மீகா 5
5
வாக்களிக்கப்பட்ட ஆளுநர்
1இராணுவ வீரர்களின் நகரமே, உன் இராணுவ வீரர்களைக் ஒன்றுதிரட்டிச் சேர்த்துக்கொள்;
ஏனெனில் நமக்கு எதிராக முற்றுகையிடப் பட்டிருக்கிறது.
அவர்கள் இஸ்ரயேலின் ஆளுநரை,
கோலினால் கன்னத்தில் அடிப்பார்கள்.
2“ஆனால் எப்பிராத்தா எனப்பட்ட பெத்லெகேமே,
நீ யூதாவின் வம்சங்களில் சிறியதாயிருப்பினும்
இஸ்ரயேலின்மீது என் சார்பாக ஆளுநராக வரப்போகின்றவர்,
உன்னிலிருந்து தோன்றுவார்.
அவரது புறப்படுதல் பூர்வீக காலங்களான
முன்னைய காலத்தினுடையது.”
3பிரசவ வேதனைப்படுபவள் குழந்தை பெற்றெடுக்கும் வரைக்கும்
கர்த்தர் தம் மக்களை அவர்களின் எதிரிகளிடம் கைவிட்டு விடுவார்.
அதன் பின்னர் அவருடைய சகோதரர்களில் எஞ்சியிருப்பவர்கள்
இஸ்ரயேலருடன் இணைந்துகொள்ள திரும்பி வருவார்கள்.
4அந்த ஆளுநர் வரும்போது,
அவர் கர்த்தரின் வல்லமையுடனும்,
தமது இறைவனாகிய கர்த்தரின் பெயரின் மகிமையுடனும் நின்று தமது மந்தையை மேய்ப்பார்.
அப்போது அவருடைய மக்கள் பாதுகாப்பாய் வாழ்வார்கள்.
அவருடைய மேன்மை பூமியின் கடைசிவரை எட்டும்.
5அவரே அவர்களுடைய சமாதானமாயிருப்பார்.
நமது நாட்டின்மீது அசீரிய இராணுவம் படையெடுத்து,
நமது அரண்மனைகளை மிதிக்கும்போது,
நாங்கள் அதற்கு எதிராக ஏழு மேய்ப்பர்களையும்,
எட்டுத் தலைவர்களையும் எழுப்புவோம்.
6அவர்கள் அசீரிய நாட்டை வாளினால் ஆளுகை செய்வார்கள்.
நிம்ரோத் நாட்டை உருவிய வாளினால் ஆளுகை செய்வார்கள்.
அசீரியர் எங்கள் நாட்டின்மீது படையெடுத்து,
எங்கள் எல்லைகளில் அணிவகுத்து வரும்போது,
அவர் எங்களை விடுவிப்பார்.
7அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர்,
மக்கள் கூட்டங்களிடையே கர்த்தரிடமிருந்து வரும் பனியைப் போல் இருப்பார்கள்.
அவர்கள் மனிதனில் சார்ந்திராமலும்,
மனுக்குலத்துக்காகத் தாமதியாமலும்
புல்லின்மீது பெய்யும்
மழையைப் போல் இருப்பார்கள்.
8எனவே, யாக்கோபில் எஞ்சியிருப்போர்,
நாடுகளின் மத்தியில் பெருந்திரளான மக்களின் மத்தியிலே இருப்பார்கள்.
அவர்கள் காட்டுமிருகங்களின் மத்தியில் இருக்கும் சிங்கம் போலவும்,
செம்மறியாட்டு மந்தைகளுக்கிடையில் புகுந்து கிழித்துச் சிதைக்கிற,
சிங்கக் குட்டியைப் போலவும் இருப்பார்கள்.
ஒருவனாலும் அந்நாடுகளைக் காப்பாற்ற முடியாதிருக்கும்.
9இஸ்ரயேலருடைய#5:9 இஸ்ரயேலருடைய – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது கை அவர்களது பகைவர்களுக்கு மேலாக வெற்றியுடன் உயர்த்தப்படும்.
அவர்களுடைய எதிரிகள் எல்லோருமே அழிக்கப்படுவார்கள்.
10கர்த்தர் இஸ்ரயேலுக்கு அறிவிக்கின்றதாவது:
“அந்தநாளில் உன் மத்தியிலிருந்து போர்க்குதிரைகளை அழிப்பேன்.
உன் தேர்ப் படைகளை அழித்தொழிப்பேன்.
11உன் நாட்டிலுள்ள நகரங்களின் அரண்களையும்,
உன் கோட்டைகளையும் இடித்துப் போடுவேன்.
12உன் மாயவித்தையை அழிப்பேன்.
மந்திரம் செய்யும் ஆற்றல் இனி உன் மத்தியில் காணப்பட மாட்டாது.
13நான் உனது செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும்,
புனிதக் கற்களையும் உன் மத்தியில் இருந்து அழிப்பேன்.
நீ இனிமேலும் உன் கைகளால் செய்யப்பட்ட ஒன்றை
வணங்க மாட்டாய்.
14உன் மத்தியிலுள்ள அசேரா தேவதையின் கம்பங்களைப் பிடுங்கி,
உன் பட்டணங்களை அழித்தொழிப்பேன்.
15அத்துடன் எனக்குக் கீழ்ப்படியாத அந்த மக்களை கோபத்தோடும்,
கடுஞ்சினத்தோடும் பழிவாங்குவேன்.”
Currently Selected:
மீகா 5: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.