YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 42

42
மதகுருக்களின் அறைகள்
1பின்பு அந்த மனிதன் என்னை வடப்பக்கமாக வெளிமுற்றத்துக்கும், ஆலய முற்றத்துக்கு எதிரிலும், வடபுறத்திலிருந்த வெளிமதிலுக்கு எதிரிலும் அறைகள் இருந்த இடத்துக்கு அழைத்து வந்தான். 2வடக்கு முகமாய்க் கதவுகளைக் கொண்டிருந்த கட்டடம் நூறு முழ நீளமும் ஐம்பது முழ அகலமுமாயிருந்தது. 3இருபது முழ உள்முற்றத்துக்கு எதிராகவும், வெளிமுற்றத்து நிரை மாடத்துக்கு எதிராகவும், ஒன்றையொன்று நோக்கிய வண்ணமாக மூன்று தளங்களையுடைய மாடங்கள் இருந்தன. 4அறைகளுக்கு முன்னால் பத்து முழ அகலமும் நூறு முழம் நீளமும் கொண்ட உட்புற வழியொன்று இருந்தது. அவற்றின் கதவுகள் வடக்குப்புறமாக இருந்தன. 5மேலறைகள் ஒடுக்கமானவையாக இருந்தன. ஏனெனில், நடைபாதைகள் கட்டடத்தின் கீழ் மாடியிலும், மத்திய மாடியிலும் எடுத்திருந்த இடத்தைப் பார்க்கிலும், மேல்மாடியில் அதிக இடத்தை எடுத்திருந்தன. 6மூன்றாம் மாடியிலிருந்த அந்த அறைகள் முற்றங்களைப் போல் தூண்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே அவை கீழ் மாடியையும் மத்திய மாடியையும்விட, குறைந்த நிலப்பரப்பை உடையனவாயிருந்தன. 7அறைகளுக்கும் வெளிமுற்றத்துக்கும் சமாந்தரமாக அங்கே வெளிச்சுவரொன்று இருந்தது. அது அறைகளுக்கு முன்பாக ஐம்பது முழம் நீட்டப்பட்டிருந்தது. 8வெளிமுற்றத்தை அடுத்து வரிசையாக அமைந்திருந்த அறைகள் ஐம்பது முழ நீளமாய் இருந்தன. ஆலயத்துக்குச் சமீபமாய் இருந்த அறைகளின் வரிசை நூறு முழம் நீளமாயிருந்தது. 9வெளிமுற்றத்திலிருந்து கீழ் மாடியறைகளுக்குப் போகத்தக்கதாக, கிழக்குப் பக்கமாக ஒரு வாசல் இருந்தது.
10தெற்குப் பக்கத்தில் இருந்த வெளிமுற்றச்சுவர் ஓரமாக, ஆலய முற்றத்தை அடுத்தும், வெளிமதிலுக்கு எதிராக இருந்த கட்டடத்தில் இரண்டுநிரை அறைகள் இருந்தன. 11அவற்றுக்கு இடையில் ஒரு பாதை இருந்தது. அந்த அறைகள் வடக்கேயிருந்த அறைகளைப் போன்றவை. அவையும் அதே நீள அகலம் கொண்டவை. வெளியேறும் வாசல்களும் அவற்றின் அளவுகளும் ஒரே மாதிரியானவை. வடக்கிலிருந்த வாசல்களைப் போலவே, 12தெற்கிலிருந்த அறை வாசல்களும் அமைந்திருந்தன. உட்பக்கத்தின் நடைபாதையின் கிழக்குப் பக்கத்தின் முடிவில் ஒரு வாசல் இருந்தது. அதன் வழியாகவே மக்கள் தெற்கு அறைகளுக்குப் போனார்கள். தெற்கு சுவர், வெளியிலிருந்து அறைகளுக்குக் கிழக்குப் பக்கமாகப் போனது.
13பின்பு அவன் என்னிடம், “ஆலய முற்றத்துக்கு எதிரேயிருக்கும் வடக்கு அறைகளும் தெற்கு அறைகளும் பரிசுத்தமானவை. அங்கே கர்த்தரைச் சந்திக்கும் மதகுருக்கள் மகா பரிசுத்த காணிக்கைப் பொருட்களைச் சாப்பிடுவார்கள். மகா பரிசுத்த காணிக்கைகளையும், தானியபலிகளையும், பாவநிவாரணபலிகளையும், குற்றநிவாரணபலிகளையும் அங்கே வைப்பார்கள். ஏனெனில் அந்த இடம் பரிசுத்தமானது. 14மதகுருக்கள் பரிசுத்த பகுதிக்குள் போனதன் பின்னர் ஆராதனைக்கான ஆடைகளைக் களையாமல், வெளிமுற்றத்துக்குப் போகக் கூடாது. ஏனெனில் அவை பரிசுத்தமானவை. மக்களுக்காக இருக்கும் இடங்களுக்கருகே செல்வதற்கு முன் அவர்கள் வேறு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்” என்றான்.
15அவன் ஆலய உட்பகுதியில் இருந்த அனைத்தையும் அளந்து முடித்த பின்பு, என்னைக் கிழக்கு வாயில் பக்கமாக அழைத்துப் போய் அப்பகுதிகளைச் சுற்றி அளந்தான். 16அவன் அளவுகோலினால் கிழக்குப் பக்கத்தை அளந்தான். அது ஐந்நூறு முழங்களாயிருந்தது. 17அவன் வடக்குப் பக்கத்தை அளவுகோலினால் அளந்தான். அது ஐந்நூறு முழங்களாயிருந்தது. 18அவன் தெற்குப் பக்கத்தை அளவுகோலினால் அளந்தான். அதுவும் ஐந்நூறு முழங்களாயிருந்தது. 19பின்பு அவன் மேற்குப் பக்கம் திரும்பி அளந்தான். அதுவும் அளவுகோலின்படி ஐந்நூறு முழங்களாயிருந்தது. 20இவ்வாறாக அவன் நான்கு பக்கங்களையும் சுற்றி அளந்தான். அதைச் சுற்றிலும் ஐந்நூறு முழ நீளமும், ஐந்நூறு முழ அகலமுமுள்ள ஒரு மதில் இருந்தது. அந்த மதில் பொது இடத்தையும் பரிசுத்த இடத்தையும் வேறுபிரித்தது.

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in