43
எகிப்துக்கு இரண்டாம் பயணம்
1கானான்#43:1 கானான் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டிலே தொடர்ந்தும் பஞ்சம் மிகவும் கடுமையானதாக இருந்தது. 2அதனால் எகிப்திலிருந்து கொண்டுவந்த தானியம் யாவற்றையும் உண்டு முடித்த பின்னர், அவர்களின் தந்தையான யாக்கோபு அவர்களிடம், “நீங்கள் மறுபடியும் போய் இன்னும் கொஞ்சம் உணவுப் பொருட்களை வாங்கி வாருங்கள்” என்றான்.
3அப்போது யூதா தன் தந்தையிடம், “அந்த ஆள், ‘உங்கள் இளைய சகோதரன் உங்களுடன் வராவிட்டால் நீங்கள் என் முகத்தில் விழிக்க மாட்டீர்கள்’ என்று எங்களைக் கண்டிப்பாக எச்சரிக்கை செய்திருக்கிறான். 4எங்கள் தம்பியை எங்களுடன் அனுப்பினால் நாங்கள் இறங்கிப் போய் உங்களுக்குத் தானியம் வாங்கிவருவோம். 5நீங்கள் அவனை எங்களுடன் அனுப்பாவிட்டால் நாங்கள் அங்கே இறங்கிப் போக மாட்டோம்; ஏனெனில், ‘உங்கள் இளைய சகோதரன் உங்களுடன் வராவிட்டால், நீங்கள் என் முகத்தில் விழிக்க மாட்டீர்கள்’ என அந்த ஆள் சொல்லியிருக்கின்றான்” என்றான்.
6அப்போது இஸ்ரயேல், “உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கின்றான் என்று அந்த ஆளுக்கு வெளிப்படுத்தி, ஏன் இந்தத் துன்பத்தை எனக்கு வருவித்தீர்கள்?” என்று கேட்டான்.
7அதற்கு அவர்கள், “அந்த ஆள் எங்களைப் பற்றியும், எங்கள் குடும்பத்தைப் பற்றியும் விபரமாய் விசாரித்தான். ‘உங்களுடைய தந்தை இன்னும் உயிரோடிருக்கின்றாரா?’ என்றும், ‘உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கின்றானா?’ என்றும் கேட்டான். நாங்கள் அவனுடைய கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொன்னோம். ‘உங்கள் சகோதரனை இங்கே அழைத்து வாருங்கள்’ என்று சொல்வான் என எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார்கள்.
8பின்பு யூதா தன் தந்தையாகிய இஸ்ரயேலிடம், “நீங்களும் நாங்களும் எங்கள் பிள்ளைகளும் மரணமடையாமல் உயிர் வாழ வேண்டுமானால், இளைய சகோதரனை நீங்கள் என்னுடன் அனுப்புங்கள். நாங்கள் புறப்பட்டு செல்வோம். 9அவனுடைய பாதுகாப்புக்கு நானே பொறுப்பாய் இருப்பேன்; தனிப்பட்ட விதத்தில் அவனுக்காக என்னை நீங்கள் பொறுப்பாளியாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவனை நான் மறுபடியும் உமக்கு முன்பாக கொண்டுவந்து நிறுத்தாவிட்டால், அந்தப் பழியை என் வாழ்நாள் முழுவதும் உமக்கு முன்பாக சுமப்பேன். 10நாங்கள் இவ்வாறு காலம் தாழ்த்தாது இருந்திருந்தால், இதுவரை நாங்கள் இரண்டு முறை போய்த் திரும்பியிருக்கலாம்” என்றான்.
