யாத்திராகமம் 19
19
சீனாய் மலை
1இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வெளியேறிய பின்னர், மூன்றாம் மாதப்பிறப்பில் சீனாய் பாலைவனத்தை வந்தடைந்தார்கள். 2இஸ்ரயேலர் ரெவிதீமை விட்டுப் புறப்பட்ட பின்னர் சீனாய் பாலைவனத்துக்குள் வந்து, மலைக்கு முன்பாக பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
3அப்போது மோசே இறைவனிடம் மேலே ஏறிப் போனார். மலையிலிருந்து கர்த்தர் அவரை அழைத்துச் சொன்னதாவது: “யாக்கோபின் குடும்பத்தாருக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் நீ சொல்ல வேண்டியது இதுவே: 4‘நான் எகிப்தியருக்கு செய்தவற்றையும், கழுகுகளின் சிறகுகளின்மீது சுமந்தவாறு உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொண்டதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள். 5ஆகையால் இப்போது நீங்கள் என் சொல்லைக் கேட்டு, என் உடன்படிக்கையை கைக்கொண்டால், அனைத்து இனத்தவருக்குள்ளும் நீங்களே எனக்கு உரித்தான சொத்தாக இருப்பீர்கள். பூமி முழுவதும் என்னுடையது. 6நீங்களோ என்னுடைய மதகுருக்களின் இராச்சியமாகவும், பரிசுத்த இனமாகவும் இருப்பீர்கள்.’ இஸ்ரயேலரோடு நீ பேசவேண்டிய வார்த்தைகள் இவைகளே.”
7எனவே மோசே திரும்பிப் போய் இஸ்ரயேலரின் மூப்பர்களை அழைப்பித்து, கர்த்தர் அவர்களுக்குச் சொல்லும்படி தனக்குக் கட்டளையிட்ட அனைத்து வார்த்தைகளையும் அவர்கள் முன்பாக சொன்னார். 8அப்போது அதைக் கேட்ட மக்களெல்லோரும் ஒருமித்து, “கர்த்தர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்று பதிலளித்தார்கள். மோசே கர்த்தரிடத்துக்குத் திரும்பிப் போய் அவர்களுடைய பதிலை அவருக்கு அறிவித்தார்.
9அப்போது கர்த்தர் மோசேயிடம், “நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்டு, அவர்கள் எப்போதும் உன்மேல் நம்பிக்கை வைக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார். மேலும் மக்கள் சொன்னவற்றை மோசே கர்த்தரிடம் சொன்னான்.
10அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களிடம் போய், இன்றும் நாளையும் அவர்களை பரிசுத்தப்படுத்து, அவர்கள் தங்கள் உடைகளைத் தோய்த்து, 11மூன்றாம் நாளில் ஆயத்தமாயிருக்கட்டும். ஏனெனில், அன்றைய தினம் மக்கள் அனைவரது கண்கள் முன்பாகவும் கர்த்தர் சீனாய் மலையின்மேல் இறங்குவார். 12மலையை அணுகாதவாறு அதைச் சுற்றி ஒரு எல்லையைப் போட்டு, அவர்களிடம், ‘நீங்கள் மலைக்கு ஏறிப் போகாமலும், அதன் அடிவாரத்தைத் தொடாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். மலையைத் தொடுகின்றவன் எவனும் கொல்லப்பட வேண்டும். 13ஒருவனும் அவன்மீது கை வைக்காமல், கல்லெறிந்தோ அம்புகளால் எய்தோ அவனைக் கொல்ல வேண்டும். அது மனிதனானாலும், மிருகமானாலும் உயிரோடிருக்க அனுமதிக்கக் கூடாது’ என்று சொல். செம்மறியாட்டுக்கடாவின் கொம்பு வாத்தியத்தால் நீண்ட சத்தம் எழுப்பப்படும்போது மாத்திரமே, அவர்கள் மலையை நெருங்கலாம்” என்றார்.
14மோசே மலையிலிருந்து இறங்கி இஸ்ரயேல் மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான், அவர்கள் தங்கள் உடைகளைத் தோய்த்தார்கள். 15அதன் பின்னர் மோசே மக்களிடம், “மூன்றாம் நாளுக்காக உங்களை ஆயத்தப்படுத்தி, பாலுறவிலிருந்து விலகியிருங்கள்” என்றார்.
16மூன்றாம் நாள் காலையில் இடி முழக்கமும், மின்னலும் உண்டாகி, மலையைக் கார்மேகம் மூடி, பலமாய் எக்காள சத்தம் தொனித்தது. முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள். 17அப்போது இறைவனைச் சந்திப்பதற்காக, மோசே மக்களை முகாமுக்கு வெளியே கொண்டுவந்தான். அவர்கள் மலையடிவாரத்தில் நின்றார்கள். 18கர்த்தர் சீனாய் மலையின்மேல் தீயில் இறங்கியபடியால், மலை முழுவதும் புகையால் மூடப்பட்டிருந்தது. சூளையிலிருந்து புகை எழுந்தது போல் அப்புகை எழுந்தது. மலை#19:18 மலை – எபிரேய மூலபிரதிகளில், மக்கள் என்றுள்ளது. முழுவதும் பலமாய் அதிர்ந்தது. 19எக்காள சத்தம் மேலும் மேலும் பலமாய்த் தொனித்தது. அப்போது மோசே பேசினான், இறைவன் பேசி அவனுக்குப் பதிலளித்தார்.
20கர்த்தர் சீனாய் மலை உச்சியில் இறங்கி, மோசேயை அந்த மலை உச்சிக்கு அழைத்தார். எனவே மோசே மேலே ஏறிப் போனான். 21அப்போது கர்த்தர் மோசேயிடம், “கர்த்தரைப் பார்க்கும்படி எல்லையைத் தாண்டி மக்கள் வந்து, அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடி, நீ கீழே இறங்கிப் போய் அவர்களை எச்சரிக்கை செய். 22கர்த்தருக்கு அருகே வரும் மதகுருக்களும் தங்களை பரிசுத்தப்படுத்த வேண்டும், இல்லையேல் கர்த்தர் அவர்களுக்கு எதிராக எழும்புவார்” என்றார்.
23அப்போது மோசே கர்த்தரிடம், “மக்களால் சீனாய் மலைக்கு ஏறி வர முடியாது. ஏனெனில் மலையைச் சுற்றி எல்லையைப் போட்டு அதைப் பரிசுத்தப்படுத்தி பிரித்து வைக்கவேண்டும் என்று நீர் எங்களை எச்சரித்திருக்கிறீர்” என்றார்.
24அதற்கு கர்த்தர் மோசேயிடம், “இப்போது நீ இறங்கிப் போய் ஆரோனை அழைத்துக்கொண்டு மேலே ஏறி வா. ஆனால் மதகுருக்களும், மக்களும் எல்லையைக் கடந்து கர்த்தரிடம் மேலே வரக் கூடாது. வந்தால் கர்த்தர் அவர்களுக்கு எதிராக எழும்புவார்” என்றார்.
25அவ்வாறே மோசே இறங்கி மக்களிடம் போய் கர்த்தர் கட்டளையிட்டவற்றைச் சொன்னார்.
Currently Selected:
யாத்திராகமம் 19: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.