லேவியராகமம் 6

6
1கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: 2“ஒருவன் தனது அயலவனால் கவனிப்புக்கு அல்லது பாதுகாப்புக்கென ஒப்படைக்கப்பட்ட பொருளை வஞ்சித்தோ, திருடியோ, ஏமாற்றியோ தன் அயலானுக்கு எதிராகப் பாவம் செய்து, கர்த்தருக்கு உண்மையற்றவனாய் இருக்கக் கூடும்; 3அல்லது அவன் தான் தொலைத்த ஒரு பொருளைக் கண்டெடுத்து அதுகுறித்துப் பொய் கூறி, பொய்ச்சத்தியம் செய்து மக்கள் செய்யக்கூடிய இவ்வாறான எந்தவொரு பாவத்தையும் அவன் செய்வதன் மூலமாக, 4பாவம் செய்து குற்றவாளியானால், அவன் தான் திருடியதை அல்லது பலவந்தமாய் எடுத்துக்கொண்டதை அல்லது தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டதை அல்லது காணாமற்போய் கண்டெடுத்த பொருளை, 5அல்லது தான் பொய்ச்சத்தியம் செய்துகொண்டதை முழுமையாக திருப்பிக் கொடுக்க வேண்டும். அத்துடன் அதன் பெறுமதியில் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்து, அவன் குற்றநிவாரணபலி செலுத்தும் நாளில் அதன் உரிமையாளனிடம் ஒப்படைக்க வேண்டும். 6அதற்குரிய தண்டனையாக கர்த்தருக்கு குற்றநிவாரணபலியை மதகுருவிடம் அவன் கொண்டுவரும்போது, அது மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட உரிய பெறுமதியுடைய செம்மறியாட்டுக்கடாவாகவும் குறைபாடற்றதாகவும் இருக்கவேண்டும். 7இவ்விதம் மதகுரு கர்த்தருக்கு முன்பாக அவனுக்காகப் பாவநிவர்த்தி செய்வான். அப்போது அவன் எவற்றைச் செய்து குற்றவாளியானானோ அவற்றிலிருந்து அவன் மன்னிக்கப்படுவான்.”
தகனபலி
8மீண்டும் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: 9“நீ ஆரோனுக்கும் அவன் மகன்மாருக்கும் இந்தக் கட்டளையைக் கொடு. தகனபலிக்குரிய ஒழுங்குமுறைகள் இவையே: தகனபலி இரவு முழுவதும் மறுநாள் காலைவரை பலிபீடத்தின் அடுப்பின்மீது இருக்கவேண்டும். பலிபீடத்தின்மீது நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும். 10மதகுரு மென்பட்டு உள்ளாடைகளைத் தன் உடலோடு ஒட்டிக்கொள்ளும்படி அணிந்து, அதன் மேலாக தன் மென்பட்டு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் பலிபீடத்தின்மீதுள்ள நெருப்பினால் எரிந்துபோன தகனபலியின் சாம்பலை அகற்றி, பலிபீடத்தின் பக்கத்தில் அதை வைக்கவேண்டும். 11அதன் பின்னர் மதகுரு அந்த உடைகளைக் களைந்து, மற்றைய உடைகளை அணிந்துகொண்டு, சாம்பலை எடுத்து முகாமுக்கு வெளியே, சுத்தமான ஒரு இடத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். 12பலிபீடத்திலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்; அது அணைந்துபோகக் கூடாது. மதகுரு ஒவ்வொரு காலையிலும் விறகுகளைப் போட்டு, தகனபலியை நெருப்பின்மீது ஒழுங்குபடுத்தி, அதன்மீது சமாதானபலியின் கொழுப்பைப் போட்டு எரிக்க வேண்டும். 13பலிபீடத்தின்மீது நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது அணைந்துபோகக் கூடாது.”
தானியபலி
14“தானியபலியின் ஒழுங்குமுறைகள் இவையே: ஆரோனின் மகன்மார் கர்த்தரிடம் பலிபீடத்துக்கு முன்பாக அதைக் கொண்டுவர வேண்டும். 15மதகுரு தானியபலியிலுள்ள நறுமணத்தூளுடன் சேர்த்து, ஒரு கைப்பிடி மெல்லிய மாவையும் எண்ணெயையும் எடுக்க வேண்டும். அந்த ஞாபகார்த்தப் பங்கை கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக பலிபீடத்தின்மீது எரிக்க வேண்டும். 16அதன் மீதியானதை ஆரோனும் அவன் மகன்மாரும் சாப்பிட வேண்டும். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்தில், புளிப்பூட்டப்படாததாகச் சாப்பிட வேண்டும். அவர்கள் அதை இறைபிரசன்னக் கூடார முற்றத்தில் சாப்பிட வேண்டும்; 17ஆனால் அது புளிப்பு சேர்த்துத் தயாரிக்கப்படக் கூடாது. எனக்கு நெருப்பினால் செலுத்தப்படும் பலிகளில், அவர்களுடைய பங்காக நான் அதை அவர்களுக்குக் கொடுக்கின்றேன். பாவநிவாரணபலியைப் போலவும், குற்றநிவாரணபலியைப் போலவும் இதுவும் மகாபரிசுத்தமானது. 18அதை ஆரோனின் சந்ததிகளில் ஆண்மகன் எவனும் உண்ணலாம். தலைமுறை தோறும் நெருப்பினால் கர்த்தருக்குச் செலுத்தப்படுகின்ற பலிகளில் இதுவே அவனுடைய நிரந்தரமான பங்காக இருக்கும். இவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாகும்” என்றார்.
19கர்த்தர் தொடர்ந்து மோசேயிடம் சொன்னதாவது, 20“ஆரோனும் அவன் மகன்மாரும் தாங்கள் அபிஷேகம் செய்யப்படுகின்ற நாளிலே கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டிய காணிக்கை இதுவே: ஒரு எப்பா அளவான மெல்லிய மாவில் பத்தில் ஒரு பங்கை#6:20 பத்தில் ஒரு பங்கை சுமார் 3.5 கிலோ கிராம் மா தானியபலியாக அரைப் பங்கை காலையிலும், அரைப் பங்கை மாலையிலும் கொண்டுவர வேண்டும். 21அதை எண்ணெயுடன் சேர்த்து, இரும்பு வலைத் தட்டில் தயாரிக்க வேண்டும். நன்றாகப் பிசைந்து தயாரித்த அதைத் துண்டுகளாக நொறுக்கி, கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தானியபலியாகச் செலுத்த வேண்டும். 22ஆரோனுக்குப் பின்னர் அவனுடைய இடத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட மதகுருவாக வரப்போகும் அவனுடைய மகனே அதைத் தயாரிக்க வேண்டும். இது கர்த்தருடைய நிரந்தரமான பங்கு. அது முழுவதும் எரிக்கப்பட வேண்டும். 23மதகுருவின் அனைத்துத் தானியபலிகளும் முழுவதுமாய் எரிக்கப்பட வேண்டும்; அதை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.”
பாவநிவாரணபலி
24மேலும், கர்த்தர் மோசேயிடம், 25“நீ ஆரோனுக்கும், அவன் மகன்மாருக்கும் சொல்ல வேண்டியதாவது: பாவநிவாரணபலிக்கான ஒழுங்குமுறைகள் இவையே: தகனபலிக்கான மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலிக்கான மிருகமும் கர்த்தருக்கு முன்பாக வெட்டிக் கொல்லப்பட வேண்டும். இது மகாபரிசுத்தமானது. 26அதைச் செலுத்தும் மதகுரு அதை உண்ண வேண்டும். அதை இறைபிரசன்னக் கூடார முற்றத்தில் உள்ள ஒரு பரிசுத்த இடத்தில் உண்ண வேண்டும். 27பலி இறைச்சியைத் தொடுகின்ற எதுவும் பரிசுத்தமாகும். அதன் இரத்தம் ஏதேனும் உடையில் தெறித்திருந்தால், அதை நீங்கள் பரிசுத்த இடத்திலே கழுவ வேண்டும். 28அது சமைக்கப்பட்ட மண் சட்டி உடைக்கப்பட வேண்டும். ஆனால் அது வெண்கலப் பானையில் சமைக்கப்பட்டால், அந்தப் பானையை நன்கு தேய்த்து தண்ணீரால் அலச வேண்டும். 29மதகுருக்களின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். அது மகாபரிசுத்தமானது. 30ஆனால் எந்தவொரு பாவநிவாரணபலியின் இரத்தமும் பரிசுத்த இடத்தில் பாவநிவர்த்தி செய்யப்படுவதற்காக இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் கொண்டுவரப்பட்டால், அந்தப் பலியைச் சாப்பிடாமல் எரிக்க வேண்டும்.”

ទើបបានជ្រើសរើសហើយ៖

லேவியராகமம் 6: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល