சங்கீதம் 119

119
சங்கீதம் 119
א ஆலெப்
1குற்றமற்றவர்களாய் வாழ்ந்து,
யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
2அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு,
தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
3அவர்கள் தவறு செய்யாமல்
அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
4நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே
நீர் அவைகளைக் கொடுத்தீர்.
5ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி,
என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.
6உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது,
நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
7உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,
நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.
8நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்;
என்னை முற்றிலும் கைவிடாதேயும்.
ב பேத்
9வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்?
உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.
10நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்;
உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
11நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி,
உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன்.
12யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
13உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும்
என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன்.
14ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல்,
நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.
15நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து,
உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
16நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்;
உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.
ג கிமெல்
17உமது அடியேனுக்கு நன்மை செய்யும்;
அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்.
18உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி,
என் கண்களைத் திறந்தருளும்.
19பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்;
உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.
20உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால்,
என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.
21அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்;
அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள்.
22நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால்,
பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும்.
23ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும்,
உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன்.
24உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன;
அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.
ד டாலெத்
25நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்;
உமது வார்த்தையின்படி என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.
26நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன்,
நீர் எனக்குப் பதிலளித்தீர்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
27உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்;
அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத்#119:27 போதனைகளை அல்லது செயல்களை தியானிப்பேன்.
28என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது;
உமது வார்த்தையின்படி என்னைப் பெலப்படுத்தும்.
29என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்;
என்னில் கிருபையாயிருந்து, உமது சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
30மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்;
நான் உமது சட்டங்களின்படி வாழத் தீர்மானித்திருக்கிறேன்.
31யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்;
என்னை வெட்கப்பட விடாதேயும்.
32நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால்,
உமது கட்டளைகளின் பாதையிலேயே நான் ஓடுவேன்.
ה ஹெ
33யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்;
அப்பொழுது நான் அவைகளைக் கடைசிமட்டும் கைக்கொள்வேன்.
34விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்;
அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன்.
என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன்.
35உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்;
ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
36என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல்,
உமது நியமங்களின் பக்கமாய்த் திருப்பும்.
37பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்;
உமது வார்த்தையின்படியே என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.
38உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை
உமது அடியேனாகிய எனக்கு நிறைவேற்றும்.
39நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்;
ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை.
40நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்!
உமது நியாயத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
ו வெள
41யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும்,
உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக;
42அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்;
ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
43சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்;
ஏனெனில், நான் உமது சட்டங்களிலேயே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
44நான் எப்பொழுதும்
உமது சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன்.
45உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால்,
நான் சுதந்திரமாக நடந்துவருவேன்.
46நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்;
நான் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டேன்.
47ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்,
அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன்.
48நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்;
உம்முடைய விதிமுறைகளைத் தியானிப்பேன்.
ז சயின்
49உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வார்த்தையை நினைவிற்கொள்ளும்;
அதினால் எனக்கு நம்பிக்கையை தந்திருக்கிறீர்.
50இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்:
உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வைக் காத்துக்கொள்வது.
51அகங்காரம் கொண்டவர்கள் தயக்கமின்றி என்னை ஏளனம் செய்கிறார்கள்;
ஆனாலும் நான் உமது சட்டத்திலிருந்து விலகுவதில்லை.
52யெகோவாவே, உமது பூர்வகாலத்து சட்டங்களை நான் நினைவிற்கொள்கிறேன்;
நான் அவைகளில் ஆறுதல் பெறுகிறேன்.
53உமது சட்டத்தைக் கைவிட்டுவிட்ட கொடியவர்களின் நிமித்தம்,
கடுங்கோபம் என்னைப் பற்றிக்கொள்கிறது.
54நான் எங்கு தங்கினாலும்,
உமது விதிமுறைகளே எனது பாடலின் கருப்பொருளாயிற்று.
55யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு,
உமது சட்டத்தைக் கைக்கொள்வேன்.
56உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதே
என் வழக்கமாயிற்று.
ח கேத்
57யெகோவாவே, நீரே என் பங்கு;
உமது வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிவதாக வாக்களித்திருக்கிறேன்.
58நான் என் முழு இருதயத்தோடும் உமது முகத்தைத் தேடியிருக்கிறேன்;
உமது வாக்குத்தத்தத்தின்படி என்மீது கிருபையாயிரும்.
59நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து,
உம்முடைய நியமங்களைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.
60உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன்,
தாமதிக்கமாட்டேன்.
