யாத்திராகமம் 34

34
புதிய கற்பலகைகள்
1கர்த்தர் மேலும் மோசேயிடம், “நீ முன்பு இருந்ததைப் போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி எடுப்பாயாக. நீ உடைத்துப்போட்ட முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அவற்றில் எழுதுவேன். 2நாளை காலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையின்மேல் ஏறி, மலை உச்சியில் எனக்கு முன்பாக வந்து நிற்பாயாக. 3உன்னுடன் வேறெவரும் வரக் கூடாது, மலையின் எந்தப் பகுதியிலும் எங்காவது வேறெவரும் காணப்படவும் கூடாது. ஆட்டு, மாட்டு மந்தைகள்கூட அந்த மலைக்கு முன்னால் மேயக் கூடாது” என்றார்.
4மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, முன்னைய கற்பலகைகளைப் போல் வேறு இரு கற்பலகைகளைச் செதுக்கி, அதிகாலையில் எழுந்து, அந்த இரு பலகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலைக்கு ஏறிப் போனார். 5அப்போது கர்த்தர் மேகத்தில் இறங்கி அங்கே மோசேயுடன் நின்று, கர்த்தர் என்ற தமது பெயரைப் பிரசித்தப்படுத்தினார். 6அவர் மோசேயின் முன்னால் கடந்து செல்கையில், “கர்த்தர்! கர்த்தர்! மன உருக்கமும், கிருபையும் உள்ள இறைவன். கோபம்கொள்ளத் தாமதிப்பவர். நிலையான அன்பிலும், நம்பகத் தன்மையிலும் நிறைந்தவர். 7ஆயிரம் தலைமுறைகளுக்கு நிலையான அன்பைக் காட்டுகின்றவர். கொடுமையையும், கலகத்தையும், பாவத்தையும் மன்னிக்கின்றவர். ஆனாலும் குற்றவாளிகளைத் தண்டனைக்கு தப்பவிடாமல், தந்தையரின் பாவத்துக்காக பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும், அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறை வரைக்கும் தண்டிக்கின்றவர்” என்று பிரசித்தப்படுத்தினார்.
8உடனே மோசே, தரையில் விழுந்து வழிபட்டார். 9அவர், “ஆண்டவரே! நான் உமது கண்களில் தயவு பெற்றிருந்தேனேயானால், ஆண்டவராகிய நீர் எங்களுடன் வருவீராக. மக்கள் வளைந்து கொடுக்காத கழுத்துடைய மக்களாய் இருந்தாலும், எங்கள் கொடுமைகளையும், பாவத்தையும் மன்னித்து, எங்களை உமது உரிமைச் சொத்தாக ஏற்றுக்கொள்ளும்” என்றார்.
10அதற்குக் கர்த்தர், “நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்கின்றேன். முழு உலகத்திலும், எந்த இனத்திலும் முன்னொருபோதும் செய்யப்படாத அதிசயங்களை உனது மக்கள் முன்பாகச் செய்வேன். கர்த்தராகிய நான் உனக்காகச் செய்யப்போகும் செயல் எவ்வளவு வியப்புக்குரியதாய் இருக்கும் என்பதை உன்னுடனேகூட வாழும் மக்கள் காண்பார்கள். 11நான் இன்று உனக்குக் கட்டளையிடுவதற்கு நீ கீழ்ப்படி. நான் எமோரியர், கானானியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை உனக்கு முன்பாக வெளியே துரத்திவிடுவேன். 12நீ போய்ச் சேரும் நாட்டிலுள்ள மக்களோடு எந்தவிதமான உடன்படிக்கையையும் செய்யாதிருக்கக் கவனமாயிரு; மீறினால் அவர்கள் உங்களிடையே கண்ணிப்பொறியாய் இருப்பார்கள். 13நீயோ அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய புனிதக் கற்களை நொறுக்கி, அசேரா கம்பங்களை#34:13 அசேரா கம்பங்களை அசேரா பெண் தெய்வத்தின் மரச் சின்னங்கள். வெட்டிப்போட வேண்டும். 14வைராக்கியம் உடையவர் என்ற பெயருடைய கர்த்தர், தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியம் உள்ள இறைவன். எனவே நீ வேறு எந்த தெய்வத்தையும் வழிபடாதிருப்பாயாக.
15“நீ அந்நாட்டிலுள்ள மக்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்கக் கவனமாயிரு; ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலி செலுத்திப் பாவம் செய்யும்போது#34:15 பாவம் செய்யும்போது – தகாத உறவில் ஈடுபடுதலுக்கு ஒப்பானது, பலிகளை உண்ணும்படி உங்களை அழைத்தால், நீங்கள் அவர்களுடன் சேர்ந்து அதை உண்ணுவீர்கள். 16நீங்கள் உங்கள் மகன்மாருக்கு அவர்களுடைய மகள்மாரை மனைவிமாராகத் தெரிவுசெய்யும்போது, அவர்களுடைய மகள்மார் தங்கள் தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்தி பாவம் செய்து, அதைச் செய்யும்படி உங்கள் மகன்மாரையும் தூண்டுவார்கள்.
17“வார்க்கப்பட்ட தெய்வங்களைச் செய்ய வேண்டாம்.
