லூக்கா எழுதிய சுவிசேஷம் 10:25-42

லூக்கா எழுதிய சுவிசேஷம் 10:25-42 TAERV

நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்து நின்றான். அவன் இயேசுவைச் சோதிக்க முயன்று கொண்டிருந்தான். அவன், “போதகரே, நித்தியமான வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அவனை நோக்கி இயேசு, “சட்டத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? அங்கு எதை நீ வாசிக்கிறாய்?” என்றார். அம்மனிதன், “‘உனது தேவனாகிய கர்த்தரை நேசிப்பாயாக. உன் முழு நெஞ்சத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு வல்லமையோடும் உன் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்’ என்றும், மேலும், ‘நீ உன்னை நேசிப்பது போலவே பிறரிடமும், அன்பு காட்ட வேண்டும்’ என்றும் எழுதப்பட்டுள்ளது” எனப் பதிலுரைத்தான். இயேசு அவனை நோக்கி, “உன் பதில் சரியானது. இதைச் செய்தால் நித்திய வாழ்வைப் பெறுவாய்” என்றார். அம்மனிதன் தான் வாழ்ந்து வரும் முறையே சரியானது என நிரூபிக்க விரும்பினான். எனவே அவன் இயேசுவிடம், “நான் நேசிக்க வேண்டிய பிற மக்கள் யார்?” என்று கேட்டான். அக்கேள்விக்குப் பதிலாக இயேசு: “ஒரு மனிதன் எருசலேமில் இருந்து எரிகோவிற்குப் பாதை வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். சில திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அவனது ஆடையைக் கிழித்து அவனை அடித்தார்கள். அம்மனிதனைத் தரையில் வீழ்த்திவிட்டு அத்திருடர்கள் அங்கிருந்து சென்றார்கள். அவன் இறக்கும் தருவாயில் கிடந்தான். “ஒரு யூத ஆசாரியன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் அம்மனிதனைக் கண்டபோதும் அவனுக்கு உதவும்பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான். அடுத்ததாக, ஒரு லேவியன் அவ்வழியாக வந்தான். லேவியன் காயமுற்ற மனிதனைக் கண்டான். அவன் பக்கமாய் கடந்து சென்றான். ஆனால் அவனும் அவனுக்கு உதவும் பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான். “பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாகப் பயணம் செய்தான். காயப்பட்ட மனிதன் கிடந்த இடத்துக்கு வந்தான். சமாரியன் அம்மனிதனைப் பார்த்தான். காயமுற்ற மனிதனுக்காகக் கருணைகொண்டான். சமாரியன் அவனிடம் சென்று ஒலிவ எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் காயங்களில் ஊற்றினான். அம்மனிதனின் காயங்களைத் துணியால் சுற்றினான். சமாரியனிடம் ஒரு கழுதை இருந்தது. அவன் காயமுற்ற மனிதனை அக்கழுதையின் மேல் ஏற்றி, ஒரு விடுதிக்கு அழைத்து வந்தான். அங்கு சமாரியன் அம்மனிதனைக் கவனித்தான். மறுநாள் இரண்டு வெள்ளிப் பணத்தை எடுத்து விடுதியில் வேலைசெய்த மனிதனிடம் கொடுத்தான். சமாரியன் அவனிடம், ‘காயமுற்ற இம்மனிதனைக் கவனித்துக்கொள். அதிகப் பணம் செலவானால் நான் திரும்ப வரும்போது அதனை உனக்குக் கொடுப்பேன்’” என்றான். பின்பு இயேசு, “இந்த மூன்று பேரிலும் கள்வரால் காயமுற்ற மனிதனுக்கு அன்பு காட்டியவன் யார் என்று நீ எண்ணுகிறாய்?” என்றார். நியாயசாஸ்திரி, “அவனுக்கு உதவியவன்தான்” என்று பதில் சொன்னான். இயேசு அவனிடம், “நீயும் சென்று பிறருக்கு அவ்வாறே செய்” என்றார். இயேசுவும், அவரது சீஷர்களும் பயணம் செய்கையில் இயேசு ஓர் ஊருக்குள் நுழைந்தார். மார்த்தாள் என்ற பெயருள்ள பெண் இயேசுவைத் தனது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தாள். மார்த்தாளின் சகோதரியின் பெயர் மரியாள். மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவரது போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது சகோதரி மார்த்தாள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். மிகுதியான வேலைகளைத் தானே செய்துகொண்டிருந்ததால் மார்த்தாள் எரிச்சலடைந்தாள். அவள் உள்ளே சென்று, “ஆண்டவரே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நானே தனிமையாகச் செய்வதற்கு என் சகோதரி என்னை விட்டு வைத்திருப்பதை நீர் கவனிக்கவில்லையா? எனக்கு உதவும்படியாக அவளுக்குக் கூறுங்கள்” என்றாள். ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், “மார்த்தாளே, மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறாய். ஒரே ஒரு காரியம் முக்கியமானது. மரியாள் மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படமாட்டாது” என்றார்.

லூக்கா எழுதிய சுவிசேஷம் 10:25-42 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்