ஆதியாகமம் 17
17
விருத்தசேதன உடன்படிக்கை
1ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தபோது, கர்த்தர் அவருக்குக் காட்சியளித்து, “நான் சர்வ வல்லமை கொண்ட இறைவன்#17:1 நான் சர்வ வல்லமை கொண்ட இறைவன் – எபிரேய மொழியில் எல்-ஷடாய், நீ எனக்கு முன்பாக மாசற்றவனாக நடந்து என்னைப் பணிந்து கொள்வாயாக. 2நான் உனக்கும் எனக்கும் இடையில் என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன் சந்ததியை#17:2 உன் சந்ததியை – எபிரேய மொழியில் உன்னை என்றுள்ளது. மேலும் மேலும் பெருகச் செய்வேன்” என்றார்.
3அப்போது ஆபிராம் தலைதாழ்த்தி வீழ்ந்து இறைவனை வணங்கினார். இறைவன் அவருடன் பேசி, 4“இதோ, நான் உன்னுடன் ஏற்படுத்துகின்ற உடன்படிக்கை இதுவே: நீ அநேக இனங்களுக்குத் தந்தையாவாய்#17:4 தந்தையாவாய் – மூதாதையர் என்று வாக்குறுதி அளிக்கின்றேன். 5நான் உன்னை அநேக இனங்களுக்குத் தந்தையாக்குகின்றேன், அதனால் நீ இனி ஆபிராம் என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம்#17:5 ஆபிரகாம் என்பதற்கு அநேகரின் தந்தை என்று அர்த்தம் என்றே அழைக்கப்படுவாய். 6நான் உன் சந்ததியை மேலும் மேலும் பெருகச் செய்து, உன்னிலிருந்து பல இனங்களை உருவாக்குவேன், உன்னிலிருந்து அரசர்கள் தோன்றுவார்கள். 7நான் என் உடன்படிக்கையை எனக்கும் உனக்கும் இடையிலும், உனக்குப் பின்னர் தலைமுறை தோறும் எனக்கும் உன் சந்ததிகளுக்கு இடையிலும் நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அத்துடன் உனது இறைவனாகவும் உனக்குப் பின்னர் உனது சந்ததிகளுடைய இறைவனாகவும் இருப்பேன். 8நீ இப்போது பிறநாட்டவனாக வாழும் இந்தக் கானான் நாடு முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்னர் உன் சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடைமையாகக் கொடுத்து, நானே அவர்களுக்கு இறைவனாய் இருப்பேன்” என்றார்.
9அதன் பின்னர் இறைவன் ஆபிரகாமிடம், “உன்னைப் பொறுத்தவரை, என் உடன்படிக்கையை நீயும் உனக்குப் பின்னர் உனது சந்ததியினரும் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 10நான் உன்னோடும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிகளோடும் செய்துகொள்ளும் என் உடன்படிக்கையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதமாவது: உங்கள் மத்தியில் உள்ள ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம்#17:10 விருத்தசேதனம் – இச்சொல், ஆண்களின் நுனித்தோலை சுற்றிக் கத்தரித்து அகற்றுகின்ற முறைமை. செய்யப்பட வேண்டும். 11எனக்கும் உனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளமாய் இருக்கும்படியாக, நீ உனது நுனித்தோலைச் சுற்றியுள்ள சதையை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். 12தலைமுறை தோறும், ஒவ்வொரு ஆண் குழந்தையும் பிறந்து எட்டாவது நாளில் இவ்வாறு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். உங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களும், உங்கள் சந்ததியாய் இல்லாமல் பிற இனத்தவரிடமிருந்து பணத்துக்கு வாங்கப்பட்டவர்களும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். 13உனது குடும்பத்தில் பிறந்தவர்களும், பணத்துக்கு வாங்கப்பட்டவர்களும் நிச்சயமாக விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். இது உங்கள் உடலில் என் நித்திய உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கும். 14எந்த ஒரு ஆணாவது நுனித்தோலைச் சுற்றியுள்ள சதை விருத்தசேதனம் செய்யப்படாதவனாக இருந்தால், அவன் என் உடன்படிக்கையை நிராகரித்த காரணத்துக்காக தன் சொந்த மக்களிலிருந்து துண்டிக்கப்பட்டு விலக்கப்படுவான்”#17:14 இனி அவன் எனக்கு சொந்தமானவன் அல்ல என்பது இதன் பொருள். என்றார்.
