யாத்திராகமம் 18
18
எத்திரோ மோசேயை சந்தித்தல்
1இறைவன் மோசேக்கும் தமது மக்களான இஸ்ரயேலருக்கும் செய்தவற்றை, மீதியானின் மதகுருவான மோசேயின் மாமன் எத்திரோ கேள்விப்பட்டான்; அத்துடன் எகிப்திலிருந்து கர்த்தர் அவர்களை எவ்வாறு வெளியே கொண்டுவந்தார் என்பதையும் கேள்விப்பட்டான்.
2மோசே தனது மனைவி சிப்போராளையும் தனது மகன்மாரையும் தன் மாமன் எத்திரோவிடம் அனுப்பிவைத்திருந்தார். 3எத்திரோ அவளையும் அவளது இரு மகன்மாரையும் ஏற்றுக்கொண்டான். மோசே, “நான் அந்நிய நாட்டில் நாடற்றவனாயிருந்தேன்” என்று சொல்லி ஒரு மகனுக்கு கெர்சோம்#18:3 கெர்சோம் – அந்நியன் என்று அர்த்தம். என்று பெயரிட்டிருந்தார். 4“என் முற்பிதாக்களின் இறைவன் எனக்குத் துணை நின்று பார்வோனின் வாளுக்கு என்னைத் தப்புவித்தார்” என்று சொல்லி மற்றவனுக்கு எலியேசர்#18:4 எலியேசர் – என் இறைவன் என் துணை என்று அர்த்தம். என்று பெயரிட்டிருந்தார்.
5மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் மகன்மாரையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு, இறைவனின் மலையருகே#18:5 இறைவனின் மலையருகே – சீனாய் மலை மோசே முகாமிட்டிருந்த பாலைவனத்துக்கு வந்தான். 6“உம்முடைய மாமனாகிய எத்திரோவான நான் உம்முடைய மனைவியுடனும், அவளுடைய இரு மகன்மாருடனும் உம்மிடத்துக்கு வருகின்றேன்” என்று எத்திரோ மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
7எனவே மோசே தன் மாமனைச் சந்திப்பதற்காகப் போய், அவனைக் குனிந்து வணங்கி, முத்தமிட்டான். பின்பு அவர்கள் ஒருவருக்கொருவர் சுகநலம் விசாரித்து, கூடாரத்துக்குள் போனார்கள். 8அப்போது கர்த்தர் இஸ்ரயேலரின் பொருட்டு, பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும் மோசே தன் மாமனுக்குச் சொன்னார். வழியிலே தாங்கள் அனுபவித்த கஷ்டங்களையும், கர்த்தர் எப்படித் தங்களைக் காப்பாற்றினார் என்பதையும் சொன்னார்.
9இஸ்ரயேலரை எகிப்தியரின் கைகளிலிருந்து தப்புவித்து, அவர்களுக்கு கர்த்தர் செய்த நன்மைகள் எல்லாவற்றையும் கேள்விப்பட்ட எத்திரோ மகிழ்ச்சியடைந்தான். 10அப்போது எத்திரோ, “கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. அவர் உன்னையும் இஸ்ரயேலரையும் எகிப்தியரின் கைகளிலிருந்தும், பார்வோனின் கைகளிலிருந்தும் தப்புவித்தார். 11‘அனைத்து தெய்வங்களையும்விட கர்த்தரே பெரியவர்’ என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன். ஏனெனில், இஸ்ரயேலரை ஆணவத்துடன் நடத்தியவர்களுக்கு அவர் இப்படிச் செய்தார்” என்றான். 12அதன் பின்னர் மோசேயின் மாமன் எத்திரோ இறைவனுக்குத் தகனபலியையும் மற்றப் பலிகளையும் கொண்டுவந்தான். அப்போது ஆரோனும் இஸ்ரயேலின் மூப்பர்களும் இறைவனுக்கு முன்பாக மோசேயின் மாமனுடன் அப்பம் சாப்பிடுவதற்காக வந்தார்கள்.
13மறுநாள் மோசே இஸ்ரயேலரின் நீதிபதியாகப் பணிசெய்ய தனது இருக்கையில் அமர்ந்தார். காலை தொடங்கி, மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்றார்கள். 14மோசே இஸ்ரயேலருக்குச் செய்யும் எல்லாவற்றையும் கண்ட மோசேயின் மாமன் அவனிடம், “மக்களுக்கு நீ செய்யும் இந்தக் காரியமென்ன? மக்கள் காலை முதல் மாலைவரை உன்னைச் சுற்றி நிற்கையில், நீ தனியாக நீதிபதியாய் அமர்ந்திருக்கின்றாய்?” என்று கேட்டான்.
15அதற்கு மோசே தன் மாமனிடம், “மக்கள் இறைவனின் திட்டத்தை அறிந்துகொள்ளவே என்னிடம் வருகின்றார்கள். 16அவர்களுக்குள் ஏதாவது தகராறு ஏற்பட்டால், அதை என்னிடத்தில் கொண்டுவருகின்றார்கள். அப்போது நான் இரு பகுதியினருக்கும் இடையில் நியாயம் தீர்த்து, இறைவனின் நியமங்களையும், அவருடைய நீதிச்சட்டங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பேன்” என்று பதிலளித்தார்.
17அதற்கு மோசேயின் மாமன், “நீ செய்வது நல்லதல்ல; 18இப்படிச் செய்வதனால் நீயும், உன்னிடத்தில் வரும் இந்த மக்களும் களைத்துச் சோர்ந்து போவீர்கள். இந்த வேலை உனக்கு மிகவும் பாரமானது. இதைத் தனியே செய்ய உன்னால் முடியாது. 19இப்போது நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்வேன். இறைவன் உன்னோடு இருப்பாராக. நீ இறைவனுக்கு முன்பாக இந்த மக்களின் பிரதிநிதியாக இருந்து, அவர்களுடைய வழக்குகளை இறைவனிடம் கொண்டுபோக வேண்டும். 20நீ அவர்களுக்கு இறைவனின் நியமங்களையும், நீதிச்சட்டங்களையும் கற்பித்து, அவர்கள் வாழவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய கடமைகளையும் அவர்களுக்குக் காட்ட வேண்டும். 21ஆகவே இஸ்ரயேலருள் திறமையுள்ள மனிதரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம் பேருக்கும், நூறு பேருக்கும், ஐம்பது பேருக்கும், பத்துப் பேருக்கும் மேலாக அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். இவர்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றவர்களாகவும், நேர்மையற்ற ஆதாயத்தை வெறுக்கின்ற, நம்பத் தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும். 22இவர்களை அனைத்து நேரங்களிலும் மக்களுக்கு நீதிபதிகளாக பணி செய்யும்படி ஏற்படுத்து. ஆனால் ஒவ்வொரு கடினமான வழக்குகளையும் அவர்கள் உன்னிடத்தில் கொண்டுவர ஏற்படுத்திக்கொள்; இலகுவான வழக்குகளை அவர்கள் தாங்களே நியாயம் தீர்க்கலாம். அவர்கள் உன்னோடு பொறுப்பைப் பகிர்ந்துகொள்வதால் உனது சுமை இலகுவாகும். 23இறைவன் கட்டளையிடுகிறவிதமாக நீ இதைச் செய்தால், வேலைப் பளுவை உன்னால் சமாளிக்க முடியும். இந்த மக்களும் திருப்தியுடன் தங்கள் வீடுகளுக்குப் போவார்கள்” என்றான்.
24மோசே தனது மாமன் சொன்னதைக் கேட்டு, அவன் சொன்ன எல்லாவற்றையும் செய்தார். 25மோசே இஸ்ரயேலரில் திறமையுள்ள மனிதரை மக்களுக்குத் தலைவர்களாக தெரிந்து, அவர்களை ஆயிரம் பேருக்கும், நூறு பேருக்கும், ஐம்பது பேருக்கும், பத்துப் பேருக்கும் அதிகாரிகளாக நியமித்தார். 26அவர்கள் அனைத்து நேரமும் மக்களுக்கு நீதிபதிகளாகப் பணி செய்தார்கள். கடினமான வழக்குகளை மோசேயிடம் கொண்டுவந்தார்கள், ஆனால் இலகுவான வழக்குகளைத் தாங்களே தீர்த்துக் கொண்டார்கள்.
27பின்னர் மோசே தன் மாமன் எத்திரோவை வழியனுப்பினார். எத்திரோ தன் நாட்டுக்குத் திரும்பிப் போனான்.
Currently Selected:
யாத்திராகமம் 18: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.