சங்கீத புத்தகம் 119:1-88

சங்கீத புத்தகம் 119:1-88 TAERV

பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை. அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர். அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர். கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன். நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை. உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்! ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே. நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன். தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன். ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். உமது சட்டங்களை எனக்குப் போதியும். உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன். வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக் கற்பதில் களிப்படைவேன். நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன். உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன். நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன். உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன். உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும். அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும். கர்த்தாவே, எனது கண்களைத் திறவும். நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும், நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும். நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன். கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும். நான் எப்போதும் உமது நியாயங்களைக் கற்க விரும்புகிறேன். கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர். அவர்களுக்குத் தீமைகள் நேரிடும். அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும். நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன். தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள். ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன். உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது. அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது. நான் விரைவில் மரிப்பேன். கர்த்தாவே, கட்டளையிடும், என்னை வாழவிடும். நான் என் வாழ்க்கையைப்பற்றி உமக்குக் கூறினேன். நீர் எனக்கு பதிலளித்தீர். இப்போது, உமது சட்டங்களை எனக்குக் கற்பியும். கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும். நீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும். நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன். நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும். கர்த்தாவே, நான் பொய்யாக வாழாதபடிச் செய்யும். உமது போதனைகளால் என்னை வழிநடத்தும். கர்த்தாவே, நான் உம்மிடம் நேர்மையாயிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன். உமது ஞானமுள்ள முடிவுகளை நான் கவனமாகக் கற்கிறேன். கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன். நான் வெட்கமடையவிடாதிரும். நான் மகிழ்ச்சியோடு உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை மகிழ்ச்சியாக்கும். கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும், நான் அவற்றைப் பின்பற்றுவேன். நான் புரிந்துகொள்ள உதவும். நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன். நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன். கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும். நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன். செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும். கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும், உமது வழியில் வாழ எனக்கு உதவும். ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும். கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும். உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை. பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன். எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும். கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும். நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும். அப்போது என்னை அவமானப்படுத்திய ஜனங்களுக்கு நான் பதிலளிக்கமுடியும். கர்த்தாவே, நீர் கூறும் காரியங்களை நான் உண்மையாகவே நம்புகிறேன். உமது உண்மையான போதனைகளை நான் எப்போதும் பேசட்டும். கர்த்தாவே, நான் உமது ஞானமுள்ள முடிவுகளை சார்ந்திருக்கிறேன். கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன். நான் விடுதலையாவேன், ஏனெனில் நான் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன். நான் உமது உடன்படிக்கையை ராஜாக்களோடு கலந்து ஆலோசிப்பேன். அவர்கள் என்னை ஒருபோதும் அவமானப்படுத்தமாட்டார்கள். கர்த்தாவே, உமது கட்டளைகளைக் கற்பதில் களிப்படைகிறேன். நான் அக்கட்டளைகளை நேசிக்கிறேன். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன். அவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன். கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும். அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர். உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன. என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக்கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை. உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன். கர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன. தீயோர் உமது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிடுகின்றனர். அதைப் பார்க்கும்போது நான் கோபமடைகிறேன். உமது சட்டங்கள் எனது வீட்டின் பாடல்களாகின்றன. கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன். நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன். நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது. கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன். கர்த்தாவே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன். நீர் வாக்குறுதியாளித்தபடியே என்னிடம் தயவாயிரும். என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன். உமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன். தாமதமின்றி உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன். தீயோர்களின் கூட்டமொன்று என்னைப் பற்றி தீயவற்றைக் கூறின. ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை மறக்கவில்லை. உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன். உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன். உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன். கர்த்தாவே, உமது உண்மை அன்பு பூமியை நிரப்புகிறது. உமது சட்டங்களை எனக்குப் போதியும். கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர். நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர். கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும். உமது கட்டளைகளை நான் நம்புகிறேன். நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன். ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன். தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர். உமது சட்டங்களை எனக்குப் போதியும். என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள். ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன். அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன். துன்புறுவது எனக்கு நல்லது. நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன். கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை. ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை. கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர். உமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர். உமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும். கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைப் பார்க்கிறார்கள், என்னை மதிக்கிறார்கள். நீர் சொல்வதை நான் நம்புவதால் அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். கர்த்தாவே, உமது முடிவுகள் நியாயமானவை என்பதை நான் அறிகிறேன். நீர் என்னைத் தண்டிப்பதும் நியாயமேயாகும். இப்போதும், உமது உண்மை அன்பினால் எனக்கு ஆறுதலளியும். நீர் உறுதியளித்தபடியே எனக்கு ஆறுதல் தாரும். கர்த்தாவே, எனக்கு ஆறுதல் தந்து என்னை வாழவிடும். நான் உண்மையாகவே உமது போதனைகளில் களிப்படைகிறேன். என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள். அந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன். கர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன். உமது உடன்படிக்கையை அறியும்படி உம்மைப் பின்பற்றுவோர் என்னிடம் திரும்பி வருவார்கள் என நான் நம்புகிறேன். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குச் சிறிதும் பிசகாது கீழ்ப்படியச் செய்யும், எனவே நான் வெட்கப்படமாட்டேன். நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன். ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன். நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் கண்களோ தளர்ந்து போகின்றன. கர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்? குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும், நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன். எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்? கர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்? சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள். அது உமது போதனைகளுக்கு எதிரானது. கர்த்தாவே, ஜனங்கள் உமது கட்டளைகளையெல்லாம் நம்பமுடியும். அவர்கள் என்னைத் தவறாகத் துன்புறுத்துகிறார்கள், எனக்கு உதவும்! அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை. கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும். நீர் கூறிய காரியங்களை நான் செய்வேன்.

சங்கீத புத்தகம் 119:1-88 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்