மீகா 6
6
இஸ்ரயேலின்மீது கர்த்தரின் குற்றச்சாட்டு
1கர்த்தர் சொல்கிறதைக் கேளுங்கள்;
“எழுந்திருங்கள், மலைகள் முன்பாக உங்கள் வழக்கைக் கூறி உங்களுக்காக#6:1 உங்களுக்காக – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது வாதாடுங்கள்;
குன்றுகள் அனைத்தும் நீங்கள் சொல்லப் போவதைக் கேட்கட்டும்.
2“மலைகளே, கர்த்தரின் குற்றச்சாட்டைக் கேளுங்கள்;
பூமியின் நிலையான அத்திவாரங்களே, செவிசாயுங்கள்.
தம் மக்களுக்கெதிரான வழக்கொன்று கர்த்தரிடம் உள்ளது.
இஸ்ரயேலுக்கு எதிராக அவர் ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவருகின்றார்.
3“கர்த்தர் சொல்கிறதாவது, என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்?
நான் எவ்விதம் உங்கள்மீது பாரத்தைச் சுமத்தினேன்? எனக்குப் பதில் சொல்லுங்கள்.
4எகிப்திலிருந்து நான் உங்களை வெளியே கொண்டுவந்தேன்.
அடிமைத்தன நாட்டிலிருந்து மீட்டு வந்தேன்.
உங்களை வழிநடத்த மோசேயுடன் ஆரோனையும்,
மிரியாமையும் அனுப்பினேன்.
5என் மக்களே,
மோவாபிய அரசன் பாலாக் என்ன ஆலோசனை செய்தான் என்பதையும்,
பேயோரின் மகன் பிலேயாம் என்ன பதிலைக் கொடுத்தான் என்பதையும்
நினைத்துப் பாருங்கள்.
கர்த்தர் உங்களுக்குச் செய்த நீதியான செயல்களை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக,
சித்தீம் பள்ளத்தாக்கிலிருந்து கில்கால் நகரத்துக்குப் போன உங்கள் பயணத்தை
நினைத்துப் பாருங்கள்.”
6இஸ்ரயேல் மக்கள் சொல்கிறதாவது,
“கர்த்தரிடம் நாங்கள் எதைக்கொண்டு வருவோம்?
மேன்மையான இறைவனுக்கு முன்பாக எதனுடன் தலைகுனிந்து வழிபடுவோம்?
அவர் முன்பாக ஒரு வயதுடைய கன்றுக்குட்டிகளைத் தகனபலியாகக் கொண்டு வருவோமா?
7ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக்கடாக்களிலும்,
பல்லாயிரக் கணக்கான ஒலிவ எண்ணெய் ஆறுகளிலும் கர்த்தர் விருப்பமாயிருப்பாரோ?
என் மீறுதலுக்காக என் முதற்பேறான பிள்ளையைக் காணிக்கையாகச் செலுத்தட்டுமா?
என் ஆத்துமாவின் பாவங்களுக்காக என் கர்ப்பத்தின் கனியை நான் கொடுக்கட்டுமா?”
8மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே;
கர்த்தர் உன்னிடம் எதைக் கேட்கிறார்?
நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து,
உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படிதானே கேட்கிறார்.
இஸ்ரயேலின் குற்றமும் நியாயத்தீர்ப்பும்
9கேளுங்கள், கர்த்தர் எருசலேம் நகரத்தை நோக்கி அழைக்கிறார்.
அவருடைய பெயருக்குப் பயந்து நடப்பதே ஞானம்.
“வரப்போகும் தண்டனையின் கோலையும், அதை நியமித்தவரையும் கவனத்திற்கொள்ளுங்கள்.
10தீயவர்களின் இல்லமே,
தீய வழியில் நீங்கள் சம்பாதித்த சொத்துக்களையும்,
நீங்கள் பயன்படுத்துகின்ற மற்றவர்களை ஏமாற்றும் அளவையையும்
நான் என்ன மறந்துவிட வேண்டுமோ?
11போலி தராசையும், போலி எடைக் கற்கள் இருக்கும்
பையையும் வைத்திருப்பவனை
நான் குற்றமற்றவனெனத் தீர்க்க வேண்டுமோ?
12உன் செல்வந்தர்கள் வன்முறையாளர்கள்.
உன் மக்கள் பொய்யர்கள்.
அவர்களுடைய நாவுகள் வஞ்சகத்தையே பேசுகின்றன.
13அதனால்தான் நான் உன்னை அழிக்கத் தொடங்கி விட்டேன்.
உன் பாவங்களுக்காக உன்னைப் பாழாக்கத் தொடங்கி விட்டேன்.
14நீ சாப்பிடுவாய்; ஆனால் திருப்தியடைய மாட்டாய்.
உன் வயிறோ இன்னும் வெறுமையாகவே இருக்கும்.
நீ சேகரித்து வைப்பாய், ஆனால் ஒன்றும் மீதியிராது.
ஏனெனில் உன் சேமிப்புகளை எல்லாம் நான் வாளுக்கு ஒப்புக்கொடுப்பேன்.
15நீ நடுகை செய்வாய்; ஆனால் அறுவடை செய்ய மாட்டாய்.
நீ ஒலிவ விதைகளைப் பிழிந்தெடுப்பாய்; ஆனால் எண்ணெயையோ பூசிக்கொள்ள மாட்டாய்.
நீ திராட்சைப்பழங்களையும் பிழிவாய்; ஆனால் ரசத்தையோ குடிக்க மாட்டாய்.
16நீ அரசன் ஒம்ரியின் நியமங்களையும்
அரசன் ஆகாப் வீட்டாரின் கேடான நடைமுறைகளையும் கைக்கொண்டு,
அவர்களின் தீமையான சம்பிரதாய முறைகளையே பின்பற்றினாய்.
ஆதலால் நான் உன்னை அழிவுக்கும்,
உன் மக்களை இகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
எனது மக்களின்#6:16 எனது மக்களின் அல்லது மக்கள் கூட்டங்களின் ஏளனத்தை நீ சுமப்பாய்.”
Currently Selected:
மீகா 6: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.