YouVersion Logo
Search Icon

தானியேல் 11

11
1மேதியனான தரியு ஆட்சி செய்த முதலாம் வருடத்தில் நான் அவனுக்கு ஆதரவாய் இருக்கவும், அவனுக்கு உதவி செய்யவும் உறுதிகொண்டேன்.
எதிர்கால அரசர்கள்
2“இப்போதும் நான் உனக்கு உண்மையைக் கூறுகின்றேன். அதாவது மேலும் மூன்று அரசர்கள் பெர்சியாவில் தோன்றுவார்கள். பின்பு நான்காவது அரசனும் தோன்றுவான். அவன் முன்பிருந்தவர்களைவிட செல்வந்தனாய் இருப்பான். அரசன் தன் செல்வத்தினால் வலிமை பெற்றவுடன், கிரேக்க இராச்சியத்துக்கு எதிராக எல்லோரையும் தூண்டிவிடுவான். 3பின்பு ஒரு வலிமைமிக்க அரசன் தோன்றுவான். அவன் அதிக அதிகாரத்துடன் ஆட்சிபுரிந்து, தான் விரும்பியவாறு செய்வான். 4ஆனால் அவனது எழுச்சியின் உச்சக்கட்டத்தில் அவனுடைய சாம்ராஜ்யம் உடைக்கப்பட்டு, ஆகாயத்துக் காற்றின் நான்கு திசைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். அவனுடைய இராச்சியம் வேரோடு பிடுங்கப்பட்டு, துண்டாடப்பட்டு, அவனது சந்ததியினர் அல்லாத மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். அதனால் முன்பு அந்த அரசுக்கு இருந்த அதிகார வல்லமை பின்பு அதற்கு இருக்க மாட்டாது.
5“பின்பு தென்திசை அரசன்#11:5 தென்திசை அரசன் – எகிப்து நாட்டின் அரசன் தானி. 5:8 வலிமைமிக்கவனாவான். ஆனால் அவனுடைய தளபதிகளில் ஒருவன் அவனைவிட வலிமைமிக்கவனாகி, தனது சொந்த அரசை மிகுந்த அதிகாரத்துடன் ஆட்சிபுரிவான். 6சில வருடங்களில் தென்திசை அரசனும் வடதிசை அரசனும்#11:6 வடதிசை அரசனும் – சீரியா நாட்டின் அரசன். நட்புறவு கொள்வார்கள். அதன் பின்னர், நட்புறவு உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதற்காக, தென்திசை அரசனின் மகள் வடதிசை அரசனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படுவாள். ஆனால் அவளது செல்வாக்கு#11:6 செல்வாக்கு – எபிரேய மொழியில் கையின் பலம் என்றுள்ளது நிலைத்து நிற்காது. தென்திசை அரசனும் அவனுடைய வல்லமையும் நிலைக்காது. அந்நாட்களில் அவளும், அவளுடன்கூட அவளது அரச பாதுகாவலரும், அவளது தந்தையும், அவளுக்கு உதவி செய்தவனும் துரோகச் செயலால் கையளிக்கப்படுவார்கள்.
7“அவளுடைய குடும்ப வழியிலிருந்து வந்த ஒருவன், தென்திசை அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படியாக தோன்றுவான். அவன் வடதிசை அரசனுடைய படையைத் தாக்கி, அவனுடைய கோட்டைக்குள் புகுவான். அவன் அவர்களுக்கு எதிராய் செயற்பட்டு வெற்றி பெறுவான். 8அத்துடன் அவன் அவர்களின் தெய்வங்களையும், உலோக உருவச்சிலைகளையும், அவர்களுடைய விலையுயர்ந்த வெள்ளிப் பொருட்களையும், தங்கப் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டு எகிப்துக்குப் போவான். சில வருடங்களுக்கு வடதிசை அரசனுடன் யுத்தம் செய்யாமல் விட்டுவிடுவான். 9பின்பு வடதிசை அரசன், தென்திசை அரசனின் பிரதேசத்தினுள் படையெடுத்துச் செல்வான். ஆயினும் அவன் பின்பு தனது நாட்டுக்குத் திரும்புவான். 10வடதிசை அரசனின் மகன்மார் யுத்தத்துக்கு ஆயத்தம்செய்து, பெரியதொரு இராணுவப் படையைத் திரட்டுவார்கள். அந்தப் படை தடுக்க முடியாத பெருவெள்ளம் போல் அடித்துச்சென்று, மிக வேகமாகத் தென்திசை அரசனின் கோட்டை வரை சென்று போரிடும்.
