லூக்கா 10:25-42

லூக்கா 10:25-42 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அவர், “மோசேயின் சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார். அதற்கு அவன், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பெலத்தோடும், உன் முழு மனதோடும் அன்பு செலுத்தவேண்டும்’; அத்துடன், ‘உன்னில் நீ அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிலும் அன்பாய் இரு என்பதே.’” எனப் பதிலளித்தான். அப்பொழுது இயேசு அவனிடம், “நீ சரியாகப் பதில் சொன்னாய். அப்படியே செய். அப்பொழுது நீ வாழ்வடைவாய்” என்றார். ஆனால் அவனோ, தன்னை நீதிமானாய் காட்ட விரும்பி இயேசுவிடம், “என் அயலான் யார்?” என்று கேட்டான். அதற்கு இயேசு அவனிடம்: “யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து, எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், கள்வர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைப் பறித்துக்கொண்டு, அவனை அடித்து, குற்றுயிராய்ப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஒரு ஆசாரியன் அதே வழியாய் போய்க்கொண்டிருந்தான், அவன் காயப்பட்டவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். அப்படியே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். ஆனால், அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டபோது அவன்மேல் அனுதாபம் கொண்டான். அந்த மனிதனிடம் அவன் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை இரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான். மறுநாள், அவன் இரண்டு வெள்ளிக்காசை சத்திரத்தின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகிறபோது, நீ அதிகமாய் ஏதாவது செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.” இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், “இந்த மூன்று பேரிலும், கள்வர் கையில் அகப்பட்ட அவனுக்கு, யார் அயலானாய் இருந்தான் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு மோசேயின் சட்ட நிபுணன், “அவன்மேல் இரக்கம் காட்டியவனே” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம், “நீயும் போய் அப்படியே செய்” என்றார். பின்பு இயேசுவும் அவருடைய சீடர்களும், தொடர்ந்து சென்றுகொண்டிருக்கையில், ஒரு கிராமத்திற்கு வந்தார்கள். அங்கே மார்த்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண், அவரைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னும் பெயருடைய ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் கர்த்தருடைய பாதத்தின் அருகே உட்கார்ந்து, அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் மார்த்தாளோ, வீட்டில் செய்யவேண்டிய எல்லா ஆயத்தங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரி எல்லா வேலையையும் என்னிடம் விட்டுவிட்டு இங்கு இருப்பதைப்பற்றி உமக்கு கவலை இல்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்றாள். அதற்குக் கர்த்தர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பி இருக்கிறாய். ஆனால், அவசியமானது ஒன்றே. மரியாள் அந்த சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

லூக்கா 10:25-42 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான். இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள். அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி, அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார். பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

லூக்கா 10:25-42 பரிசுத்த பைபிள் (TAERV)

நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்து நின்றான். அவன் இயேசுவைச் சோதிக்க முயன்று கொண்டிருந்தான். அவன், “போதகரே, நித்தியமான வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அவனை நோக்கி இயேசு, “சட்டத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? அங்கு எதை நீ வாசிக்கிறாய்?” என்றார். அம்மனிதன், “‘உனது தேவனாகிய கர்த்தரை நேசிப்பாயாக. உன் முழு நெஞ்சத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு வல்லமையோடும் உன் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்’ என்றும், மேலும், ‘நீ உன்னை நேசிப்பது போலவே பிறரிடமும், அன்பு காட்ட வேண்டும்’ என்றும் எழுதப்பட்டுள்ளது” எனப் பதிலுரைத்தான். இயேசு அவனை நோக்கி, “உன் பதில் சரியானது. இதைச் செய்தால் நித்திய வாழ்வைப் பெறுவாய்” என்றார். அம்மனிதன் தான் வாழ்ந்து வரும் முறையே சரியானது என நிரூபிக்க விரும்பினான். எனவே அவன் இயேசுவிடம், “நான் நேசிக்க வேண்டிய பிற மக்கள் யார்?” என்று கேட்டான். அக்கேள்விக்குப் பதிலாக இயேசு: “ஒரு மனிதன் எருசலேமில் இருந்து எரிகோவிற்குப் பாதை வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். சில திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அவனது ஆடையைக் கிழித்து அவனை அடித்தார்கள். அம்மனிதனைத் தரையில் வீழ்த்திவிட்டு அத்திருடர்கள் அங்கிருந்து சென்றார்கள். அவன் இறக்கும் தருவாயில் கிடந்தான். “ஒரு யூத ஆசாரியன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் அம்மனிதனைக் கண்டபோதும் அவனுக்கு உதவும்பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான். அடுத்ததாக, ஒரு லேவியன் அவ்வழியாக வந்தான். லேவியன் காயமுற்ற மனிதனைக் கண்டான். அவன் பக்கமாய் கடந்து சென்றான். ஆனால் அவனும் அவனுக்கு உதவும் பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான். “பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாகப் பயணம் செய்தான். காயப்பட்ட மனிதன் கிடந்த இடத்துக்கு வந்தான். சமாரியன் அம்மனிதனைப் பார்த்தான். காயமுற்ற மனிதனுக்காகக் கருணைகொண்டான். சமாரியன் அவனிடம் சென்று ஒலிவ எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் காயங்களில் ஊற்றினான். அம்மனிதனின் காயங்களைத் துணியால் சுற்றினான். சமாரியனிடம் ஒரு கழுதை இருந்தது. அவன் காயமுற்ற மனிதனை அக்கழுதையின் மேல் ஏற்றி, ஒரு விடுதிக்கு அழைத்து வந்தான். அங்கு சமாரியன் அம்மனிதனைக் கவனித்தான். மறுநாள் இரண்டு வெள்ளிப் பணத்தை எடுத்து விடுதியில் வேலைசெய்த மனிதனிடம் கொடுத்தான். சமாரியன் அவனிடம், ‘காயமுற்ற இம்மனிதனைக் கவனித்துக்கொள். அதிகப் பணம் செலவானால் நான் திரும்ப வரும்போது அதனை உனக்குக் கொடுப்பேன்’” என்றான். பின்பு இயேசு, “இந்த மூன்று பேரிலும் கள்வரால் காயமுற்ற மனிதனுக்கு அன்பு காட்டியவன் யார் என்று நீ எண்ணுகிறாய்?” என்றார். நியாயசாஸ்திரி, “அவனுக்கு உதவியவன்தான்” என்று பதில் சொன்னான். இயேசு அவனிடம், “நீயும் சென்று பிறருக்கு அவ்வாறே செய்” என்றார். இயேசுவும், அவரது சீஷர்களும் பயணம் செய்கையில் இயேசு ஓர் ஊருக்குள் நுழைந்தார். மார்த்தாள் என்ற பெயருள்ள பெண் இயேசுவைத் தனது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தாள். மார்த்தாளின் சகோதரியின் பெயர் மரியாள். மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவரது போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது சகோதரி மார்த்தாள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். மிகுதியான வேலைகளைத் தானே செய்துகொண்டிருந்ததால் மார்த்தாள் எரிச்சலடைந்தாள். அவள் உள்ளே சென்று, “ஆண்டவரே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நானே தனிமையாகச் செய்வதற்கு என் சகோதரி என்னை விட்டு வைத்திருப்பதை நீர் கவனிக்கவில்லையா? எனக்கு உதவும்படியாக அவளுக்குக் கூறுங்கள்” என்றாள். ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், “மார்த்தாளே, மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறாய். ஒரே ஒரு காரியம் முக்கியமானது. மரியாள் மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படமாட்டாது” என்றார்.

லூக்கா 10:25-42 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார். பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்