15மேலும் இறைவன் ஆபிரகாமிடம், “நீ இனிமேல் உன் மனைவி சாராயை, சாராய் என்று அழைக்காமல் சாராள்#17:15 சாராள் என்பதற்கு இளவரசி என்று அர்த்தம். என்று அழைப்பாயாக; இதுவே அவள் பெயராயிருக்கும்” என்றார். 16“நான் அவளை ஆசீர்வதித்து, அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன். நான் அவளை ஆசீர்வதிப்பதனால், அவள் பல இனங்களின் தாயாவாள்; பல இன அரசர்களும் அவளிடமிருந்து தோன்றுவார்கள்” என்றார்.
17அப்போது ஆபிரகாம் தலைதாழ்த்தி வீழ்ந்து வணங்கி, “நூறு வயதுள்ள மனிதனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதில் சாராள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பாளோ?” என்று தனக்குள்ளே சொல்லிச் சிரித்துக் கொண்டார். 18மேலும் ஆபிரகாம் இறைவனிடம், “இஸ்மவேலுக்கு உம்மிடத்தில் வாழ்வு கிடைத்தால் போதும்!” என்று சொன்னார்.
19அதற்கு இறைவன், “ஆம்; ஆனாலும், சாராள் உனக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; நீ அவனுக்கு ஈசாக்கு#17:19 ஈசாக்கு என்பதற்கு அவன் சிரிக்கின்றான் என்று அர்த்தம். என்று பெயரிடு. நான் என் உடன்படிக்கையை அவனுடன் ஏற்படுத்துவேன்; அது அவனுக்குப் பின்னர் அவனுடைய சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கும். 20இஸ்மவேலைப் பொறுத்தவரை, நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்: நான் அவனை ஆசீர்வதித்து, அவனுடைய சந்ததியை இனவிருத்தி அடையச் செய்து எண்ணிக்கையில் பெருகச் செய்வேன். அவன் பன்னிரண்டு தலைவர்களுக்குத் தந்தையாயிருப்பான், நான் அவனுடைய சந்ததியை ஒரு பெரிய இனமாக்குவேன். 21ஆனால், அடுத்த வருடம் இதே காலத்தில், சாராள் உனக்குப் பெற்றெடுக்கப் போகின்ற பிள்ளையாகிய ஈசாக்குடனேயே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார். 22இறைவன் ஆபிரகாமுடன் பேசி முடித்த பின்னர் மேலெழுந்து போனார்.
23ஆபிரகாம், இறைவன் தனக்குச் சொன்னபடி அந்தநாளிலே இஸ்மவேலுக்கும், தன் வீட்டில் பிறந்தவர்களுக்கும், பணத்துக்கு வாங்கப்பட்டவர்களான தன் வீட்டிலுள்ள அனைத்து ஆண்களுக்கும் நுனித்தோலைச் சுற்றியுள்ள சதையை விருத்தசேதனம் செய்தார். 24ஆபிரகாமுடைய நுனித்தோலைச் சுற்றியுள்ள சதை விருத்தசேதனம் செய்யப்படும்போது அவர் தொண்ணூற்றொன்பது வயதுடையவராய் இருந்தார். 25அவருடைய மகன் இஸ்மவேலுடைய நுனித்தோலைச் சுற்றியுள்ள சதை விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் பதின்மூன்று வயதுடையவனாய் இருந்தான்; 26ஆபிரகாமும் அவர் மகன் இஸ்மவேலும் ஒரேநாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். 27ஆபிரகாமின் வீட்டில் பிறந்தவர்களும், அவரால் பணம் கொடுத்து பிற இனத்தவரிடமிருந்து வாங்கப்பட்டவர்களுமான அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து ஆண்களும் ஆபிரகாமுடன் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 17: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.