சங்கீதம் 119:1-88

சங்கீதம் 119:1-88 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

குற்றமற்றவர்களாய் வாழ்ந்து, யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு, தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தவறு செய்யாமல் அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே நீர் அவைகளைக் கொடுத்தீர். ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும். உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன். நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்; என்னை முற்றிலும் கைவிடாதேயும். வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே. நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும். நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி, உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன். யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும் என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன். ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து, உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன். நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன். உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன். உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, என் கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும். உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது. அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்; அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள். நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால், பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும். ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும், உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன். உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன; அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன. நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்; உமது வார்த்தையின்படி என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும். நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்; அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத் தியானிப்பேன். என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது; உமது வார்த்தையின்படி என்னைப் பெலப்படுத்தும். என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்; என்னில் கிருபையாயிருந்து, உமது சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்; நான் உமது சட்டங்களின்படி வாழத் தீர்மானித்திருக்கிறேன். யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்; என்னை வெட்கப்பட விடாதேயும். நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால், உமது கட்டளைகளின் பாதையிலேயே நான் ஓடுவேன். யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்; அப்பொழுது நான் அவைகளைக் கடைசிமட்டும் கைக்கொள்வேன். விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்; அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன். உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்; ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன். என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல், உமது நியமங்களின் பக்கமாய்த் திருப்பும். பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்; உமது வார்த்தையின்படியே என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும். உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை உமது அடியேனாகிய எனக்கு நிறைவேற்றும். நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்; ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை. நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்! உமது நியாயத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும், உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக; அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்; ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன். சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்; ஏனெனில், நான் உமது சட்டங்களிலேயே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். நான் எப்பொழுதும் உமது சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன். உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால், நான் சுதந்திரமாக நடந்துவருவேன். நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்; நான் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டேன். ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன், அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன். நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்; உம்முடைய விதிமுறைகளைத் தியானிப்பேன். உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வார்த்தையை நினைவிற்கொள்ளும்; அதினால் எனக்கு நம்பிக்கையை தந்திருக்கிறீர். இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்: உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வைக் காத்துக்கொள்வது. அகங்காரம் கொண்டவர்கள் தயக்கமின்றி என்னை ஏளனம் செய்கிறார்கள்; ஆனாலும் நான் உமது சட்டத்திலிருந்து விலகுவதில்லை. யெகோவாவே, உமது பூர்வகாலத்து சட்டங்களை நான் நினைவிற்கொள்கிறேன்; நான் அவைகளில் ஆறுதல் பெறுகிறேன். உமது சட்டத்தைக் கைவிட்டுவிட்ட கொடியவர்களின் நிமித்தம், கடுங்கோபம் என்னைப் பற்றிக்கொள்கிறது. நான் எங்கு தங்கினாலும், உமது விதிமுறைகளே எனது பாடலின் கருப்பொருளாயிற்று. யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு, உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதே என் வழக்கமாயிற்று. யெகோவாவே, நீரே என் பங்கு; உமது வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிவதாக வாக்களித்திருக்கிறேன். நான் என் முழு இருதயத்தோடும் உமது முகத்தைத் தேடியிருக்கிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி என்மீது கிருபையாயிரும். நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து, உம்முடைய நியமங்களைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன். உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன், தாமதிக்கமாட்டேன். கொடியவர்கள் என்னைக் கயிறுகளினால் கட்டினாலும், நான் உமது சட்டத்தை மறவேன். உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி, நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன். உமக்குப் பயந்து நடக்கிற, உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன். யெகோவாவே, பூமி உமது அன்பினால் நிறைந்திருக்கிறது; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். யெகோவாவே, உம்முடைய வார்த்தையின்படி உமது அடியேனுக்கு நன்மை செய்யும். உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால், அறிவையும் நல்ல நிதானிப்பையும் எனக்குப் போதியும். நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன், ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன். நீர் நல்லவர், நீர் நன்மையானதையே செய்கிறீர்; உம்முடைய விதிமுறைகளை எனக்குப் போதியும். அகங்காரம் கொண்டவர்கள் என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பினார்கள், ஆனாலும் நான் முழு இருதயத்தோடும், உம்முடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்கிறேன். அவர்களுடைய இருதயங்கள் கடினமானவைகளும், உணர்வற்றவைகளுமாய் இருக்கின்றன; நானோ உம்முடைய சட்டத்தில் மகிழ்கிறேன். நான் துன்பப்பட்டது எனக்கு நன்மையாகவே இருந்தது; அதினால் நான் உம்முடைய விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறேன். ஆயிரமாயிரமான பொன் வெள்ளியைப் பார்க்கிலும், உம்முடைய வாயிலிருந்து வருகிற சட்டம் எனக்கு அதிக விலையேறப்பெற்றது. உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின; உம்முடைய கட்டளைகளைக் கற்று விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும். நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்து நடப்பவர்கள் என்னைக் காணும்போது, மகிழ்ச்சியடைவார்களாக. யெகோவாவே, உமது சட்டங்கள் நியாயமானவை என்பதை நான் அறிவேன்; நீர் என்னைத் துன்பப்படுத்தியது சரிதான். நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக. நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்; உமது சட்டம் என் மனமகிழ்ச்சி. காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும் அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக; நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன். உமது நியமங்களை விளங்கிக்கொண்டு, உமக்குப் பயந்து நடக்கிறவர்கள் என் பக்கம் திரும்பட்டும். நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் இருதயம் உம்முடைய விதிமுறைகளைக் குறித்து குற்றமற்றதாய் இருக்கட்டும். உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது; நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன; “நீர் என்னை எப்பொழுது தேற்றுவீர்?” என்று கேட்க விரும்புகிறேன். நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும் திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும், உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன். உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்? அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்; அது உமது சட்டத்திற்கு முரணானது. உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை; காரணமின்றி மனிதர் என்னைத் துன்பப்படுத்துவதால், எனக்கு உதவிசெய்யும். அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்; ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைவிடவில்லை. உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும், அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன்.

