எசேக்கியேல் 48
48
நாட்டின் பிரிவுகள்
1“பெயர் வரிசைப்படியுள்ள கோத்திரங்கள் இவையே:
“நாட்டின் வட எல்லையில், தாண் ஒரு பங்கைப் பெறுவான்; அது எத்லோன் பட்டண வீதியிலிருந்து, லேபோ-ஆமாத்தின் நுழைவாயில் வரைக்கும் தொடரும். ஆமாத்துக்கு அடுத்ததாக ஆசார்-ஏனான் பட்டணமும், தமஸ்குவின் வடக்கு எல்லையும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலுமுள்ள அதன் எல்லையின் ஒரு பகுதியாயிருக்கும்.
2ஆசேர் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள தாணின் எல்லையோடு அமையும்.
3நப்தலி ஒரு பங்கைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள ஆசேரின் எல்லையோடு அமையும்.
4மனாசே ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள நப்தலியின் எல்லையோடு அமையும்.
5எப்பிராயீம் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்கு வரையிலுள்ள மனாசேயின் எல்லையோடு அமையும்.
6ரூபன் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள எப்பிராயீமின் எல்லையோடு அமையும்.
7யூதா ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள ரூபனின் எல்லையோடு அமையும்.
8“கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள யூதாவின் எல்லையைக்கொண்ட பகுதியை நீ வேறுபிரித்து வைக்கவேண்டும். அது 25,000 முழ#48:8 – 1 முழம் என்பது 18 அங்குலம் அல்லது 45 சென்ரிமீற்றர் அகலமும், கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள கோத்திரப் பங்குக்குச் சமானமான நீளமுமாய் இருக்கவேண்டும். பரிசுத்த ஆலயம் அதன் நடுவில் அமைந்திருக்கும்.
9“கர்த்தருக்கு நீ செலுத்தவேண்டிய விசேட பகுதி 25,000 முழ நீளமும் 10,000 முழ அகலமுமாக இருக்கவேண்டும். 10இது மதகுருக்களுக்கான பரிசுத்த பகுதியாயிருக்கும். அது வடக்குப்புறம் 25,000 முழ நீளமாயும், மேற்குப்புறம் 10,000 முழ அகலமாயும், கிழக்குப்புறம் 10,000 முழ அகலமாயும், தெற்குப்புறம் 25,000 முழ நீளமாயும் இருக்கும். அதன் மத்தியில் கர்த்தரின் பரிசுத்த ஆலயம் இருக்கும். 11எனக்குப் பணி செய்வதில் உண்மையுள்ளவர்களாயிருந்த, வேறுபிரிக்கப்பட்ட மதகுருக்களான சாதோக்கியரின் தலைமுறைக்கே இது உரித்தாகும். இஸ்ரயேல் வழிவிலகியபோது லேவியரும் வழிவிலகியது போல, சாதோக்கியர் வழிவிலகிப் போகவில்லை. 12இது நாட்டின் பரிசுத்த பங்கிலிருந்து அவர்களுக்கான ஒரு விசேட நன்கொடையாகும். இந்த மகா பரிசுத்த பங்கு லேவியரின் நிலப்பரப்பின் எல்லையோடு அமைந்திருக்கும்.
13“மதகுருக்களுக்கான பகுதியின் எல்லையோடு லேவியர்களுக்கு 25,000 முழ நீளமும் 10,000 முழ அகலமுமான ஒரு இடம் இருக்கும். அதன் முழு நீளம் 25,000 முழமும், அகலம் 10,000 முழமுமாயிருக்கும். 14அவர்கள் அதில் எதையேனும் விற்கவோ அல்லது மாற்றீடு செய்யவோ கூடாது. அது நாட்டின் சிறப்புவாய்ந்த பகுதியாகும். அது கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பதால், அது வேறு யாருக்கும் உரிமையாகக் கூடாது.
15“அகலம் 5,000 முழமும், நீளம் 25,000 முழமுமுடைய எஞ்சிய பகுதி, வீடுகளுக்கும் மேய்ச்சல் நிலத்துக்குமாக நகரின் பொதுப் பாவனைக்காக விடப்படும். நகரம் அதன் மத்தியில் இருக்கும். 16நகரம் வடக்கே 4,500 முழங்களும், தெற்கே 4,500 முழங்களும், கிழக்கே 4,500 முழங்களும், மேற்கே 4,500 முழங்களும் அளவுடையதாயிருக்கும். 17நகருக்கான மேய்ச்சல் நிலம் வடக்கே 250 முழங்களும் தெற்கே 250 முழங்களும் கிழக்கே 250 முழங்களும் மேற்கே 250 முழங்களுமாக இருக்கும். 18பரிசுத்த இடத்தோடு இணைந்திருக்கும் பகுதி கிழக்கே 10,000 முழங்களும் மேற்கே 10,000 முழங்களுமாயிருக்கும். அதன் விளைச்சல் நகரின் தொழிலாளர்களின் உணவுக்காகும். 19நகரில் இருந்து அங்கு விவசாயம் செய்யவரும் தொழிலாளர்கள் இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்தும் வருவார்கள். 20நீங்கள் வேறுபிரித்து வைக்கவேண்டிய முழுப் பகுதியும் 25,000 முழச் சதுரமாக இருக்கும். இது நகரத்து உடைமைகளோடு ஒரு பரிசுத்த பகுதியாக இருக்கும்.
