யோவேல் 1
1
1பெத்துவேலின் மகனாகிய யோவேலுக்கு கொடுக்கப்பட்ட கர்த்தரின் செய்தி இதுவே:
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
2மூப்பர்களே, இதைக் கேளுங்கள்;
நாட்டில்#1:2 நாட்டில் – யூதா மாகாணத்தில் வாழ்கின்றவர்களே, எல்லோரும் செவிசாய்த்திடுங்கள்.
உங்கள் வாழ்நாளில் இவ்வாறானது நடந்ததுண்டோ?
அல்லது உங்கள் முற்பிதாக்களின் வாழ்நாட்களில் இவ்வாறு ஏதாவது நிகழ்ந்ததுண்டோ?
3நடந்தவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு விபரமாகச் சொல்வீர்களாக!
உங்கள் பிள்ளைகள் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும்,
அவர்கள் அதனை தங்களது பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் சொல்வார்களாக!
4பச்சைப்புழு வெட்டுக்கிளி விட்டுவைத்ததை,
இளம் வெட்டுக்கிளிகள் தின்றன;
இளம் வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை,
துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன;
துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை,
ஏனைய வெட்டுக்கிளிகள் தின்றன.
5மதுபோதை கொண்டவர்களே, விழித்தெழுந்து அழுவீர்களாக!
திராட்சைரசம் குடிப்போரே, நீங்கள் புலம்புவீர்களாக!
புதுத் திராட்சைரசத்துக்காகப் புலம்புவீர்களாக!
ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து பறித்தெடுக்கப்பட்டுவிட்டது.
6பிற இனமொன்று என் நாட்டின்மீது படையெடுத்து வந்தது,
அது வலிமை மிகுந்த எண்ணற்ற வீரர்களுடன்#1:6 வீரர்களுடன் – நாசம் செய்கின்ற வெட்டுக்கிளிகள், படைவீரர்களுக்கு ஒப்பிடப்படுகின்றன. வந்தது.
அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்;
பெண் சிங்கத்தின் கோரைப்பற்களும் அதற்கு உள்ளன.
7அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி,
என் அத்திமரங்களையும் அழித்துவிட்டது.
அது அவற்றின் பட்டைகளை
உரித்து எறிந்தது;
அதன் கிளைகள் வெளிறிக் காணப்பட்டன.
8அவளது வாலிப வயதிலே அவளைத் திருமணம் செய்யவிருந்தவன் மரணித்ததற்காக
வருந்தும் கன்னிப்பெண்ணைப் போல்
துயரஆடை அணிந்து, ஒப்பாரி வையுங்கள்.
9தானியபலிகளும் பானபலிகளும்
கர்த்தருடைய வீட்டிலிருந்து#1:9 வீட்டிலிருந்து – எருசலேம் தேவாலயத்தைக் குறிக்கின்றது இல்லாமற் போயின.
கர்த்தருக்கு முன்பாக ஊழியம் செய்கின்ற மதகுருக்கள்
புலம்பி அழுகிறார்கள்.
10வயல்வெளிகள் பாழாய்ப்போக,
அதைக் கண்ட நிலம் வாடிவதங்க,
தானியம் பாழாய்ப்போய்,
புதுத் திராட்சைரசம் வற்றிப்போய்,
ஒலிவ எண்ணெயும் இல்லாமல் போனது.
11விவசாயிகளே, கேவலம்!
திராட்சைத் தோட்டத்தை பராமரித்தோரே, நீங்கள் புலம்புவீர்களாக!
வயல்களின் விளைச்சல் அழிந்து,
கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற் போனதால், கதறி அழுவீர்களாக!
12திராட்சைக்கொடி உலர்ந்து போயிற்று,
அத்திமரம் வாடிப்போயிற்று.
மாதுளை, பேரீச்சை, அப்பிள் மரங்கள் உட்பட
வயல்வெளியின் அனைத்து மரங்களும் வாடிவதங்கின.
அவ்வாறே, மக்களிடமிருந்து மகிழ்ச்சி
வரண்டு போயிற்று.
மனந்திரும்புதலுக்கு அழைப்பு
13மதகுருக்களே, துயரஆடை அணிந்து புலம்புவீர்களாக!
பலிபீடத்தின் முன்னால் பணி செய்வோரே,
கதறி அழுவீர்களாக!
என் இறைவனின் முன் ஊழியம் செய்வோரே,
இறைவனின் வீட்டுக்குச் சென்று#1:13 இறைவனின் வீட்டுக்குச் சென்று – எபிரேய மொழியில் உள்ளே சென்று என்றுள்ளது., துயரஆடை அணிந்து, அங்கே இரவைக் கழிப்பீர்களாக!
ஏனெனில் உங்கள் இறைவனது இல்லத்திலிருந்து
தானியபலிகளும் பானபலிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.
14பரிசுத்த உபவாசத்தைப் பிரகடனப்படுத்துங்கள்;
பயபக்தியின் ஒன்றுகூடலுக்கு மக்களுக்கு அழைப்புக் கொடுங்கள்.
மூப்பர்களையும்,
நாட்டில் வாழும் அனைவரையும்
உங்கள் இறைவனாகிய கர்த்தரின் வீட்டுக்கு அழைப்பித்து,
கர்த்தரிடம் கதறியழுது மன்றாடுங்கள்.
15அந்தோ! கர்த்தரின் நாள் நெருங்கி வந்துவிட்டது!
அது எவ்வளவு பயங்கரமான நாள்!
சர்வ வல்லமை கொண்டவரிடமிருந்து வருகின்ற பேரழிவாக அது வரப்போகின்றது#1:15 உலக மக்களை கர்த்தர் நியாயந்தீர்க்கும் நாள்..
16நமது கண்களுக்கு முன்பாக
உணவு இல்லாமற் போனதே!
மனமகிழ்ச்சியும் சந்தோஷமும்
நமது இறைவனின் வீட்டிலிருந்து இல்லாமற் போனதே!
17மண்கட்டிகளின் அடியில்
விதைகள் கருகிவிட்டன.
தானியம் வற்றிப்போனதால்
பண்டகசாலைகள் பாழாகி,
தானியக் களஞ்சியங்கள் இடிந்து வீழ்ந்தன.
18வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கின்றன!
மேய்ச்சல் நிலங்களில் தீனியற்றுப் போனதால்,
மாட்டு மந்தைகள் குழப்பமடைந்து அங்குமிங்கும் திரிகின்றன.
செம்மறியாட்டு மந்தைகளும் வேதனையை அனுபவிக்கின்றன.
19கர்த்தாவே, கூக்குரலிட்டு உம்மை அழைக்கின்றேன்.
ஏனெனில் வனாந்தரவெளியின் மேய்ச்சல் நிலங்கள் தீக்கிரையாகின.
புல்வெளியின் மரங்கள் அனைத்தும் நெருப்பினால் சுட்டெரிந்து போயின.
20நீர்நிலைகள் வற்றிப்போனதால், காட்டுமிருகங்களும் உமக்காகத் தவிக்கின்றன.
வனாந்தரவெளியின் மேய்ச்சல் நிலங்கள்
தீக்கிரையாகிப் போயின.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யோவேல் 1: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.