11அதன் பின்னர் அவர்களின் தந்தையாகிய இஸ்ரயேல் அவர்களிடம், “வேறு வழி இல்லாததால், நான் சொல்வது போல் செய்யுங்கள். நாட்டின் சிறந்த பொருட்களில் சிலவற்றை அந்த ஆளுக்கு அன்புக் காணிக்கையாக கொண்டு செல்லுங்கள். சிறிது தைலம், சிறிது தேன், சிறிது நறுமணப் பொருட்கள், வெள்ளைப்போளம், சிறிது பிஸ்தா, வாதுமை ஆகியவற்றை கொண்டுபோய் கொடுங்கள். 12இரண்டு மடங்கு வெள்ளிப்பணத்தையும் உங்களுடன் கொண்டுபோங்கள். ஏனெனில், சென்றதடவை உங்கள் சாக்குகளில் வைக்கப்பட்ட வெள்ளிப்பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்பணம் ஒருவேளை தவறுதலாக வந்திருக்குமோ தெரியாது. 13உங்கள் தம்பியையும் உங்களுடன் அழைத்துக்கொண்டு, உடனே அந்த ஆளிடம் போங்கள். 14சர்வ வல்லமை கொண்ட இறைவன், சிறையிலிருக்கும் உங்கள் சகோதரனையும் தம்பி பென்யமீனையும் மீண்டும் இங்கு அனுப்பும்படி, அந்த ஆள் உங்கள்மீது இரக்கம் காண்பிக்கச் செய்வாராக. நான் பிள்ளைகளை இழக்க வேண்டுமென்றால், பிள்ளைகளை இழந்தவனாகவே இருப்பேன்” என்றான்.
15அவ்வாறே அவர்கள் அன்புக் காணிக்கைகளையும், இரண்டு மடங்கு வெள்ளிப்பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் விரைவாக எகிப்துக்கு இறங்கிச் சென்று, அங்கே யோசேப்பின் முன்பாக ஆஜரானார்கள். 16பென்யமீன் அவர்களுடன் வந்திருப்பதைக் கண்ட யோசேப்பு தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இவர்களை என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போ. இன்று பகல் இவர்கள் என்னுடன் உணவருந்துவதற்காக ஒரு மிருகத்தை சமைத்து ஆயத்தம் செய்” என்றான்.
17யோசேப்பு கட்டளையிட்டபடியே அந்த மேற்பார்வையாளன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். 18அவர்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பயந்தார்கள். “நாம் முதல் முறை வந்தபோது, நமது சாக்குகளில் மீண்டும் வைக்கப்பட்டிருந்த வெள்ளிப்பணத்தின் பொருட்டே நாம் இங்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றோம். நம்மைத் தாக்கி, அடக்கி, நம்மை அடிமைகளாகப் பிடித்து நமது கழுதைகளையும் எடுத்துக்கொள்ளவே அவன் விரும்புகின்றான்” என அவர்கள் நினைத்தார்கள்.
19அதனால் அவர்கள் யோசேப்பின் மேற்பார்வையாளனிடம் போய், வீட்டு வாசலில் இருந்த அவனுடன் பேசினார்கள். 20அவர்கள் அவனிடம், “ஆண்டவனே, முதல் முறை தானியம் வாங்க நாங்கள் இங்கே வந்தோம். 21ஆனால் போகும் வழியில் நாங்கள் இரவு தங்கிய இடத்தில், எங்கள் சாக்குகளைத் திறந்தோம். அப்போது எங்கள் ஒவ்வொருவருடைய சாக்கின் வாயில் பகுதியிலும், நாங்கள் கொடுத்த வெள்ளிப்பணம் எடை குறையாது அவ்வாறே இருக்கக் கண்டோம். எனவே அவற்றைத் திரும்பவும் கொண்டுவந்திருக்கின்றோம். 22அத்துடன் இம்முறையும் தானியம் வாங்குவதற்கு மேலதிக வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்திருக்கின்றோம். நாங்கள் முதல் முறை திரும்பிச் சென்றபோது#43:22 நாங்கள் முதல் முறை திரும்பிச் சென்றபோது – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது யார் அந்த வெள்ளிப்பணத்தை எங்கள் சாக்குகளில் வைத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
23அதற்கு மேற்பார்வையாளன் அவர்களிடம், “பரவாயில்லை, நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். உங்கள் தந்தையின் இறைவனான உங்கள் இறைவனே, உங்கள் சாக்குகளில் உங்களுக்கு ஒரு புதையலை வைத்திருக்கின்றார்; நீங்கள் செலுத்திய வெள்ளிப்பணத்தை நான் பெற்றுக்கொண்டேன்” என்றான். பின்பு சிமியோனை வெளியே அவர்களிடம் கொண்டுவந்தான்.
