14
1மேலும் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: 2“நீங்கள் திரும்பி வந்து மிக்தோல் நகரத்துக்கும், கடலுக்கும் இடையேயுள்ள பி-காஈரோத் நகரத்துக்கு அருகே முகாமிடுங்கள் என்று இஸ்ரயேலருக்குச் சொல். அவர்கள் கடலருகே பாகால்-செபோன் நகரத்துக்கு நேரெதிராக முகாமிட வேண்டும். 3‘இஸ்ரயேலர் குழப்பத்துடன் நாட்டைச் சுற்றி அலைந்து திரிகிறார்கள். பாலைவனம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது’ என்று பார்வோன் நினைப்பான். 4நான் பார்வோனின் மனதைக் கடினப்படுத்துவேன், அவன் உங்களைப் பின்தொடர்ந்து வருவான். ஆனால், பார்வோனாலும் அவனது படைகள் எல்லாவற்றினாலும் நான் மகிமை அடைவேன். அப்போது நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார். இஸ்ரயேலர் அவ்வாறே செய்தார்கள்.
5இஸ்ரயேலர் ஓடிப் போனார்கள் என்று எகிப்திய அரசன் பார்வோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவனும் அவனது அலுவலர்களும் இஸ்ரயேலரைக் குறித்த தங்கள் மனதை மாற்றிக் கொண்டார்கள். அவர்கள், “நாம் செய்தது என்ன? இஸ்ரயேலரை போகவிட்டு, அவர்களின் சேவையை இழந்துவிட்டோம்!” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 6எனவே பார்வோன், தனது தேரை ஆயத்தப்படுத்தி, தன் இராணுவ வீரரையும் தன்னுடன் கூட்டிச் சென்றான். 7அவன் எகிப்திலுள்ள மற்றெல்லாத் தேர்களோடு, மிகச் சிறந்த அறுநூறு தேர்களை அவற்றின் அதிபதிகளோடு கூட்டிக்கொண்டு போனான். 8கர்த்தர் எகிப்திய அரசன் பார்வோனின் மனதைக் கடினப்படுத்தியபடியால், அவன் தைரியமாக அணிவகுத்துப் போய்க் கொண்டிருந்த இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றான். 9எகிப்தியர் பார்வோனின் குதிரைகளுடனும், தேர்களுடனும், குதிரை வீரருடனும், இராணுவப் படைகளோடும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றனர். பாகால்-செபோன் நகரத்துக்கு எதிரே, பி-காஈரோத் நகரத்தின் அருகிலுள்ள கடல்#14:9 கடல் – செங்கடல் பக்கத்தில் இஸ்ரயேலர் முகாமிட்டிருந்தபோது, எகிப்தியர் அவர்களை நெருங்கினார்கள்.
10பார்வோன் நெருங்கி வந்தபோது இஸ்ரயேலர் பின்னோக்கிப் பார்த்து, தங்களைப் பின்தொடரும் எகிப்தியரின் அணிவகுப்பைக் கண்டார்கள். அப்போது அவர்கள் திகிலடைந்து, கர்த்தரை நோக்கிக் கெஞ்சினார்கள். 11அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் பிரேதக்குழிகள் இல்லையென்றா நாங்கள் இறப்பதற்கு எங்களை பாலைவனத்துக்குக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்து எங்களுக்கு செய்தது என்ன? 12‘எங்களை விட்டுவிடும், நாங்கள் எகிப்தியருக்கு சேவை செய்வோம்’ என்று நாங்கள் எகிப்திலிருக்கும்போது உமக்குச் சொல்லவில்லையா? பாலைவனத்தில் நாங்கள் இறப்பதைவிட, எகிப்தியருக்கு சேவை செய்வது நலமாயிருந்திருக்கும்!” என்றார்கள்.
13மோசே இஸ்ரயேல் மக்களிடம், “பயப்படாதிருங்கள். உறுதியாய் நில்லுங்கள்; கர்த்தர் இன்று உங்களுக்குக் கொண்டுவரப்போகும் இரட்சிப்பைக் காண்பீர்கள். நீங்கள் இன்று காணும் எகிப்தியரை இனி ஒருபோதும் காண மாட்டீர்கள். 14கர்த்தர் உங்களுக்காகப் போராடுவார்; நீங்கள் அமைதியாய் இருங்கள்” என்றார்.
15அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ என்னிடம் முறையிடுவது ஏன்? இஸ்ரயேலரை முன்னேறிப் போகச் சொல். 16நீ உன் கோலை உயர்த்தி, உன் கையை நீட்டி கடலின் தண்ணீரைப் பிரித்துவிடு, அப்போது இஸ்ரயேலர் கடலின் நடுவாகக் காய்ந்த தரையில் நடந்துபோகக் கூடியதாக இருக்கும். 17நான் எகிப்தியரின் உள்ளத்தைக் கடினப்படுத்துவேன், அதனால் அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்வார்கள். இவ்விதமாக பார்வோனாலும், அவனது அனைத்து படைகள், தேர்கள், குதிரை வீரர்களாலும் நான் மகிமையடைவேன். 18நான் பார்வோனாலும், அவனது தேர்களாலும், குதிரைகளாலும் மகிமையடையும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார்.
19அப்போது இஸ்ரயேலரின் படைக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்த இறைவனின் தூதனானவர், அந்த இடத்தைவிட்டு விலகி அவர்களுக்குப் பின்பாகச் சென்றார். அவர்களுக்கு முன்பாக இருந்த மேகத் தூணும் விலகி, அவர்களுக்குப் பின்பாக வந்து, 20எகிப்திய படைகளுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் நின்றது. அவர்கள் ஒருவரையொருவர் நெருங்காதபடி, இரவு முழுவதும் மேகம் எகிப்தியருக்கு காரிருளாகவும், இஸ்ரயேலருக்கு வெளிச்சமாகவும் எகிப்திய படைகளுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் நின்றது.
21பின்பு மோசே, கடலின்மீது தன் கையை நீட்டினார். கர்த்தர் இரவு முழுவதும் பலத்த கீழ்க்காற்றினால் கடல் நீரைப் பின்னோக்கித் தள்ளி அதை வரண்ட நிலமாக மாற்றினார். தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. 22இஸ்ரயேலர் கடல் வழியாக உலர்ந்த தரையில் நடந்து சென்றார்கள். அவர்களது வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் தண்ணீர் மதில் போல் நின்றது.
23எகிப்தியர் பார்வோனின் எல்லாக் குதிரைகளோடும், தேர்களோடும், குதிரை வீரர்களோடும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து கடலின் நடுவே வந்தார்கள். 24கர்த்தர் விடியற்காலையில் நெருப்புத் தூணிலும், மேகத் தூணிலுமிருந்து எகிப்திய படையை பீதியடையச் செய்தார். 25கர்த்தர் எகிப்தியர்களின் தேர்களின் சக்கரங்களைக் கழற்றி, தேர் ஓட்டுவதை கடினமாக்கினார். எனவே எகிப்தியர், “நாம் இஸ்ரயேலரை விட்டு ஓடிப் போவோம்! கர்த்தர் எகிப்தை எதிர்த்து அவர்களுக்காகப் போரிடுகின்றார்” என்றார்கள்.
26அப்போது கர்த்தர் மோசேயிடம், “தண்ணீர் எகிப்தியர்மீதும், அவர்களுடைய தேர்கள்மீதும், குதிரை வீரர்மீதும் வரும்படி நீ உன் கையை கடல்மேல் நீட்டு” என்றார். 27அவ்வாறே மோசே தன் கையை கடலுக்கு மேலாக நீட்டினார். அதிகாலையில் கடல் இருந்த இடத்துக்குத் திரும்பியது. ஆனால் எகிப்தியரோ கடலை நோக்கி ஓடினார்கள். கர்த்தர் அவர்களை கடலின் நடுவே மூழ்கடித்தார். 28தண்ணீர் திரும்பவும் வந்து, தேர்களையும், குதிரை வீரர்களையும், அவர்கள் பின்னால் வந்த பார்வோனின் முழுப் படையையும் கடலுக்குள் மூழ்கடித்தபடியால் அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.
29இஸ்ரயேலரோ கடலின் நடுவேயுள்ள உலர்ந்த நிலத்தின் வழியாக நடந்து போனார்கள். அவர்களுடைய வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் தண்ணீர் மதில் போல் நின்றது. 30இவ்விதமாக கர்த்தர் அன்றைய தினம் எகிப்தியரின் கைகளிலிருந்து இஸ்ரயேலரை விடுவித்தார். கடற்கரையில் எகிப்தியர் இறந்து கிடப்பதை இஸ்ரயேலர் கண்டார்கள். 31எகிப்தியருக்கு எதிரான கர்த்தரின் வல்லமையை இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தர்மீதும், அவருடைய பணியாளன் மோசேமீதும் நம்பிக்கை வைத்தார்கள்.