YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 47

47
ஆலயத்திலிருந்து ஆறு
1மீண்டும் அந்த மனிதன் என்னை ஆலய வாசலுக்குக் கொண்டுவந்தான். ஆலய வாசற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கி தண்ணீர் ஓடி வருவதை நான் கண்டேன். ஆலயம் கிழக்கு நோக்கியிருந்தது. தண்ணீர் ஆலய வாசற்படியின் கீழ் தென்புறத்தினூடாக பலிபீடத்தின் தென்புறத்தில் பாய்ந்தது. 2பின்பு அவன் என்னை வடக்கு வாயில் வழியே கிழக்கு நோக்கியிருந்த வெளிவாயிலின் வெளிப்புறத்தைச் சுற்றி அழைத்துக்கொண்டு போனான். தென்புறமிருந்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.
3அம்மனிதன் தனது கையில் அளவுநூலைப் பிடித்தபடி, கிழக்கு நோக்கி ஆயிரம் முழம்#47:3 ஆயிரம் முழம் – சுமார் 1700 அடி அல்லது 530 மீற்றர் தூரத்தை அளந்து, என்னை அந்தத் தண்ணீர் வழியாக அழைத்துச் சென்றான், அதன் ஆழம் கணுக்கால் அளவு இருந்தது. 4அவன் இன்னும் ஆயிரம் முழம் அளந்து என்னை தண்ணீர் வழியே அழைத்துச் சென்றபோது, அங்கே தண்ணீர் முழங்கால் அளவு ஆழமாயிருந்தது; அவன் இன்னும் ஆயிரம் முழம் அளந்து தண்ணீர் வழியாக என்னை அழைத்துச் சென்றபோது தண்ணீரின் ஆழம் இடுப்பளவு இருந்தது. 5இன்னும் ஆயிரம் முழத்தை அவன் அளந்தபோது, அது என்னால் கடக்க முடியாத ஒரு ஆறாக இருந்தது. தண்ணீர் மட்டம் உயர்ந்து நீந்தக்கூடிய ஆழமாய் இருந்ததுடன், அது கடக்க முடியாத ஆறாக இருந்தது. 6அவன் என்னிடம், “மனுமகனே, நீ இதைக் கண்டாயா?” என்று கேட்டான்.
பின்பு அவன் என்னைத் திரும்பவும் ஆற்றின் கரைக்கு நடத்தி வந்தான். 7நான் திரும்பி நடந்து வருகையில், ஆற்றின் இக்கரையிலும் அக்கரையிலும் ஏராளமான மரங்களைக் கண்டேன். 8அவன் என்னிடம், “இந்தத் தண்ணீர் கிழக்குப் பிரதேசத்தில் பாய்ந்து, யோர்தான் பள்ளத்தாக்கினூடாக சாக்கடலில் விழுகிறது. இது சாக்கடலில் விழும்போது, அங்குள்ள உப்புத் தண்ணீர் நன்னீராக மாறும். 9இந்த ஆறு பாயுமிடமெல்லாம் உயிரினங்கள் உயிர் வாழும். இந்தத் தண்ணீர் அங்கே ஓடி, உவர்ப்புத் தண்ணீரை நன்னீராக்குவதால் பெருந்தொகையான மீன்கள் இருக்கும். எனவே இந்த ஆறு ஓடுமிடங்களிலெல்லாம் இருக்கும் அனைத்தும் உயிர் வாழும். 10என்-கேதி நீரூற்றுகள் தொடக்கம், என்-எக்லாயீம் நீரூற்றுகள் வரை கரையின் நெடுகிலும் மீனவர் நிற்பார்கள். அது வலைகளை உலர்த்தும் இடமாக இருக்கும். மத்திய தரைக்கடலின் மீன்களைப் போல பல்வேறுபட்ட மீன்கள் அங்கிருக்கும். 11ஆனாலும் சேற்று நிலங்களிலும், சதுப்பு நிலங்களிலும் உள்ள தண்ணீர் நன்னீராக மாறாது. அவை உப்பாகவே விட்டுவிடப்படும். 12ஆற்றின் இரு கரைகளிலும் எல்லாவித பழமரங்களும் வளரும். அவற்றின் இலைகள் உதிர்வதுமில்லை, அவை கனியற்றுப் போவதுமில்லை. பரிசுத்த ஆலயத்திலிருந்து தண்ணீர் பாய்வதால் அவை மாதந்தோறும் கனி கொடுக்கும். அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் இருக்கும்.”
