மத்தேயு 25
25
பத்துக் கன்னிப்பெண்களின் உவமை
1“அந்நாளிலே, பரலோக இராச்சியமானது விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைச் சந்திக்கச் சென்ற பத்து கன்னிப்பெண்களுக்கு ஒப்பாயிருக்கும். 2அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்களாகவும், ஐந்து பேர் ஞானமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். 3அந்த புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெயையோ எடுத்துச் செல்லவில்லை. 4ஞானமுள்ளவர்களோ, தங்கள் விளக்குகளுடன் குப்பிகளில் எண்ணெயையும் எடுத்துச் சென்றார்கள். 5மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
6“நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகின்றார்! அவரைச் சந்திப்பதற்கு வெளியே வாருங்கள்’ என்ற சத்தம் கேட்டது.
7“அப்போது எல்லாக் கன்னிப்பெண்களும் விழித்தெழுந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள். 8புத்தியில்லாதவர்களோ ஞானமுள்ளவர்களிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள்.
9“அதற்கு ஞானமுள்ளவர்கள், ‘இல்லை, அது எங்களுக்கும் உங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்கள்.
10“அவர்கள் எண்ணெய் வாங்குவதற்காக போய்க்கொண்டிருக்கையில், மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிப்பெண்கள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே போனார்கள். கதவோ அடைக்கப்பட்டது.
11“பின்பு மற்றைய கன்னிப்பெண்களும் வந்து, ‘ஆண்டவனே, ஆண்டவனே, எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள்.
12“ஆனால் அவரோ, ‘உண்மையாகவே சொல்கின்றேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார்.
13“எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அந்த நாளையும், அந்த நேரத்தையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்றார்.
தாலந்து பணத்தின் உவமை
14“அப்பொழுது, நிகழப்போவதானது நீண்டதூரப் பயணம் போகவிருக்கும் ஒருவன், தனது வேலையாட்களை அழைத்து, தனது சொத்துக்களை அவர்களிடம் கையளித்ததை போல் இருக்கும். 15அவன், ஒருவனுக்கு ஐந்து தாலந்து,#25:15 ஐந்து தாலந்து – ஒரு தாலந்து, சுமார் 34 கிலோ. அதன் பண மதிப்பு, ஒருவரின் 20 வருட நாட் கூலி. இன்னொருவனுக்கு இரண்டு தாலந்து, வேறொருவனுக்கு ஒரு தாலந்து என பெருந்தொகைப் பணத்தைப் பகிர்ந்து கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடி கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான். 16ஐந்து தாலந்து பணத்தைப் பெற்றவன், உடனே போய் அதை முதலீடு செய்து, இன்னும் ஐந்து தாலந்து பணத்தைச் சம்பாதித்தான். 17அவ்வாறே இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றவன், இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்தான். 18ஆனால் ஒரு தாலந்து பணத்தைப் பெற்றவனோ புறப்பட்டுப் போய், நிலத்தில் ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.
19“நீண்ட காலத்தின் பின் அந்த வேலையாட்களின் எஜமான் திரும்பி வந்து, கணக்கு காட்டி ஒப்படைக்குமாறு அவர்களிடம் கேட்டான். 20ஐந்து தாலந்து பணத்தைப் பெற்றவன், இன்னும் ஐந்து தாலந்து பணத்தைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து தாலந்து பணத்தை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து தாலந்து பணத்தைச் சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
21“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேகமானவற்றுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
22“இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றுக்கொண்டவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு தாலந்து பணத்தை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
23“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேகமானவற்றுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
24“பின்பு ஒரு தாலந்து பணத்தைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமான மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும், அவ்விடத்தில் அறுவடை செய்கின்றவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும், அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கின்றவர் என்றும் அறிவேன். 25எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய், உமது ஒரு தாலந்து பணத்தை நிலத்திலே புதைத்து வைத்தேன். இதோ, உமக்குரிய பணம்’ என்றான்.
26“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாதவனே! சோம்பேறியான வேலைக்காரனே! நான் ஒரு இடத்தில் விதைக்காமல் அறுவடை செய்கின்றவன் என்றும், தூவாமல் அள்ளிச் சேர்க்கின்றவன் என்றும் நீ அறிந்திருந்தாயே. 27அவ்வாறானால், நீ என் பணத்தை வங்கியில் வைப்பீடு செய்திருக்கலாமே. அவ்வாறு நீ செய்திருந்தால், நான் திரும்பி வந்ததும், அதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான்.
28“எஜமான், ‘அந்த ஒரு தாலந்து பணத்தை அவனிடமிருந்து எடுத்து, பத்து தாலந்து பணம் வைத்திருக்கின்றவனிடத்தில் கொடுங்கள். 29ஏனெனில் உள்ளவனாய் இருக்கின்ற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். அவன் நிறைவாய் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடத்திலிருந்தோ அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 30அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்’ என்றான்.
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்
31“மனுமகன் தமது மகிமையில், இறைதூதர்கள் எல்லோருடனும் வரும்போது அவர் தமது மகிமையின் அரியணையில் அமர்வார். 32அனைத்து இன மக்களும் அவருக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பது போல், அவர் மக்களையும் இரண்டு குழுக்களாக வேறுபிரிப்பார். 33செம்மறியாடுகளை அவர் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
34“அப்போது அரசர் வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்து உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற இராச்சியத்தை உரித்தாக்கிக்கொள்ளுங்கள். 35ஏனெனில் நான் பசியுடன் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், எனக்கு அருந்தக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; 36நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்போது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார்.
37“அப்போது நீதிமான்கள் அவரிடம், ‘ஆண்டவரே, எப்போது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்? 38எப்போது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டுக்குள் அழைத்தோம், அல்லது உடையில்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்? 39எப்போது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள்.
40“அதற்கு அரசர், ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளித்தார்.
41“பின்பு அவர் தமது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள். 42ஏனெனில், நான் பசியோடிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்கு அருந்தக் கொடுக்கவில்லை; 43நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டுக்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியுடனும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை’ என்று சொல்வார்.
44“அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்போது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவோ தாகமுள்ளவராகவோ அல்லது அந்நியராகவோ உடையில்லாதவராகவோ அல்லது வியாதியுள்ளவராகவோ சிறையிலிருப்பவராகவோ கண்டோம்? எப்போது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.
45“அதற்கு அவர், ‘நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாது விட்டீர்களோ, அதை எனக்கே செய்யாது விட்டீர்கள்’ என்பார்.
46“அப்போது, அவர்கள் விட்டுவிலகி நித்திய தண்டனைக்குள் செல்ல, நீதிமான்களோ நித்திய வாழ்வுக்குள் செல்வார்கள்” என்றார்.
Currently Selected:
மத்தேயு 25: TRV
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.