11“அப்போது தென்திசை அரசன் மிகுந்த சீற்றமடைந்து, தனது படையுடன் அணிவகுத்துச் சென்று, வடதிசை அரசனுக்கெதிராகப் போரிடுவான். வடதிசை அரசன் பெரிய படையைத் திரட்டுவான். ஆயினும் அது தென்திசை அரசனின் கையில் ஒப்படைக்கப்பட்டு தோல்வியடையும். 12எதிர்த்து வந்த பெரும்படை சிறைப்பிடித்துக் கொண்டு செல்லப்பட்டதால், தென்திசை அரசன் பெருமையினால் நிறைந்து, ஆயிரக்கணக்கானோரைக் கொலை செய்வான். ஆயினும் அவன் வெற்றியுடையவனாய் நிலைத்திருக்க மாட்டான். 13ஏனெனில் சில வருடங்களுக்குப் பின்பு, வடதிசை அரசன் முன்பு இருந்த படையைவிட பெரியதொரு படையைத் திரும்பவும் திரட்டி, அனைத்து வகையிலும் தயாரான ஒரு பெரிய படையுடன் முன்னேறிச் செல்வான்.
14“அந்தக் காலங்களில் அநேகர் தென்திசை அரசனுக்கெதிராக எதிர்த்து நிற்பார்கள். இந்தத் தரிசனம் நிறைவேறும்படியாக, உன் சொந்த மக்களுக்குள்ளும் வன்முறையாளர்கள் இவ்வாறாக எதிர்த்து நிற்பார்கள். ஆயினும் அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 15பின்பு வடதிசை அரசன் வந்து முற்றுகை அரண்களைக் கட்டி, அரணிடப்பட்ட ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுவான். தென்திசை படைகள் எதிர்க்க வல்லமையற்றதாயிருக்கும். அவர்களில் மிகச் சிறந்தவர்களும் எதிர்த்து நிற்க பலமற்றுப் போவார்கள். 16படையெடுத்து வரும் வடதிசை அரசன் தான் விரும்பியபடி செய்வான். அவனை எதிர்த்து நிற்க ஒருவனாலும் முடியாது. அவன் அழகான நாட்டிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, அதை அழிக்கும்படியான வல்லமையைப் பெறுவான். 17அவன் தனது முழு இராச்சியத்தினதும் வல்லமையோடு வரத் தீர்மானித்து, தென்திசை இராச்சியத்துடன் ஒரு நட்புறவு ஒப்பந்தத்தைச் செய்வான். ஆனால் அவன் தென்திசை அரசை அழிக்கும்படியாக, தனது மகளை அவனுக்குக் கொடுப்பான். ஆனால் அவனுடைய திட்டங்கள் வெற்றியளிக்கவோ, அவனுக்கு உதவவோ மாட்டாது. 18பின்பு அவன் தனது கவனத்தைக் கரையோர நாடுகளின்மீது திருப்பி, அவற்றுள் பலவற்றை கைப்பற்றுவான். ஆனால் ஒரு படைத்தலைவன் அவனுடைய அகங்காரத்துக்கு ஒரு முடிவை உண்டாக்கி, அவனுடைய அகங்காரத்தை அவன்மீதே திருப்பிவிடுவான். 19இவற்றின் பின்னர் அவன் தனது சொந்த நாட்டின் கோட்டைகளின் பக்கமாய்த் திரும்பி வருவான். ஆயினும் தடுமாறி விழுந்து, காணப்படாமல் போவான்.#11:19 போரில் தோல்வி அடைவான்.
20“அவனையடுத்து வருகின்ற அரசன், தனது இராச்சியத்தின் மேன்மையைத் தொடர்ந்தும் காப்பாற்றுவதற்காக, வரி வசூலிக்கும் ஒருவனை அனுப்புவான். ஆயினும் அவன் ஒருசில வருடங்களுக்குள் அழிக்கப்படுவான்; ஆனால் கோபத்தினாலோ, யுத்தத்தினாலோ அல்ல.
