ஆதியாகமம் 35
35
யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புதல்
1இவற்றின் பின்னர் இறைவன் யாக்கோபிடம், “நீ எழுந்து, உடனடியாக பெத்தேலுக்கு ஏறிச்சென்று அங்கே குடியிருப்பாயாக; நீ உன் அண்ணன் ஏசாவுக்குப் பயந்து ஓடிச்சென்றபோது, வழியில் உனக்குத் தோன்றிய இறைவனுக்கு அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டிடுவாயாக” என்றார்.
2எனவே யாக்கோபு தன் குடும்பத்தார் மற்றும் தன்னோடிருந்த அனைவரிடமும், “நீங்கள் வைத்திருக்கும் அந்நிய தெய்வங்களை விலக்கிவிடுங்கள்; உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள். 3வாருங்கள், அதன் பின்னர் நாம் எல்லோரும் எழுந்து உடனே பெத்தேலுக்குப் போவோம். எனக்கு பேரிடர் ஏற்பட்ட நாட்களில் என் மன்றாடுதலைக் கேட்டு, நான் போன இடமெல்லாம் என்னுடன் இருந்த இறைவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டுவேன்” என்றான். 4அப்போது அவர்கள் தங்களிடமிருந்த அந்நிய தெய்வங்கள் அனைத்தையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள்; அவன் அவற்றையெல்லாம் சீகேமில் ஒரு பெரிய கர்வாலி மரத்தின் கீழ் புதைத்தான். 5அதன் பின்னர் அவர்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தின் மக்களின்மீது இறைவனைக் குறித்து பெரும் பீதி இறங்கியதால் அவர்களில் எவரும் யாக்கோபின் மகன்மாரை தாக்குவதற்காகப் பின்தொடரவில்லை.
6பின்பு, யாக்கோபும் அவனுடன் இருந்த அனைத்து மக்களும் கானான் நாட்டிலுள்ள பெத்தேல் என அழைக்கப்பட்ட லூஸ் என்ற இடத்துக்கு வந்தார்கள். 7அவன் தன் அண்ணனுக்குப் பயந்து ஓடியபோது அந்த இடத்திலே இறைவன் தன்னை அவனுக்கு வெளிப்படுத்தியிருந்ததால், அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இடத்தை ஏல்-பெத்தேல்#35:7 ஏல்-பெத்தேல் – பெத்தேலின் இறைவன் என்று அர்த்தம். என அழைத்தான்.
8அதேவேளை, ரெபேக்காளின் தாதியாகிய தெபோராள் மரணித்து, பெத்தேலுக்கு அருகிலுள்ள கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் செய்யப்பட்டாள். எனவே அந்த இடத்துக்கு அல்லோன்-பாகூத்#35:8 அல்லோன்-பாகூத் – அழுகையின் கருவாலி மரம் என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது.
9யாக்கோபு பதான்-அராமிலிருந்து திரும்பி வருகையில், இறைவன் மறுபடியும் அவனுக்குத் தோன்றி அவனை ஆசீர்வதித்தார். 10இறைவன் அவனிடம், “உன் பெயர் யாக்கோபு, ஆனால் இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படாமல் இஸ்ரயேல் என்றே அழைக்கப்படுவாய்” என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரயேல் எனப் பெயர் சூட்டினார்.
11மேலும் இறைவன், “சர்வ வல்லமை கொண்ட இறைவன் நானே; நீ இனவிருத்தியடைந்து பெருகுவாயாக. உன்னிலிருந்து ஒரு இனமும், பற்பல இனங்களும் தோன்றும்; உன் சந்ததியில் அரசர்களும் தோன்றுவார்கள். 12ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் நான் கொடுத்த நாட்டை உனக்கும் கொடுக்கின்றேன்; உனக்குப் பின்னர் உன் சந்ததிக்கும் இந்த நாட்டைக் கொடுப்பேன்” என்றார். 13இதன்பின் இறைவன் அவனுடன் பேசிய இடத்திலிருந்து மேலெழுந்து போனார்.
