தேவனுடைய நட்பை அனுபவித்தல்மாதிரி

Experiencing Friendship With God

5 ல் 1 நாள்

ஆத்துமாவின் வனாந்திரம்

நீங்கள் உயிரோடிருக்குமட்டும், தேவன் மீதுள்ள உங்கள் நம்பிக்கைக்கு எதிராக, இந்த உலகத்தின் நிஜங்கள் போராடிக்கொண்டே இருக்கும். சில நேரம் நீங்கள் இடறுவீர்கள். சில நேரம், உங்களை சுற்றிலும் உள்ளவர்கள் உங்களை இடறப் பண்ணுவார்கள். உங்களுடைய திட்டங்கள் தோற்றுப் போகும். உங்களுக்காக திறந்திருந்த சில கதவுகள் சடுதியாக மூடப்பட்டு, மறுபடியும் திறக்கப்படும் அறிகுறி இல்லாமல் போகும். சூழ்நிலைகள் எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாகவே இருக்காது. மாறவேண்டும் என்று நீங்கள் விரும்பும் சில மனிதர்கள், கடைசிவரை மாற்றமடையாமலே கூட போகலாம். நீங்கள் ஒருவேளை காத்திருப்பின் காலத்திலோ, உபத்திரவத்தின் காலத்திலோ இப்போது இருக்கலாம். நீங்கள் எதிர்ப்பாராத அளவு இந்த காலம் நீண்டுகொண்டே போனால், நீங்கள் விரக்தியடைந்து, தேவன் மீதான நம்பிக்கையில் தளர்ந்து போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இதுதான் ஆத்துமாவின் வனாந்திரம்.

யாத்திராகமம் புஸ்தகத்தை வாசிக்கும்போது, எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களும் வனாந்திரமான வழியை கடந்தார்கள் என்று பார்க்கிறோம். சீனாய் மலையடிவாரத்தில் அவர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தார்களே, அந்த இடம் எப்படிப்பட்டது என்று நினைக்கிறீர்கள்? புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடிய அளவிற்கு, கண்ணைக் கவரும் அழகான இயற்கை வளங்களை கொண்ட இடம் என்று நினைக்கிறீர்களா? இல்லை! மனிதன் உயிர்வாழ தேவையான எந்த அத்தியாவசிய காரியங்களும் கிடைக்காத, ஒரு கொடூர வனாந்திரம். அந்த வனாந்திரத்தின் கொடூர வெயிலையும், தனித்துவிடப்பட்ட சூழலையும் சகித்து வாழ்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வாழவே கடினமான அந்த வனாந்திரத்தில் இருந்துகொண்டு, எதிர்காலத்தை கனவு காணுவதோ, அல்லது வாழ்வின் நோக்கத்தை முடிவு செய்வதோ கூட கடினமான காரியம்.

இஸ்ரவேல் ஜனங்கள் கடந்து போன வனாந்திரத்திற்கும், ஆத்துமாவின் வனாந்திரத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பரதேசிகளாக சுற்றித்திரிந்து பாருங்கள். பாதையெல்லாம் வலிகள் மட்டுமே நிறைந்திருக்கும். நீங்கள் விவரித்தாலும், இன்னொருவரால் அதை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து, கடைசியில் உங்கள் இலக்கை குறித்து நீங்களே குழம்பிவிடுவீர்கள்.

வலிகள் தான் உங்களை வலிமையுள்ளவர்கள் ஆக்கும் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். பலவீனமாய் நிற்கும் ஒருவருக்கு, இந்த கூற்றால் எந்த பயனும் இல்லை என்றே நான் நம்புகிறேன். நீங்கள் எவ்வளவு தன்னம்பிக்கையும் பலமும் உள்ளவராக இருந்தாலும், வனாந்தரத்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிச்சயம் உங்கள் மனஉறுதியை சோதிக்கும். கொடுமையின் உச்சம் என்னவென்றால், அந்த வனாந்திரத்தின் காலம் எப்பொழுது முடியும் என்றும் உங்களுக்கு தெரியாது.

வனாந்திரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அன்பு சகோதரனே சகோதரியே, இந்த வனாந்திரம் ஏன் உங்களை மேம்படுத்தி, மேலான இடத்திற்கு கொண்டுபோவதற்காக உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாது? இந்த வனாந்திர பாதை உங்களை உருவாக்கும் பாதையாக இருந்தாலும், இங்கே நீங்கள் வலிகளை மட்டுமே அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆம், இந்த வனாந்திரத்தை தேவன் அனுமதித்ததற்கு காரணமே நீங்கள் தேவ பிரசன்னத்தை அனுபவித்து இன்னும் நெருக்கமாகவும், அதிகாரப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அவருடைய நட்பை வெகுமதியாக பெற வேண்டும் என்பது தான்.

“ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய் பேசினார்” என்று யாத்திராகமம் 33:11-ல் நாம் வாசிக்கிறோம். தேவன் உங்களுடைய சிநேகிதராக இருப்பதைக் குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Experiencing Friendship With God

நீரூற்றுக்காக ஏங்கும் வனாந்திரம் போல உங்கள் ஆத்துமாவில் உணர்கிறீர்களா? இந்த வனாந்திர காலம், தேவனுடைய பிரசன்னத்தை நீங்கள் இன்னும் நெருக்கமாகவும், அதிகாரபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பளித்து, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் காலமாகவும் இருக்கக்கூடும். இந்த வனாந்திர அனுபவத்தில், உங்கள் வாழ்க்கை எள்ளவும் நகராதது போல உங்களுக்கு ஒருவேளை தோன்றலாம். ஆனால் இந்த காலம் உங்களுடைய வாழ்வில் வீணாக்கப்பட்ட காலம் அல்ல என்பதை நீங்கள் உணரும்படி இந்த தியானம் உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் எப்படிப்பட்ட கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், நீங்கள் தனியாக பயணிக்கவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள். காரணம், உங்கள் தேவனாகிய கர்த்தர், ஜீவனளிப்பவராகவும், ஆறுதலளிப்பவராகவும், ஒரு நல்ல நண்பனாகவும் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறார்.

More

இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த WaterBrook Multnomahஅமைப்பிற்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://www.faitheurycho.com/ என்ற வலைத்தளத்தை அணுகவும்