தானியேல் 5
5
பெல்ஷாத்சாரின் விருந்து
1பல வருடங்களுக்குப் பின்னர் ஒருநாள்#5:1 பல வருடங்களுக்குப் பின்னர் ஒருநாள் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது பெல்ஷாத்சார் அரசன்#5:1 பெல்ஷாத்சார் அரசன் – 4ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட நேபுகாத்நேச்சார் அரசனின் வழித்தோன்றல்களில் ஒருவன் எனக் கருதப்படுகின்றது. தனது உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்கு பெரிய விருந்தொன்றை வழங்கி, அவர்களுடன் திராட்சைரசம் அருந்திக்கொண்டிருந்தான். 2இவ்வாறாக பெல்ஷாத்சார் திராட்சைரசத்தை அருந்திக் கொண்டிருக்கும்போது, தன் தந்தை நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து கொண்டுவந்த, தங்கக்கிண்ணங்களையும் வெள்ளிக்கிண்ணங்களையும் அவனும், அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவிமாரும், அவனுடைய மறுமனைவிமாரும் அக்கிண்ணங்களில் அருந்துவதற்காக அங்கே கொண்டுவரும்படி உத்தரவிட்டான். 3அவ்வாறே இறைவனின் வீடாகிய எருசலேமிலுள்ள ஆலயத்திலிருந்து கொண்டுவந்த தங்கக்கிண்ணங்களைக் கொண்டுவந்தார்கள். அரசனும், அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவிமாரும், மறுமனைவிமாரும் அவற்றில் திராட்சைரசத்தை ஊற்றி அருந்தினார்கள். 4அவர்கள் திராட்சைரசத்தை அருந்தியவாறு தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.
5திடீரென, ஓர் மனிதக் கையின் விரல்கள் தோன்றி, அரண்மனையின் குத்துவிளக்கின் முன்பாக இருந்த சுவரின் மேல்பூச்சு மீது எழுதின. அந்தக் கை எழுதுவதை பார்த்துக்கொண்டிருந்த 6அரசனின் முகம் பயத்தினால் மாற்றமடைந்தது. அவன் மிகவும் திகிலடைந்ததால், முழங்கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. கால்களும் வலுவிழந்து போயின.
7அரசன், தனக்கு முன்பாக மாந்திரீகர்கள், சோதிடர்கள், குறிசொல்வோர் ஆகியோரை அழைத்து வரும்படி குரலெழுப்பினான். அவன் அந்த பாபிலோனின் ஞானிகளிடம், “இதில் எழுதப்பட்டிருப்பதை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்குச் சொல்பவன் விலையுயர்ந்த கருஞ்சிவப்பு பட்டு உடை அணிவிக்கப்பட்டு, கழுத்தில் தங்கச்சங்கிலி அணிவிக்கப்பட்டு, இந்த இராச்சியத்தில் மூன்றாவது பெரிய ஆளுநனாக ஏற்படுத்தப்படுவான்” என்றான்.
8எனவே அரசனுடைய அனைத்து ஞானிகளும் உள்ளே வந்தார்கள். ஆனாலும் சுவரில் எழுதப்பட்டிருந்ததை வாசிக்கவோ, அதன் விளக்கத்தை அரசனுக்குச் சொல்லவோ அவர்களால் முடியவில்லை. 9அப்போது பெல்ஷாத்சார் அரசன் மேலும் அதிகமாகத் திகிலடைந்ததால் அவனுடைய முகம் அதனைவிட மேலும் அதிகமாய் மாற்றமடைந்தது. அவனுடைய உயர்குடி மக்களும் கலக்கமடைந்தனர்.
