லேவியராகமம் 4

4
பாவநிவாரணபலி
1மேலும் கர்த்தர் மோசேயிடம், 2“நீ இஸ்ரயேலருக்குச் சொல்ல வேண்டியதாவது, எவராவது கர்த்தருடைய கட்டளைகளில் செய்யத் தகாத எதையேனும் தவறுதலாகச் செய்து பாவம் செய்தால், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாவன:
3“அபிஷேகம் செய்யப்பட்ட தலைமை மதகுரு, மக்கள்மீது குற்றம் சுமத்தப்படும்படியாக பாவம் செய்தால், அவன் தான் செய்த பாவத்துக்கான பாவநிவாரணபலியாக குறைபாடற்ற ஒரு இளங்காளையை கர்த்தரிடம் கொண்டுவர வேண்டும். 4அவன் அந்தக் காளையை இறைபிரசன்னக் கூடார வாசலில் கர்த்தர் முன்னிலையில் கொண்டுவந்து, அதன் தலையின்மீது தன் கையை வைத்து, கர்த்தர் முன்பாக அதை வெட்டிக் கொல்ல வேண்டும். 5பின்பு அபிஷேகம் செய்யப்பட்ட மதகுரு, பலியிடப்பட்ட காளையின் இரத்தத்தில் சிறிதளவை இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் எடுத்துச் செல்ல வேண்டும். 6பின்னர் அவன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த இடத்தில் இருக்கும் திரைச்சீலைக்கு முன்பாக கர்த்தரின் முன்னிலையில் ஏழு முறை தெளிக்க வேண்டும். 7பின்பு இறைபிரசன்னக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பாக இருக்கும் நறுமண தூபபீடத்தின் கொம்புகளின்மீது மதகுரு கொஞ்சம் இரத்தத்தைப் பூச வேண்டும். காளையின் மீதமுள்ள இரத்தத்தை இறைபிரசன்னக் கூடார வாசலில் இருக்கும் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்ற வேண்டும். 8அவன் பாவநிவாரணபலிக்கான காளையிலிருந்து கொழுப்பு முழுவதையும் அகற்ற வேண்டும்; உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் கொழுப்புடன், அதனுடன் உள்ள கொழுப்பு முழுவதும், 9இடுப்பின் அருகே இருக்கின்ற இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்பையும் அகற்ற வேண்டும். 10சமாதானபலியாகச் செலுத்தப்பட்ட மாட்டிலிருந்து கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, இதிலிருந்தும் அகற்றப்பட வேண்டும். பின்பு மதகுரு அவற்றைத் தகனபலிபீடத்தின்மீது எரிக்க வேண்டும். 11ஆனாலும் அந்தக் காளையின் தோலையும், இறைச்சி முழுவதையும், தலையையும், கால்களையும், உள்ளுறுப்புகளையும், சாணத்தையும், 12காளையின் எஞ்சியுள்ள பாகங்கள் யாவற்றையும் அவன் முகாமுக்கு வெளியே சாம்பல் கொட்டுகின்ற சுத்தமான இடத்துக்குக் கொண்டுவந்து, சாம்பல் குவியலின்மீது விறகினால் எரிக்கப்பட்ட நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும்.
13“இஸ்ரயேலின் முழு சமூகத்தினரும் தவறுதலாகப் பாவம் செய்து, கர்த்தருடைய கட்டளைகளில் செய்யத் தகாத எதையாவது செய்யக்கூடும். அவ்வாறு செய்திருந்தால் அந்தச் செயலைக் குறித்து அச்சமூகத்தினர் அறியாதிருந்தாலும், அவர்கள் குற்றவாளிகளே. 14தாங்கள் செய்த பாவம் அறியவரும்போது, சபையோர் ஒரு இளங்காளையைப் பாவநிவாரணபலியாக இறைபிரசன்னக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும். 15சமூகத்தின் மூப்பர்கள் கர்த்தரின் முன்னிலையில் அந்தக் காளையின் தலைமீது தங்கள் கைகளை வைக்கவேண்டும். பின்பு அந்தக் காளை கர்த்தருக்கு முன்பாக வெட்டிக் கொல்லப்பட வேண்டும். 16பின்பு அபிஷேகம் செய்யப்பட்ட மதகுரு காளையின் இரத்தத்தில் சிறிதளவை இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் எடுத்துச் செல்ல வேண்டும். 17மதகுரு தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, திரைச்சீலைக்கு எதிரே கர்த்தரின் முன்னிலையில் ஏழு முறை தெளிக்க வேண்டும். 18அவன் அந்த இரத்தத்தில் சிறிதளவை இறைபிரசன்னக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பாக இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும். மீதமுள்ள இரத்தத்தை இறைபிரசன்னக் கூடார வாசலில் உள்ள தகனபலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும். 