சங்கீதம் 119:1-88 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும். நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன். திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன். உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும். உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர். நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன். அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது. என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும். நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாக இருக்கிறேன். என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும். மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், அகலமான பாதையில் நடப்பேன். நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன். நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது. பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது. நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது. யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், இது எனக்குக் கிடைத்தது. யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும். என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன். துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன். உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன். யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். யெகோவாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாக நடத்தினீர். உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன். நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கினது; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உமது கிருபை என்னைத் தேற்றட்டும். நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும். நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும். உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு உதவி செய்யும். அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன்.

சங்கீதம் 119:1-88 பரிசுத்த பைபிள் (TAERV)

பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை. அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர். அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர். கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன். நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை. உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்! ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே. நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன். தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன். ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். உமது சட்டங்களை எனக்குப் போதியும். உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன். வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக் கற்பதில் களிப்படைவேன். நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன். உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன். நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன். உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன். உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும். அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும். கர்த்தாவே, எனது கண்களைத் திறவும். நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும், நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும். நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன். கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும். நான் எப்போதும் உமது நியாயங்களைக் கற்க விரும்புகிறேன். கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர். அவர்களுக்குத் தீமைகள் நேரிடும். அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும். நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன். தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள். ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன். உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது. அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது. நான் விரைவில் மரிப்பேன். கர்த்தாவே, கட்டளையிடும், என்னை வாழவிடும். நான் என் வாழ்க்கையைப்பற்றி உமக்குக் கூறினேன். நீர் எனக்கு பதிலளித்தீர். இப்போது, உமது சட்டங்களை எனக்குக் கற்பியும். கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும். நீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும். நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன். நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும். கர்த்தாவே, நான் பொய்யாக வாழாதபடிச் செய்யும். உமது போதனைகளால் என்னை வழிநடத்தும். கர்த்தாவே, நான் உம்மிடம் நேர்மையாயிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன். உமது ஞானமுள்ள முடிவுகளை நான் கவனமாகக் கற்கிறேன். கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன். நான் வெட்கமடையவிடாதிரும். நான் மகிழ்ச்சியோடு உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை மகிழ்ச்சியாக்கும். கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும், நான் அவற்றைப் பின்பற்றுவேன். நான் புரிந்துகொள்ள உதவும். நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன். நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன். கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும். நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன். செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும். கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும், உமது வழியில் வாழ எனக்கு உதவும். ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும். கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும். உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை. பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன். எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும். கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும். நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும். அப்போது என்னை அவமானப்படுத்திய ஜனங்களுக்கு நான் பதிலளிக்கமுடியும். கர்த்தாவே, நீர் கூறும் காரியங்களை நான் உண்மையாகவே நம்புகிறேன். உமது உண்மையான போதனைகளை நான் எப்போதும் பேசட்டும். கர்த்தாவே, நான் உமது ஞானமுள்ள முடிவுகளை சார்ந்திருக்கிறேன். கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன். நான் விடுதலையாவேன், ஏனெனில் நான் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன். நான் உமது உடன்படிக்கையை ராஜாக்களோடு கலந்து ஆலோசிப்பேன். அவர்கள் என்னை ஒருபோதும் அவமானப்படுத்தமாட்டார்கள். கர்த்தாவே, உமது கட்டளைகளைக் கற்பதில் களிப்படைகிறேன். நான் அக்கட்டளைகளை நேசிக்கிறேன். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன். அவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன். கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும். அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர். உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன. என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக்கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை. உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன். கர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன. தீயோர் உமது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிடுகின்றனர். அதைப் பார்க்கும்போது நான் கோபமடைகிறேன். உமது சட்டங்கள் எனது வீட்டின் பாடல்களாகின்றன. கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன். நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன். நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது. கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன். கர்த்தாவே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன். நீர் வாக்குறுதியாளித்தபடியே என்னிடம் தயவாயிரும். என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன். உமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன். தாமதமின்றி உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன். தீயோர்களின் கூட்டமொன்று என்னைப் பற்றி தீயவற்றைக் கூறின. ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை மறக்கவில்லை. உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன். உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன். உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன். கர்த்தாவே, உமது உண்மை அன்பு பூமியை நிரப்புகிறது. உமது சட்டங்களை எனக்குப் போதியும். கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர். நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர். கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும். உமது கட்டளைகளை நான் நம்புகிறேன். நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன். ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன். தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர். உமது சட்டங்களை எனக்குப் போதியும். என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள். ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன். அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன். துன்புறுவது எனக்கு நல்லது. நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன். கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை. ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை. கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர். உமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர். உமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும். கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைப் பார்க்கிறார்கள், என்னை மதிக்கிறார்கள். நீர் சொல்வதை நான் நம்புவதால் அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். கர்த்தாவே, உமது முடிவுகள் நியாயமானவை என்பதை நான் அறிகிறேன். நீர் என்னைத் தண்டிப்பதும் நியாயமேயாகும். இப்போதும், உமது உண்மை அன்பினால் எனக்கு ஆறுதலளியும். நீர் உறுதியளித்தபடியே எனக்கு ஆறுதல் தாரும். கர்த்தாவே, எனக்கு ஆறுதல் தந்து என்னை வாழவிடும். நான் உண்மையாகவே உமது போதனைகளில் களிப்படைகிறேன். என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள். அந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன். கர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன். உமது உடன்படிக்கையை அறியும்படி உம்மைப் பின்பற்றுவோர் என்னிடம் திரும்பி வருவார்கள் என நான் நம்புகிறேன். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குச் சிறிதும் பிசகாது கீழ்ப்படியச் செய்யும், எனவே நான் வெட்கப்படமாட்டேன். நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன். ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன். நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் கண்களோ தளர்ந்து போகின்றன. கர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்? குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும், நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன். எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்? கர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்? சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள். அது உமது போதனைகளுக்கு எதிரானது. கர்த்தாவே, ஜனங்கள் உமது கட்டளைகளையெல்லாம் நம்பமுடியும். அவர்கள் என்னைத் தவறாகத் துன்புறுத்துகிறார்கள், எனக்கு உதவும்! அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை. கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும். நீர் கூறிய காரியங்களை நான் செய்வேன்.

சங்கீதம் 119:1-88 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தமமார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளை விட்டு வழிதப்பவிடாதேயும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன். திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். உமது பிரமாணங்களில் மன மகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும். உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது. உமது கற்பனைகளை விட்டு வழி விலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர். நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன். பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக் கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது. என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். மெய்வழியை நான் தெரிந்து கொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும். நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன். என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். இதோ, உம்முடைய கட்டளைகள் மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன். நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன். நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர் நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது. நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது. கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும். என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன். துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன். உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன். கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர். உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன். நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக. நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக. நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது. புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும். அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டு விடவில்லை. உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.

சங்கீதம் 119:1-88

சங்கீதம் 119:1-88 TAOVBSIசங்கீதம் 119:1-88 TAOVBSIசங்கீதம் 119:1-88 TAOVBSIசங்கீதம் 119:1-88 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்