1 கொரிந்தியர் 6
6
விசுவாசிகளுக்குள்ளே வழக்குகள்
1உங்களில் யாருக்காவது வேறொருவருடன் ஒரு தகராறு ஏற்படுமாயின், அவன் தீர்ப்புக்காக பரிசுத்தவான்களிடம் போகாமல் அநீதியுள்ளவர்களிடம் போகத் துணிகிறதென்ன? 2பரிசுத்தவான்கள்தான் உலகத்தை ஒரு நாள் நியாயந்தீர்ப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தையே நீங்கள் நியாயந்தீர்க்கப் போகிறவர்களாயின், சிறிய வழக்குகளை நியாயந்தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையோ? 3இறைவனுடைய தூதர்களையும் நாம்தான் நியாயந்தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால், இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை நியாயந்தீர்ப்பதில் நீங்கள் இன்னும் அதிக தகுதியுடையவர்களாய் இருக்கிறீர்களே. 4ஆதலால், அத்தகைய காரியங்களைக்குறித்து உங்களுக்குத் தகராறு ஏற்படுமாயின், திருச்சபையில் புறக்கணிக்கப்பட்டவர்களையே நியாயத்தீர்ப்பு செய்யும் நடுவர்களாக நியமித்துக்கொள்ளுங்கள். 5உங்களை வெட்கப்படுத்துவதற்காகவே நான் இதைச் சொல்கிறேன். சகோதரர்களிடையே உள்ள தகராறைத் தீர்க்கக்கூடிய ஞானமுள்ள ஒருவனாவது உங்கள் மத்தியில் இல்லையோ? 6மாறாக, ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு விரோதமாக நீதிமன்றத்துக்குப் போகிறானே. அதுவும் அவிசுவாசிகளுக்கு முன்பாகவே இப்படிச் செய்கிறானே.
7உங்களிடையே நீதிமன்ற வழக்குகள் இருப்பது ஏற்கெனவே நீங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படுவீர்கள் என்பதையே காட்டுகிறது. மாறாக உங்களுக்குச் செய்யப்படும் தீமையை நீங்கள் ஏன் சகித்துக்கொள்ளக்கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் ஏன் அதைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது? 8அப்படியிராமல் நீங்கள் ஏமாற்றி, அநியாயம் செய்கிறீர்கள், அதுவும் உங்கள் உடன் சகோதரர்களுக்கல்லவா செய்கிறீர்கள்.
9அநியாயக்காரர்களுக்கு இறைவனுடைய அரசில் உரிமைப் பங்கு இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதிருங்கள்: முறைகேடான பாலுறவில் ஈடுபடுகிறவர்களோ, சிலை வணக்கக்காரர்களோ, விபசாரம் செய்கிறவர்களோ, ஆண் வேசியர்களோ, ஓரினச் சேர்க்கையாளர்களோ, 10அல்லது திருடரோ, பேராசைக்காரர்களோ, குடிவெறியரோ, பழிசொல்லித் தூற்றுவோரோ, ஏமாற்றுக்காரரோ இவர்களில் ஒருவரும் இறைவனுடைய அரசைச் சுதந்தரிப்பதில்லை. 11உங்களில் சிலரும் அவ்வாறே இருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரினாலும், நமது இறைவனின் ஆவியானவரினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
முறைகேடான பாலுறவு
12“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு” என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எல்லாமே பயனுள்ளதல்ல. “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு.” ஆனால் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 13“வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும்” என்கிறீர்கள். ஆனாலும் இறைவன் ஒரு நாள் அவை இரண்டையும் அழித்துப்போடுவார். உடல், முறைகேடான பாலுறவுக்குரியதல்ல; அது கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் உடலுக்குரியவர். 14இறைவன் தமது வல்லமையினால் கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினாரே. அவர் நம்மையும் எழுப்புவார். 15உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அவ்வாறிருக்க, கிறிஸ்துவின் உறுப்புகளை நாம் வேசியுடன் இணைக்கலாமா? அப்படி ஒருபோதும் செய்யக்கூடாதே. 16தன்னை ஒரு வேசியுடன் இணைக்கிறவன், அவளுடன் ஒரே உடலாய் இணைகிறான் என்பதை அறியாதிருக்கிறீர்களா? ஏனெனில், வேதவசனம் சொல்கிறபடி, “இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.”#6:16 ஆதி. 2:24 17ஆனால் தன்னைக் கர்த்தருடன் இணைத்துக்கொள்கிறவன், ஆவியில் அவருடன் ஒன்றிணைந்திருக்கிறான்.
18முறைகேடான பாலுறவிலிருந்து விலகியோடுங்கள். மனிதன் செய்யும் மற்ற எல்லாப் பாவங்களும் அவனுடைய உடலுக்கு வெளியே இருக்கும்; ஆனால் பாலுறவுப் பாவங்களைச் செய்கிறவன், தன் சொந்த உடலுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறான். 19உங்கள் உடல் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட ஆவியானவர் உங்களில் குடியிருக்கிறாரே. நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. 20நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் உங்கள் உடலினால் இறைவனை மகிமைப்படுத்துங்கள்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
1 கொரிந்தியர் 6: TCV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.