YouVersion Logo
Search Icon

மத்தேயு 27

27
யூதாஸ் தற்கொலை செய்துகொள்ளல்
1மறுநாள் அதிகாலையில் பிரதான மதகுருக்களும் மக்கள் சமூகத் தலைவர்களும், இயேசுவுக்கு எவ்வாறு மரணதண்டனை அளிப்பது என்ற தீர்மானத்தை எடுத்தார்கள். 2அவர்கள் அவரை பிணைத்துக்கட்டி, ஆளுநர் பிலாத்துவிடம் கூட்டிச் சென்று கையளித்தார்கள்.
3அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், இயேசு மரணத் தீர்ப்புக்குள்ளானதைக் கண்டபொழுது, மனத்துயரம் அடைந்தான். எனவே, தனக்குக் கொடுக்கப்பட்ட முப்பது வெள்ளிக் காசுகளை பிரதான மதகுருக்களிடமும் சமூகத் தலைவர்களிடமும் திருப்பிக் கொடுத்து, 4“நான் குற்றமற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்து, பாவம் செய்துவிட்டேன்” என்று அவர்களிடம் கூறினான்.
அதற்கு அவர்கள், “அதுபற்றி எங்களுக்கு என்ன? அதை நீயே பார்த்துக்கொள்” என்றார்கள்.
5எனவே யூதாஸ் பணத்தை ஆலயத்தினுள் வீசியெறிந்து விட்டு, அங்கிருந்து சென்று தன்னை தூக்கிலிட்டுக் கொண்டான்.
6பிரதான மதகுருக்கள் அந்தப் பணத்தை எடுத்து, “இது இரத்தப் பழியுள்ள பணம். ஆகையால் இதை ஆலய பொக்கிஷக்களஞ்சியத்தில் போடுவது, நீதிச்சட்டத்திற்கு எதிரானது” என்றார்கள். 7எனவே அவர்கள் கலந்தாலோசித்து, அந்தப் பணத்தைக்கொண்டு குயவனுடைய நிலம் என்ற காணியை, அந்நியரை அடக்கம் செய்வதற்காக வாங்குவதற்குத் தீர்மானித்தார்கள். 8அதனால் இன்றுவரை அந்த இடம், “இரத்த நிலம்” என்று அழைக்கப்படுகிறது. 9இறைவாக்கினன் எரேமியா கூறிய, “இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலையான முப்பது வெள்ளிக் காசுகளை எடுத்து, 10அதைக்கொண்டு குயவனுடைய நிலத்தை அவர்கள் வாங்கினார்கள். இது கர்த்தர் எனக்குச் செய்யும்படி சொன்ன கட்டளையாகும்”#27:10 சக. 11:12,13; எரே. 19:1-13; 32:6-9. என்ற கூற்று நிறைவேறியது.
பிலாத்துவுக்கு முன் இயேசு
11இதற்கிடையில் இயேசு, ஆளுநர் முன்பாக விசாரணைக்காக#27:11 விசாரணைக்காக – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. நின்றபொழுது, ஆளுநர் அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டார்.
அதற்கு இயேசு, “நீர் அவ்வாறு சொல்கின்றீர்” என்றார்.
12ஆனால் பிரதான மதகுருக்களாலும் சமூகத் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்டபோது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. 13அப்போது பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக இவர்கள் கொண்டுவரும் சாட்சியத்தை நீ கேட்கவில்லையா?” என்று கேட்டான். 14ஆனால் இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை, ஒரு குற்றச்சாட்டுக்காவது பதில் கூறவில்லை. இது ஆளுநரை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.
15பண்டிகையின்போது, மக்கள் கேட்டுக்கொள்ளும் ஒரு சிறைக்கைதியை விடுதலை செய்வது ஆளுநரின் வழக்கமாயிருந்தது. 16அக்காலத்தில் பரபாஸ் என்னும் மிகவும் பெயர்பெற்ற ஒரு கைதி அவர்களது காவலில் இருந்தான். 17எனவே ஆளுநரின் வீட்டுக்கு முன் மக்கள் ஒன்றுகூடி வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “யாரை நான் உங்களுக்காக விடுதலை செய்யவேண்டும்: பரபாசையா அல்லது மேசியா என அழைக்கப்படும் இயேசுவையா?” எனக் கேட்டார். 18ஏனெனில், பொறாமையினாலேயே அவர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.
19மேலும் பிலாத்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, அவனுடைய மனைவி, “அந்தக் குற்றமற்ற மனிதரை ஒன்றும் செய்ய வேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு நான் இன்று கனவில் மிகவும் வேதனைப்பட்டேன்” என்று ஒரு செய்தியை அவனுக்கு அனுப்பினாள்.
20ஆனால் பிரதான மதகுருக்களும் மூப்பர்களும், பரபாசை விடுதலை செய்யும்படியும், இயேசுவை கொலை செய்யும்படியும் கேட்கச் சொல்லி மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
21“இந்த இருவரில், யாரை நான் உங்களுக்கு விடுதலை செய்யவேண்டும்?” என ஆளுநர் மீண்டும் கேட்டார்.
“பரபாசை” என அவர்கள் பதிலளித்தார்கள்.
22“அவ்வாறாயின் மேசியா என அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்?” என்று பிலாத்து கேட்டான்.
அவர்கள் எல்லோரும், “அவனைச் சிலுவையில் அறைவீராக!” என்று பதிலளித்தார்கள்.
23“ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான்.
ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறைவீராக!” என்று மேலும் உக்கிரமாகச் சத்தமிட்டார்கள்.
24தனது முயற்சியால் எவ்வித பயனும் இல்லை என்பதையும், மாறாக ஒரு கலகம் ஆரம்பமாகிறது என்பதையும் கண்டுகொண்ட பிலாத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, கூடியிருந்த மக்கள் முன்னிலையில் தன் கைகளைக் கழுவினான். பின்பு அவன், “இந்த மனிதனுடைய இரத்தப் பழிக்கு, நீங்களே பொறுப்பாளிகள். நானோ குற்றமற்றவன்” என்றான்.
25அதற்கு அனைத்து மக்களும், “அவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் சுமத்தப்படட்டும்” என்றார்கள்.
26அப்போது பிலாத்து, அவர்கள் கேட்டபடியே பரபாசை விடுதலை செய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து,#27:26 சாட்டையினால் அடித்து ரோமரின் சாட்டையில் இரும்புத் துண்டுகளும், எலும்புத் துண்டுகளும் பொருத்தப்பட்டிருக்கும். சிலுவையில் அறையும்படி கையளித்தான்.
இராணுவ வீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்
27அதன் பின்னர் ஆளுநரின் இராணுவ வீரர்கள், இயேசுவைத் தங்கள் தலைமையகத்துக்குக் கொண்டுபோய், அவரைச் சுற்றி இராணுவப் படையணியின் வீரர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டினார்கள். 28அங்கே அவர்கள் அவரது உடைகளைக் களைந்து, கருஞ்சிவப்பு மேலாடையை அவருக்கு அணிவித்தார்கள். 29அவர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தைச் செய்து, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள். அவர்கள் அவரது வலதுகையில் ஒரு தடியைக் கொடுத்து, அவர் முன்னால் முழந்தாழிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி, அவரை ஏளனம் செய்தார்கள். 30அவர்கள் அவர்மீது துப்பி, அந்தத் தடியை எடுத்து அவருடைய தலையில் மீண்டும் மீண்டும் அடித்தார்கள். 31அவர்கள் அவரை ஏளனம் செய்த பின்பு, அந்த மேலாடையைக் கழற்றி அவருடைய உடையை அவருக்கு அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காகக் கூட்டிச்சென்றார்கள்.
இயேசுவை சிலுவையில் அறைதல்
32அவர்கள் வெளியேறும்போது அங்கே எதிர்ப்பட்ட சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டு, அவனைப் பலவந்தமாக சிலுவையை சுமந்து போகும்படி செய்தார்கள். 33மண்டையோட்டின் இடம் என்று அர்த்தமுள்ள கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்துக்கு அவர்கள் வந்தபோது, 34இயேசுவுக்கு கசப்பு கலந்த திராட்சைரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவரோ அதை ருசி பார்த்த பின் குடிக்க மறுத்தார். 35அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின், அவரது உடைகளுக்காக சீட்டுக்குலுக்கிப் போட்டு, அவற்றைப் பங்கிட்டுக் கொண்டார்கள்.#27:35 சில பின்னைய பிரதிகளில், “அவர்கள் எனது உடைகளை தங்களுக்குள்ளே பங்கிட்டு, எனது உடைகளுக்காக சீட்டுக்குலுக்கிப் போட்டார்கள் என்று இறைவாக்கினனால் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியே, இப்படி நடந்தது” என உள்ளது. 36பின்பு, அவர்கள் அங்கே அமர்ந்து, அவரைக் காவல் காத்தார்கள். 37அவருடைய தலைக்கு மேலாக அவருக்கெதிரான குற்றச்சாட்டாக பின்வருமாறு எழுதி வைத்தார்கள்:
“இவன் இயேசு, யூதரின் அரசன்.”
38பின்னர் அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கொள்ளையர்கள் அவருடனே சிலுவைகளில் அறையப்பட்டார்கள். 39அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலையை அசைத்து, அவரைப் பழித்துரைத்து, 40“ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டியெழுப்புவேன் என்று சொன்னவனே! உன்னை நீயே விடுவித்துக்கொள். நீ இறைவனின் மகனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா” என்றார்கள். 41அவ்விதமாகவே பிரதான மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், மூப்பர்களும், அவரை ஏளனம் செய்து, 42“இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையே இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இஸ்ரயேலின் அரசனான இவன், இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் இவனில் விசுவாசம் வைப்போம். 43இவன், ‘நான் இறைவனின் மகன்’ என்றானே. இறைவனில் நம்பிக்கையாயிருக்கிறான். இறைவன் இவன்மேல் பிரியமாயிருந்தால், இப்போது அவர் இவனை விடுவிக்கட்டும்” என்றார்கள். 44அவ்விதமாகவே, அவருடனேகூட சிலுவையில் அறையப்பட்ட கொள்ளையர்களும் அவரை ஏளனம் செய்தார்கள்.
இயேசுவின் மரணம்
45நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து, பிற்பகல் மூன்று மணி#27:45 மூன்று மணி – கிரேக்க மொழியில் ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம்வரை. வரை பூமி முழுவதையும் இருள் சூழ்ந்து கொண்டது. 46பிற்பகல் மூன்று மணியளவில், இயேசு பலத்த குரலில், “ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி” என்று சத்தமாய்க் கதறினார். “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்பதே அதன் அர்த்தமாகும்.#27:46 சங். 22:1
47அங்கே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டு, “அவன் எலியாவைக் கூப்பிடுகிறான்”#27:47 இயேசு, “ஏலீ” என்று இறைவனை அழைத்ததை, அவர் இறைவாக்கினன் எலியாவைக் கூப்பிடுவதாக தவறாகப் புரிந்து கொண்டார்கள். என்றார்கள்.
48உடனே அவர்களில் ஒருவன் ஓடிச்சென்று கடற்பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சைரசத்தில் தோய்த்து, அதை ஒரு தடியில் கட்டி, இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். 49மற்றவர்களோ, “அவனை விட்டுவிடு. எலியா அவனைக் காப்பாற்ற வருகின்றானா பார்ப்போம்” என்றார்கள்.
50இயேசு மீண்டும் பலத்த சத்தத்தோடு அழைத்து, தமது ஆவியை விட்டார்.
51அவ்வேளையில் இதோ! ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது; மலைப்பாறைகள் பிளந்தன; 52கல்லறைகளும் நொருங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்த மக்களின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. 53அவர்கள் கல்லறைகளைவிட்டு வெளியே வந்தார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதல் இடம்பெற்ற பின், அவர்கள் பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்குத் தென்பட்டார்கள்.
54இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதியும் அவனோடிருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த எல்லாவற்றையும் கண்டு கலக்கமடைந்து, “நிச்சயமாகவே இவர் இறைவனின் மகன்!” என்று சொன்னார்கள்.
55கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி, அவருக்கு ஊழியம் செய்துவந்த பல பெண்களும் அங்கே தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56அவர்களுள் மகதலேனா மரியாளும், யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் மகன்மாரின் தாயும் இருந்தார்கள்.
இயேசுவை அடக்கம் செய்தல்
57மாலை வேளையானபோது, அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த, இயேசுவுக்கு சீடனாயிருந்த, யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன், 58பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். பிலாத்துவும் அதை அவனுக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டான். 59யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான விலையுயர்ந்த மெல்லிய துணியில் சுற்றி, 60அவன் மலைப்பாறையில் குடைந்து வைத்திருந்த தனக்குச் சொந்தமான புதிய கல்லறையில் வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுச் சென்றான். 61அங்கே மகதலேனா மரியாளும், மற்றைய மரியாளும் கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்தார்கள்.
கல்லறைக்கு காவல்
62மறுநாள் பஸ்கா பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, பிரதான மதகுருக்களும், பரிசேயர்களும் பிலாத்துவிடம் போய், 63அவனிடம், “ஐயா அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, ‘மூன்று நாட்களுக்கு பின் நான் உயிரோடு எழுந்திருப்பேன்’ என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. 64ஆகவே அந்தக் கல்லறை மூன்றாம் நாள்வரை பத்திரமாய் பாதுகாக்கப்படும்படி உத்தரவு கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஒருவேளை அவனது சீடர்கள் வந்து, அந்த உடலைக் களவாடிச் சென்றுவிட்டு, ‘மரணித்தோரிலிருந்து உயிரோடு எழுந்துவிட்டான்’ என்று மக்களுக்குச் சொல்வார்கள். அவ்வாறு நடந்தால் முன்னைய ஏமாற்று வேலையைவிட பின்னையது மோசமானதாயிருக்கும்” என்றார்கள்.
65அதற்குப் பிலாத்து அவர்களிடம், “உங்கள் காவல் வீரர்களை அழைத்துக்கொண்டு போய் உங்களுக்குத் தெரிந்தபடி கல்லறையைப் பத்திரமாய்க் காவல் செய்யுங்கள்” என்றான். 66எனவே அவர்கள் போய், கல்லறையை மூடியிருந்த வாசற்கல்லின் மேல் முத்திரையிட்டு, காவலாளிகளை வைத்து பத்திரமாய் கல்லறையைக் காவல் செய்தார்கள்.

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in