மாற்கு 16
16
இயேசுவின் உயிர்த்தெழுதல்
1சபத் ஓய்வுநாள் முடிவுற்றபோது மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமியும் இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருட்களை பூசுவதற்காக அவற்றை வாங்கி, 2வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில் பொழுது விடிகையில் கல்லறையை நோக்கிப் போனார்கள். 3அவர்கள் போகும் வழியில், “கல்லறையின் வாயிலில் இருக்கும் கல்லை யார் நமக்காகப் புரட்டித் தள்ளுவான்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
4ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோது, மிகவும் பெரிதான அந்தக் கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். 5அவர்கள் கல்லறைக்குள்ளே சென்றபோது, வெள்ளை உடை அணிந்த ஒரு இளைஞன் வலதுபக்கத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு பயந்தார்கள்.
6அப்போது அவன் அவர்களிடம், “பயப்பட வேண்டாம், சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை நீங்கள் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் இங்கு இல்லை. அவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள். 7நீங்கள் போய் அவருடைய சீடர்களுக்கும், பேதுருவுக்கும் ‘அவர் உங்களுக்குச் சொன்னது போலவே, உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குப் போகின்றார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
8அந்தப் பெண்கள் நடுக்கத்துடனும், திகைப்புடனும் வெளியே வந்து கல்லறையில் இருந்து ஓடிப் போனார்கள். அவர்கள் பயந்ததனால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லவில்லை.
9வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில் மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடமிருந்து ஏழு பேய்களை அவர் துரத்தியிருந்தார். 10அவள் போய் அவரோடிருந்தவர்களுக்கும், அழுது புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கும் அதைச் சொன்னாள். 11இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவரை அவள் கண்டாள் என்றும் அவள் சொன்னதை அவர்கள் நம்பவில்லை.
12இதன்பின்பு நாட்டுப்புறத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த அவர்களில் இருவருக்கு, இயேசு தம்மை மாறுபட்ட ஒரு தோற்றத்தில் வெளிப்படுத்தினார். 13இவர்கள் போய் அதை மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள். ஆனால் அவர்களோ இவர்கள் சொன்னதை நம்பவில்லை.
14பின்பு சீடர்கள் பதினொரு பேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களுக்குக் காட்சியளித்தார். அவர் அவர்களுடைய விசுவாசக் குறைவைக் குறித்தும், கடின இருதயத்தைக் குறித்தும், தாம் உயிர்த்தெழுந்த பின்பு தம்மைக் கண்டவர்கள் சொன்னதைப் நம்ப மறுத்ததைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.
15அவர் அவர்களிடம், “நீங்கள் உலகம் எங்கும் போய் எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். 16யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் குற்றவாளியாகத் தீர்க்கப்படுவார்கள். 17விசுவாசிக்கின்றவர்கள் மத்தியில் காணப்படும் அடையாளங்களாவன: எனது பெயரில் அவர்கள் பேய்களைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளில் பேசுவார்கள்; 18பாம்புகளைத் தங்கள் கைகளினால் பிடித்துத் தூக்குவார்கள்; மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குக் கேடு விளைவிக்காது; நோயாளிகளின் மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்போது அவர்கள் குணமடைவார்கள்” என்றார்.
19ஆண்டவர் இயேசு அவர்களுடன் பேசி முடித்த பின்பு, அவர் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். 20அதன்பின்பு அவருடைய சீடர்கள் புறப்பட்டுப் போய் எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுடன் செயலாற்றி தமது வார்த்தையை அற்புத அடையாளங்களினால் உறுதிப்படுத்தினார்.#16:9–20 மிக முன்னைய பிரதிகளிலும் சில புராதன சான்றுகளிலும், 9 இலிருந்து 20 வரையிலான வசனங்கள் காணப்படுவதில்லை.
ទើបបានជ្រើសរើសហើយ៖
மாற்கு 16: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.