21“அவனுக்குப் பின்னர் வெறுப்புக்குரியவனும், அரச மேன்மை கொடுக்கப்படாதவனுமான ஒருவன் அரசாட்சிக்கு வருவான். அந்த இராச்சியத்தின் மக்கள் தாம் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணும்போது, அவன் அதன்மீது படையெடுப்பான். அவன் தந்திரமாக அரசாட்சியைக் கைப்பற்றுவான். 22பின்பு திரண்டுவரும் பல படைகள் அவனால் முற்றாகச் சிதறடிக்கப்பட்டு அழிக்கப்படும். அவனை எதிர்த்த உடன்படிக்கையின் தலைவனும்#11:22 உடன்படிக்கையின் தலைவனும் – இறைவனின் தலைமை மதகுரு அழிக்கப்படுவான். 23அவன் ஒரு உடன்பாட்டுக்கு வந்த பின்னர், தந்திரமாய் நடந்து சில மக்களுடன் அதிகாரத்துக்கு வருவான். 24செல்வந்த மாகாணங்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது, அவன் அவற்றின்மீது படையெடுத்து தன் தந்தையர்களும், முற்பிதாக்களும் முன்னொருபோதும் செய்யாததை செய்வான். கொள்ளைப்பொருட்களையும், சூறைப்பொருட்களையும், செல்வங்களையும் எடுத்துத் தன்னைப் பின்பற்றியவர்களுக்குப் பகிர்ந்தளிப்பான். அவன் அரணிடப்பட்ட கோட்டைகளைக் கவிழ்க்க முயற்சிப்பான். ஆனாலும் இந்த நிலை ஒரு சிறு காலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கும்.
25“அவன் பலத்தாலும், மன உறுதியாலும் தூண்டப்பட்டு தென்திசை அரசனுக்கெதிராக பெரும்படை ஒன்றுடன் போவான். தென்திசை அரசனும் பெரிதானதும், வலிமையுடையதுமான படையுடன் எதிர்த்துப் போரிடுவான். ஆனாலும் அவனுக்கு எதிராய் திட்டமிடப்பட்டிருக்கும் பல சதிகளின் பொருட்டு, அவனால் எதிர்த்து நிற்க முடியாமலிருக்கும். 26அரசனுடைய உணவைப் பகிர்ந்துண்டவர்களே அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்டுப் போகும். அநேகர் போர்முனையில் அழிந்து போவார்கள். 27அப்போது அந்த இரண்டு அரசர்களும், தங்கள் இதயங்களில் தீமை செய்யும் எண்ணமுள்ளவர்களாய் ஒரே மேசையில் இருந்துகொண்டு, ஒருவருக்கொருவர் பொய் பேசுவார்கள். ஆனால் அவர்களோ வெற்றியடைய மாட்டார்கள். ஏனெனில் முடிவு குறிப்பிட்ட காலத்தில் வரும். 28வடதிசை அரசன் பெரும் செல்வங்களுடன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வான். ஆனால் அவனுடைய இருதயம் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய் இருக்கும். அவன் நடவடிக்கை எடுத்த பின்பே தன் நாட்டுக்குத் திரும்பிப் போவான்.
29“நியமிக்கப்பட்ட காலத்தில் அவன் திரும்பவும் தென்திசை அரசின்மீது படையெடுப்பான். ஆனால் இந்தத் தடவை ஏற்படும் முடிவு முன்னைய தடவையைப் போலல்லாது வித்தியாசமானதாய் இருக்கும். 30கித்தீம் நாட்டுக் கப்பல்கள் அவனை எதிர்க்கும். அதனால் அவன் மனந்தளர்ந்து தன் நாட்டுக்குத் திரும்புவான். அப்போது அவன் திரும்பிச் செல்கையில், பரிசுத்த உடன்படிக்கைக்கு எதிராகத் தன் கடுங்கோபத்தை வெளிப்படுத்துவான். அவன் திரும்பி வந்து பரிசுத்த உடன்படிக்கையை கைவிடுகின்றவர்களுக்குத் தயவு காட்டுவான்.
31“அவனுடைய ஆயுதப்படையினர் அரணிடப்பட்ட ஆலயத்தின் பகுதிகளை தூய்மைக்கேடாக்கி, அன்றாட பலியையும் நிறுத்திவிடுவார்கள். பின்பு அவர்கள், ‘பாழாக்கும் அருவருப்பை’ அங்கே வைப்பார்கள். 32அவன் உடன்படிக்கையை மீறியவர்களை முகஸ்துதியினால் சீர்கெடுப்பான். ஆனாலும் தங்கள் இறைவனை அறிந்த மக்கள் திடம்கொண்டு அவனை எதிர்த்து நிற்பார்கள்.
33“மக்களின் மத்தியிலுள்ள ஞானமுள்ளவர்கள், பலருக்கு அறிவுறுத்தல் கொடுப்பார்கள். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் வாளினால் விழுவார்கள், எரிக்கப்படுவார்கள், சிறைப்பிடிக்கப்படுவார்கள், கொள்ளையிடப்படுவார்கள். 34அவர்கள் விழும்போது, அவர்களுக்கு ஒரு சிறு உதவி கிடைக்கும். அவர்களோடு சேர்ந்துகொள்கின்ற பலர் உண்மைத்தனம் இல்லாதவர்களாய் இருப்பார்கள். 35ஞானமுள்ளவர்களில் சிலர் இடறுவார்கள். அதனால் அவர்கள் முடிவு காலம்வரை புடமிடப்பட்டு, தூய்மையாக்கப்பட்டு, கறையற்றவர்களாக்கப்படுவார்கள். ஏனெனில் முடிவு காலம், அதற்கென இறைவனால் நியமிக்கப்பட்ட காலத்தில் வரவிருக்கின்றது.
