எசேக்கியேல் 43
43
கர்த்தருடைய மகிமை ஆலயத்துக்குத் திரும்புதல்
1பின்பு அந்த மனிதன் என்னைக் கிழக்கு முகமாயிருந்த வாயிலுக்கு அழைத்து வந்தான். 2அப்போது இஸ்ரயேலின் இறைவனது மகிமை கிழக்கேயிருந்து வருவதை நான் கண்டேன். அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சல் போலிருந்தது. நாடு அவருடைய மகிமையினால் பிரகாசித்தது. 3நான் கண்ட தரிசனமானது, அவர் பட்டணத்தை அழிப்பதற்கு வந்தபோது நான் கண்டதைப் போன்றும், கேபார் நதியருகே கண்ட தரிசனம் போன்றும் இருந்தது. உடனே நான் தரைவரை தலைதாழ்த்தி விழுந்தேன். 4கர்த்தரின் மகிமை கிழக்கு வாயில் வழியாக ஆலயத்துக்குள் வந்தது. 5பின்பு ஆவியானவர் என்னைத் தூக்கி உள்முற்றத்தினுள் கொண்டுவந்தார். கர்த்தரின் மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.
6அந்த மனிதன் என்னருகில் நின்றுகொண்டிருக்கும்போது, ஒருவர் ஆலயத்துக்குள்ளிருந்து என்னுடன் பேசுவதை நான் கேட்டேன். 7அவர் என்னிடம், “மனுமகனே, இது எனது அரியணை இருக்கும் இடமும், எனது பாதங்கள் இருக்கும் இடமுமாயிருக்கிறது. நான் இங்கேயே இஸ்ரயேலரின் மத்தியில் என்றென்றும் இருப்பேன். இனியொருபோதும் இஸ்ரயேலர் என் பெயரைத் தூய்மைக்கேடாக்க மாட்டார்கள். அவர்களோ, அவர்களுடைய அரசர்களோ தங்களுடைய தகாத உறவினாலும், மேடைகளிலுள்ள தங்கள் அரசர்களின் பிரேதங்களினாலும் என் பெயரைத் தூய்மைக் கேடாக்குவதில்லை. 8அவர்கள் தங்கள் வாசற்படியை எனது பரிசுத்த வாயிற்படியை அடுத்தும், தங்களது கதவு நிலைகளை எனது கதவு நிலைகளையடுத்தும் வைத்திருந்தார்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவர் மட்டுமே இருந்தது. இவ்வாறு தங்களுடைய அருவருக்கத்தக்க செயல்களினால் எனது பரிசுத்த பெயரைத் தூய்மைக்கேடாக்கினார்கள். எனவே எனது கோபத்தில் நான் அவர்களை அழித்தேன். 9இப்போது அவர்கள் தங்கள் தகாத உறவையும்#43:9 தகாத உறவையும் – பிற தெய்வ வழிபாடு தங்கள் அரசர்களுடைய கல்லறைகளில் வழிபடுவதையும் என்னைவிட்டு அப்புறப்படுத்தட்டும். அப்பொழுது நான் என்றென்றும் அவர்கள் மத்தியில் வாழ்வேன்.
10“மனுமகனே, இஸ்ரயேலர் தங்கள் பாவத்தின் பொருட்டு வெட்கப்படும்படியாக, ஆலயத்தைப்பற்றி அவர்களுக்கு விபரித்துச் சொல். அதன் கட்டமைப்பை அவர்கள் அளக்கட்டும். 11அவர்கள் தாங்கள் செய்த எல்லாவற்றையும் குறித்து வெட்கப்படுவார்களாயின், ஆலயத்தின் ஒழுங்கையும், கட்டமைப்பையும், அதன் உட்செல்லும் மற்றும் வெளியேறும் வாயில்களையும், அதன் முழு அமைப்பையும், அதன் அனைத்து ஒழுங்குவிதிகளையும், அதன் திட்டங்களையும், அவர்களுக்கு முன்பாக எழுதி வை. அப்பொழுது அவர்கள் அதன் அனைத்து திட்டங்களையும், ஒழுங்குவிதிகளையும் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.
12“ஆலயத்துக்குரிய சட்டம் இதுவாயிருக்கும். மலையுச்சியைச் சூழ இருக்கும் அனைத்து பகுதிகளும் மகாபரிசுத்தமாயிருக்கும். ஆலயத்தின் சட்டம் இவ்வாறானதேயாகும்.”