19அவன் அதிலிருந்து அனைத்து கொழுப்பையும் அகற்றி, அதைப் பலிபீடத்தின்மீது எரிக்க வேண்டும். 20தனது பாவநிவாரணபலிக்கான காளைக்குச் செய்தது போலவே, இந்தக் காளைக்கும் செய்யவேண்டும். இவ்விதமாக, மதகுருக்கள் அவர்களுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்போது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். 21பின்பு காளையின் மீதமுள்ள பாகங்களை முகாமுக்கு வெளியே கொண்டுபோய், அங்கே மதகுருவின் பாவநிவாரணபலியைச் சுட்டெரித்தது போல் இதையும் எரிக்க வேண்டும். இதுவே சமூகத்தினருக்கான பாவநிவாரணபலி.”
22“ஒரு தலைவன் தவறுதலாகப் பாவம் செய்து, தன் இறைவனாகிய கர்த்தரின் கட்டளைகளில் செய்யத் தகாத எதையாவது செய்தால், அவன் குற்றவாளி. 23அவன் செய்த பாவம் அவனுக்குத் தெரியவரும்போது, அவன் குறைபாடற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவை பலியாகக் கொண்டுவர வேண்டும். 24அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவின் தலையில் தன் கையை வைத்து, கர்த்தர் முன்னிலையில் தகனபலி வெட்டப்படும் இடத்தில் அதை வெட்டிக் கொல்ல வேண்டும். இது ஒரு பாவநிவாரணபலி. 25பின்பு மதகுரு, பாவநிவாரணபலியின் இரத்தத்தில் சிறிதளவைத் தன் விரலினால் எடுத்து, அதைத் தகனபலிபீடத்தின் கொம்புகளின்மீது பூச வேண்டும். மீதமுள்ள இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும். 26சமாதானபலியின் கொழுப்பை எரித்தது போலவே, வெள்ளாட்டுக்கடாவின் கொழுப்பு முழுவதையும் அவன் பீடத்தின் மேல் எரிக்க வேண்டும். இவ்விதமாய் மதகுரு அந்த மனிதனின் பாவத்துக்காக பாவநிவர்த்தி செய்யும்போது அவனது பாவம் மன்னிக்கப்படும்.”
27“சமூக அங்கத்தினரில் ஒருவன் தவறுதலாகப் பாவம் செய்து, கர்த்தரின் கட்டளைகளில் செய்யத் தகாத எதையாவது செய்தால், அவன் குற்றவாளி. 28அவன் செய்த பாவம் அவனுக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்துக்கான தனது பலியாக குறைபாடற்ற ஒரு பெண்வெள்ளாட்டுக்குட்டியைக் கொண்டுவர வேண்டும். 29அவன் தன் கையைப் பாவநிவாரணபலியின் தலைமீது வைத்து, தகனபலிக்கான இடத்தில் அதை வெட்டிக் கொல்ல வேண்டும். 30பின்பு மதகுரு இரத்தத்தில் சிறிதளவைத் தன் விரலினால் எடுத்து, அதைத் தகனபலிபீடத்தின் கொம்புகளின்மீது பூச வேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும். 31சமாதானபலியின் கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, அதன் கொழுப்பு முழுவதையும் அகற்ற வேண்டும். மதகுரு அதைப் பலிபீடத்தில் கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக எரிக்க வேண்டும். இவ்விதம் மதகுரு அவனுக்காக பாவநிவர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான்.”
32“அவன் பாவநிவாரணபலியாக ஒரு செம்மறியாட்டுக்குட்டியைக் கொண்டுவருவானாயின், அவன் குறைபாடற்ற பெண்ஆட்டுக்குட்டியையே கொண்டுவர வேண்டும். 33அவன் அதன் தலைமீது தன் கையை வைத்து, தகனபலி வெட்டப்படும் இடத்தில் பாவநிவாரணபலியாக அதை வெட்டிக் கொல்ல வேண்டும். 34பின்பு மதகுரு பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, தகனபலிபீடத்தின் கொம்புகளின்மீது அதைப் பூச வேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும். 35சமாதானபலியின் செம்மறியாட்டுக்குட்டியிலிருந்து கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, கொழுப்பு முழுவதையும் அவன் அகற்ற வேண்டும். மதகுரு அதைப் பலிபீடத்தில் நெருப்பினால் கர்த்தருக்கு செலுத்தப்படும் பலியின்மீது வைத்து எரிக்க வேண்டும். இவ்விதமாய், மதகுரு அவன் செய்த பாவத்துக்காக, அவனுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்போது அவனது பாவம் மன்னிக்கப்படும்.”

ទើបបានជ្រើសរើសហើយ៖

லேவியராகமம் 4: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល