YouVersion Logo
Search Icon

மத்தேயு 26

26
இயேசுவுக்கு எதிரான சதித்திட்டம்
1இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்த பின்னர், அவர் தமது சீடருக்குச் சொன்னதாவது: 2“நீங்கள் அறிந்திருக்கின்றபடி, பஸ்கா பண்டிகைக்கு#26:2 பஸ்கா பண்டிகைக்கு – இது யூதர்கள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கிடைத்த தமது விடுதலையை நினைவுகூர்ந்து ஆசரிக்கும் ஒரு முக்கிய பண்டிகை. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படும்படி கையளிக்கப்படுவார்” என்றார்.
3அவ்வேளையில் பிரதான மதகுருக்களும், சமூகத் தலைவர்களும், காய்பா என்னும் பெயருடைய தலைமை மதகுருவின் மாளிகை மண்டபத்தில் ஒன்றுகூடி, 4இயேசுவை இரகசியமாகக் கைதுசெய்து, அவரைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினார்கள். 5ஆனாலும், “பண்டிகைக் காலத்தில் அவ்வாறு செய்யக் கூடாது, அவ்வாறு செய்தால் மக்கள் மத்தியில் கலகம் ஏற்படலாம்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
சீமோன் வீட்டில் இயேசு
6பெத்தானியாவிலே, முன்பு தொழுநோயாளியாயிருந்த சீமோன் என்பவனுடைய வீட்டில் இயேசு இருந்தபோது, 7ஒரு பெண் மிகவும் விலையுயர்ந்த வாசனைத் தைலம் உள்ள, வெள்ளைக் கல் குப்பியுடன் அவரிடம் வந்தாள். அவர் உணவுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த வாசனைத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்.
8சீடர்கள் இதைக் கண்டு ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்விரயம்? 9இந்த வாசனைத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள்.
10இயேசு இதை அறிந்து அவர்களிடம், “இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள்? அவள் எனக்குச் செய்திருப்பது சிறப்பானதொரு நற்செயல். 11ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்,#26:11 உபா. 15:11 ஆனால் நானோ, எப்போதும் உங்களுடன் இருக்க மாட்டேன். 12என்னை அடக்கம் செய்வதற்கு என்னைத் தயார் செய்வதற்காகவே, இவள் இந்த வாசனைத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றியிருக்கின்றாள். 13நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளை நினைவுகூரும்படியாகச் சொல்லப்படும்” என்றார்.
14அப்பொழுது, பன்னிரண்டு பேரில் ஒருவனாக இருந்த யூதாஸ் ஸ்காரியோத்து என அழைக்கப்பட்டவன், பிரதான மதகுருக்களிடம் போய், 15“நான் இயேசுவை உங்களிடம் காட்டிக்கொடுத்தால், நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். 16அவ்வேளையிலிருந்து யூதாஸ், அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான்.
சீடர்களுடன் பஸ்கா விருந்து
17பின்னர், புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையின்#26:17 புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையின் – கிரேக்க மொழியில் புளிப்பூட்டப்படாத அப்பத்தின் என்றுள்ளது. முதலாம் நாளில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவை உண்பதற்கு, உமக்காக நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றீர்” எனக் கேட்டார்கள்.
18அதற்கு இயேசு, “பட்டணத்துக்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில் எனது சீடர்களுடன் பஸ்காவை அனுஷ்டிக்கப் போகின்றேன் என போதகர் உமக்குச் சொல்கின்றார்’ என்று சொல்லுங்கள்” என்றார். 19இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்தார்கள்.
20மாலை வேளையானபோது, இயேசு பன்னிருவரோடும் ஒன்றாக பந்தியில் சாய்ந்திருந்தார். 21அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.
22அப்போது அவர்கள் மிகவும் மனவருத்தமடைந்து, ஒருவர்பின் ஒருவராக அவரிடம், “ஆண்டவரே, அது நானா?” என்று கேட்கத் தொடங்கினார்கள்.
23அதற்குப் பதிலளிக்கும் விதமாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னுடன்கூட கை போட்டவனே, என்னைக் காட்டிக் கொடுப்பான். 24தம்மைக் குறித்து வேதவசனத்தில் எழுதியிருக்கின்றபடியே மனுமகன் போகிறார்.#26:24 போகிறார் – இதன் பொருள் மரணிக்கப் போகின்றார். ஆனால் அவரைக் காட்டிக் கொடுக்கின்ற மனிதனுக்கோ ஐயோ பேரழிவு! அவன் பிறக்காமலே இருந்திருந்தால், அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார்.
25அப்போது அவரைக் காட்டிக்கொடுக்கப் போகின்றவனான யூதாஸ், “போதகரே, அது நானா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “அதை நீயே சொல்லிவிட்டாய்” என்று பதிலளித்தார்.
26அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து, “இதைப் பெற்றுக்கொண்டு உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார்.
27பின்பு அவர் கிண்ணத்தையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்து, “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து அருந்துங்கள். 28இது அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக சிந்தப்படுகின்ற என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது” என்று சொன்னார். 29“இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் இராச்சியத்தில் இதைப் புதியதாக உங்களோடு நான் அருந்தும் நாள்வரை, இந்த திராட்சைப்பழரசத்தை அருந்த மாட்டேன் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.
30ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, அவர்கள் ஒலிவமலைக்குச் சென்றார்கள்.
பேதுரு மறுதலிக்கப் போவதை இயேசு முன்னறிவித்தல்
31அப்போது இயேசு அவர்களிடம், “இந்த இரவில் நீங்கள் எல்லோரும் என் பொருட்டு விட்டுவிலகி ஓடிப்போவீர்கள். ஏனெனில்,
“ ‘நான் மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன்.
அப்போது மந்தையின் செம்மறியாடுகள் சிதறடிக்கப்படும்’#26:31 சக. 13:7
என்று எழுதியிருக்கிறது.
32“ஆயினும் நான் உயிர்த்தெழுப்பப்பட்ட பின், உங்களுக்கு முன்னதாக கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.
33அதற்குப் பேதுரு, “மற்றைய எல்லோரும் உம் பொருட்டு விட்டுவிலகி ஓடிப்போனாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்” என்றான்.
34இயேசு அதற்கு அவனிடம், “நான் உனக்கு உண்மையைச் சொல்கின்றேன், இந்த இரவில் சேவல் கூவுவதற்கு முன் நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று பதிலளித்தார்.
35ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் உயிர்துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், நான் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்றான். சீடர்கள் எல்லோரும் அவ்விதமாகவே சொன்னார்கள்.
கெத்செமனேயில் இயேசு
36பின்பு இயேசு தமது சீடர்களுடன் கெத்செமனே என்னும் ஒரு இடத்துக்குச் சென்றார். அங்கே அவர் அவர்களிடம், “நான் சற்று தொலைவில் சென்று ஜெபம்செய்யும் வரை இங்கே அமர்ந்திருங்கள்” என்றார். 37அவர் பேதுருவையும், செபெதேயுவின் மகன்மார் இருவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய், மிகவும் துயரமுற்றுக் கலக்கமடையத் தொடங்கினார். 38அப்பொழுது அவர் அவர்களிடம், “உயிர் நீங்கும் அளவுக்கு என் ஆத்துமா துயரத்தினால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்று கூறினார்.
39அவர் சற்றுத் தொலைவில் போய் தரைவரை தலைதாழ்த்தி விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தக் கிண்ணம் என்னைவிட்டு எடுக்கப்படுவதாக! ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்று ஜெபம்செய்தார்.
40பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்தபோது, அவர்கள் உறக்கத்தில் இருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார். 41“நீங்கள் சோதனைக்குள் விழாதபடி, விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.
42அவர் இரண்டாவது தடவையும் போய், “என் பிதாவே, இந்தக் கிண்ணத்திலிருந்து நான் பருகினாலொழிய, இது என்னைவிட்டு நீங்காதெனில் உம்முடைய விருப்பமே நிறைவேறட்டும்” என்று ஜெபம்செய்தார்.
43அவர் திரும்பி வந்தபோது, அவர்கள் மீண்டும் உறக்கத்தில் இருப்பதைக் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. 44எனவே அவர் மீண்டும் அவர்களைவிட்டு விலகிப் போய், திரும்பவும் மூன்றாவது தடவையாக, அதே வார்த்தைகளைச் சொல்லி ஜெபம்செய்தார்.
45பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் உறக்கம் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ பாருங்கள், வேளை நெருங்கிவிட்டது. மனுமகன் பாவிகளின் கைகளில் கையளிக்கப்படுகின்றார். 46எழுந்திருங்கள், நாம் போவோம். என்னைக் காட்டிக் கொடுப்பவன் வருகின்றான்!” என்றார்.
இயேசு கைது செய்யப்படுதல்
47இயேசு இன்னும் பேசிக் கொண்டிருக்கையில், பன்னிருவரில் ஒருவனான யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன், பிரதான மதகுருக்களாலும் சமூகத் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்த பெருங் கூட்டம், வாள்களையும் தடிகளையும் எடுத்துக் கொண்டுவந்தது. 48அவரைக் காட்டிக் கொடுப்பவன், “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே அந்த ஆள்; அவரைக் கைது செய்யுங்கள்” என்று ஒரு அடையாளத்தைக் கொடுத்திருந்தான். 49ஆகவே, யூதாஸ் நேரே இயேசுவின் அருகில் வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.
50இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்” என்றார்.
அப்போது அவனுடன் வந்தவர்கள் முன்னே வந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள். 51அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி, தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கி, அவனது காதை வெட்டினான்.
52இயேசு அவனிடம், “உன் வாளை அதற்குரிய இடத்தில் மீண்டும் வைத்துவிடு, ஏனெனில் வாளைக் கையிலெடுக்கும் அனைவரும், வாளினாலேயே மரணிப்பார்கள். 53நான், என் பிதாவிடம் உதவிக்காக மன்றாட முடியாதென நீ நினைக்கின்றாயா? நான் மன்றாடினால், அவர் உடனே எனக்காக பன்னிரண்டுக்கும் அதிகமான பெரும்படை#26:53 பெரும்படை – கிரேக்க மொழியில் லேகியோன். ஒரு லேகியோன் என்பது சுமார் 6,000 வீரர்களைக் கொண்ட படைப் பிரிவு. கொண்ட இறைதூதர்களை அனுப்புவார் அல்லவா? 54ஆனால் நான் அவ்வாறு செய்தால், இவ்வாறுதான் நடக்கும் என்று சொல்கின்ற வேதவசனங்கள் எவ்வாறு நிறைவேறும்?” என்றார்.
55அவ்வேளையில் இயேசு அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, “நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும் வந்து என்னைப் பிடிப்பதற்கு, நான் ஒரு ஆபத்தான கொள்ளைக்காரனா? நான் தினமும் ஆலய முற்றத்தில் அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தேன்; அப்போது நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை. 56ஆயினும் இறைவாக்கினர் எழுதி வைத்தவை நிறைவேறும்படி இவை எல்லாம் நிகழ்கின்றன” என்றார். அப்போது சீடர்கள் எல்லோரும், அவரைக் கைவிட்டுத் தப்பியோடினார்கள்.
நியாயசபையின் முன் இயேசு
57இயேசுவைக் கைது செய்தவர்கள், அவரைத் தலைமை மதகுரு காய்பாவிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கே நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். 58பேதுருவோ, சற்றுத் தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து போய், தலைமை மதகுருவின் முற்றம் வரைக்கும் சென்றான். இறுதி முடிவு என்னவென்று அறிந்துகொள்வதற்காக, அவன் உள்ளே போய் காவலருடன் அமர்ந்திருந்தான்.
59பிரதான மதகுருக்களும் நியாயசபையில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரணதண்டனை விதிப்பதற்காக, அவருக்கு எதிராக உண்மைக்கு மாறான சாட்சியங்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; 60பொய்யான சாட்சியம் கொடுக்கின்ற பலர் முன்வந்தாலும், அதற்கேற்ற சாட்சியம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
கடைசியாக இரண்டு பேர் முன்வந்து, 61“ ‘இறைவனுடைய ஆலயத்தைத் தரைமட்டமாக இடித்துப் போடவும், மூன்று நாளில் அதை மீளக் கட்டியெழுப்பவும் தன்னால் முடியும்’ என்று இவன் சொன்னான்” என்றார்கள்.
62அப்போது தலைமை மதகுரு எழுந்து நின்று இயேசுவிடம், “நீ இதற்குப் பதில் சொல்ல மாட்டாயா? இவர்கள் உனக்கு எதிராக சாட்சி சொல்கின்றார்களே, என்ன இது?” என்று கேட்டான். 63ஆனால் இயேசுவோ, பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார்.
தலைமை மதகுரு அவரிடம், “உயிருள்ள இறைவன் பெயரில் ஆணையிட்டுக் கேட்கின்றேன். நீ இறைவனின் மகனான மேசியா என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றான்.
64இயேசு அதற்குப் பதிலளித்து, “நீர் அவ்வாறு சொல்லிவிட்டீர். ஆனாலும் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கின்றேன்: இப்போது தொடக்கம் மனுமகன், வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்திருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்”#26:64 சங். 110:1; தானி. 7:13. என்றார்.
65அப்போது தலைமை மதகுரு, தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இவன் இறைவனை நிந்தித்துப் பேசுகின்றான்! இதற்கும் மேலாக இவனுக்கெதிராக சாட்சிகூறுபவர்கள் தேவையில்லை. இதோ! இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் கேட்டீர்களே, உங்களது தீர்மானம் என்ன?” என்று கேட்டான்.
66அதற்கு அவர்கள், “இவன் மரணதண்டனைக்குரியவன்” என்றார்கள்.
67பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரது தலையில் குட்டினார்கள். மற்றவர்கள் அவரது முகத்தில் அறைந்து, 68“மேசியாவே, உம்மை அடித்தது யார் என்று இறைவாக்குச் சொல்லும்” என்றார்கள்.
பேதுரு இயேசுவை மறுதலித்தல்
69அவ்வேளையில் பேதுரு வெளியே முற்றத்தில் அமர்ந்திருந்தான், அப்போது பணிப்பெண் ஒருத்தி அவனிடம் வந்து, “நீயும் கலிலேயாவைச் சேர்ந்த இயேசுவுடன் இருந்தாய்” என்றாள்.
70அதற்கு அவன், “நீ என்ன சொல்கின்றாய் என எனக்குத் தெரியாது” என்று சொல்லி எல்லோரது முன்னிலையில் அதை மறுதலித்தான்.
71பின்பு அவன் வெளியே முற்றத்து வாசலுக்குச் சென்றான்; அங்கே மற்றுமொரு பணிப்பெண் அவனைக் கண்டு, அங்கிருந்த மக்களிடம், “இவன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவோடு இருந்தவன்” என்றாள்.
72அதற்கு அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சத்தியம் செய்து மீண்டும் மறுதலித்தான்.
73சிறிது நேரத்திற்குப் பின் அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும்விதமே உன்னைக் காட்டிக் கொடுக்கின்றது” என்றார்கள்.
74அப்போது அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்றும், தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன் மேல் சாபம் வரட்டும் என்றும் சொல்லி, சத்தியம் செய்யத் தொடங்கினான்.
உடனே சேவல் கூவியது. 75“சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய் மனம்வெதும்பி அழுதான்.

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in