24மேற்பார்வையாளன் யோசேப்பின் சகோதரர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, அவர்கள் தங்களது கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் கொடுத்தான். அத்துடன் அவர்களது கழுதைகளுக்குத் தீனியும் கொடுத்தான். 25யோசேப்புடன் தாங்கள் உணவுண்ணப் போவதாக அவர்கள் கேள்விப்பட்டதால், நண்பகலில் யோசேப்பு வரும்போது கொடுப்பதற்காகத் தங்கள் அன்புக் காணிக்கைகளை ஆயத்தம் செய்தார்கள்.
26யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் வீட்டுக்குள் கொண்டுவந்திருந்த தங்கள் அன்புக் காணிக்கைகளை அவனிடம் கையளித்து, தரைவரை விழுந்து அவனை வணங்கினார்கள். 27யோசேப்பு அவர்களது சுகசெய்திகளை விசாரித்து, “முன்பு நீங்கள் உங்கள் வயது முதிர்ந்த தந்தையைப் பற்றிச் சொன்னீர்களே, அவர் எவ்வாறிருக்கின்றார்? இன்னும் அவர் உயிரோடிருக்கின்றாரா?” என்று கேட்டான்.
28அதற்கு அவர்கள், “உமது அடியவனாகிய எங்கள் தந்தை இன்னும் உயிரோடு சுகமாக இருக்கின்றார்” என்று சொன்னார்கள். அவனுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் தலைகுனிந்து வணங்கினார்கள்.
29யோசேப்பு நிமிர்ந்து பார்த்தபோது, தன் சொந்தத் தாயின் மகனான தன் சகோதரன் பென்யமீனைக் கண்டதும், “நீங்கள் குறிப்பிட்ட உங்கள் இளைய சகோதரன் இவன்தானா?” என்று கேட்டான். பின்பு, “என் மகனே, இறைவன் உனக்குக் கிருபை செய்வாராக” என்றான். 30யோசேப்பு தன் தம்பியைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டவனாய், வெளியே விரைந்து சென்று அழுவதற்கு ஒரு இடத்தைத் தேடினான். அவன் தன்னுடைய அறைக்குள் சென்று அங்கே அழுதான்.
31பின்பு அவன் தன் முகத்தைக் கழுவி, வெளியே வந்து தன்னை அடக்கிக்கொண்டு, “உணவு பரிமாறுங்கள்” என்றான்.
32எபிரேயருடன் சாப்பிடுவது எகிப்தியருக்கு அருவருப்பாய் இருந்தபடியால், எகிப்தியர்கள் அவர்களுடன் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதில்லை. அதனால் யோசேப்புக்கு வேறாகவும், அவன் சகோதரர்களுக்கு வேறாகவும், அவனுடன் உணவருந்த வந்த எகிப்தியருக்கு வேறாகவும் உணவு பரிமாறப்பட்டது. 33யோசேப்புக்கு முன்பாக மூத்தவன் தொடங்கி இளையவன் வரைக்கும் அவர்களது வயதின்படியே பந்தியில் அமர்த்தப்பட்டார்கள்: யோசேப்பின் சகோதரர்கள் அதைக் குறித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள். 34யோசேப்பின் மேசையிலிருந்து அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, மற்றவர்களுடைய பங்குகளைவிட பென்யமீனின் பங்கு ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் யோசேப்புடன் தாராளமாக மதுவருந்தி மகிழ்ந்தார்கள்.