18“புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஏழு நாட்களுக்குப் புளிப்பூட்டப்படாத அப்பங்களை உண்ண வேண்டும். குறித்த காலமான ஆபீப் மாதத்திலே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்தில் நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தீர்கள்.
19“ஒவ்வொரு கருப்பையின் முதற்பேறும் எனக்குரியது. உனது கால்நடையில் ஆட்டு மந்தையிலிருந்தோ மாட்டு மந்தையிலிருந்தோ பிறக்கும் தலையீற்றான எல்லாக் கடாக்களும் காளைகளும் எனக்கே உரியவை. 20ஒரு செம்மறியாட்டுக்குட்டியைக் கொடுத்து கழுதையின் தலையீற்றை மீட்டுக்கொள்.#34:20 ஏனெனில், மீட்டுக்கொள்ளவதற்காக செம்மறியாட்டுக்குட்டியை பலியிடுவது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படும். கழுதையைப் பலியிடுவது ஏற்றுக்கொள்ளப்படாது. அவ்வாறு அதை மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்து விடு. உன் மகன்மாரில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்.
“ஒருவரும் வெறுங்கையோடு என் முன்பாக வரக் கூடாது.
21“நீ வாரத்தின் ஆறு நாட்கள் வேலை செய்வாயாக. ஆனால் ஏழாம் நாளிலோ ஓய்ந்திருக்க வேண்டும். உழவு காலத்திலும், அறுவடைக் காலத்திலும்கூட நீ ஓய்ந்திருக்க வேண்டும்.
22“கோதுமை அறுவடையின் முதற்பலன்களை கொண்டு, வாரங்களின் பண்டிகையையும், வருட முடிவில் சேர்ப்பின் பண்டிகையையும் கொண்டாடுங்கள். 23வருடத்தில் மூன்று முறை உங்கள் ஆண்கள் எல்லோரும் இஸ்ரயேலின் இறைவனான ஆண்டவராகிய கர்த்தரின் முன்பாக வரவேண்டும். 24நான் ஏனைய இனங்களை உங்களுக்கு முன்பாக வெளியே துரத்தி, உங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்துவேன். ஒவ்வொரு வருடமும் மூன்று முறை நீங்கள் உங்கள் இறைவனாகிய கர்த்தர் முன்பாக நிற்கச் செல்லும்போது, ஒருவனும் உங்கள் நாட்டை அபகரிக்க ஆசைகொள்ள மாட்டான்.
25“புளிப்பூட்டப்பட்ட எதனுடனும் ஒரு பலியின் இரத்தத்தை எனக்குச் செலுத்த வேண்டாம். பஸ்கா பண்டிகையின் பலியிலுள்ள எதையும் மறுநாள் காலைவரை வைக்க வேண்டாம்.
26“உங்கள் இறைவனாகிய கர்த்தரின் வீட்டுக்கு உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களின் சிறந்ததைக் கொண்டுவாருங்கள்.”
“வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலில் சமைக்க வேண்டாம்” என்றார்.
27அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம், “இந்த வார்த்தைகளை எழுது. ஏனெனில் இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரயேலரோடும் நான் உடன்படிக்கை செய்திருக்கிறேன்” என்றார். 28அங்கே மோசே இரவும் பகலும் அப்பம் உண்ணாமலும், தண்ணீர் அருந்தாமலும் நாற்பது நாட்கள் கர்த்தரோடு இருந்தார். அவர் பத்துக் கட்டளைகளான உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கற்பலகைகளில் எழுதினார்.
மோசேயின் பிரகாசமான முகம்
29மோசே, தனது கையில் சாட்சியின் கற்பலகைகளுடன் சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். கர்த்தரோடு பேசியதனால் தனது முகம் பிரகாசமாயிருந்ததை அவர் அறியாதிருந்தார். 30ஆரோனும், இஸ்ரயேலர் எல்லோரும் மோசேயைப் பார்த்தபோது, அவரது முகம் பிரகாசமாயிருந்தது. அதனால் அவர்கள் அவருக்கு அருகே வரப் பயந்தார்கள். 31ஆனால் மோசே அவர்களை அழைத்தபோது, ஆரோனும் அனைத்து சமூகத் தலைவர்களும் அவரிடம் திரும்பி வந்தார்கள். மோசே அவர்களுடன் பேசினார். 32அதன் பின்னர் இஸ்ரயேலர் எல்லோரும் அவரை நெருங்கி வந்தார்கள். அப்போது கர்த்தர் சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் மோசே அவர்களுக்குக் கொடுத்தார்.
33மோசே அவர்களுடன் பேசி முடிந்ததும், தனது முகத்தை முகத்திரையால் மூடிக்கொண்டார். 34ஆனாலும் மோசே, கர்த்தரிடம் பேசும்படி அவர் முன்பாக போய் திரும்பி வரும்வரை முகத்திரையை நீக்கிவிடுவார். அவர் தனக்குக் கட்டளையிடப்பட்டதை வெளியே வந்து இஸ்ரயேலருக்குச் சொல்லும்போது, 35இஸ்ரயேலர் அவர் முகம் பிரகாசிப்பதைக் கண்டார்கள். எனவே மோசே, தான் கர்த்தருடன் பேசுவதற்கு உள்ளே போகும்வரை, அந்த முகத்திரையைத் திரும்பவும் தன் முகத்தின்மீது போட்டுக்கொள்வார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

யாத்திராகமம் 34: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល