YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 41

41
1பின்பு அம்மனிதன்#41:1 அம்மனிதன் – அளவுகோல் பிடித்திருந்த மனிதன் என்னை ஆலயத்தின் பெரிய மண்டபமான பரிசுத்த இடத்துக்குள் அழைத்துவந்து நிலைக்கால்களை அளந்தான். ஒவ்வொரு புறத்திலும் அவற்றின் அகலம் ஆறு முழங்களாயிருந்தது#41:1 ஆறு முழங்களாயிருந்தது – ஒரு முழம் என்பது 18 அங்குலம் அல்லது 45 சென்ரிமீற்றர். 2நுழைவாயில் பத்து முழ அகலமாயிருந்தது. இரு பக்கங்களிலும் இருந்து தொடுத்து நிற்கும் சுவர்கள் ஐந்து முழ அகலமுடையனவாயிருந்தன. அவன் வெளியே பரிசுத்த இடத்தை அளந்தான். அது நாற்பது முழ நீளமும், இருபது முழ அகலமுமாய் இருந்தது.
3பின்பு அவன் பரிசுத்த இடத்தின் உள் அறைக்குப் போய் வாசலின் நிலைக்கால்களை அளந்தான். அவை ஒவ்வொன்றும் இரண்டு முழ அகலமாய் இருந்தன. வாசல் ஆறு முழ அகலமும், ஒவ்வொரு புறத்திலும் தொடுத்து நிற்கும் சுவர்கள் ஏழு முழ அகலமுமாயிருந்தன. 4அவன் அந்த பரிசுத்த இடத்தின் உள் அறையின் நீளத்தை அளந்தான். அது இருபது முழங்களாயிருந்தது; அதன் அகலம் இருபது முழங்களாயிருந்தது. அவன் என்னிடம், “மகா பரிசுத்த இடம் இதுவே” என்றான்.
5பின்பு அவன் ஆலயத்தின் சுவரை அளந்தான். அது ஆறு முழ அகலமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியிருந்த பக்க அறைகள் ஒவ்வொன்றும் நான்கு முழ அகலமாயிருந்தன. 6பக்க அறைகள் ஒன்றன் மேலொன்றாக மூன்று அடுக்குமாடிகளாகக் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாடியிலும் முப்பது அறைகள் அமைந்திருந்தன. பக்க அறைகளின் ஆதாரமாகப் பயன்படும் விளிம்புகள் ஆலயச் சுவரைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தபடியால் ஆதாரங்கள் ஆலயச் சுவர்களுக்குள்ளே இணைக்கப்படவில்லை. 7ஆலயத்தைச் சுற்றியிருந்த பக்க அறைகள் ஒவ்வொரு தொடர்த்தளத்திலும் அகலத்தில் கூடியனவாய் இருந்தன. அறைகள் மேலே போகப்போக அகலத்தில் கூடியதாயிருக்கத்தக்கதாக, ஆலயத்தைச் சுற்றியிருந்த அமைப்பு உயர்ந்து கொண்டுபோகும் நிலையில் கட்டியெழுப்பட்டிருந்தது. கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்குச் செல்ல மத்திய மாடிக்கூடாக படிவரிசையொன்று அமைக்கப்பட்டிருந்தது.
8ஆலயத்தைச் சுற்றிலும் உயரமான மேடை அமைக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன். பக்க அறைகளின் அத்திவாரம் ஆறு முழ நீளமாய் இருந்தது. அதாவது ஒரு அளவுகோல் நீளம். 9பக்க அறைகளின் வெளிச்சுவர் ஐந்து முழ அகலமாயிருந்தது. ஆலயத்தின் பக்க அறைகளுக்கும், 10மதகுருக்களின் அறைகளுக்குமிடையில் இருந்த இடைவெளி இருபது முழ அகலமுடையதாய் ஆலயத்தைச் சுற்றிலுமிருந்தது. 11பக்க அறைகளின் கதவுகள் வெளி நோக்கித் திறந்திருந்தன. அதில் ஒன்று வடக்கு நோக்கியும், மற்றையது தெற்கு நோக்கியும் அமைந்திருந்தன. திறந்த வெளியின் அடித்தளம் சுற்றிலும் ஐந்து முழ அகலமாயிருந்தது.
12மேற்குப்புறத்தில் ஆலய முற்றத்தை நோக்கியிருந்த கட்டடம் எழுபது முழ அகலமாயிருந்தது. கட்டடச் சுவர் சுற்றிலும் ஐந்து முழ அகலமாயிருந்தது. அதன் நீளம் தொண்ணூறு முழங்களாயிருந்தது.
13பின்பு அவன் ஆலயத்தை அளந்தான். அது நூறு முழ நீளமுடையதாய் இருந்தது. ஆலய முற்றமும் சுவர்களுடன் சேர்ந்த கட்டடமும் நூறு முழ நீளமுடையதாய் இருந்தது. 14ஆலய முற்பகுதி உட்பட கிழக்கேயிருந்த ஆலய முற்றத்தின் அகலம் நூறு முழங்களாயிருந்தது.
15பின்பு அவன் ஆலயத்தின் பின்புறமாக உள்ள முற்றத்தை நோக்கியிருந்த கட்டடத்தின் நீளத்தையும், அதனுடன் இருந்த மாடங்களையும் சேர்த்து அளந்தான். அவை நூறு முழங்களாய் இருந்தன.
ஆலயத்தின் உட்புறமும், அதன் உள் அறைகளும் அதன் வெளி மண்டபமும் 16சுற்றிலும் மூடப்படிருந்தன. இவை மூன்றுக்கும் ஒடுங்கிய சட்டங்களுடைய யன்னல்கள் இருந்தன. வாயிற்படிக்கு எதிரே யன்னல் வரை சுற்றிலும் மரப் பலகைகளினால் மூடப்பட்டிருந்தது. 17கதவுக்கு மேலேயும், பரிசுத்த இடத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள இடங்களும் அவற்றைச் சுற்றியுள்ள சுவர்கள் அனைத்தும் அளவிடப்பட்டிருந்தன. 18எல்லாச் சுவர்களிலும் கேருபீன்களும், பேரீச்சை மர அலங்காரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. பேரீச்சை மரமும் கேருபீனும் மாறிமாறி செதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கேருபீனும் இரண்டு முகங்களைக் கொண்டிருந்தன. 19ஒரு புறத்தில் பேரீச்சை மரத்தை நோக்கிய ஒரு மனித முகமும், மறுபுறத்தில் பேரீச்சை மரத்தை நோக்கிய ஒரு சிங்க முகமும் இருந்தன. இவ்வாறு ஆலயம் முழுவதையும் சுற்றிச் செதுக்கப்பட்டிருந்தது. 20தரையிலிருந்து வாயிலின் மேற்புறம் வரையும் கேருபீன்களும் பேரீச்சை மரங்களும் சுவரில் செதுக்கப்பட்டிருந்தன.
21பரிசுத்த இடம் நீண்ட சதுரமான கதவு நிலைகளைக் கொண்டிருந்தது. மகா பரிசுத்த இடத்துக்கு முன்புறமாக இருந்ததும் அதை ஒத்திருந்தது. 22அங்கே மூன்று முழ உயரமும் இரண்டு முழம் நீள அகலம் கொண்டதுமான மரத்தினாலான பலிபீடம் ஒன்று இருந்தது. அதன் மூலைகளும், அதன் அடித்தளமும், அதன் பக்கங்களும் மரத்தினாலானவை. அந்த மனிதன் என்னிடம், “இது கர்த்தருக்கு முன்பாக இருக்கும் மேசை” என்றான். 23பரிசுத்த இடம், மகா பரிசுத்த இடம் ஆகிய இரண்டுமே இரட்டைக் கதவுகளைக் கொண்டிருந்தன. 24ஒவ்வொரு வாசலுக்கும் இரு கதவுகளாக, மடிக்கக்கூடிய இரு கதவுகள் இருந்தன. 25பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் மதில்களைப் போன்றே கேருபீன்களும் பேரீச்சை மர அலங்காரங்களும் செதுக்கப்பட்டிருந்தன, மண்டபத்தின் முன் பக்கத்தில் மரத்தினாலான ஒரு மறைப்பு இருந்தது. 26மண்டபத்தின் பக்கச் சுவர்களில் இரு புறமும் பேரீச்சை மர அலங்காரங்கள் செதுக்கப்பட்ட ஒடுங்கிய யன்னல்களும் மறைப்பும் இருந்தன.

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in