எசேக்கியேல் 44
44
லேவிய மதகுருக்கள்
1மீண்டும் அந்த மனிதன் என்னை பரிசுத்த இடத்தின் கிழக்கு நோக்கியிருந்த வெளிவாயிலுக்குக் கொண்டுவந்தான். அது பூட்டப்பட்டிருந்தது. 2அப்போது கர்த்தர் என்னிடம், “இந்த வாயில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும். இது திறக்கப்படலாகாது. இதன் வழியாக யாரும் உட்செல்லக் கூடாது. ஏனெனில் இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தர் இதன் வழியாக சென்றார். ஆகவே இது பூட்டப்பட்டே இருக்கும். 3ஆட்சியாளன் மட்டுமே கர்த்தருக்கு முன் உணவை#44:3 உணவை – பலியிடப்பட்ட உணவு உண்பதற்கு உட்காரலாம். அவன் மண்டபத்தின் நுழைவாயிலால் உட்சென்று அதே வழியாக வெளியேற வேண்டும்” என்றார்.
4பின்பு அம்மனிதன் என்னை ஆலயத்துக்கு முன்னாலிருக்கும் வடக்கு வாயில் வழியாக அழைத்து வந்தான். அப்போது நான் பார்த்தபோது, கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று, உடனே நான் தரைவரை தலைதாழ்த்தி விழுந்தேன்.
5கர்த்தர் என்னிடம், “மனுமகனே, கவனமாகப் பார்த்து, கவனித்துக் கேட்டு, கர்த்தருடைய ஆலயத்தின் அனைத்து ஒழுங்குவிதிகளையும் குறித்து நான் கூறும் ஒவ்வொன்றையும் கருத்தாய் கவனித்து, ஆலயத்தின் நுழைவாயிலையும் பரிசுத்த இடத்தின் வெளியேறும் அனைத்து வாயில்களையும் கவனமாகக் குறித்து வைத்துக்கொள். 6கலகக்காரராகிய இஸ்ரயேலரிடம் நீ சொல்ல வேண்டியதாவது, ஆண்டவராகிய கர்த்தர் கூறுவது இதுவே. இஸ்ரயேல் மக்களே, வெறுக்கத்தக்க உங்கள் செயல்கள் போதும். 7இருதயத்திலும் மானிட சரீரத்திலும் விருத்தசேதனம் செய்யப்படாத அந்நியரை என் பரிசுத்த ஆலயத்துக்குள் கொண்டுவந்து, என் ஆலயத்தின் தூய்மையைக் கெடுத்தீர்கள். எனது உணவாகிய கொழுப்பையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்தியபோதிலும், உங்கள் வெறுக்கத்தக்க அனைத்து பழக்கவழக்கங்களினாலும் என் உடன்படிக்கையை மீறினீர்கள். 8என் பரிசுத்த காரியங்களின் பணிவிடையை நீங்கள் செய்யாமல், என் பரிசுத்த இடத்தில் அந்தக் கடமைகளை செய்ய அந்நியரை நியமித்தீர்கள். 9ஆண்டவராகிய கர்த்தர் கூறுவது இதுவே: இருதயத்திலும் மானிட சரீரத்திலும் விருத்தசேதனம் செய்யப்படாத, இஸ்ரயேலருக்குள் வசிக்கும் எந்தவொரு அந்நியனும் என் பரிசுத்த இடத்துக்குள் செல்லக்கூடாது.
10“இஸ்ரயேல் வழிதவறியபோது, விக்கிரகங்களுக்குப் பின்னால் திரிந்து, என்னைவிட்டுத் தூரமாய்ப் போன லேவியர்கள், தங்கள் பாவத்தின் தண்டனையைச் சுமப்பார்கள். 11அவர்கள் ஆலய வாயில்களுக்குப் பொறுப்பாக இருந்து, மக்களுக்காகத் தகனபலிகளையும் பலிகளையும் கொன்று மக்கள் முன்பாக நின்று அவர்களுக்கு ஊழியம் செய்யலாம். அவர்கள் இவ்வாறு என் பரிசுத்த இடத்தில் பணிபுரியலாம். 12ஆனால் அவர்கள் தங்கள் விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று அவற்றை வணங்கி, இஸ்ரயேலரைப் பாவத்தில் இடறி விழச்செய்தபடியால், அவர்கள் தங்கள் பாவத்தின் தண்டனையைச் சுமப்பார்கள். இதை நான் என் உயர்த்திய கையினால் ஆணையிட்டிருக்கிறேன் என ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார். 13அவர்கள் என்னருகே வந்து, மதகுருக்களாய்ப் பணிபுரியவோ அல்லது மகா பரிசுத்தமான பரிசுத்த பொருட்களுக்கு அருகில் வரவோ கூடாது. தங்களுடைய வெறுக்கத்தக்க செயல்களுக்கான அவமானத்தை அவர்கள் சுமக்க வேண்டும். 14எனினும் அவர்கள் ஆலயத்தின் வேலைகளுக்குப் பொறுப்பாயிருக்கவும், அதில் செய்யவேண்டிய அனைத்து வேலைகளையும் செய்யவும் நான் அவர்களை நியமிப்பேன்.
