தானியேல் 6
6
சிங்கக்குகையில் தானியேல்
1பின்னர் ஒருநாள் தரியு அரசன், தனது இராச்சியம் எங்கும் நூற்று இருபது சிற்றரசர்களை நியமித்து, மாகாணங்களின் ஆட்சிப் பொறுப்பை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்க விரும்பினான். 2அத்தோடு அவர்களுக்கு மேலாக மூன்று நிர்வாகிகளையும் நியமித்தான். அவர்களில் தானியேலும் ஒருவன். அரசனுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்வதற்காக, இந்தச் சிற்றரசர்கள் அந்த நிர்வாகிகளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியதாயிருந்தது. 3தானியேல் தனிச்சிறப்பு வாய்ந்தவனாக#6:3 தனிச்சிறப்பு வாய்ந்தவனாக – தனிச்சிறப்பான ஆவியுடையவனாக இருந்ததால் என்றும் மொழிபெயர்க்கலாம் இருந்ததால் அவன் மற்றைய நிர்வாகிகளையும், சிற்றரசர்களையும்விட சிறந்து விளங்கினான். இதனால் அரசன் தனது இராச்சியம் முழுவதன்மீதும் அவனைப் பொறுப்பாய் நியமிக்கத் திட்டமிட்டான். 4இதையறிந்த மற்றைய நிர்வாகிகளும், சிற்றரசர்களும் தானியேலின் அரசநிர்வாக விவகாரங்களில் அவனது நடத்தைக்கு எதிராகக் குற்றம் சுமத்துவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் அவ்வாறு கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் நம்பிக்கைக்குரியவனும், ஊழலோ கடமையில் அலட்சியமோ இல்லாதவனுமாய் இருந்தபடியால், அவனுக்கு எதிராக எந்தவித குற்றம்குறையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 5இறுதியாக அந்த ஆட்கள், “தானியேல்மீது, அவனது இறைவனது சட்டம் தொடர்பான விடயங்களில் மட்டுமே குற்றம் சுமத்தலாம், அவனை வேறொன்றிலும் குற்றமிழைத்தவனாக்குவதற்கு வாய்ப்பில்லை” என அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
6எனவே மற்றைய நிர்வாகிகளும், சிற்றரசர்களும் ஒரு குழுவாக அரசனிடம் சென்று, “தரியு அரசே, நீர் நீடூழி வாழ்வீராக! 7அரச நிர்வாகிகள், நிர்வாக அதிகாரிகள், சிற்றரசர்கள், ஆலோசகர்கள், ஆளுநர்கள் ஆகிய நாங்கள் எல்லோரும் ஒன்றைக் குறித்து ஏகமனதாயிருக்கின்றோம். அதாவது, வரப்போகும் முப்பது நாட்களில் அரசராகிய உம்மைத் தவிர வேறு தெய்வங்களிடமோ, மனிதரிடமோ ஒருவனும் மன்றாடக் கூடாது; அவ்வாறு யாராவது செய்தால் அவன் சிங்கத்தின் குகையில் இடப்பட வேண்டும். இவ்வாறு அரசர் ஒரு ஆணையை பிறப்பித்து, தடையுத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். 8எனவே அரசே, ரத்துச் செய்யப்பட முடியாத மேதியர், பெர்சியரின் சட்டத்தின்படி இந்த தடையுத்தரவை மாற்ற முடியாததாய் எழுதி வைப்பீராக!” என்றார்கள். 9அதற்கிணங்க தரியு அரசன் எழுத்துமூல தடையுத்தரவில் கையொப்பமிட்டான்.
10இந்த எழுத்துமூல கட்டளை அரசனால் கையொப்பமிடப்பட்டிருந்ததை தானியேல் அறிந்தபோது, அவன் தனது வீட்டுக்குப் போய் வீட்டின் மேலறையில் எருசலேமின் திசையிலிருந்த திறந்த யன்னல் அருகே போனான். அங்கு அவன் தான் முன்னர் செய்தது போலவே தினந்தோறும் மூன்று வேளை முழந்தாளிட்டு தன் இறைவனுக்கு நன்றி செலுத்தி மன்றாடினான். 11அப்போது அந்த அதிகாரிகள், குழுவாக அங்கு சென்றபோது தானியேல் தனது இறைவனிடம் உதவி கேட்டு மன்றாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். 12எனவே அவர்கள் அரசனிடம் சென்று, அரசகட்டளையைப் பற்றிப்பேசி, “அரசே, முப்பது நாட்களுக்கு அரசனைத் தவிர வேறு தெய்வத்திடமோ, மனிதனிடமோ மன்றாடுபவன் எவனும் சிங்கக்குகையில் இடப்பட வேண்டும் என்று நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா?” என்று கூறினார்கள்.
அரசன் அவர்களிடம், “மேதியர் மற்றும் பெர்சியரின் ரத்துச் செய்யப்பட முடியாத சட்டப்படி நான் பிறப்பித்த கட்டளை நிலையானது” என்றான்.
13அப்போது அவர்கள் அரசனிடம், “யூதேயா மாகாணத்திலிருந்து சிறைப்பிடித்து வரப்பட்டவர்களில் ஒருவனான தானியேல் என்பவன் உம்மிலோ, நீர் எழுதிவைத்த கட்டளையிலோ கவனம் செலுத்தாமல் இருக்கின்றான். அவன் தொடர்ந்து நாளாந்தம் மூன்று வேளை தன்னுடைய இறைவனிடம் மன்றாடி வருகின்றான்” என்றார்கள். 14இதைக் கேட்ட அரசன் மிகவும் மனம் வருந்தினான். அவன் தானியேலைக் காப்பாற்ற உறுதிகொண்டு, மாலைவரை முழுமுயற்சி செய்தான்.
15அப்போது அந்த ஆட்கள் குழுவாக அரசனிடம் சென்று, “அரசே! மேதியர், பெர்சியரின் சட்டத்தின்படி, அரசர் பிறப்பிக்கும் எந்தவொரு கட்டளையும், ஆணையும் மாற்றப்பட முடியாதது என்பதை நினைவில்கொள்வீராக!” என்றார்கள்.
16எனவே அரசன் தன் பணியாட்களிடம் உத்தரவிட்டதும், அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து சிங்கக்குகைக்குள் வீசினார்கள். அப்போது அரசன் தானியேலிடம், “நீ இடைவிடாமல் ஆராதிக்கின்ற உனது இறைவன் உன்னை காப்பாற்றுவாராக!” என்றான்.
17பெருங்கல்லொன்று கொண்டுவரப்பட்டு அக்குகையின் வாயில் மூடப்பட்டது. தானியேலின் நிலைமை மாற்றப்படாதபடி, அரசன் அந்த மூடப்பட்ட வாயிலைத் தனது அடையாள மோதிரத்தாலும், தனது உயர்குடி மக்களின் அடையாள மோதிரங்களாலும் முத்திரையிட்டான். 18பின்னர் அரசன் தன் அரண்மனைக்குத் திரும்பிப் போய் அன்றிரவை சாப்பிடாமலும், எந்தவித ஆடல், பாடல் களிப்புமின்றியும் செலவிட்டான். நித்திரை அவனை விட்டுச் சென்றது.
19மறுநாள் அதிகாலை அரசன் எழுந்து சிங்கக்குகைக்கு விரைவாகப் போனான். 20அரசன் குகையின் அருகில் வந்ததும் துயரமான குரலில் தானியேலை அழைத்து, “தானியேலே! வாழும் இறைவனின் அடியவனே! நீ இடைவிடாமல் ஆராதிக்கின்ற இறைவன் சிங்கங்களிடமிருந்து உன்னைத் தப்புவிக்க வல்லவராய் இருந்தாரோ?” என்று கேட்டான்.
21அதற்கு தானியேல், “அரசே, நீர் நீடூழி வாழ்வீராக! 22எனது இறைவன் தனது தூதனை அனுப்பி சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். அவை எனக்குத் தீங்கொன்றும் செய்யவில்லை. ஏனெனில் நான் இறைவனின் முன்னிலையில் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன். அரசே, நான் உமக்கு முன்னிலையிலும், ஒருபொழுதும் எந்தத் தவறும் செய்யவில்லை” என்றான்.
23அப்போது அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, தானியேலை சிங்கக்குகையிலிருந்து தூக்கி எடுக்கும்படி உத்தரவிட்டான். தானியேல் தனது இறைவனை நம்பி இருந்ததால், சிங்கக்குகையிலிருந்து அவன் தூக்கி எடுக்கப்பட்டபோது, அவனில் எவ்வித காயமும் காணப்படவில்லை.
24பின்பு அரசனின் கட்டளைப்படியே தானியேலைக் குற்றஞ்சாட்டிய ஆட்களும், அவர்களுடைய மனைவியரும், பிள்ளைகளும் கொண்டுவரப்பட்டு சிங்கக்குகைக்குள் வீசப்பட்டார்கள். ஆனால் அவர்கள் குகைக்குள்ளே தரையில் விழும் முன்னரே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, கிழித்து அவர்களது எலும்புகள் அனைத்தையும் நொறுக்கி விட்டன.
25அப்போது தரியு அரசன், அனைத்து மக்களுக்கும், இனங்களுக்கும், நாடெங்கும் பல மொழிகளைப் பேசுபவர்களுக்கும் எழுதியதாவது:
“நீங்கள் மிகச் செழிப்புடன் வாழ்வீர்களாக!
26“எனது ஆட்சிக்குட்பட்டிருக்கும் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களும் தானியேலின் இறைவனுக்குப் பயந்து அவருக்கே மதிப்பளிக்க வேண்டும்.
“ஏனெனில் வாழும் இறைவன் அவரே.
அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்.
அவருடைய இராச்சியம் அழிந்து போகாது.
அவரது ஆளுகை முடிவில்லாதது.
27அவரே விடுவிப்பவர், அவரே காப்பாற்றுபவர்.
அவரே வானத்திலும், பூமியிலும் அடையாளங்களையும்,
அதிசயங்களையும் செய்கின்றார்.
அவரே சிங்கங்களின் வல்லமையிலிருந்து#6:27 சிங்கங்களின் வல்லமையிலிருந்து – மூலமொழியில் சிங்கங்களின் கைகளிலிருந்து
தானியேலை விடுவித்தார்.”
28இவ்வாறு தானியேல், தரியுவின் ஆட்சிக் காலத்திலும், பெர்சியனாகிய கோரேஸின் ஆட்சிக் காலத்திலும் சிறப்பாக வாழ்ந்தான்.
Currently Selected:
தானியேல் 6: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.