லூக்கா 17

17
பாவம், விசுவாசம், கடமை பற்றிய போதனைகள்
1இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “பாவம் செய்வதற்கான சோதனைகள் வருவது நிச்சயம். ஆனால் அவை யார் மூலமாக வருகின்றதோ அவனுக்கு ஐயோ பேரழிவு! 2இந்தச் சிறியவர்களில் ஒருவரை, எவராவது பாவம் செய்ய வைத்தால், அவ்வாறு செய்பவனின் கழுத்திலே திரிகைக்கல் கட்டப்பட்டு, அவன் கடலிலே தள்ளப்படுவது அவனுக்கு ஏற்படவிருக்கும் தண்டனையைவிட#17:2 ஏற்படவிருக்கும் தண்டனையைவிட – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது நலமாய் இருக்கும். 3எனவே நீங்கள் கவனமாய் இருங்கள்.
“உங்கள் சகோதரன் பாவம் செய்தால், அவனைக் கடிந்துகொள்ளுங்கள். அவன் மனந்திரும்பினால், அவனை மன்னித்து விடுங்கள். 4அவன் ஒரேநாளில் ஏழு தடவை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழு தடவையும் அவன் உங்களிடம் வந்து, ‘நான் மனந்திரும்பிவிட்டேன்’ என்றால், அவனை மன்னித்து விடுங்கள்” என்றார்.
5அப்போஸ்தலர்கள் ஆண்டவரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்திடுவீராக” என்றார்கள்.
6அதற்கு அவர், “உங்களுக்கு கடுகுவிதையளவு சிறிய விசுவாசம் இருந்தால், நீங்கள் இந்த பெரிய காட்டத்திமரத்தைப் பார்த்து, ‘நீ வேரோடு பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
7“உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்து, அவன் வயலை உழுதுவிட்டோ அல்லது ஆடுகளை மேய்த்துவிட்டோ திரும்பி வந்தவுடனே, எஜமான் அவனிடம், ‘வா, வந்து அமர்ந்து சாப்பிடு’ என்று சொல்வானா? 8மாறாக அவனிடம், ‘எனது உணவைத் தயார் செய்து நீயும் பொருத்தமாக அணிந்து ஆயத்தமாகி, நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும்வரை எனக்குப் பணி செய்; அதன் பின்னர் நீ சாப்பிடலாம்’ என்று சொல்வான் அல்லவா? 9தான் கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா? 10எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்து முடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
தொழுநோயுள்ள பத்துப் பேர்
11இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா எல்லைகளுக்கூடாகப் பயணம் செய்தார். 12அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, தொழுநோயுள்ள பத்துப் பேர் அவரை சந்தித்தார்கள். அவர்கள் தூரத்தில் நின்றபடி, 13“ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டு அழைத்தார்கள்.
14அவர் அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் மதகுருக்களிடம் உங்களைக் காண்பியுங்கள்”#17:14 லேவி. 14:2-32 என்றார். அவ்வாறே போகும்போது, அவர்கள் குணமடைந்தார்கள்.
15அவர்களில் ஒருவன், தான் குணமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பி வந்தான். 16அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் ஒரு சமாரியன்.
17அப்போது இயேசு, “பத்துப் பேரும் குணமடைந்தார்கள் அல்லவா? மற்றைய ஒன்பது பேரும் எங்கே? 18இந்த வெளிநாட்டவனைத்#17:18 வெளிநாட்டவனை – யூதர்கள் சமாரியர்களை அந்நியர்களாகக் கருதினார்கள் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு எவரும் திரும்பி வரக் காணவில்லையே” என்று கேட்டார். 19பின்பு அவர் அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்று சொன்னார்.
இறையரசின் வருகை
20இறைவனின் இராச்சியம் எப்போது வரும் என்று, பரிசேயர்கள் ஒருமுறை இயேசுவிடம் கேட்டபொழுது, அதற்கு அவர் பதிலளித்து, “இறைவனின் இராச்சியம், கண்களுக்குப் புலப்படும் விதத்தில், வெளிப்படையான அடையாளங்களோடு வருவதில்லை. 21‘இதோ இங்கே!’ என்றும் ‘அதோ அங்கே!’ என்றும் மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இதோ! இறைவனின் இராச்சியம் உங்கள் மத்தியிலேயே இருக்கின்றது”#17:21 அல்லது உங்களில் இருக்கின்றது என்றார்.
22பின்பு அவர் சீடர்களிடம், “மனுமகனின் நாட்களில் ஒன்றையேனும் காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வருகின்றது. ஆனாலும், நீங்கள் அதைக் காண மாட்டீர்கள். 23‘அங்கே பாருங்கள்’ என்றும், ‘இங்கே பாருங்கள்’ என்றும் மனிதர்கள் சொல்வார்கள். நீங்கள் அவர்கள் பின்னால் ஓட வேண்டாம். 24ஏனெனில் மனுமகன் தம்முடைய நாளிலே, வானத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை பிரகாசித்து மின்னும் மின்னலைப் போல் காணப்படுவார். 25ஆனால் முதலாவது, அவர் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியிருக்கிறது.
26“நோவாவின் நாட்களில் இருந்தது போலவே,#17:26 ஆதி. 7 ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும் மனுமகனின் நாட்களிலும் இருக்கும். 27நோவா பேழைக்குள் போகும் வரைக்கும், அந்த மக்கள் சாப்பிட்டும், குடித்தும், திருமணம் செய்தும், திருமணம் செய்து கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள். அப்போது வெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துவிட்டது.
28“லோத்துவின் நாட்களிலும் அவ்வாறுதான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டும், குடித்தும், வாங்கியும், விற்றும், நடுகை செய்து கொண்டும், கட்டடம் கட்டியெழுப்பிக்கொண்டும் இருந்தார்கள். 29ஆனால் லோத்து, சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துவிட்டது.
30“மனுமகன் வெளிப்படும் நாளிலும் இதைப் போலவே இருக்கும். 31அந்தநாளிலே, தனது வீட்டின் கூரையின் மேல் இருப்பவன், வீட்டிலுள்ள தனது பொருட்களை எடுப்பதற்கு, கீழே இறங்கிப் போகாதிருப்பானாக. அவ்வாறே, வயலில் இருக்கும் எவனும், எதற்காகவும் திரும்பிப் போகாதிருப்பானாக. 32லோத்துவின் மனைவிக்கு நடந்ததை நினைவில்கொள்ளுங்கள்.#17:32 ஆதி. 19:26 33தனது வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கின்றவன் எவனோ, அவன் அதை இழந்திடுவான். தன்னுடைய வாழ்வை இழக்கின்றவன் எவனோ, அவன் அதைக் காத்துக்கொள்வான். 34நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அந்த இரவிலே இரண்டு பேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்பட, மற்றையவன் கைவிடப்படுவான். 35இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்பட, மற்றையவள் கைவிடப்படுவாள். 36இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்பட, மற்றையவன் கைவிடப்படுவான்”#17:36 சில பிரதிகளில் இந்த வசனம் காணப்படுவதில்லை மத். 24:40. என்றார்.
37அதற்கு அவர்கள், “எங்கே ஆண்டவரே?” என்றார்கள்.
அவர் அதற்குப் பதிலளித்து, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்” என்றார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

லூக்கா 17: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល