YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 40

40
புதிய ஆலயப் பகுதி
1நாங்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு இருபத்தைந்தாம் வருடத்தின் ஆரம்பத்தில், முதலாம் மாதம் பத்தாம் நாள், எருசலேம் பட்டணம் வீழ்ச்சியடைந்த பதினான்காம் வருடமாயிருந்தது. அந்நாளில் கர்த்தருடைய கரம் என்மீது வந்து, அவர் என்னை அங்கு கொண்டுபோனார். 2இறைவன் என்னைத் தரிசனங்களில் இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டுபோய், மிக உயர்ந்த மலையொன்றின்மீது நிற்கச் செய்தார். அதன் தென்புறம் ஒரு பட்டணத்தைப் போன்ற கட்டமைப்புடன் காணப்பட்டது. 3அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டு சென்றபோது, தனது கையில் ஒரு மென்பட்டுக் கயிற்றையும் ஒரு அளவுகோலையும் பிடித்தபடி, நுழைவாயிலில் நின்ற வெண்கலம் போன்ற தோற்றமுள்ள ஒரு மனிதனை நான் கண்டேன். அவன் தன் கையில் ஒரு மென்பட்டுக் கயிற்றையும் ஒரு அளவுகோலையும் பிடித்தபடி நுழைவாயிலில் நின்றான். 4அந்த மனிதன் என்னிடம், “மனுமகனே, நீ உன் கண்களால் பார்த்து, உன் காதுகளால் கேட்டு, நான் உனக்குக் காண்பிக்கப்போகும் ஒவ்வொன்றையும் கவனித்துக்கொள். அதற்காகவே நீ இங்கு கொண்டுவரப்பட்டாய். நீ காணும் ஒவ்வொன்றையும் இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றான்.
கிழக்கு வாயில்
5ஆலயப் பகுதியை முற்றிலும் சூழ்ந்திருந்த ஒரு சுவரை நான் கண்டேன். அந்த மனிதனின் கையிலிருந்த அளவுகோலின் நீளம், ஆறு முழமாய்#40:5 – ஒரு முழம் என்பது 18 அங்குலம் அல்லது 45 சென்ரிமீற்றர்; விரற்கடையளவு என்பது 3 அங்குலம் அல்லது 7.5 சென்ரிமீற்றர் இருந்தது. அதன் ஒரு முழ அளவோ ஒரு முழத்தைவிட நான்கு விரற்கடையளவு அதிகமாயிருந்தது. அவன் சுவரை அளந்தான். அது ஒரு அளவுகோல் அகலமும், ஒரு அளவுகோல் உயரமுமாயிருந்தது.
6பின்பு அவன் கிழக்கு நோக்கியுள்ள நுழைவாயிலுக்குப் போய், அதன் படிக்கட்டுகளில் ஏறி வாயிற்படிக்கல்லை அளந்தான். அதன் செங்குத்து உயரம் ஒரு கோல் அளவாய் இருந்தது. 7காவலர்களின் அறைகள் ஒரு அளவுகோல் நீளமும் ஒரு அளவுகோல் அகலமுமாயிருந்தன. அறைகளுக்கு இடையேயிருந்த இடைவெளி ஐந்து முழமாயிருந்தது#40:7 ஐந்து முழமாயிருந்தது – சுமார் 8 3/4 அடி அல்லது 2.7 மீற்றர் (48ம் வசனத்திலும் உள்ளது). நுழைவு மண்டபத்தை அடுத்திருந்த வாயிற்படிக்கல்லின் உள்ளளவு ஒரு அளவுகோலாய் இருந்தது.
8பின்பு அவன் நுழைவாயிலின் நுழைவு மண்டபத்தை உள்ளே அளந்தான். அது ஒரு முழமாய் இருந்தது. 9பின்பு அவன் நுழைவாயிலின் நுழைவு மண்டபத்தை அளந்தான், அது எட்டு முழமாயும்#40:9 எட்டு முழமாயும் – சுமார் 14 அடி அல்லது 4.2 மீற்றர், அதன் நிலைக்கால்கள் இரண்டு முழ#40:9 இரண்டு முழ – சுமார் 3 1/2 அடி அல்லது 1 மீற்றர் அகலமாயும் இருந்தன. நுழைவாயிலின் நுழைவு மண்டபம் உட்புறத்தில் இருந்தது.
10கிழக்கு வாயிலின் இருபுறத்திலும் மும்மூன்று காவலறைகள் இருந்தன. அவை மூன்றும் ஒரே அளவுகளைக் கொண்டிருந்தன. அவற்றின் நிலைக்கால்கள் இரண்டும் ஒரே அளவுகளைக் கொண்டிருந்தன. 11பின்பு அவன் நுழைவாயிலின் அகலத்தை பத்து முழங்களாகவும், நீளத்தை பதின்மூன்று முழங்களாகவும் அளந்தான்#40:11 சுமார் 18 அடி அகலம் 23 அடி நீளம் அல்லது 5.3 மீற்றர் நீளம், 6.9 மீற்றர் அகலம். 12காவலறைகளுக்கு முன்பாக ஒரு முழ உயரமான சுவர் இருந்தது. காவலறைகள் ஆறு முழ சதுர வடிவில் இருந்தன. 13பின்பு அவன் நுழைவாயிலை ஒரு காவலறையின் உச்சி தொடக்கம் எதிரேயிருந்த காவலறையின் உச்சிவரை அளந்தான். ஒரு சுவரிலிருந்து மறு சுவர்வரை அதன் அளவு இருபத்தைந்து முழங்கள்#40:13 இருபத்தைந்து முழங்கள் – சுமார் 44 அடி அல்லது 13 மீற்றர். 14நுழைவு மண்டபத்தை அவன் அறுபது முழங்களாக#40:14 அறுபது முழங்களாக – சுமார் 105 அடி அல்லது 32 மீற்றர் அளந்தான். நுழைவு மண்டபத்தின் நுழைவாயிலைச் சுற்றி முற்றம் இருந்தது. 15நுழைவாயிலிலிருந்து, நுழைவு மண்டபத்தின் உட்புற வாசல் மட்டும் உள்ள நீளம் ஐம்பது முழங்களாயிருந்தது#40:15 ஐம்பது முழங்களாயிருந்தது – சுமார் 88 அடி அல்லது 27 மீற்றர். 16நுழைவாயிலுக்கு உட்புறமாயிருந்த காவலறைகளுக்கும் தொடுத்து நின்ற சுவர்களுக்கும் மேலாக, சுற்றிலும் இடைவெளிகளைக்கொண்ட ஒடுக்கமான கைப்பிடிச்சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. நுழைவு மண்டபத்திலும் அவ்வாறே இருந்தன. சுற்றிலுமிருந்த இடைவெளிகள் உட்புறத்தை நோக்கியிருந்தன. தொடுத்து நின்ற நிலைக்கால்களில் பேரீச்சை மர அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
வெளிமுற்றம்
17பின்பு அவன் என்னை ஆலயத்தின் வெளிமுற்றத்துக்குக் கொண்டுவந்தான். அங்கு முற்றத்தைச் சுற்றி சில அறைகளையும், நடைபாதையையும் நான் கண்டேன். நடைபாதைக்கு எதிரே முப்பது அறைகள் இருந்தன. 18அந்த நடைபாதை நுழைவாயிலின் ஓரமாக நீண்டு சென்றது. அதன் நீளம் நுழைவாயிலுக்கு ஒத்திருந்தது. அது கீழ் நடைபாதையாயிருந்தது. 19பின்பு அவன் கீழ் நுழைவாயிலின் உட்புறத்திலிருந்து உள்முற்றத்தின் வெளிப்புறம் வரையுள்ள தூரத்தை அளந்தான். அது கிழக்குப் புறத்திலும் வடக்குப் புறத்திலும் நூறு முழங்களாய்#40:19 நூறு முழங்களாய் – சுமார் 175 அடி அல்லது 53 மீற்றர் இருந்தது.
வடக்கு வாயில்
20பின்பு அவன் வடக்கு நோக்கியிருந்த வெளிமுற்றத்துக்குச் செல்லும் வாயிலின் நீள அகலங்களை அளந்தான். 21அதன் இரு பக்கங்களிலும் இருந்த அதன் மூன்று காவல் அறைகளும், அதன் நிலைக்கால்களும், அதன் நுழைவு மண்டபமும் முதலாவது நுழைவு வாயிலின் அளவுகளின்படியே இருந்தன. அது ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாயிருந்தது. 22அதன் யன்னலும், நுழைவு மண்டபமும், பேரீச்சை மர அலங்காரங்களும் கிழக்கு நோக்கிய வாயிலின் அதே அளவுகளைக் கொண்டிருந்தன. அதில் ஏறுவதற்கு ஏழு படிகள் இருந்தன. நுழைவு மண்டபம் அதற்கு எதிராக இருந்தது. 23கிழக்கு வாயிலைப் போன்றே வடக்கு வாயிலுக்கு எதிரே உள் உள்முற்றம் இருந்தது. அது ஒரு வாயிலில் இருந்து மறு வாயில் வரை நூறு முழமாயிருந்தது.
தெற்கு வாயில்
24பின்பு அவன் என்னைத் தென்திசைக்கு அழைத்துச் சென்றான். அங்கே தென்திசையில் ஒரு வாயில் இருந்தது. அவன் அதன் நிலைக்கால்களையும் நுழைவு மண்டபத்தையும் அளந்தான். அதன் அளவுகள் ஏனையவற்றின் அளவுகளைப் போன்றே இருந்தன. 25நுழைவாயிலையும் நுழைவு மண்டபத்தையும் சுற்றி, ஏனையவற்றைப் போன்றே ஐம்பது முழ நீளமுள்ள யன்னல்கள் இருந்தன. அவற்றின் அகலம் இருபத்தைந்து முழம். 26அதில் எறிச்செல்ல ஏழு படிகள் இருந்தன. அதன் நுழைவு மண்டபம் உள்ளே இருந்தது. அதன் இரு நிலைக்கால்களிலும் பேரீச்சை மர அலங்காரங்கள் செதுக்கப்பட்டிந்தன. 27உள்முற்றமும் தெற்குத் திசையில் ஒரு வாயிலைக் கொண்டிருந்தது. அவன் ஒரு வாயிலிலிருந்து இன்னொரு வாயில் வரை தெற்கு நோக்கி அளந்தான். அது நூறு முழமாயிருந்தது.
உள்முற்றத்து வாயில்கள்
28பின்பு அவன் என்னைத் தெற்கு வாயில் வழியாக உள்முற்றத்துக்குக் கொண்டுவந்து, தெற்கு வாயிலை அளந்தான். அதுவும் ஏனையவற்றைப் போல அதே அளவுகளைக் கொண்டிருந்தது. 29அதன் காவலறைகளும், நிலைக்கால்களும், நுழைவு மண்டபமும் ஏனையவற்றைப் போல் அதே அளவுகளைக் கொண்டிருந்தன. நுழைவாயிலும் அதன் நுழைவு மண்டபமும், சுற்றிலும் யன்னல்களைக் கொண்டிருந்தன. அதன் அளவு ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாய் இருந்தது. 30சூழவிருந்த நுழைவு மண்டபங்களின் அளவு இருபத்தைந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாயிருந்தன. 31அதன் நுழைவு மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. அதன் நிலைக்கால்களைப் பேரீச்சை மர அலங்காரங்கள் அலங்கரித்தன. அதற்கு எட்டு படிகள் இருந்தன.
32பின்பு அவன் என்னைக் கிழக்குப் பக்கத்திலுள்ள உள்முற்றத்துக்குக் கொண்டுவந்து, நுழைவாயிலை அளந்தான். அது ஏனையவற்றைப் போன்ற அளவுகளைக் கொண்டிருந்தது. 33அதன் காவலறைகளும், அதன் நிலைக்கால்களும், அதன் நுழைவு மண்டபமும் ஏனையவற்றைப் போன்ற அளவுகளைக் கொண்டிருந்தன. நுழைவாயிலும் அதன் நுழைவு மண்டபமும் சுற்றிலும் யன்னல்களைக் கொண்டிருந்தன. நுழைவாயிலிலிருந்து போகும் வழி ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாய் இருந்தது. 34அதன் நுழைவு மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. இரு புறமும் இருந்த நிலைக்கால்களை பேரீச்சை மர வேலைகள் அலங்கரித்தன. அதற்குச் செல்வதற்கு எட்டு படிகள் இருந்தன.
35பின்பு அவன் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துவந்து அதை அளந்தான். அதுவும் ஏனையவற்றைப் போன்ற அளவுகளைக் கொண்டிருந்தது. 36அதன் காவலறைகளும், அதன் நிலைக்கால்களும், நுழைவு மண்டபமும் அதே அளவுகளைக் கொண்டிருந்தன. அதைச் சுற்றிலும் யன்னல்கள் இருந்தன. அதுவும் ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாயிருந்தது. 37அதன் நுழைவு மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. இரு புறமும் இருந்த நிலைக்கால்களை பேரீச்சை மர வேலைகள் அலங்கரித்தன. அதற்குச் செல்வதற்கு எட்டு படிகள் இருந்தன.