10அவ்வேளையில் அரசனும் உயர்குடி மக்களும் எழுப்பிய கூச்சலைக் கேட்ட மகா ராணி#5:10 மகா ராணி – அரசனின் தாய் அல்லது பாட்டியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது, விருந்து மண்டபத்துக்குள் விரைந்து வந்தாள். அவள், “அரசே, நீர் நீடூழி வாழ்வீராக! நீர் இதனால் திகிலடைய வேண்டாம். உமது முகம் மாற்றமடையவும் வேண்டாம். 11உமது இராச்சியத்தில் பரிசுத்த தெய்வங்களின் ஆவியை உடையவனான ஒருவன் இருக்கின்றான். அவன் உமது தந்தையின் காலத்தில் தெய்வங்களுக்குரிய நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், ஞானமும் உள்ளவனாய் காணப்பட்டான். அதனால் உமது தந்தையான நேபுகாத்நேச்சார் அரசன் அவனை மந்திரவாதிகளுக்கும், மாந்திரீகர்களுக்கும், சோதிடருக்கும், குறிசொல்பவர்களுக்கும் தலைவனாக நியமித்தார். 12பெல்தெஷாத்சார் என அரசனால் பெயரிடப்பட்ட அந்த நபரான தானியேல் மதிநுட்பமும், அறிவும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலும் உடையவனாய் காணப்பட்டான். அத்துடன் கனவுகளுக்கு விளக்கம் கூறுவதற்கும், விடுகதைகளை அவிழ்ப்பதற்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஆற்றல் உடையவனாயிருந்தான். தானியேலை அழைப்பித்திடுவீராக. அவன் எழுதப்பட்டதன் அர்த்தத்தைச் சொல்வான்” என்றாள்.
13எனவே தானியேல் அரசனின் முன்பாக அழைத்து வரப்பட்டான். அரசன் அவனிடம், “அரசனாகிய எனது தந்தை யூதா மாகாணத்தில் இருந்து சிறைப்பிடித்து வந்தவர்களில் ஒருவனாகிய தானியேல் நீதானா? 14உன்னிடத்தில் தெய்வங்களின் ஆவி இருப்பதாகவும், நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், சிறந்த ஞானமும் உண்டெனவும் கேள்விப்பட்டேன். 15இங்கு எழுதப்பட்டுள்ளதை வாசிக்கவும், அதன் அர்த்தத்தைச் சொல்லவும் ஞானிகளும், சாஸ்திரிகளும் எனக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் அதற்கு விளக்கம்கூற அவர்களால் முடியவில்லை. 16இப்போது உனக்கு விளக்கம் கூறவும், கடினமான பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஆற்றல் உண்டு எனக் கேள்விப்பட்டேன். அந்த எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்கு உன்னால் கூறமுடியுமானால், உனக்கு கருஞ்சிவப்பு பட்டு உடையும் உனது கழுத்துக்கு தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, நீ எனது இராச்சியத்தில் மூன்றாம் நிலை பெரிய ஆளுநனாக நியமிக்கப்படுவாய்” என்றான்.
17அப்போது தானியேல் அரசனுக்குப் பதிலளித்து, “உமது அன்பளிப்புகளை நீர் வைத்துக்கொள்வீராக! உமது வெகுமதிகளை வேறு யாருக்காவது கொடுத்திடுவீராக! ஆயினும் அரசருக்காக எழுதப்பட்டதை வாசித்து, அதன் விளக்கத்தை நான் சொல்வேன்.
