லூக்கா 10:25-42

லூக்கா 10:25-42 TCV

அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அவர், “மோசேயின் சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார். அதற்கு அவன், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பெலத்தோடும், உன் முழு மனதோடும் அன்பு செலுத்தவேண்டும்’; அத்துடன், ‘உன்னில் நீ அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிலும் அன்பாய் இரு என்பதே.’” எனப் பதிலளித்தான். அப்பொழுது இயேசு அவனிடம், “நீ சரியாகப் பதில் சொன்னாய். அப்படியே செய். அப்பொழுது நீ வாழ்வடைவாய்” என்றார். ஆனால் அவனோ, தன்னை நீதிமானாய் காட்ட விரும்பி இயேசுவிடம், “என் அயலான் யார்?” என்று கேட்டான். அதற்கு இயேசு அவனிடம்: “யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து, எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், கள்வர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைப் பறித்துக்கொண்டு, அவனை அடித்து, குற்றுயிராய்ப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஒரு ஆசாரியன் அதே வழியாய் போய்க்கொண்டிருந்தான், அவன் காயப்பட்டவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். அப்படியே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். ஆனால், அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டபோது அவன்மேல் அனுதாபம் கொண்டான். அந்த மனிதனிடம் அவன் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை இரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான். மறுநாள், அவன் இரண்டு வெள்ளிக்காசை சத்திரத்தின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகிறபோது, நீ அதிகமாய் ஏதாவது செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.” இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், “இந்த மூன்று பேரிலும், கள்வர் கையில் அகப்பட்ட அவனுக்கு, யார் அயலானாய் இருந்தான் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு மோசேயின் சட்ட நிபுணன், “அவன்மேல் இரக்கம் காட்டியவனே” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம், “நீயும் போய் அப்படியே செய்” என்றார். பின்பு இயேசுவும் அவருடைய சீடர்களும், தொடர்ந்து சென்றுகொண்டிருக்கையில், ஒரு கிராமத்திற்கு வந்தார்கள். அங்கே மார்த்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண், அவரைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னும் பெயருடைய ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் கர்த்தருடைய பாதத்தின் அருகே உட்கார்ந்து, அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் மார்த்தாளோ, வீட்டில் செய்யவேண்டிய எல்லா ஆயத்தங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரி எல்லா வேலையையும் என்னிடம் விட்டுவிட்டு இங்கு இருப்பதைப்பற்றி உமக்கு கவலை இல்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்றாள். அதற்குக் கர்த்தர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பி இருக்கிறாய். ஆனால், அவசியமானது ஒன்றே. மரியாள் அந்த சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

லூக்கா 10:25-42 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்