14எனவே இறைவன் தன்னுடன் பேசிய அந்த இடத்தில் யாக்கோபு ஒரு கல் தூணை நிறுத்தினான்; அதன்மேல் பானபலியை செலுத்தி எண்ணெயையும் ஊற்றினான். 15இறைவன் தன்னுடன் பேசிய அந்த இடத்துக்கு பெத்தேல்#35:15 பெத்தேல் – இறைவனின் வீடு என்று அர்த்தம். என்று யாக்கோபு பெயரிட்டான்.
ராகேல் மற்றும் ஈசாக்கின் மரணம்
16அதன் பின்னர் அவர்கள் பெத்தேலில் இருந்து புறப்பட்டுப் போனார்கள். எப்பிராத்தா பட்டணத்தை சென்றடைவதற்கு சற்றுத் தொலைவில் இருக்கும்போது, ராகேல் பிரசவ வேதனையால் மிகவும் கஷ்டப்பட்டாள். 17அவளது பிரசவ வேதனை உச்சக்கட்டத்தில் இருக்கையில், மகப்பேற்றுத் தாதி அவளிடம், “பயப்படாதே, உனக்கு இன்னுமொரு மகன் பிறந்திருக்கின்றான்” என்றாள். 18தனது மரணத் தறுவாயில் கடைசி மூச்சு விடும்போது பிறந்த தன் மகனுக்கு அவள், பெனொனி#35:18 பெனொனி – என் துக்கத்தின் மகன் என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினாள். ஆனால் அவனது தந்தையோ அவனுக்கு பென்யமீன்#35:18 பென்யமீன் – என் வலதுகையின் மகன் என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினான்.
19ராகேல் மரணித்து பெத்லெகேம் எனப்பட்ட எப்பிராத்தாவுக்குப் போகும் வழியிலே அடக்கம் செய்யப்பட்டாள். 20யாக்கோபு, அவளது கல்லறையின் மீது ஒரு தூணை நிறுத்தினான். இந்நாள்வரை அத்தூண் ராகேலின் கல்லறையின் அடையாளமாக இருக்கின்றது.
21இஸ்ரயேல் மீண்டும் தொடர்ந்து பயணம் செய்து, மிக்தால்-ஏதேருக்கு#35:21 மிக்தால்-ஏதேருக்கு – மந்தையின் கண்காணிப்பு கோபுரம் என்று அர்த்தம். அப்பால் தன் கூடாரத்தை அமைத்தான். 22இஸ்ரயேல் அப்பிரதேசத்தில் குடியிருக்கையில், ரூபன் தன் தந்தையின் மறுமனைவி பில்காளுடன் பாலுறவு கொண்டான்; அதை இஸ்ரயேல் கேள்விப்பட்டான்.
யாக்கோபுக்குப் பன்னிரண்டு மகன்மார் இருந்தார்கள்:
23லேயாளின் மகன்மார்:
யாக்கோபின் மூத்த மகனான ரூபன்,
சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள்.
24ராகேலின் மகன்மார்:
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
25ராகேலின் பணிப்பெண் பில்காள் பெற்றெடுத்த மகன்மார்:
தாண், நப்தலி என்பவர்கள்.
26லேயாளின் பணிப்பெண் சில்பாள் பெற்றெடுத்த மகன்மார்:
காத், ஆசேர் என்பவர்கள்.
பதான்-அராமில் யாக்கோபுக்குப் பிறந்த மகன்மார் இவர்களே.
27யாக்கோபு கீரியாத்-அர்பாவுக்கு அருகேயிருந்த எப்ரோன் எனப்படும் மம்ரேயில் வசித்த தன் தந்தை ஈசாக்கின் வீட்டுக்குத் திரும்பி வந்தான். ஆபிரகாமும் ஈசாக்கும் முன்பு அந்த இடத்திலேயே குடியிருந்தனர். 28ஈசாக்கு நூற்று எண்பது வருடங்கள் உயிரோடிருந்தான். 29பின்பு ஈசாக்கு பூரண ஆயுள் உள்ளவனாய் மரணித்து, தனக்கு முன் மரணித்த முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டான். அவனுடைய மகன்மாரான ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம் செய்தார்கள்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 35: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.