பலிகளுக்கான அறைகள்
38ஒரு மண்டபம் இருந்தது, அதன் கதவு நுழைவாயிலுக்கருகில் இருந்த நிலைக்கால்களில் இருந்தது. அங்கே தகனபலிகள் கழுவப்பட்டன#40:38 தகனபலிக்கான மிருகங்கள் கழுவப்படும் இடம்.. 39நுழைவாயிலுக்கருகில் இருந்த நுழைவு மண்டபத்தில் இரண்டு மேசைகள் இருந்தன. அவற்றில் தகனபலிகள், பாவநிவாரணபலிகள், குற்றநிவாரணபலிகளுக்கான மிருகங்கள் ஆகியன கொல்லப்பட்டன. 40நுழைவு மண்டபத்தின் வெளிப்புறத்தில், வடக்கு வாயிலில் இரண்டு மேசைகள் இருந்தன. நுழைவு மண்டப வாயிலின் மற்றைய பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன. 41பலியிடுவதற்காக, வாயிலின் ஒரு புறத்தில் நான்கு மேசைகளும், மறுபுறத்தில் நான்கு மேசைகளுமாக எட்டு மேசைகள் இருந்தன. அவற்றில் பலிக்கான மிருகங்கள் வெட்டப்பட்டன. 42மேலும் தகனபலிக்காக கற்களில் செதுக்கப்பட்ட நான்கு மேசைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவை ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாய்#40:42 சுமார் 2 2/3 அடி நீள அகலம், 21 அங்குல உயரம் அல்லது 80 சென்ரிமீற்றர் நீள அகலம், 80 சென்ரிமீற்றர் உயரம் இருந்தன. அவற்றின்மேல் தகனபலிகளையும், வேறு பலிகளையும் கொல்வதற்கான உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. 43அதைச் சுற்றிலும் கொக்கிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் நான்கு விரற்கடை#40:43 நான்கு விரற்கடை – சுமார் 3 1/2 அங்குலம் அல்லது 9 சென்ரிமீற்றர் அளவுள்ளதாயிருந்தன. பலியிடப்படும் இறைச்சி அந்த மேசைகளின் மேல் வைக்கப்படும்.
மதகுருக்களுக்கான அறைகள்
44உள் நுழைவாயிலுக்கு வெளியே, உள்முற்றத்துக்குள் இரண்டு அறைகள் இருந்தன. வடக்கு வாயிலின் பக்கம் இருந்த அறை தெற்கு நோக்கியும் மற்றைய அறை தெற்கு வாயிலின் பக்கத்தில் வடக்கு நோக்கியும் இருந்தது. 45அவன் என்னிடம், “தெற்கு நோக்கியிருக்கும் அறை ஆலயத்துக்குப் பொறுப்பாயிருக்கும் மதகுருக்களுக்கானது; 46வடக்கு நோக்கியிருக்கும் அறை பலிபீடத்துக்குப் பொறுப்பாக இருக்கும் மதகுருக்களுக்கானது. அவர்கள் சாதோக்கின் மகன்மார் ஆவர். அவர்கள் மட்டுமே கர்த்தருக்கு முன்பாக அவரருகில் வந்து அவருக்குப் பணி செய்யக்கூடிய லேவியர்கள்” என்றான்.
47பின்பு அவன் முற்றத்தை அளந்தான். அது நூறு முழ நீளமும், நூறு முழ அகலமும் கொண்ட சதுரமாய் இருந்தது. பலிபீடம் ஆலயத்தின் முன் இருந்தது.
ஆலயம்
48அவன் என்னை ஆலயத்தின் நுழைவு மண்டபத்துக்கு கொண்டுவந்து, அதன் நிலைக்கால்களை அளந்தான். அவை ஒவ்வொரு பக்கமும் ஐந்து முழங்களாக இருந்தன. வாயிலின் அகலம் பதினான்கு முழமும்#40:48 பதினான்கு முழமும் – சுமார் 25 அடி அல்லது 7.4 மீற்றர் பக்கச் சுவர்கள் இரு புறமும் மூன்று முழ#40:48 மூன்று முழ – சுமார் 5 1/4 அடி அல்லது 1.6 மீற்றர் அகலமும் கொண்டனவாயிருந்தன. 49நுழைவு மண்டபம் இருபது முழ நீளமும் அகலம் பின்பக்கம் வரை பன்னிரண்டு முழங்களுமாயிருந்தன#40:49 பன்னிரண்டு முழங்களுமாயிருந்தன – சுமார் 35 அடி அல்லது 11 மீற்றர். அதில் ஏறுவதற்குப் பத்துப் படிகளும், நிலைக்கால்களின் இரு பக்கங்களில் தூண்களும் இருந்தன.

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in