21“பரிசுத்த இடமும், நகரத்தின் சொத்தும் அமைந்திருக்கும் இடத்தின் இரு பக்கங்களிலும் எஞ்சியிருக்கும் பகுதி ஆட்சியாளனுக்கு உரியதாகும். அது பரிசுத்த இடத்திலிருந்து 25,000 முழம் கிழக்கு எல்லை வரையும், 25,000 முழம் மேற்கு எல்லை வரையும் பரந்திருக்கும். கோத்திரப் பங்குகளுக்கு சமாந்தரமான இப்பகுதிகள் ஆட்சியாளனுக்கு உரியதாகும். ஆலயத்துடன் இருக்கும் பரிசுத்த பகுதி அவற்றுக்கு மத்தியில் இருக்கும். 22எனவே, லேவியரின் சொத்துக்களும் நகரத்தின் சொத்துக்களும் ஆட்சியாளனுக்குச் சொந்தமான பகுதியின் மத்தியில் இருக்கும். ஆட்சியாளனுக்கு சொந்தமான பகுதியோ, யூதாவின் எல்லைகளுக்கும் பென்யமீன் எல்லைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும்.
23“எஞ்சிய கோத்திரங்களுக்கான பகுதிகளாவன.
“பென்யமீன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்குப்புறத்திலிருந்து மேற்குப்புறம் வரை பரந்திருக்கும்.”
24சிமியோன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்கு வரை பென்யமீனின் பங்கின் எல்லையோடிருக்கும்.
25இசக்கார் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்கு வரை சிமியோனின் பங்கின் எல்லையோடிருக்கும்.
26செபுலோன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்கு வரை இசக்காரின் பங்கின் எல்லையோடிருக்கும்.
27காத் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்கு வரை செபுலோனின் பங்கின் எல்லையோடிருக்கும்.
28காத்தின் தெற்கெல்லை தெற்கே தாமார் நகரம் தொடங்கி, காதேசின் மேரிபாவின் நீர்நிலைகள் வரையும், சென்று பின்னர் எகிப்திய ஓடை ஓரமாக மத்தியதரைக் கடலைச் சென்றடையும்.
29“இஸ்ரயேலரின் கோத்திரங்களுக்கு உரிமைச் சொத்தாக நீ பிரித்துக் கொடுக்க வேண்டிய நாடு இதுவே. இவை அவர்களுக்குரிய பகுதியாக இருக்கும்” என்பதாக ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார்.
எருசலேம் நகர வாயில்கள்
30“நகரிலிருந்து வெளியேறும் வழிகள் இவையே:
“அவை 4,500 முழ நீளமான வடபகுதி தொடங்கி அமைந்திருக்கும். 31நகர வாயில்கள் இஸ்ரயேலரின் கோத்திரங்களின்படியே பெயரிடப்படும். வடபுறத்திலுள்ள மூன்று வாயில்களும் ரூபன் வாயில், யூதா வாயில், லேவி வாயில் எனப் பெயரிடப்படும்.
32நீளம் 4,500 முழமான கிழக்குப் புறத்திலுள்ள மூன்று வாயில்களும் யோசேப்பு வாயில், பென்யமீன் வாயில், தாண் வாயில் எனப் பெயரிடப்படும்.
33நீளம் 4,500 முழமான தென்புறத்திலுள்ள மூன்று வாயில்களும் சிமியோன் வாயில், இசக்கார் வாயில், செபுலோன் வாயில் எனப் பெயரிடப்படும்.
34நீளம் 4,500 முழமான மேற்குப்புறத்திலுள்ள மூன்று வாயில்களும் காத் வாயில், ஆசேர் வாயில், நப்தலி வாயில் எனப் பெயரிடப்படும்.
35“சுற்றிலும் தூரம் 18,000 முழமாக இருக்கும்.
“அக்காலம் முதல் நகருக்கு வழங்கப்படும் பெயர், ‘கர்த்தர் அங்கே இருக்கின்றார்’ ” என்பதே.
Currently Selected:
எசேக்கியேல் 48: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.