பலிபீடம்
13அந்த மனிதன் சொன்னபடி, பலிபீடத்தின் அளவுகளானது: ஒரு முழம் என்பது கையளவின்படி ஒரு முழமும் நான்கு விரற்கடையளவும் உடையது#43:13 சுமார் 21 அங்குலம் அல்லது 53 சென்ரிமீற்றர். அதன் அடித்தளம் ஒரு முழம் உயரமும் ஒரு முழம் அகலமும் கொண்டது. அதன் ஓரத்தை சுற்றிலும் ஒரு சாண்#43:13 ஒரு சாண் – சுமார் 11 அங்குலம் அல்லது 27 சென்ரிமீற்றர் அளவு விளிம்பு இருந்தது. இதுவே பலிபீடத்தின் உயரம். 14அடித்தளம் தொடங்கி அதன் கீழ்விளிம்புவரை இரண்டு முழம் உயரமும் ஒரு முழம் அகலமுமாய் இருந்தது. சிறிய விளிம்பிலிருந்து பெரிய விளிம்பு வரை நான்கு முழம் உயரமும் ஒரு முழம் அகலமுமாயிருந்தது. 15பலிபீட அடுப்பு நான்கு முழம் உயரமாயிருந்தது. அடுப்பிலிருந்து நான்கு கொம்புகள் மேல் நோக்கி உயர்ந்திருந்தன. 16பலிபீட அடுப்பு பன்னிரண்டு முழம் நீளமும் பன்னிரண்டு முழம் அகலமும்#43:16 பன்னிரண்டு முழம் நீளமும் பன்னிரண்டு முழம் அகலமும் – சுமார் 21 அடி அல்லது 6.4 மீற்றர் கொண்ட சதுரமாக இருந்தது. 17மேல் விளிம்பு பதினான்கு முழம் நீளமும் பதினான்கு முழம் அகலமும்#43:17 பதினான்கு முழம் நீளமும் பதினான்கு முழம் அகலமும் சுமார் 25 அடி அல்லது 7.4 மீற்றர் கொண்ட சதுரமாக இருந்தது. சுற்றிலும் அரை முழம்#43:17 அரை முழம் – சுமார் 11 அங்குலம் அல்லது 27 சென்ரிமீற்றர் அளவான விளிம்பும் ஒரு முழம் அளவான அடித்தளமும் அமைந்திருந்தன. பலிபீடத்தின் படிகள் கிழக்கு நோக்கியிருந்தன.
18பின்பு அவன் என்னிடம், “மனுமகனே, ஆண்டவராகிய கர்த்தர் கூறுவது இதுவே. பலிபீடம் கட்டுவதற்குரிய ஒழுங்குவிதிகள் இவையே. தகனபலிகளைச் செலுத்தும்போதும் பலிபீடத்தின்மீது இரத்தம் தெளிக்கும்போதும் இவற்றைக் கைக்கொள்ள வேண்டும். 19என்னருகில் வந்து, ஆராதனை செய்யும் சாதோக்கின் குடும்பத்தாரான, லேவிய மதகுருக்களின் பாவநிவாரணபலியாக ஒரு இளங்காளையைக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார். 20அதன் இரத்தத்தில் சிறிதளவை எடுத்து, பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலும், மேல்விளிம்பின் நான்கு மூலைகளிலும், வளைவிளிம்பைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். அவ்வாறு பலிபீடத்தைத் தூய்மைப்படுத்தி, அதற்காக பாவநிவர்த்தி செய்யவேண்டும். 21பாவநிவாரணபலியான காளையை, பரிசுத்த ஆலயத்துக்கு வெளியே நியமிக்கப்பட்ட இடத்தில் எரிக்க வேண்டும்.
22“இரண்டாம் நாள் குறைபாடற்ற வெள்ளாட்டுக்கடா ஒன்றைப் பாவநிவாரணபலியாகச் செலுத்த வேண்டும். காளையினால் பலிபீடம் தூய்மையாக்கப்பட்டது போலவே, தூய்மையாக்கப்படுதல் வேண்டும். 23அதைத் தூய்மைப்படுத்தி முடிந்ததும், குறைபாடற்ற இளங்காளையையும், குறைபாடற்ற செம்மறியாட்டுக்கடாவையும் உங்கள் மந்தையிலிருந்து நீங்கள் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். 24நீங்கள் அவற்றை கர்த்தருக்கு முன்பாகச் செலுத்த வேண்டும். மதகுருக்கள் அதன்மீது உப்புத்தூவி கர்த்தருக்குத் தகனபலியாகப் பலியிட வேண்டும்.
25“நீங்கள் தினந்தோறும் ஏழு நாட்களுக்குப் பாவநிவாரணபலியாக வெள்ளாட்டுக்கடா ஒன்றைச் செலுத்த வேண்டும். அத்தோடு உங்கள் மந்தையிலிருந்து, குறைபாடற்ற ஒரு இளங்காளையையும் ஒரு செம்மறியாட்டுக்கடாவையும் நீங்கள் செலுத்த வேண்டும். 26ஏழு நாட்கள் பலிபீடத்துக்காகப் பாவநிவர்த்தி செய்து, அதைச் சுத்திகரிக்க வேண்டும். இவ்வாறாக பலிபீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும். 27அந்த நாட்களின் முடிவில், எட்டாம் நாளிலிருந்து மதகுருக்கள் உங்களுடைய தகனபலிகளையும், சமாதானபலிகளையும் பலிபீடத்தில் செலுத்த வேண்டும். அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன் என்பதாக ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார்.”
Currently Selected:
எசேக்கியேல் 43: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.