திட்ட விவரம்

மீட்பைத் தெரிவு செய்யுங்கள் மாதிரி

மீட்பைத் தெரிவு செய்யுங்கள்

5 ல் 2 நாள்

தனிப்பட்ட மீட்பு – வாழ்க்கை மாறும் விந்தை

எல்லாம் உங்களிடமிருந்துதான் தொடங்குகிறது. ஆம்,நீங்கள்தான் தொடங்க வேண்டும்!

இதை வாசிக்கும்போது,இது உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது கடினமான உடன் பணியாளர் அல்லது சகிக்க முடியாத பக்கத்து வீட்டுக்காரருக்குத்தான் என்று நினைக்காதீர்கள். 23ம் சங்கீதத்தை வாசிக்கும்போது, அது ஒரு சமுதாயத்திற்கானது அல்ல,தனிப்பட்ட நபருக்கானது என்பது நன்கு புலனாகிறது. அது,நாம் தேவனை யாராகக் கொள்கிறோம், அவரை எங்கு காண்கிறோம் மற்றும் அவரோடு சேர்ந்து என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய அறிக்கையிடலாக உள்ளது. இந்த சங்கீதத்தின் 3ம் வசனத்தில்,தன் ஆத்துமாவை தேவன் தேற்றுவதாக தாவீது குறிப்பிடுகிறார். இது ஒருமுறை நடக்கும் செயலாகத் தெரியவில்லை,தொடர்ந்து நடப்பதாகவே பொருள்படுகிறது. அது ஒரு வாழ்நாள் செயல்பாடாகும்.

ஆத்துமா என்பதற்கான எபிரெய வார்த்தை ‘நெஃபேஷ்’ என்பதாகும்;ஆத்துமா என்பது நம் உணர்வுகளும்,சித்தமும்,உணர்ச்சிகளும்,எண்ணங்களும் வாசம் பண்ணுமிடமாகும். அதுவே நம் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் உந்தித் தள்ளுவதாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் உள்ள இந்தப் பகுதியின் மீட்பு ஒரு புதுப்பித்தலைக் கொண்டுவரும்,ஏனென்றால் இதில் நம் உள்ளான ஆழமான பகுதிகளில் மறு சீரமைப்பு நடக்கிறது. இது அத்தனை எளிதல்ல; சொல்லப்போனால்,பல நேரங்களில் மிகவும் கடினமானது.

இது ஏன் கடினமானது என்றால், நீண்ட காலமாக நாம் அந்தப் பகுதிகளைப் பற்றி சாக்குபோக்குகளைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டோம். “சரி,நான் கோபக்காரன்தான்” அல்லது “என் குடும்பத்தினர்தான் என்னைக் கோபப்பட வைக்கிறார்கள்” அல்லது “என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது என்று உனக்குத் தெரியாது,அதனால்தான் நான் இப்படி இருக்கிறேன்” என்று சொல்லிவிடுகிறோம். இப்படிப்பட்ட சாக்குபோக்குகளுக்கு முடிவே இல்லை! ஆனால் அதிலிருந்து மீட்கப்பட,அப்படிப்பட்ட நல்லதல்லாத குணங்களை ஒப்புக்கொண்டு,அவற்றை தேவனிடம் ஒப்புக்கொடுப்பது அவசியம்.

அது அவ்வளவு எளிதல்ல,ஏனென்றால் அதைச் செய்ய நீங்கள் தேவனிடம் அதிகமதிகமாக நெருங்குவதற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டியது அவசியம். அவர் பரிசுத்தராக இருப்பதால்,பாவத்துடன் அவர் பிரசன்னத்தில் நிற்க முடியாது; அவரை நாம் அதிகமாக நெருங்கும்போது,மனந்திரும்பி,பாவங்களை அவரிடம் ஒப்புக்கொடுக்கும் வரை நம்முடைய பாவங்களே அதிகமாக தலைதூக்கி நிற்கும்.

அது,ஒரு மறைவான இடத்தில்,அமைதி மற்றும் இருளின் மத்தியில் நடக்கிறது என்பதால் ஒப்புக்கொடுத்தல் இன்னும் கடினமாகிறது – அதில் உங்களையும் தேவனையும் தவிர வேறு யாரும் ஈடுபடமாட்டார்கள். அந்த நேரத்தில்,அவர் உங்கள் எண்ணங்கள்,உள்ளான அமைப்பு,உணர்வுகள் போன்றவற்றை மறுபடியும் வடிவமைக்கிறார்.

அது எப்போதும் பிறரின் (உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து கூட) பாராட்டை பெறுவதில்லை என்பதால் மிக மிகக் கடினமான ஒன்றாகிறது. அவர்கள் உங்கள் பழைய குணங்களைத்தான் விரும்புவார்கள்,கிறிஸ்துவுக்குள் நீங்கள் புது சிருஷ்டியாக இருப்பதை விரும்பமாட்டார்கள்.

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது தேவனுக்குத் தெரியும் – உங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய காரியங்கள் உங்களை உருவாக்கி இருக்கின்றன,பாதித்திருக்கின்றன மற்றும் மாற்றியிருக்கின்றன. இவற்றிலிருந்து உங்களை விடுவித்து,ஆதி அமைப்புக்கு உங்களை மாற்றுவதே தேவனுடைய விருப்பம் – அந்த அமைப்பு உலகத்தின் வீழ்ந்த நிலையினால் தொடப்படாத ஒன்று. அதைச் செய்வது பரிசுத்த ஆவியானவர்,நாம் இயேசுவைப் போல மாறும்வரை அவர் நம்மை மீட்டெடுக்கிறார்!

சிந்தனைக்கு:

நீங்கள் மீட்கப்பட விரும்பும் ஒரு காரியத்தை உங்கள் கடந்தகாலத்திலிருந்து நினைவுக்குக் கொண்டு வருமாறு தேவனிடம் கேளுங்கள்.

ஜெபிக்க:

அந்தச் சம்பவம் உங்களுக்கு ஏற்படுத்திய வேதனையை சுகமாக்கும்படி அவரிடம் கேளுங்கள். நீங்கள் முழுமையடைந்தவராக முன்னேறிச் செல்ல உதவியாக உங்கள் இருதயத்தையும்,சிந்தையையும் புதிதாக்கும்படி அவரிடம் கேளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

மீட்பைத் தெரிவு செய்யுங்கள்

இயேசுவைப் போல மாறும்படிக்கு நாம் அனுதினம் புதிதாக்கப்படுவதிலும், மறுரூபமடைவதிலும் தேவனுடைய ஆவியானவர் ஈடுபாடு கொண்டிருக்கிறார். இந்தப் புதிதாக்கும் செயலின் அங்கமாகிய மீட்பு என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியா...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்