லூக்கா 12
12
எச்சரிக்கைகளும் புத்திமதிகளும்
1இதற்கிடையே, ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தார்கள். அப்போது இயேசு, முதலில் தமது சீடர்களுடன் உரையாடிச் சொன்னதாவது: “பரிசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தமாகிய அவர்களது வெளிவேடத்தைக் குறித்துக் கவனமாயிருங்கள். 2மறைக்கப்பட்ட எதுவும் வெளிப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்ட எதுவும் தெரியவராமல் போவதுமில்லை. 3நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளில் காதோடு காதாய் இரகசியமாய் பேசியது, கூரையின் மேலிருந்து அறிவிக்கப்படும்.
4“என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உடலைக் கொல்லுகின்றவர்களுக்குப் பயப்பட வேண்டாம். அதற்குமேல், அவர்களால் உங்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது. 5ஆயினும், நீங்கள் யாருக்குப் பயப்பட வேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொலை செய்த பின்பு, நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவருக்கே பயப்படுங்கள். 6இரண்டு காசுக்கு#12:6 இரண்டு காசுக்கு – இதன் அர்த்தம் குறைந்த மதிப்புள்ள நாணயம் ஐந்து சிட்டுக் குருவிகள் விற்கப்படுகின்றன அல்லவா? ஆயினும், அவற்றில் ஒன்றுகூட இறைவனால் மறக்கப்படுவதில்லை. 7உங்கள் தலைமுடிகளெல்லாம் எண்ணிக் கணக்கிடப்பட்டுள்ளன. எனவே பயப்பட வேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும், அதிக பெறுமதியுடையவர்கள்.
8“நான் உங்களுக்குச் சொல்கின்றேன், மனிதர்களுக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கின்றவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மனுமகனும் ஏற்றுக்கொள்வார். 9ஆனால், மனிதர்களுக்கு முன்பாக என்னைச் சார்ந்தவனல்ல என்று மறுதலிப்பவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக என்னைச் சார்ந்தவனல்ல என்று மறுதலிக்கப்படுவான். 10யாராவது மனுமகனுக்கு எதிராய் ஒரு வார்த்தை பேசினால், அவர் மன்னிக்கப்படுவார். ஆனால், எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அவர் மன்னிக்கப்பட மாட்டார்.
11“நீங்கள் யூத மன்றாடும் ஆலயத்துக்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டு வரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, எவற்றைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள். 12ஏனெனில், அந்தவேளையில் என்ன சொல்ல வேண்டும் என்பதை, பரிசுத்த ஆவியானவரே உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.
மூடனான பணக்காரனின் உவமை
13கூடியிருந்த மக்களில் ஒருவன் அவரிடம், “போதகரே, உரிமைச் சொத்தில் எனக்குரியதைப் பிரித்துக் கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்வீராக” என்றான்.
14அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார். 15பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லாவிதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.
16மேலும் அவர், அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. 17அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
18“பின்பு அவன், ‘நான் இவ்வாறு செய்வேன்: என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைப்பேன். 19அதன்பின்பு நான் எனக்குள், “நீ, பல வருடங்களுக்குப் போதுமான பொருட்களை உனக்கென்று சேர்த்துவிட்டாய். எனவே ஓய்வெடுத்து, உண்டு குடித்து மகிழ்ந்திரு” என்று சொல்லிக்கொள்வேன்’ என்றான்.
20“அப்போது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவில் உன் உயிர் உன்னிடமிருந்து எடுக்கப்படும். அப்போது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவை யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார்.
21“தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இல்லாதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கின்றது” என்றார்.
கவலைப்பட வேண்டாம்
22பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எதை உண்போம் என்று உங்கள் வாழ்வைக் குறித்தும், எதை அணிவோம் என்று உங்கள் உடலைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம். 23ஏனெனில், உணவைவிட வாழ்வும், உடையைவிட உடலும் மேலானவை. 24காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைப்பதுமில்லை, அறுவடை செய்வதுமில்லை. அவற்றுக்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனாலும், இறைவன் அவற்றுக்கு உணவு கொடுக்கின்றார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்புமிக்கவர்களாய் இருக்கின்றீர்களே! 25கவலைப்படுவதால், உங்களில் எவனாவது தன் வாழ்நாளுடன் ஒரு மணி நேரத்தைக் கூட்டிக்கொள்ள முடியுமா? 26எனவே இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்ய முடியாதிருக்கும்போது, மற்றைய காரியங்களைக் குறித்து ஏன் கவலைப்படுகிறீர்கள்?
27“காட்டுப் பூக்கள் எவ்வாறு வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்பதுமில்லை; ஆயினும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எல்லாச் சிறப்புக்களையும் பெற்றிருந்த பேரரசன் சாலொமோன்கூட, இவற்றில் ஒன்றைப் போல் உடை அணிந்ததில்லை. 28விசுவாசம் குறைந்தவர்களே! இன்றிருந்து நாளை நெருப்பில் வீசப்படுகின்ற காட்டுப் புல்லுக்கு இறைவன் இவ்விதம் அணிவித்தால், அவர் எவ்வளவு அதிகமாய் உங்களுக்கு அணிவிப்பார். 29எதை உண்ணுவோம், எதைக் குடிப்போம் என்று அவற்றிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக் குறித்து கவலைப்பட வேண்டாம். 30ஏனெனில், இறைவனை அறியாத உலகத்தார் இவற்றைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவையெல்லாம் உங்களுக்கு அவசியம் என்று அறிந்திருக்கின்றார். 31நீங்களோ அவருடைய இராச்சியத்தைத் தேடுங்கள். அப்போது இவையும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும்.
