YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 46

46
1“ஆண்டவராகிய கர்த்தர் கூறுவது இதுவே. கிழக்கு நோக்கியிருக்கும் உள்முற்றத்து வாயில், வாரத்தின் ஆறு வேலை நாட்களும் மூடப்பட்டு, ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்பு தினங்களிலும் திறக்கப்பட வேண்டும். 2இஸ்ரயேலின் ஆட்சியாளன் வெளியிலிருந்து மண்டபத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே வந்து, வாசற்படியருகில் நிற்க வேண்டும். மதகுருக்கள் அவனுடைய தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்த வேண்டும். அவன் நுழைவாயிலின் முகப்பில் நின்று வழிபாடு செய்த பின்னர், வெளியே செல்ல வேண்டும். ஆனால் மாலைவரை வாயில் மூடப்படக் கூடாது. 3ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்பு தினங்களிலும் நாட்டு மக்கள் கர்த்தரின் முன்னிலையில் நுழைவாயிலில் வழிபாடு செய்யவேண்டும். 4ஓய்வுநாளில் ஆட்சியாளனால் கர்த்தருக்கென்று கொண்டுவரப்படும் தகனபலியானது, குறைபாடற்ற ஆறு செம்மறியாட்டுக்குட்டிகளும் ஒரு செம்மறியாட்டுக்கடாவுமாக இருக்கவேண்டும். 5செம்மறியாட்டுக்கடாவுடன் செலுத்தப்படும் தானியபலியானது ஒரு எப்பா#46:5 அதாவது, சுமார் 35 ராத்தல் அல்லது 16 கிலோ கிராம்; மேலும் வசனங்கள் 7,11 லும் வருகின்றது அளவுடையதாக இருக்கவேண்டும். செம்மறியாட்டுக்குட்டிகளுடன் செலுத்தப்படும் தானியபலியை அரசன் விரும்பியபடி தாராளமாகக் கொடுக்கலாம். ஆனால் ஒவ்வொரு எப்பா அளவுடனும் ஒரு ஹின்#46:5 அதாவது, சுமார் 1 கலன் அல்லது சுமார் 3.8 லீட்டர்; மேலும் வசனங்கள் 7,11 லும் வருகின்றது அளவு எண்ணெயை செலுத்த வேண்டும். 6அவன் மாதப்பிறப்புத் தினத்தில் குறைபாடற்ற இளங்காளையொன்றையும், ஆறு செம்மறியாட்டுக்குட்டிகளையும் ஒரு செம்மறியாட்டுக்கடாவையும் செலுத்த வேண்டும். 7அவன் ஒரு காளையுடன் ஒரு எப்பா தானியபலியையும் ஒரு செம்மறியாட்டுக்கடாவுடன் ஒரு எப்பா தானியபலியையும், செம்மறியாட்டுக்குட்டிகளுடன் தாராளமாக தானியபலியையும் செலுத்தலாம். ஆனால் ஒவ்வொரு எப்பா தானியபலிகளுடனும் ஒரு ஹின் எண்ணெயை செலுத்த வேண்டும். 8ஆட்சியாளன் உட்செல்லும்போது அவன் நுழைவு மண்டபத்தின் வாயிலின் வழியாகப் போய் அதே வழியாகவே திரும்பி வரவேண்டும்.
9“நாட்டு மக்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகை தினங்களில் வழிபாட்டுக்காக கர்த்தருக்கு முன்பாக வரும்போது வடக்கு வாயில் வழியாக உட்செல்வோர் தெற்கு வாயில் வழியாகவும், தெற்கு வாயில் வழியாக உட்செல்வோர் வடக்கு வாயில் வழியாகவும் வெளியேற வேண்டும். ஒருவரும் தான் உட்சென்ற வாயில் வழியாகத் திரும்பி வெளியேறக் கூடாது. ஒவ்வொருவரும் தாம் உட்சென்ற வாயிலுக்கு எதிரே இருக்கும் வாயில் வழியாகவே வெளியேற வேண்டும். 10ஆட்சியாளனும் அவர்கள் உள்ளே செல்லும்போது உள்ளே சென்று அவர்கள் வெளியேறும்போது வெளியேற வேண்டும். 11பண்டிகைகளிலும், நியமிக்கப்பட்ட விசேட தினங்களிலும் தானியபலியை ஒரு காளையுடன் ஒரு எப்பாவையும், ஒரு செம்மறியாட்டுக்கடாவுடன் ஒரு எப்பாவையும், செம்மறியாட்டுக்குட்டிகளோடு தாராளமாக தானியபலியையும் செலுத்தலாம். ஆனால் ஒவ்வொரு எப்பா தானியபலிகளுடனும் ஒரு ஹின் எண்ணெயை செலுத்த வேண்டும்.
