தேவனுடைய நட்பை அனுபவித்தல்மாதிரி

Experiencing Friendship With God

5 ல் 3 நாள்

வனாந்திரத்தில் முறுமுறுப்பு

எகிப்து தேசத்தையே உலுக்கிய வாதைகளின் மூலமாகவும், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுதலையாக்கினதின் மூலமாகவும் கர்த்தர் தம்மை பிரத்தியட்சமாக ஜனங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தாலும், அவர்களில் யாரும் மோசேயைப் போல கர்த்தரோடு நெருங்கிய உறவுகொண்டிருக்கவில்லை. இதனால், ஒவ்வொருமுறை அவர்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது, கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். அவர்கள், "நாங்கள் எகிப்திலேயே இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்!" என்று பல முறை சொன்னதை பார்க்கிறோம். (யாத்திராகமம் 14:11-12; 16:3; 17:3).

இந்த முறுமுறுப்பு, இஸ்ரவேல் ஜனங்களின் பலவீனத்தையும், நன்றியற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கை கடினமாகும்போது, பல நேரங்களில் நம்முடைய ஆத்துமா, "சரி ஆண்டவரே, நீர் என்னை இதிலிருந்து விடுவிப்பது போல தெரியவில்லை. இனி நானே இதை பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்வது போல இருக்கும். பரிசுத்த ஆவியானவரை புறக்கணித்துவிட்டு, சுயஉணர்வை சார்ந்து வாழும் வாழ்க்கை இங்கிருந்து தான் துவங்குகிறது. இந்த முறுமுறுப்பின் உணர்வு, செயலாக மாறும்போது, தேவ பிரசன்னத்தை சார்ந்திருப்பதிலிருந்து விலகி, மற்ற மனிதர்களையும், உலக காரியங்களையும் சார்ந்து வாழ பழகுகிறோம். வாழ துவங்குகிறோம்.

தேவனை அறிகிற அறிவில் வளர்வதை விட, தேவனுக்கு விரோதமாக முறுமுறுப்பது எளிதாக தான் இருக்கும். தேவ பிரசன்னத்திற்கு செல்வதை விட, அதிருப்தியில் வேகிறது எளிதாக தான் இருக்கும். ஆனால் தேவனுடைய நண்பரே, உங்கள் முறுமுறுப்புக்கு பதிலாக நீங்கள் தேவனுடைய நட்புறவை பெற்றுக்கொள்ள முடியும். இது, நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய பரிமாற்றமாக இருக்கும்.

நீங்கள் முறுமுறுப்போடு போராடுபவரானால், பின்வரும் சத்தியங்கள் மேல் தியானம் செய்யுங்கள்:

1.கர்த்தர் உங்களுடனே இருக்கிறார். “உமது ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.” (சங்கீதம் 139:7-8)

2.கர்த்தர் என்ன செய்கிறாரென்று அவருக்கு நன்றாகவே தெரியும். “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.” (ஏசாயா 55:9)

நீங்கள் கசப்போடும், முறுமுறுப்போடும் கவலையில் ஆழ்ந்து, மணிக்கணக்கில் சமுக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, சற்று அமர்ந்திருந்து இந்த இரண்டு சத்தியங்களையும் தியானியுங்கள். தேவனுடைய வார்த்தையை தியானிப்பது, உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இதன்மூலம், நீங்கள் முழுமையாக இயேசுவோடு இணைந்திருக்க முடியும்.

சமீபத்தில் நீங்கள் முறுமுறுத்த காரியம் என்ன? தேவ பிரசன்னத்தை நீங்கள் முக்கியத்துவப்படுத்துவதால், உங்கள் பிரச்சனை மீதான உங்களுடைய பார்வை இப்போது எப்படி மாறியிருக்கிறது?

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Experiencing Friendship With God

நீரூற்றுக்காக ஏங்கும் வனாந்திரம் போல உங்கள் ஆத்துமாவில் உணர்கிறீர்களா? இந்த வனாந்திர காலம், தேவனுடைய பிரசன்னத்தை நீங்கள் இன்னும் நெருக்கமாகவும், அதிகாரபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பளித்து, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் காலமாகவும் இருக்கக்கூடும். இந்த வனாந்திர அனுபவத்தில், உங்கள் வாழ்க்கை எள்ளவும் நகராதது போல உங்களுக்கு ஒருவேளை தோன்றலாம். ஆனால் இந்த காலம் உங்களுடைய வாழ்வில் வீணாக்கப்பட்ட காலம் அல்ல என்பதை நீங்கள் உணரும்படி இந்த தியானம் உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் எப்படிப்பட்ட கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், நீங்கள் தனியாக பயணிக்கவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள். காரணம், உங்கள் தேவனாகிய கர்த்தர், ஜீவனளிப்பவராகவும், ஆறுதலளிப்பவராகவும், ஒரு நல்ல நண்பனாகவும் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறார்.

More

இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த WaterBrook Multnomahஅமைப்பிற்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://www.faitheurycho.com/ என்ற வலைத்தளத்தை அணுகவும்