நாட்டின் எல்லைகள்
13ஆண்டவராகிய கர்த்தர் கூறுவது இதுவே. “இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் உரிமைச் சொத்தாக நாட்டைப் பங்கிட வேண்டிய எல்லைகள் இவையே. யோசேப்புக்கு இரண்டு பங்குகள் கொடுக்க வேண்டும். 14நீ அவர்கள்#47:14 அவர்கள் – பன்னிரண்டு கோத்திரங்கள் மத்தியில் அதைச் சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்; இந்த நாட்டை உங்கள் உரிமைச் சொத்தாக கொடுப்பேன் என்று உங்கள் முற்பிதாக்களுக்கு என் உயர்த்திய கையால் நான் ஆணையிட்டேன்.
15“நாட்டின் எல்லைகள் இவ்விதமாகவே அமைய வேண்டும்:
“வட எல்லை மத்தியதரைக் கடலிலிருந்து தொடங்கி எத்லோன் வீதியோடு போய், லேபோ-ஆமாத் நுழைவாயிலைக் கடந்து, சேதாத் நகரத்துக்குப் போகும். 16தமஸ்குவினதும் ஆமாத்தினதும் எல்லையிலுள்ள பெரோத்தா, சிப்ராயிம் ஆகிய நகரங்களெங்கும் சென்று, அவ்ரான் எல்லையிலுள்ள ஆசேர்-அத்திக்கோன் நகரம்வரை செல்லும். 17இந்த எல்லையானது மத்தியதரைக் கடலிலிருந்து ஆசார்-ஏனான் பட்டணம்வரை செல்லும். பின்பு தமஸ்குவுக்கு வடக்கே போய் ஆமாத்தின் தெற்கை அடையும். இதுவே வட எல்லையாயிருக்கும்.
18கிழக்குப் பக்கத்தின் எல்லை, தமஸ்குவுக்கும் அவ்ரானுக்கும் இடையிலுள்ள ஒரு முனையிலிருந்து செல்லும். இது யோர்தான் நதி வழியாக கீலேயாத்துக்கும் இஸ்ரயேல் நாட்டுக்கும் இடையே தொடர்ந்து செல்லும். சாக்கடலிலுள்ள தாமார் நகரம்வரை யோர்தான் நதியே எல்லையாகும். இதுவே கிழக்கு எல்லையாயிருக்கும்.
19தெற்குப் பக்கத்திலுள்ள எல்லை, தாமாரிலிருந்து மேரிபா-காதேஸ் நீர்நிலைகளை அடைந்து, எகிப்தின் நீரோடை வழியாக மத்தியதரைக் கடல் வரை செல்லும். இதுவே தெற்கு எல்லையாயிருக்கும்.
20மேற்குப் பக்கத்தில் மத்தியதரைக் கடலே அதன் எல்லையாகும். அது லேபோ-ஆமாத் எதிரேயுள்ள இடம்வரை செல்லும். இதுவே மேற்கு எல்லையாயிருக்கும்.
21“இஸ்ரயேலின் கோத்திரங்களின்படியே நீங்கள் நாட்டை உங்களுக்குள் பங்கிட வேண்டும். 22உங்களுக்கும் உங்கள் மத்தியில் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்திருக்கும் அந்நியருக்கும் உரிமைச் சொத்தாக நாடு பங்கிடப்பட வேண்டும். அவர்கள் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தவர்களைப் போல கணிக்கப்படுதல் வேண்டும். உங்களோடு அவர்களும் இஸ்ரயேல் கோத்திரங்களின் மத்தியில் சொத்துரிமையைப் பெறவேண்டும். 23அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் வாழ்கிறானோ, அந்தக் கோத்திரத்தின் பிரதேசத்தில் அவனுடைய உரிமைச் சொத்தை நீங்கள் அவனுக்குக் கொடுக்க வேண்டும் என ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார்” என்றான்.

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in