தன்னை உயர்த்திக்கொள்ளும் அரசன்
36“வடதிசை அரசன் தான் விரும்பியபடியெல்லாம் செய்வான். அவன் அனைத்து தெய்வங்களுக்கும் மேலாகத் தன்னை உயர்த்தி மேன்மைப்படுத்துவான். தெய்வங்களுக்கெல்லாம் இறைவனானவருக்கு எதிராக சொல்லத் தகாதவற்றைச் சொல்வான். இறைவனது அந்தக் கோபத்தின் காலம் நிறைவேறும் வரைக்கும், அவன் வெற்றி பெறுவான். ஏனெனில் தீர்மானிக்கப்பட்டது நிறைவேற வேண்டும். 37அவன் தன் தந்தையர்களின் தெய்வங்களுக்கோ, பெண்களால் விரும்பப்பட்ட தெய்வங்களுக்கோ எதுவித மதிப்பும் காண்பிக்க மாட்டான். அவன் வேறு எந்தத் தெய்வத்துக்கோ மதிப்புக் கொடுக்கமாட்டான். அவையெல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னையே உயர்த்துவான். 38அவன் அத்தெய்வங்களுக்குப் பதிலாக கோட்டைகளின் தெய்வத்துக்கு மதிப்பளிப்பான். அவன் தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்துக்கு தங்கத்தினாலும், வெள்ளியினாலும், மாணிக்கக் கற்களினாலும், விலையுயர்ந்த அன்பளிப்புகளினாலும் மதிப்பளிப்பான். 39அவன் அந்நிய தெய்வத்தின் உதவியுடன் வலிமைமிக்க கோட்டைகளைத் தாக்குவான். தன்னை ஏற்றுக்கொள்கின்றவர்களுக்கு அதிக மதிப்பளிப்பான். அவர்களை அநேக மக்களுக்கு மேலாக ஆளுநர்களாக நியமித்து, நாட்டைக் கூறுபோட்டு விலைக்குக் கொடுப்பான்.
40“முடிவு காலம் வரும்போது தென்திசை அரசன் அவனை மோதித் தாக்குவான். ஆனால் வடதிசை அரசனோ அநேகம் தேர்களோடும், குதிரைப்படை, கப்பல்படையுடனும் புயல் போல அவனுக்கெதிராக விரைந்து தாக்குவான். அவன் அநேக நாடுகளின்மீது படையெடுத்துச் சென்று, அவற்றின் ஊடாக பெருவெள்ளம் கரைபுரண்டோடுவது போல செல்வான். 41அவன் அழகிய நாட்டின்மீதும் படையெடுத்துச் செல்வான். அநேக நாடுகள் அவன் முன் வீழ்ந்திடும். ஆனாலும் ஏதோம் நாடும், மோவாப் நாடும், அம்மோனின் தலைவர்களும் அவன் கையின் அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 42அவன் அநேக நாடுகளுக்குமேல் தன் கையின் அதிகாரத்தை விரிவுபடுத்துவான். எகிப்திய நாடும் தப்பிப்போகாது. 43எகிப்தின் தங்கம், வெள்ளி அடங்கிய திரவியக் களஞ்சியங்களையும் மற்றும் அதன் அனைத்துச் செல்வங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவான். அத்தோடு லிபியர்களையும், எத்தியோப்பியர்களையும் தன் ஆதிக்கத்துக்கு அடிபணியச் செய்வான். 44ஆனால் கிழக்கிலும், வடக்கிலுமிருந்து வரும் செய்திகள் அவனைக் கலக்கமடையச் செய்யும். அவன் அநேகரை அழித்து ஒழிப்பதற்காகக் கடுங்கோபத்துடன் அங்கு போகப் புறப்படுவான். 45பின்பு அவன் கடல்களுக்கும் அழகான பரிசுத்த மலைக்கும் இடையில் தங்கி, தனது அரச கூடாரங்களை அமைப்பான். ஆனாலும் அவனுக்கு முடிவு வரும், அவனுக்கு ஒருவரும் உதவி செய்ய மாட்டார்கள்.

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in