61கொடியவர்கள் என்னைக் கயிறுகளினால் கட்டினாலும்,
நான் உமது சட்டத்தை மறவேன்.
62உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி,
நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன்.
63உமக்குப் பயந்து நடக்கிற,
உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன்.
64யெகோவாவே, பூமி உமது அன்பினால் நிறைந்திருக்கிறது;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
ט தேத்
65யெகோவாவே, உம்முடைய வார்த்தையின்படி
உமது அடியேனுக்கு நன்மை செய்யும்.
66உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால்,
அறிவையும் நல்ல நிதானிப்பையும் எனக்குப் போதியும்.
67நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன்,
ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன்.
68நீர் நல்லவர், நீர் நன்மையானதையே செய்கிறீர்;
உம்முடைய விதிமுறைகளை எனக்குப் போதியும்.
69அகங்காரம் கொண்டவர்கள் என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பினார்கள்,
ஆனாலும் நான் முழு இருதயத்தோடும், உம்முடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்கிறேன்.
70அவர்களுடைய இருதயங்கள் கடினமானவைகளும், உணர்வற்றவைகளுமாய் இருக்கின்றன;
நானோ உம்முடைய சட்டத்தில் மகிழ்கிறேன்.
71நான் துன்பப்பட்டது எனக்கு நன்மையாகவே இருந்தது;
அதினால் நான் உம்முடைய விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறேன்.
72ஆயிரமாயிரமான பொன் வெள்ளியைப் பார்க்கிலும்,
உம்முடைய வாயிலிருந்து வருகிற சட்டம் எனக்கு அதிக விலையேறப்பெற்றது.
י யோத்
73உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின;
உம்முடைய கட்டளைகளைக் கற்று விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்.
74நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால்,
உமக்குப் பயந்து நடப்பவர்கள் என்னைக் காணும்போது, மகிழ்ச்சியடைவார்களாக.
75யெகோவாவே, உமது சட்டங்கள் நியாயமானவை என்பதை நான் அறிவேன்;
நீர் என்னைத் துன்பப்படுத்தியது சரிதான்.
76நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி,
உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக.
77நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்;
உமது சட்டம் என் மனமகிழ்ச்சி.
78காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும்
அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக;
நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன்.
79உமது நியமங்களை விளங்கிக்கொண்டு,
உமக்குப் பயந்து நடக்கிறவர்கள் என் பக்கம் திரும்பட்டும்.
80நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் இருதயம்
உம்முடைய விதிமுறைகளைக் குறித்து குற்றமற்றதாய் இருக்கட்டும்.
כ காஃப்
81உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது;
நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
82உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன;
“நீர் என்னை எப்பொழுது தேற்றுவீர்?” என்று கேட்க விரும்புகிறேன்.
83நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும்
திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும்,
உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன்.
84உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்?
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்?
85அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்;
அது உமது சட்டத்திற்கு முரணானது.
86உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை;
காரணமின்றி மனிதர் என்னைத் துன்பப்படுத்துவதால், எனக்கு உதவிசெய்யும்.
87அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்;
ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைவிடவில்லை.
88உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்#119:88 காத்துக்கொள்ளும் அல்லது உயிர்வாழச் செய்யும்.,
அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
ל லாமேத்
89யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது;
அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது.
90உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது;
நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
91உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன;
ஏனெனில் எல்லாம் உமக்குப் பணி செய்கின்றன.
92உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால்,
நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன்.
93நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்;
ஏனெனில் அவைகளால் நீர் என் வாழ்வைக் காத்துக்கொண்டீர்.
94நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்;
நான் உம்முடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தேன்.
95கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்;
ஆனாலும் நான் உமது நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பேன்.
96பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்;
ஆனால் உமது கட்டளைகளோ எல்லையற்றவை.
מ மேம்
97ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்!
நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன்.
98உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால்,
அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது.
99நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால்,
எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
100நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால்,
முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன்.
101உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை,
எல்லாத் தீய வழிகளிலுமிருந்து விலக்கிக் காத்துக்கொண்டேன்;
102நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்;
ஏனெனில் நீர் தாமே அவைகளை எனக்கு போதித்திருக்கிறீர்.
103உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை!
என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை.
104உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்;
ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன்.
נ நூன்
105உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும்
என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.
106உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று
நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்;
அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன்.
107நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்;
யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
108யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்;
உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும்.
109என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும்,
உமது சட்டத்தையோ மறக்கமாட்டேன்.
110கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்;
ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைவிட்டு விலகவில்லை.
111உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து;
அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி.
112உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள
என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது.
ס சாமெக்
113இருமனம் கொண்டவர்களை நான் வெறுக்கிறேன்.
நானோ உமது சட்டத்தை நேசிக்கிறேன்.
114நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்;
உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
115அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்,
நான் என் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்!
116உமது வாக்குத்தத்தத்தின்படி என்னைக் காப்பாற்றும்;
அப்பொழுது நான் வாழ்வடைவேன்;
என் நம்பிக்கை வீண்போக விடாதேயும்.
117என்னைத் தாங்கிக்கொள்ளும். அப்பொழுது நான் விடுவிக்கப்படுவேன்;
நான் எப்பொழுதும் உமது விதிமுறைகளை மதிப்பேன்.
118உமது விதிமுறைகளிலிருந்து விலகிப்போகிற
எல்லோரையும் நீர் புறக்கணிக்கிறீர்.
அவர்களுடைய வஞ்சனை வெறுமையானது.
119பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்;
ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன்.
120உம் மீதுள்ள பயபக்தியால் எனது தசை நடுங்குகிறது;
நான் உமது சட்டங்களுக்குப் பயப்படுகிறேன்.
ע அயின்
121நான் நியாயமும், நீதியுமானதைச் செய்திருக்கிறேன்;
என்னை ஒடுக்குகிறவர்களிடத்தில் என்னை விட்டுவிடாதேயும்.
122உமது பணியாளனின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும்;
அகந்தையுள்ளவர்கள் என்னை ஒடுக்குவதற்கு இடமளியாதேயும்.
123உமது இரட்சிப்பைக் காண்பதற்கும்,
உமது நீதியான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கும் காத்திருந்து,
என் கண்கள் மங்கிப்போகின்றன.
124உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி,
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
125நான் உமது பணியாளன்;
உமது நியமங்களை விளங்கிக்கொள்ளும்படி எனக்கு பகுத்தறிவைத் தாரும்.
126யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது;
உமது சட்டம் மீறப்பட்டுவிட்டது.
127உமது கட்டளைகளை தங்கத்தைவிட,
சுத்தத் தங்கத்தைவிட அதிகமாய் விரும்புகிறதினாலும்,
128உமது ஒழுங்குவிதிகளெல்லாம் நியாயமானவை என்று நான் எண்ணுவதாலும்,
நான் தவறான வழிகளையெல்லாம் வெறுக்கிறேன்.
פ பெ
129உமது நியமங்கள் ஆச்சரியமானவை,
ஆகையால் நான் அவைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
130உமது வார்த்தைகளின் வெளிப்படுத்தல் வெளிச்சத்தைக் கொடுக்கின்றன;
அவை எளியவர்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கின்றன.
131நான் உமது கட்டளைகளை விரும்பி,
என் வாயைத் திறந்தவன்னம் ஏங்குகிறேன்.
132உமது பெயரை நேசிக்கிறவர்களுக்கு நீர் எப்பொழுதும் செய்கிறபடியே,
என் பக்கம் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்.
133உமது வார்த்தையின்படியே என் காலடிகளை வழிநடத்தி,
ஒரு பாவமும் என்னை ஆளுகைசெய்ய விடாதேயும்.
134மனிதரின் அடக்கு முறையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்;
அதினால் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்வேன்.
135உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
136மனிதர் உமது சட்டத்திற்குக் கீழ்ப்படியாதபடியால்,
எனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கிறது.
צ த்சாதெ
137யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்;
உமது சட்டங்கள் நியாயமானவை.
138நீர் ஏற்படுத்திய நியமங்கள் நீதியானவை;
அவை முற்றும் நம்பத்தகுந்தவை.
139என் பகைவர்கள் உமது வார்த்தைகளை உதாசீனம் செய்வதால்,
எனது தீவிர ஆர்வம் என்னை சுட்டெரிக்கிறது.
140உமது வாக்குத்தத்தங்கள் முற்றிலும் சோதித்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றன;
உமது அடியேன் அவற்றை நேசிக்கிறேன்.
141நான் அற்பமானவனும் வெறுக்கப்பட்டவனுமாய் இருந்தாலும்,
உமது ஒழுங்குவிதிகளை நான் மறக்கமாட்டேன்.
142உமது நீதி நித்தியமானது,
உமது சட்டம் உண்மையானது.
143கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன;
ஆனாலும், உமது கட்டளைகள் என் மகிழ்ச்சியாய் இருக்கின்றன.
