YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 17

17
மலைப்பாறையிலிருந்து தண்ணீர்
1முழு இஸ்ரயேல் சமூகத்தினரும் சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, கர்த்தரின் கட்டளைப்படி இடத்துக்கிடம் பிரயாணம் செய்தார்கள். பின்பு ரெவிதீம் என்னும் இடத்துக்கு வந்து அங்கே முகாமிட்டார்கள். அங்கே அவர்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. 2அதனால் இஸ்ரயேலர் மோசேயுடன் வாக்குவாதம் செய்து, “குடிப்பதற்கு எங்களுக்குத் தண்ணீர் தாரும்” என்றார்கள்.
அப்போது மோசே அவர்களிடம், “ஏன் என்னுடன் வாக்குவாதம் செய்கின்றீர்கள்? ஏன் கர்த்தரை சோதிக்கிறீர்கள்?” என்றார்.
3ஆனால் மக்கள் மிகவும் தாகமாயிருந்ததனால் மோசேக்கு விரோதமாய் முணுமுணுத்தார்கள். அவர்கள் அவனிடம், “ஏன் எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் கால்நடைகளையும் தாகத்தினால் சாகும்படி, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர்?” என்று கேட்டார்கள்.
4அப்போது மோசே கர்த்தரை நோக்கி கதறி, “நான் இந்த மக்களுக்கு என்ன செய்வேன்? அவர்கள் என்மீது கல்லெறிய ஆயத்தமாயிருக்கிறார்களே” என்றார்.
5அப்போது கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரயேலின் மூப்பர்களில் சிலரை உன்னுடன் கூட்டிக்கொண்டு மக்களுக்கு முன்பாக நட. நீ நைல் நதியை அடித்த கோலை கையில் எடுத்துக்கொண்டு போ. 6நான் ஓரேபிலுள்ள மலைப்பாறையின் அருகே உனக்கு முன்பாக நிற்பேன். நீ மலைப்பாறையை அடி. அப்போது மக்கள் குடிப்பதற்கு அதிலிருந்து தண்ணீர் வெளியே வரும்” என்றார். மோசே அவ்விதமே இஸ்ரயேலின் மூப்பர்களின் கண்களுக்கு முன்பாக செய்தார். 7இஸ்ரயேலர்கள், வாதாடியபடியாலும், அவர்கள், “கர்த்தர் எங்களுடன் இருக்கின்றாரா? இல்லையா?” என்று கேட்டு கர்த்தரை சோதித்தபடியாலும் மோசே அந்த இடத்துக்கு மாசா#17:7 மாசா சோதனை என்று அர்த்தம். என்றும், மேரிபா#17:7 மேரிபா வாதிடுவது அல்லது புகார் செய்வது என்று அர்த்தம். என்றும் பெயரிட்டார்.
அமலேக்கியரின் தோல்வி
8அதன் பின்னர் அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரயேலரைத் தாக்கினார்கள். 9அப்போது மோசே யோசுவாவிடம், “எங்கள் மனிதரில் சிலரைத் தெரிந்துகொண்டு அமலேக்கியரோடு யுத்தம் செய்ய வெளியே போ. நான் நாளை என் கையில் இறைவனின் கோலைப் பிடித்துக்கொண்டு மலையுச்சியில் நிற்பேன்” என்றார்.
10மோசே உத்தரவிட்டபடியே யோசுவா அமலேக்கியருடன் போரிட்டான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலையுச்சிக்குப் போனார்கள். 11மோசே தன் கைகளை உயர்த்திக் கொண்டிருக்கும் வரையும் இஸ்ரயேலர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் மோசே தன் கைகளைத் தாழ்த்துகின்ற போதெல்லாம் அமலேக்கியர் வெற்றி பெற்றார்கள். 12மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது ஆரோனும், ஊரும் ஒரு கல்லை எடுத்து அவருக்குக் கீழே வைத்தார்கள். அவர் அதன்மேல் உட்கார்ந்தார். ஆரோனும், ஊரும் ஒரு பக்கம் ஒருவனும், மறுபக்கம் மற்றவனுமாக அவருடைய கைகளை உயர்த்தித் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். அதனால் சூரியன் மறையும்வரை அவரது கைகள் உறுதியாயிருந்தன. 13எனவே யோசுவா வாளினால் அமலேக்கியப் படையை வெற்றிகொண்டான்.
14அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம், “இன்று நடந்தது நினைவிற்கொள்ளப்படும்படி இதை ஒரு புத்தகச் சுருளில் எழுதி, அதை யோசுவா கேட்கும்படி சொல். ஏனெனில், நான் வானத்தின் கீழ் அமலேக்கியரைப் பற்றிய நினைவு முற்றிலும் இல்லாமற் போகும்படி அவர்களை அழித்து விடுவேன் என்று சொல்” என்றார்.
15மோசே அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி அந்த இடத்துக்கு, கர்த்தர் என் வெற்றிக் கொடி#17:15 வெற்றிக் கொடி அல்லது யேகோவா நிசி எனப் பெயரிட்டார். 16பின்பு மோசே, “கர்த்தருடைய அரியணைக்கு விரோதமாக அமலேக்கின் கரங்கள் உயர்த்தப்பட்டிருந்தபடியால்,#17:16 அமலேக்கியர் கர்த்தருக்கு எதிர்த்து நின்றதால் தலைமுறை தலைமுறை தோறும் கர்த்தர் அமலேக்கியருக்கு எதிராக யுத்தம் செய்வார்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in