YouVersion Logo
Search Icon

மீகா 4

4
கர்த்தரின் மலை புதுப்பிக்கப்படுதல்
1கடைசி நாட்களில்,
கர்த்தருடைய வீட்டின் மலை,
அனைத்து மலைகளுக்கும் மேலாக உயர்த்தி நிலைநிறுத்தப்படும்;
அனைத்து குன்றுகளுக்கும் மேலாக உயர்த்தப்படும்,
அனைத்து மக்கள் கூட்டத்தினரும் அதை நாடி ஓடி வருவார்கள்.
2அநேக நாடுகளிலிருந்து மக்கள் வந்து,
“வாருங்கள், நாம் கர்த்தரின் மலைக்கு ஏறிப் போவோம்,
யாக்கோபின் இறைவனுடைய வீட்டுக்குப் போவோம்.
நாம் அவரது பாதைகளில் நடக்கும்படியாக,
அவர் தமது வழிகளை நமக்குக் கற்பிப்பார்” என்பார்கள்.
ஏனெனில் சீயோனிலிருந்து சட்டமும்,
எருசலேமிலிருந்து கர்த்தருடைய வார்த்தையும் புறப்படும்.
3அவர் அநேக மக்கள் கூட்டங்களிடையே நியாயம் விசாரித்து,
எங்கும் பரந்து தூரமாயுள்ள வலிமைமிக்க
நாடுகளின் வழக்குகளைத் தீர்த்து வைப்பார்.
அப்போது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும்,
தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் தட்டியடித்துச் செய்துகொள்வார்கள்.
அதன் பின்னர் ஒரு இனம் மற்றொரு இனத்தை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதில்லை,
போருக்கான பயிற்சியை அவர்கள் எடுப்பதுமில்லை.
4ஒவ்வொருவனும் தன் சொந்த திராட்சைக்கொடியின் கீழேயும்,
தன் சொந்த அத்திமரத்தின் கீழேயும் இருப்பான்.
ஒருவரும் அவர்களைப் பயமுறுத்த மாட்டார்கள்.
ஏனெனில் சேனைகளின் கர்த்தரே இதைச் சொல்லியிருக்கிறார்.
5அனைத்து மக்கள் கூட்டத்தினரும்
தங்கள் தெய்வங்களின் பெயரில் நடந்தாலும்,
நாங்களோ எங்கள் இறைவனாகிய கர்த்தரின் பெயரிலேயே
என்றென்றும் நடப்போம் என்று சொல்லிக்கொள்வார்கள்.
கர்த்தரின் திட்டம்
6கர்த்தர் அறிவிக்கின்றதாவது:
“அந்தநாளில் நான் கால் ஊனமுற்றோரை ஒன்றுசேர்ப்பேன்,
நாடுகடத்தப்பட்டோரையும்,
என்னால் துன்பத்துக்கு உள்ளானோரையும் ஒன்றுதிரட்டிச் சேர்ப்பேன்.
7எஞ்சியிருக்கும் கால் ஊனமுற்றோரையும்,
துரத்தப்பட்டவர்களையும் நான் வலிமைமிக்கதொரு இனமாக்குவேன்.
அந்த நாளிலிருந்து என்றென்றும்
கர்த்தராகிய நானே சீயோன் மலையிலிருந்து அவர்களை அரசாளுவேன்.
8எருசலேமே, மந்தையின் காவற் கோபுரமே,
சீயோன் மக்களின்#4:8 மக்களின் மகளின் கோட்டையே, உனக்கோவென்றால்,
உன் முன்னைய ஆட்சியுரிமை உனக்கே திரும்பவும் கொடுக்கப்படும்;
அரசுரிமை எருசலேம் மக்களுக்கே#4:8 மக்களுக்கே மகளுக்கே வரும்.”
9இப்போது நீ ஏன் சத்தமிட்டு அழுகிறாய்?
பிரசவிக்கும் பெண்ணைப் போல் ஏன் வேதனைப்படுகிறாய்?
உனக்கு அரசன் இல்லையோ?
உன் ஆலோசகனும் அழிந்து போனானோ?
10சீயோன் மகளே,
பிரசவிக்கும் பெண்ணைப் போல் துடித்து வேதனைப்படு.
ஏனெனில் நீ நகரத்தைவிட்டு விரைவில் வெளியே போய்.
திறந்த வெளியில் தங்கியிருப்பாய்.
நீ பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டுச்#4:10 நாடுகடத்தப்பட்டு – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது செல்வாய்.
ஆனால் அங்கிருந்து நீ தப்புவிக்கப்படுவாய்.
உன் பகைவர்களின் கைகளினின்றும் கர்த்தராகிய நானே உன்னை மீட்டுக்கொள்வேன்.
11ஆனால், இப்போது அநேக நாடுகள்
உனக்கெதிராய் கூடியிருக்கின்றன.
அவர்கள், “சீயோன் மாசுபடட்டும்,
நம் கண்கள் அதைக் கண்டு கேலி செய்து மகிழட்டும்” என்று சொல்கின்றார்கள்.
12ஆனால் அவர்களோ, கர்த்தரின் சிந்தனைகளை அறியாதிருக்கிறார்கள்.
அவரது திட்டத்தையும் அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
அவர் அவர்களைக் கதிர்க்கட்டுகளைப் போல் ஒன்றுசேர்த்து
கதிரடிக்கும் களத்துக்கு கொண்டுசெல்வார்.
13கர்த்தர் சொல்கிறதாவது: “சீயோன் மகளே, எழுந்து கதிரடிப்பாயாக.
நான் உனக்கு இரும்பு கொம்புகளைக் கொடுப்பேன்.
நான் உனக்கு வெண்கல குளம்புகளைக் கொடுப்பேன்.
அவற்றால் நீ அநேக மக்கள் கூட்டங்களை மிதித்துத் துண்டுகளாக நொறுக்குவாய்.”
அவர்கள் தவறான வழியில் சம்பாதித்தவற்றையும்,
அவர்களின் செல்வத்தையும் பூமி முழுவதற்கும் ஆண்டவராகிய எனக்கே
அர்ப்பணம் செய்வாய்.

Currently Selected:

மீகா 4: TRV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in