சகரியா 10

10
கர்த்தர் யூதாவை ஆதரிப்பார்
1வசந்த காலத்து மழைக்காகக் கர்த்தரிடம் மன்றாடுங்கள்;
கர்த்தரே இடியுடன் மழையை உண்டாக்கி,
அனைத்து மக்களுக்கும் மழையைப் பொழியச்செய்து,
வயலின் பயிர்களை விளையச் செய்கின்றவர்.
2விக்கிரகங்கள் வஞ்சனை பேசுகின்றன.
குறிசொல்கிறவர்கள் பொய்யைத் தரிசித்து,
பொய்யான கனவுகளை அறிவிக்கின்றார்கள்.
அவர்களின் ஆறுதல் பயனற்றது.
ஆகவே மக்கள் செம்மறியாடுகளைப் போல் வழிதவறி,
மேய்ப்பன் இல்லாதபடியால் ஒடுக்கப்படுகிறார்கள்.
3“மேய்ப்பர்கள்மீது என் கோபம் பற்றியெரிகிறது,
அந்தத் தலைவர்களை நான் தண்டிப்பேன்;
சேனைகளின் கர்த்தர்,
யூதாவின் மக்களாகிய தமது மந்தையைப் பராமரிப்பார்.
அவர்களை யுத்தக்களத்தின் கம்பீரமான குதிரையைப் போலாக்குவார்.
4மூலைக்கல்லும், கூடார ஆப்பும்,
யுத்த வில்லும் அவர்களிலிருந்து தோன்றும்.
அவர்களிலிருந்தே அனைத்து ஆளுநர்களும் தோன்றுவார்கள்.
5யுத்தத்தின்போது வீதிகளில் சேற்றிலே எதிரியை மிதிக்கும்
வலிமையான வீரர்களைப் போல்,
அவர்கள் ஒன்றுசேர்ந்திருப்பார்கள்.
கர்த்தர் அவர்களோடிருப்பதால் அவர்கள் போரிட்டு,
எதிரிகளான குதிரை வீரர்களையும் முறியடிப்பார்கள்.
6“நான் யூதா மக்களைப் பலப்படுத்தி,
யோசேப்பு கோத்திரத்தவரைக் காப்பாற்றுவேன்.
அவர்கள்மீது இரக்கம்கொண்டபடியால்,
நான் அவர்களை முன்னைய நிலைக்குக் கொண்டுவருவேன்.
அவர்கள் என்னால் புறக்கணிக்கப்படாதவர்கள் போல் இருப்பார்கள்.
ஏனெனில் அவர்களின் இறைவனாகிய கர்த்தர் நானே.
நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்.
7எப்பிராயீமியர் வலிமைமிக்க வீரர்களைப் போலாவார்கள்.
திராட்சை மதுவில் மகிழ்திருப்பதைப் போல் அவர்களின் உள்ளம் மகிழ்ந்திருக்கும்.
அவர்களுடைய பிள்ளைகள் அதைக் கண்டு களிகூருவார்கள்.
அவர்களின் உள்ளம் கர்த்தரில் மகிழ்ந்திருக்கும்.
8நான் அவர்களை
சைகை காட்டி ஒன்றுகூட்டுவேன்;
நான் அவர்களை மீட்டுக்கொண்டேன்.
அவர்கள் முன்பிருந்தது போல் பெருகியிருப்பார்கள்.
9நான் அவர்களை இனங்களிடையே சிதறடித்தாலும்,
தூரதேசங்களிலிருந்து அவர்கள் என்னை நினைப்பார்கள்.
அவர்களும் அவர்களது பிள்ளைகளும் தப்பிப் பிழைத்து,
திரும்பி வருவார்கள்.
10நான் அவர்களை எகிப்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்து,
அசீரியாவிலிருந்து ஒன்றுகூட்டிச் சேர்த்து,
கீலேயாத், லெபனோன் பிரதேசங்களுக்குக் கொண்டுவருவேன்.
அவர்களுக்கு அங்கே போதியளவு இடம் இருக்காது.
11அவர்கள் தொல்லை என்னும் கடலைக் கடந்து செல்லும்போது,
கொந்தளிக்கும் கடல் அமைதியாக்கப்படும்;
நைல் நதியின் ஆழங்கள் வரண்டுபோகும்.
அசீரியாவின் அகந்தை தாழ்த்தப்பட்டு,
எகிப்தின் செங்கோல் எடுக்கப்பட்டுவிடும்.
12நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்.
அவருடைய பெயரில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சகரியா 10: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்