15“ஆனால், இஸ்ரயேல் என்னைவிட்டு வழிதவறிச் சென்றபோது, என் பரிசுத்த ஆலயத்தின் கடமைகளை சாதோக்கின் சந்ததிகளான லேவியர்கள் உண்மையாகச் செய்துவந்தார்கள். அவர்களே எனக்கு மதகுருக்களாயிருந்து, எனக்கு முன்பாகப் பணிசெய்ய என்னருகே வரவேண்டும். கொழுப்பும் இரத்தமுமான பலிகளைச் செலுத்துவதற்கு அவர்களே எனக்கு முன்பாக நிற்க வேண்டும் என்று ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார். 16அவர்கள் என் பரிசுத்த இடத்துக்குள் வந்து, என் மேசையை அண்மித்து, என் முன் பணிவிடை செய்து, எனது பணியை நிறைவேற்றுவார்கள்.
17“உள்முற்ற வாயிலுக்குள் வரும்போது அவர்கள் மென்பட்டு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். உள்முற்ற நுழைவாயிலிலோ அல்லது ஆலயத்துக்கு உட்புறத்திலோ ஊழியம் செய்யும்போது அவர்கள் கம்பளி ஆடைகளை அணியக் கூடாது. 18அவர்கள் தலைகளில் மென்பட்டு தலைப்பாகைகளையும், இடைகளில் மென்பட்டு உள்ளாடைகளையும் அணிந்துகொள்ள வேண்டும். வியர்வை உண்டாக்கக்கூடிய எதையும் இடுப்பில் அணியக் கூடாது. 19அவர்கள் மக்கள் இருக்கும் வெளிமுற்றத்துக்குச் செல்லும்போது, தாங்கள் ஊழியத்தில் ஈடுபடுகையில் அணிந்திருந்த குருத்துவ ஆடைகளைக் கழற்றி அவற்றைப் பரிசுத்த அறைகளில் வைத்துவிட்டு, வேறு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆடைகளைத் தொடுவதன் மூலமாக மக்கள் தாங்கள் பரிசுத்தமடைய முயற்சிக்கக் கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்யவேண்டும்.
20“அவர்கள் முழுதாக தலைமுடியை மழிக்கவோ, தலைமுடியை நீளமாய் வளர்க்கவோ கூடாது. அவர்கள் தங்களுடைய தலைமுடியைக் கத்தரித்துக்கொள்ள வேண்டும். 21மதகுருக்களில் யாரும் உள்முற்றத்தினுள் செல்லும்போது திராட்சைரசம் அருந்தக் கூடாது. 22கணவனை இழந்தவளையோ அல்லது விவாகரத்துப் பெற்ற பெண்ணையோ அவர்கள் திருமணம் செய்யக் கூடாது. இஸ்ரயேல் வம்சத்துக் கன்னிப்பெண்ணை அல்லது கணவனை இழந்த மதகுருவின் மகளை மட்டும் திருமணம் செய்யலாம். 23அவர்கள் பரிசுத்தமானவற்றுக்கும் சாதாரணமானவற்றுக்கும் இடையிலான வித்தியாசத்தை என் மக்களுக்குப் போதிக்க வேண்டும். அசுத்தமானதையும் சுத்தமானதையும் வித்தியாசப்படுத்துவது எவ்வாறு என்பதையும் காண்பிக்க வேண்டும்.
24“எந்தப் பிரச்சினைகளிலும் மதகுருக்கள் நீதிபதிகளாய்ப் பணிபுரிந்து அதை எனது சட்டதிட்டங்களுக்கேற்ப தீர்மானிக்க வேண்டும். அவர்கள் எனது சட்டங்களையும் நியமிக்கப்பட்டுள்ள எனது பண்டிகைகளின் கட்டளைகளையும் கைக்கொண்டு, எனது ஓய்வுநாட்களை பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.
25“ஒரு மதகுரு, மரணமடைந்த ஒருவனுக்கு அருகில் சென்று தன்னை அசுத்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஆனாலும் மரணமடைந்தது அவனுடைய தந்தை, தாய், மகன், மகள், சகோதரன் அல்லது திருமணமாகாத சகோதரியாக இருந்தால் அவன் அசுத்தப்படலாம் 26அவன் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டும். 27அதன் பின்னர் பரிசுத்த ஆலயத்தில் ஆராதனை செய்வதற்காக அவன் உள்முற்றத்தினுள் செல்லும் நாளில், அவன் தனக்காக ஒரு பாவநிவாரணபலியைச் செலுத்த வேண்டும் என்று ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார்.
28“மதகுருக்களின் உரிமைச் சொத்து நானே. நான் அவர்களின் உரிமைச் சொத்தாக இருப்பதால் இஸ்ரயேலில் நீங்கள் அவர்களுக்குச் சொத்துக்களைக் கொடுக்க வேண்டாம். 29அவர்கள் தானியபலிகளையும், பாவநிவாரணபலிகளையும், குற்றநிவாரணபலிகளையும் சாப்பிடுவார்கள். அத்துடன் இஸ்ரயேலில் கர்த்தருக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவை எல்லாம் அவர்களுக்குரியதாகும். 30முதற்பலன்களில் முதன்மையானவைகள் அனைத்தும், உங்கள் காணிக்கைகளாகிய அனைத்துப் பொருட்களும் மதகுருக்களுக்கு உரியவையாகும். உங்கள் வீடு ஆசீர்வதிக்கப்படும்படி, பிசைந்த மாவின் முதற்பங்கை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். 31மதகுருக்கள் இறந்து கிடந்த பறவையையோ மிருகத்தையோ அல்லது மிருகங்களால் கொல்லப்பட்ட எதையுமோ சாப்பிடக் கூடாது.”
Currently Selected:
எசேக்கியேல் 44: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.