18“அரசே, அதிஉன்னதமான இறைவன், உமது தந்தை நேபுகாத்நேச்சாருக்கு ஆளுமையையும், மேன்மையையும், மகிமையையும், மகத்துவத்தையும் வழங்கியிருந்தார். 19அவர் உமது தந்தைக்கு வழங்கியிருந்த அந்த உயர்ந்த நிலையினால் அனைத்து இனத்தவர்களும், நாடுகளில் உள்ளோரும், பல்வேறு மொழி பேசும் மக்களும் அரசனுக்கு முன்பாக பயந்து நடுங்கினார்கள். அரசர் யாரைக் கொலைசெய்ய நினைத்தாரோ அவர்களைக் கொன்றார். தனது விருப்பத்தின்படி சிலரை உயிர்பிழைத்திட விட்டுவைத்தார். தான் பதவி உயர்த்த விரும்பியவர்களை பதவி உயர்த்தினார். தான் தாழ்த்த விரும்பியவர்களைத் தாழ்த்தினார். 20ஆனால் அவரது இருதயம் கர்வங்கொண்டு அகந்தையினால் கடினப்பட்டபோது, அவர் தனது அரச பதவியிலிருந்து#5:20 அரச பதவியிலிருந்து – மூலமொழியில் அரியணையிலிருந்து என்றுள்ளது நீக்கப்பட்டார். அவரது மகிமையும் களைந்து எடுக்கப்பட்டது. 21அவர் மக்களிடமிருந்து துரத்தப்பட்டார். மிருகத்தின் புத்தி அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் காட்டுக் கழுதைகளுடன் வாழ்ந்து, மாடுகளைப் போல் புல்லைத் தின்றார். அதிஉன்னதமான இறைவன் மனிதர்களின் இராச்சியங்களுக்கு மேலாக ஆளுகை உடையவர் என்றும், தாம் விரும்பிய எவரையும் அவற்றுக்கு மேலாக அமர்த்துவார் என்றும் உமது தந்தை ஏற்றுக்கொள்ளும்வரை அவருடைய உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்து தோய்ந்தது.
22“ஆனால் அவருடைய மகனாகிய#5:22 மகனாகிய அல்லது வழித்தோன்றல் பெல்ஷாத்சாராகிய நீரோ இவற்றையெல்லாம் அறிந்திருந்தும் உம்மைத் தாழ்த்தவில்லை. 23மாறாக, பரலோகத்தின் ஆண்டவருக்கு எதிராக நீர் உம்மை உயர்த்தினீர். அவருடைய வீட்டுக்குரிய கிண்ணங்களைக் கொண்டுவரச் செய்து, நீரும், உமது உயர்குடி மக்களும், உமது மனைவிமாரும், மறுமனைவிமாரும் அதில் திராட்சைரசம் அருந்தினீர்கள். பார்க்கவோ, கேட்கவோ, விளங்கிக்கொள்ளவோ முடியாதவையான தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் தெய்வங்களை நீர் புகழ்ந்தீர். ஆனால் உமது உயிர்மூச்சையும்#5:23 உயிர்மூச்சையும் அல்லது உயிரையும் பாதைகள் அனைத்தையும் தமது கையில் வைத்திருக்கும் இறைவனை நீர் மேன்மைப்படுத்தவில்லை. 24எனவே இறைவன் அந்த கையை அனுப்பினார். அது அந்த எழுத்துக்களை எழுதியது.
25“எழுதப்பட்ட எழுத்துக்கள்:
‘மெனெ, மெனெ, தெக்கேல் உபார்சின்.’
26“இந்த எழுத்துக்களின் அர்த்தமாவது:
“மெனெ: இறைவன் உனது ஆட்சிக் காலத்தை எண்ணிக் கணக்கிட்டு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார் என்பதாகும்.
27“தெக்கேல்: நீ தராசுகளில் நிறுக்கப்பட்டு குறைவுடையவனாய் காணப்பட்டிருக்கிறாய் என்பதாகும்.
28“உபார்சின்: உனது இராச்சியம் பிரிக்கப்பட்டு மேதியருக்கும், பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாகும்” என்றான்.
29அப்போது பெல்ஷாத்சார், தானியேலுக்கு கருஞ்சிவப்பு பட்டு உடையையும் அவனுடைய கழுத்தில் தங்கச்சங்கிலியையும் அணிவிக்கவும், இராச்சியத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக் குறித்துப் பறைசாற்றவும் கட்டளையிட்டதும் அவ்வாறே செய்யப்பட்டது.
30அந்த இரவே பாபிலோன் அரசன் பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். 31மேதியனாகிய தரியு தனது அறுபத்திரண்டாம் வயதில் பாபிலோன் இராச்சியத்தைப் பொறுப்பேற்றான்.
Currently Selected:
தானியேல் 5: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.