32“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது இராச்சியத்தை உங்களுக்குக் கொடுப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றார். 33உங்கள் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள். பழையதாய்ப் போகாத பணப்பைகளை உங்களுக்கென இவ்விதமாய் உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தை பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை. 34ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கின்றதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
விழிப்பாயிருங்கள்
35“பணி செய்வதற்கு ஆயத்தமாய் உங்கள் உடையை அணிந்துகொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள். 36திருமண விருந்திலிருந்து திரும்பி வரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வேலைக்காரர்களைப் போலிருங்கள். அவ்வாறு இருந்தால், அவன் வந்து கதவைத் தட்டும்போது, உடனடியாக கதவைத் திறக்க முடியும். 37எஜமான் வரும்போது விழித்திருக்கிறவர்களாய் காணப்படும் வேலைக்காரர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பணி செய்வதற்கான உடையை எஜமான் அணிந்துகொண்டு, தன் வேலைக்காரர்களை உணவுப் பந்தியில் அமரச் செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணி செய்வான். 38அந்த எஜமான் இரவின் இரண்டாம் காவல் நேரத்திலோ#12:38 இரண்டாம் காவல் நேரத்திலோ – நள்ளிரவு அல்லது மூன்றாம் காவல் நேரத்திலோ#12:38 மூன்றாம் காவல் நேரத்திலோ – அதிகாலை நேரம் தாமதித்து வந்தாலும்கூட, அப்போதும் ஆயத்தமாய் காணப்படும் வேலையாட்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 39எனவே திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீடு உடைக்கப்படுவதற்கு#12:39 உடைக்கப்படுவதற்கு அல்லது திருடுவதற்கு அவன் இடமளித்திருக்க மாட்டான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 40அதைப் போலவே, நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்பாராத நேரத்திலே மனுமகன் வருவார்” என்றார்.
41அப்போது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்கு சொல்கின்றீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கின்றீரோ?” என்று கேட்டான்.
42ஆண்டவர் அதற்கு பதிலளித்து, “ஏற்ற வேளையில் உரிய உணவை தன்னுடைய வீட்டு வேலைக்காரர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி, எஜமான் அவர்களுக்கு மேலாக நியமிக்கப்போகின்ற உண்மையும் ஞானமும் உள்ள நிர்வாகி யார்? 43எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கின்றவனாகக் காணப்படுகின்ற பணியாளன் ஆசீர்வதிக்கப்பட்டவன். 44நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எஜமான் தனது உடைமைகள் எல்லாவற்றுக்கும், அவனையே பொறுப்பாக வைப்பான். 45ஆயினும் அந்தப் பணியாளன், ‘எனது எஜமான் வரத் தாமதமாகிறது’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள பணியாளரர்களையும் பணிப்பெண்களையும் அடித்து, தானே உண்டு குடித்து மதுபோதைகொள்ளத் தொடங்கினால், 46அந்தப் பணியாளனின் எஜமான், அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத நேரத்திலும் வருவான்; அவன் வந்து, அந்தப் பணியாளனை பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, நம்பத் தகுதியற்றவர்களுக்குரிய இடத்திலே தள்ளி விடுவான்.
47“தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும் தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருக்கும் பணியாளனுக்கு அநேக அடிகள் அடிக்கப்படும். 48ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய் தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கின்றவனுக்கோ, சில அடிகளே அடிக்கப்படும். எவனிடம் அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும்; அவ்வாறே அதிகம் ஒப்படைக்கப்பட்டவனிடம், இன்னும் அதிகமாய் கேட்கப்படும்.
சமாதானம் அல்ல பிரிவினை
49“பூமியிலே நெருப்பை மூட்டுவதற்கே நான் வந்தேன்; அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். 50ஆயினும், நான் மூழ்கவேண்டிய ஞானஸ்நானம் ஒன்று இருக்கின்றது. அது நிறைவேறும் வரை நான் அனுபவிக்கும் மனக்கஷ்டமோ அதிகம். 51பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வருகை தந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன். 52இப்போதிருந்தே, ஐந்து பேர் உள்ள ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்று பேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டு பேர் மூன்று பேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள். 53தந்தைக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தந்தையும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராக தாயும், மருமகளுக்கு எதிராக மாமியும், மாமிக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.
காலங்களைப் பற்றிய விளக்கம்
54கூடியிருந்த மக்களிடம் அவர் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழுகின்றதை நீங்கள் காணும்போது, உடனே நீங்கள், ‘இதோ மழை பெய்யப் போகின்றது’ என்கிறீர்கள், அவ்வாறே மழையும் பெய்கிறது. 55தெற்கிலிருந்து காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகின்றது’ என்கிறீர்கள். அவ்வாறே அது வெப்பமாய் இருக்கின்றது. 56வெளிவேடக்காரர்களே! பூமியின் தோற்றத்தையும் ஆகாயத்தின் தோற்றத்தையும் கொண்டு, வரப்போவதை கணிக்க அறிந்திருக்கின்றீர்களே. ஆனால் தற்போது இடம்பெறுகின்ற நிகழ்வுகளின் பொருளை விளங்கிக்கொள்ளாதிருப்பது ஏன்?
57“மேலும், எது சரியான தீர்ப்பு என்பதை நீங்களே முடிவு செய்ய இயலாதவர்களாக இருப்பது ஏன்? 58நீங்கள் உங்கள்மீது வழக்குத் தொடுத்த உங்கள் எதிராளியுடன் நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள கடும் முயற்சி செய்யுங்கள்; இல்லாவிட்டால், அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக் கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையில் இடவும் கூடும். 59நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அபராதப் பணத்தின் கடைசி சதம் வரை செலுத்தித் தீர்க்கும் வரையிலும், நீங்கள் அங்கிருந்து வெளியே வர மாட்டீர்கள்” என்றார்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
லூக்கா 12: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.