144உமது நியமங்கள் என்றென்றும் நீதியானவை;
அவற்றை விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும், அதினால் நான் பிழைப்பேன்.
ק கோஃப்
145யெகோவாவே, என் முழு இருதயத்துடனும் கூப்பிடுகிறேன்;
எனக்குப் பதில் தாரும்,
நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
146நான் உம்மைக் கூப்பிடுகிறேன், என்னைக் காப்பாற்றும்;
நான் உமது நியமங்களைக் கைக்கொள்வேன்.
147விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்;
உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
148உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி,
இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன.
149நீர் என்மீது உடன்படிக்கையின் அன்புகூறுகிறபடியால் என் குரலைக் கேளும்;
யெகோவாவே, உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
150கொடுமையான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள் எனக்கு அருகே இருக்கிறார்கள்;
ஆனால், அவர்கள் உமது சட்டத்திற்குத் தூரமாய் இருக்கிறார்கள்.
151என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்;
உமது கட்டளைகள் எல்லாம் உண்மை.
152உமது நியமங்கள் நித்தியமாய் இருக்க நீர் அவைகளை நிலைநாட்டினீர் என்பதை
வெகுகாலத்திற்கு முன்பே நான் அறிந்திருக்கிறேன்.
ר ரேஷ்
153என் வேதனையைப் பார்த்து என்னை விடுவியும்;
ஏனெனில், நான் உமது சட்டத்தை மறந்துவிடவில்லை.
154எனக்காக வாதாடி என்னை மீட்டுக்கொள்ளும்;
உமது வாக்குத்தத்தத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
155இரட்சிப்பு கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறதினால்,
அவர்கள் உமது விதிமுறைகளைத் தேடுவதில்லை.
156யெகோவாவே, உமது இரக்கம் பெரிதானது;
உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
157என்னை உபத்திரவப்படுத்துகிற எதிரிகள் அநேகராயிருக்கிறார்கள்;
ஆனாலும் நான் உம்முடைய நியமங்களை விட்டு விலகவில்லை.
158துரோகிகளை நான் அருவருப்புடன் பார்க்கிறேன்;
ஏனெனில் அவர்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதில்லை.
159நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்;
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
160உமது வார்தைகள் எல்லாம் உண்மையானவை;
நீதியான உமது சட்டங்கள் எல்லாம் நித்தியமானவை.
ש ஷீன்
161ஆட்சியாளர்கள் காரணமில்லாமல் என்னை உபத்திரவப்படுத்துகிறார்கள்;
ஆனாலும் என் இருதயம் உமது வார்த்தைக்கு நடுங்குகிறது.
162பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல்,
உமது வாக்குத்தத்தத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
163நான் பொய்யை வெறுத்து அருவருக்கிறேன்;
ஆனால் உமது சட்டத்தையோ நான் நேசிக்கிறேன்.
164நீதியான உமது சட்டங்களுக்காக
நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு;
அவர்களுக்கு இடறலில்லை.
166யெகோவாவே, உமது இரட்சிப்புக்காக நான் காத்திருக்கிறேன்;
உமது கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன்.
167நான் உமது நியமங்களுக்குக் கீழ்ப்படிகிறேன்;
ஏனெனில் நான் அவற்றை அதிகமாய் நேசிக்கிறேன்.
168நான் உமது ஒழுங்குவிதிகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறேன்;
எனது எல்லா செயல்களும் உமக்குத் தெரிந்திருக்கின்றன.
ת தெள
169யெகோவாவே, எனது வேண்டுதலை நீர் கேட்பீராக;
உமது வார்த்தையின்படியே எனக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தாரும்.
170என் விண்ணப்பத்தை நீர் கேட்பீராக;
உமது வாக்குத்தத்தத்தின்படியே என்னை விடுவியும்.
171எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது;
ஏனெனில், நீர் உமது விதிமுறைகளை எனக்குப் போதிக்கிறீர்.
172எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்;
ஏனெனில், உமது கட்டளைகள் எல்லாம் நியாயமானவை.
173உமது கரம் எனக்கு உதவிசெய்ய ஆயத்தமாய் இருப்பதாக;
ஏனெனில் நான் உமது ஒழுங்குவிதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
174யெகோவாவே, நான் உமது இரட்சிப்புக்கு வாஞ்சையாயிருக்கிறேன்;
உமது சட்டம் எனது மகிழ்ச்சி.
175நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக;
உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக.
176காணாமற்போன ஆட்டைப்போல் நான் வழிவிலகிப் போய்விட்டேன்;
உமது அடியேனைத் தேடுவீராக;
ஏனெனில் நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 119: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்