைகளைக் கிழிக்க – அக்காலத்தில் மனவேதனையை வெளிக்காட்ட உடைகளைக் கிழிப்பது வழக்கம். வேண்டியதில்லை,
மாறாக உங்கள் உள்ளத்தை உடைத்திடுங்கள்.
உங்கள் இறைவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்,
ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர்,
கோபிக்கத் தாமதிப்பவர், நிலையான அன்பு நிறைந்தவர்;
பேரழிவை அனுப்பாமல் மனம்மாறுகின்றவர்.
14யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் உங்கள் பக்கமாகத் திரும்பி, மனம்மாறி,
உங்களுக்குத் தமது ஆசீர்வாதத்தைத் தரக்கூடும்.
அப்போது உங்கள் இறைவனாகிய கர்த்தருக்காக,
நீங்கள் தானியபலியையும் பானபலியையும் காணிக்கையாக வழங்கலாம்.
15மதகுருக்களே, சீயோனிலே எக்காளம் ஊதுங்கள்,
பரிசுத்த உபவாசத்தை அறிவியுங்கள்;
பயபக்தியான ஒன்றுகூடலுக்கு அழைத்திடுங்கள்.
16மக்களை ஒன்றுசேர்த்து,
வழிபாட்டுக்கு ஒன்றுகூடி வந்தோரை பரிசுத்தம் செய்யுங்கள்.
முதியோரை ஒன்றுகூட்டுங்கள்,
பிள்ளைகளையும் பாலருந்தும் குழந்தைகளையும்
இணைத்துக்கொள்ளுங்கள்.
மணமகன் தன் தனியறையையும்,
மணமகள் தன் படுக்கையறையையும் விட்டுப் புறப்படட்டும்.
17கர்த்தருக்கு முன்பாக ஊழியம் செய்யும் மதகுருக்கள்,
ஆலய மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் இடையே நின்று,
“கர்த்தாவே, உமது மக்களைத் தப்புவிப்பீராக!
உமது உரிமைச் சொத்தைப் பிற இனங்களின் நடுவே
நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதிருப்பீராக!
‘அவர்களுடைய இறைவன் எங்கே?’ என,
மக்கள் கூட்டங்கள் மத்தியில் பேசப்பட ஏன் இடமளிக்க வேண்டும்?”
என அழுது புலம்புவார்களாக!
கர்த்தரின் பதில்
18அப்போது கர்த்தர் தமது நாட்டின்மீது வைராக்கியம் கொண்டு,
தமது மக்கள்மீது அனுதாபம் கொண்டார்.
19கர்த்தர் தமது மக்களது மன்றாடலுக்கு பதிலளித்துக் கூறியதாவது:
“இதோ, உங்கள் விருப்பத்தைத் தீர்க்கும் அளவுக்கு
தானியத்தையும், புதிய திராட்சைரசத்தையும், ஒலிவ எண்ணெயையும் அனுப்புகின்றேன்;
மீண்டும் உங்களைப் பிற இனங்களின்
நிந்தைக்கு உரியவர்களாக்க மாட்டேன்.
20“வடக்கிலிருந்து வந்தவற்றை உங்களைவிட்டு அதிக தொலைவுக்குத் துரத்திவிடுவேன்;
பாழடைந்த வரண்ட நாட்டுக்கு அவர்களைத் தள்ளிவிடுவேன்.
அதன் முன்னணியை கிழக்குக் கடலிலும்,#2:20 கிழக்குக் கடலிலும் – சாக்கடல் என கருதப்படுகிறது
அதன் பின்னணியை மேற்குக் கடலிலும் மூழ்கடிப்பேன்.
அவற்றின் துர்நாற்றமும்
அழுகிய வாடையும் அங்கே மேலெழும்.”
நிச்சயமாகவே அவர்#2:20 அவர் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்.
21நிலமே நீ பயப்படாதே,
மகிழ்ந்து சந்தோஷப்படு;
நிச்சயமாகவே கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்.
22காட்டுமிருகங்களே, பயப்படாதிருங்கள்,
வனாந்தரவெளியின் மேய்ச்சல் நிலங்கள் மீண்டும் பசுமையாகின்றன.
மரங்கள் தமது கனிகளைக் கொடுக்கின்றன;
அத்திமரமும் திராட்சைக்கொடியும் நிறைவாகப் பலன் தருகின்றன.
23சீயோன் மக்களே, மனம் மகிழுங்கள்,
உங்கள் இறைவனாகிய கர்த்தரைக் குறித்து சந்தோஷப்படுங்கள்.
ஏனெனில் அவர் உங்கள் நிலைக்கேற்றபடி
போதுமானளவு மழையை அளித்துள்ளார்.
முன்பு போலவே மழைக்காலத்துக்கு முன்னரும் பின்னரும் பொழிகின்ற மழையை
தாராளமாக பொழியச் செய்கின்றார்.
24கதிரடிக்கும் களங்கள் தானியத்தினால் நிரம்பியிருக்கும்;
தொட்டிகள் புதிய திராட்சைரசத்தினாலும் ஒலிவ எண்ணெயினாலும் நிரம்பி வழியும்.
25நான் உங்களுக்கு மத்தியில் அனுப்பிய பச்சைப்புழுக்களும்,
இளம் வெட்டுக்கிளிகளும், துள்ளும் வெட்டுக்கிளிகளும்,
வளர்ந்த வெட்டுக்கிளிகளும் தின்று அழித்த வருடங்களுக்குரிய விளைச்சலை
உங்களுக்கு நான் ஈடுசெய்வேன்.
26நீங்கள் திருப்தியாகும்வரை உண்பதற்கு
உங்களுக்கு உணவு நிறைவாய் இருக்கும்.
அப்போது உங்களுக்காக அதிசயங்கள் செய்த
உங்கள் கர்த்தராகிய இறைவனின் பெயரைத் துதிப்பீர்கள்;
என்னுடைய மக்கள் இனி ஒருபோதும் வெட்கித் தலைகுனிய மாட்டார்கள்.
27அப்போது நான் இஸ்ரயேலின் மக்கள் மத்தியில் இருக்கின்றேன் என்றும்,
உங்கள் இறைவனாகிய கர்த்தர் நானே என்றும்,
என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்;
என் மக்கள் இனி ஒருபோதும் வெட்கித் தலைகுனிய மாட்டார்கள்.
கர்த்தரின் நாள்
28“அதன் பின்னர்,
நான் அனைத்து மக்கள்மீதும் என் ஆவியை ஊற்றுவேன்.
உங்கள் மகன்மாரும் மகள்மாரும் இறைவாக்கு உரைப்பார்கள்;
உங்கள் முதியவர்கள் கனவுகளையும்,
உங்கள் இளைஞர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29மேலும் அந்நாட்களில் எனது ஊழியர்களான ஆண்கள்மீதும் பெண்கள்மீதும்
நான் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்.
30வானத்திலும் பூமியிலும்
இரத்தமும் நெருப்பும் புகைமண்டலமுமாகிய
அற்புதங்களை நான் காண்பிப்பேன்.
31சூரியன் இருண்டு போகும்,
சந்திரன் இரத்தமாக மாறும்.
பெரிதானதும், பயங்கரமானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே இவை நிகழும்.
32அப்போது கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற
யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்;
கர்த்தர் சொன்னது போலவே,
எஞ்சியிருப்பவர்கள் மத்தியிலிருந்து
கர்த்தரினால் அழைக்கப்பட்டவர்களுக்கு
சீயோன் மலையிலும் எருசலேமிலும்
மீட்பு உண்டு.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோவேல் 2: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்