12“ஆட்சியாளன் தகனபலியையோ, சமாதானபலியையோ கர்த்தருக்கு மனப்பூர்வமானபலியாகச் செலுத்த வரும்போது, கிழக்கு நோக்கியிருக்கும் வாயில் அவனுக்காகத் திறக்கப்பட வேண்டும். ஓய்வுநாளில் செய்வது போலவே, தகனபலிகளையும் சமாதானபலிகளையும் அவன் செலுத்திய பின்பு அவன் வெளியே செல்ல வேண்டும். அவன் வெளியே சென்ற பின்னர் வாயில் மூடப்பட வேண்டும்.
13“நீங்கள் ஒவ்வொருநாளும் குறைபாடற்ற ஒரு வயதையுடைய செம்மறியாட்டுக்கடாக்குட்டி ஒன்றை கர்த்தருக்குத் தகனபலியாகக் கொடுக்க வேண்டும். காலைதோறும் அதைக் கொடுக்க வேண்டும். 14அதனோடு தானியபலியாக ஆறில் ஒரு எப்பா மாவையும் அதில் தெளிப்பதற்காக மூன்றில் ஒரு ஹின் எண்ணெயையும் காலைதோறும் கொடுக்க வேண்டும்#46:14 அதாவது, 2.7 கிலோ கிராம் மா, 1.3 லீட்டர் எண்ணெய். கர்த்தருக்குக் கொடுக்கப்படவேண்டிய இந்தத் தானியபலிகள் ஒரு நித்திய கட்டளையாயிருக்கும். 15எனவே, செம்மறியாட்டுக்குட்டியும், தானியபலியும், எண்ணெயும் தகனபலியாக காலைதோறும் ஒழுங்காகச் செலுத்தப்படுவதற்காகக் கொடுக்கப்படுதல் வேண்டும்.
16“ஆண்டவராகிய கர்த்தர் கூறுவது இதுவே. ஆட்சியாளன் தன் உரிமைச் சொத்திலிருந்து தன் மகன்மாரில் ஒருவனுக்கு அன்பளிப்பொன்றைக் கொடுப்பானாயின், அது அவனுடைய பிள்ளைகளுக்கு உரித்தானது. அது அவர்களின் உரிமைச் சொத்து. 17ஆயினும், அவன் தன் உரிமைச் சொத்திலிருந்து தனது வேலைக்காரரில் ஒருவனுக்கு ஒரு அன்பளிப்பைச் செய்திருப்பின் அவ்வேலைக்காரன் விடுதலை வருடம் வரை அதை அனுபவிக்கலாம். பின்பு அது ஆட்சியாளனையே சாரும். ஆட்சியாளனுடைய உரிமைச் சொத்து அவனுடைய பிள்ளைகளுக்கு மட்டுமே சொந்தமாகும். 18ஆட்சியாளன் மக்களுடைய உரிமைச் சொத்துக்களில் எதையேனும் எடுத்துக்கொண்டு அவர்களை அவர்களுடைய இருப்பிடத்திலிருந்து துரத்திவிடக் கூடாது. அவன் தன் சொந்த நிலத்திலிருந்தே தன் பிள்ளைகளுக்கான உரிமைச் சொத்தைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது என் மக்கள் எவருமே தங்கள் நில உரிமைகளை இழக்க மாட்டார்கள்.”
19பின்பு அந்த மனிதன், என்னை வடக்கு நோக்கியிருந்த மதகுருக்களுடைய பரிசுத்த அறைகளுக்குச் செல்லும் வாசலின் பக்கமாயிருந்த, நுழைவாயில் வழியாகக் கொண்டுவந்தான். அங்கே மேற்கு புறத்தின் தொலைவில் ஒரு இடத்தைக் கண்டேன். 20அவன் என்னிடம், “இது மதகுருக்கள் குற்றநிவாரணபலியையும், பாவநிவாரணபலியையும் சமைத்து, தானியபலியை நெருப்பில் சுடும் இடம். மக்கள் அவற்றினால் பரிசுத்தமாகாதபடி இவற்றை வெளிமுற்றத்துக்குக் கொண்டுவரக் கூடாது” என்றான்.
21பின்பு அவன் என்னை ஆலய வெளிமுற்றத்துக்குக் கொண்டுவந்து அதன் நான்கு மூலைகளுக்கும் அழைத்துச் சென்றான். ஒவ்வொரு மூலையிலும் ஒரு முற்றம் இருந்தது. 22வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும் ஒரே அளவான நாற்பது முழ நீளமும் முப்பது முழ அகலமுமுள்ள சிறிய முற்றங்கள் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவுடையதாய் இருந்தது. 23நான்கு முற்றங்களின் உட்புற சுவர்களில் சுற்றிலும் கல்லால் செய்யப்பட்ட பக்க விளிம்புகள் இருந்தன. அந்த விளிம்புகளின் கீழ் அடுப்புகள் இருந்தன. 24அவன் என்னிடம், “ஆலயப் பணியாளர் மக்களின் பலிகளைச் சமைக்கும் சமையலிடங்கள் இவையே” என்றான்.

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in