சகரியா 1
1
மனந்திரும்புதலுக்கு அழைப்பு
1தரியு பேரரசனின் ஆட்சியில், இரண்டாம் வருடத்தின் எட்டாம் மாதத்தில், இத்தோவின் மகனான பெரெகியாவின் மகன் சகரியா என்ற இறைவாக்கினனுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது:
2“கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின்மீது கடுங்கோபம் கொண்டிருந்தார். 3ஆதலால் மக்களுக்கு நீ சொல்ல வேண்டியது, சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: ‘என்னிடம் திரும்புங்கள், அப்போது நானும் உங்களிடத்தில் திரும்புவேன்’ என சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார். 4நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் போல் இருக்க வேண்டாம். முன்னைய இறைவாக்கினர்களும் அவர்களிடம், ‘உங்கள் பொல்லாத வழிகளையும், பொல்லாத செயல்களையும் விட்டுத் திரும்புங்கள் என சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவுமில்லை, என்னைப் பொருட்படுத்தவுமில்லை என கர்த்தர் அறிவிக்கின்றார். 5இப்போது உங்கள் முற்பிதாக்கள் எங்கே? இறைவாக்கினர் எங்கே? அவர்கள் என்றென்றும் வாழ்கின்றார்களா? 6ஆனால் என் அடியவர்களான இறைவாக்கினருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளின்படியும், என் ஒழுங்குவிதிகளின்படியும் உங்கள் முற்பிதாக்களுக்கு நடக்கவில்லையா?
“அதன் பின்னர் அவர்கள் மனந்திரும்பி, ‘சேனைகளின் கர்த்தர் எங்கள் வழிகளுக்கும், செயல்களுக்கும் ஏற்றவாறு எங்களுக்குச் செய்திருக்கிறார். தாம் தீர்மானித்தபடி நீதியாகவே நமக்குச் செய்தார்’ என்றார்கள்.”
நறுமண மரங்களுக்கிடையில் மனிதன்
7தரியு பேரரசன் ஆட்சி செய்த இரண்டாம் வருடத்தின் சேபாத் என்னும் பதினோராம் மாதம் இருபத்து நான்காம் திகதி, இறைவாக்கினன் சகரியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது. இந்த சகரியா இத்தோவின் மகனான பெரகியாவின் மகன்.
8இதோ! எனக்கு முன்னால் சிவப்புக் குதிரைமீது ஏறியிருந்த ஒரு மனிதரை நான் இரவில் தரிசனத்தில் கண்டேன். அவர் பள்ளத்தாக்கில் உள்ள மிருதுச் செடிகளுக்கிடையில் நின்றார். அவருக்குப் பின் சிவப்பு நிறமும், மங்கிய நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன.
9அப்போது நான், “ஆண்டவனே, இவை என்ன?” என்று கேட்டேன்.
என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம், “இவை என்ன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” எனப் பதிலளித்தான்.
10அப்போது மிருதுச் செடிகளுக்கிடையில் நின்றவர், “இவர்கள் பூமியெங்கும் சுற்றிப் பார்த்து வரும்படி கர்த்தரினால் அனுப்பப்பட்டவர்கள்” என எனக்கு விளக்கினார்.
11பின்னர் அவர்கள் மிருதுச் செடிகள் மத்தியில் நின்ற கர்த்தரின் தூதனிடம் போய், “நாங்கள் பூமியெங்கும் சுற்றிப் பார்த்தோம். பூமி முழுவதும் சமாதானமும் அமைதியும் நிலவுவதைக் கண்டோம்” என்றார்கள்.
12அப்போது கர்த்தரின் தூதன், “சேனைகளின் கர்த்தாவே, எழுபது ஆண்டுகளாக கோபமாயிருந்த நீர், எருசலேமின்மீதும் யூதாவின் நகரங்கள்மீதும் இன்னும் எவ்வளவு காலம் கருணை காட்டாதிருப்பீர்?” எனக் கேட்டான். 13அதற்குக் கர்த்தர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம் கனிவும் ஆறுதலுமான வார்த்தைகளால் பேசினார்.
14அதன் பின்னர் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன், “இந்த வார்த்தைகளை அறிவித்திடு! சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: நான் எருசலேமின்மீதும், சீயோனின்மீதும் அதீத வைராக்கியம் கொண்டிருக்கிறேன். 15பாதுகாப்புடன் இருக்கின்றோம் எனக் கருதிய பிற இனத்தவர்மீது நான் கடுங்கோபம் கொண்டுள்ளேன்; ஏனெனில் நான் என் மக்கள்மீது#1:15 என் மக்கள்மீது – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. சிறிதளவு கோபமாயிருந்தபோது அவர்கள் பேரழிவை ஏற்படுத்தினார்கள்.
16“ஆகையால் கர்த்தர் சொல்வது இதுவே: ‘நான் கருணையுடன் எருசலேமுக்குத் திரும்பி வருவேன்; அங்கே எனது வீடு#1:16 வீடு – ஆலயம் மீளக் கட்டியெழுப்பப்படும். எருசலேமின்மீது அளவுநூல் பிடிக்கப்படும்’ என்று சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.
17“மேலும் அறிவிக்க வேண்டியதாவது: சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: ‘என் பட்டணங்கள் மீண்டும் செல்வச் செழிப்பினால் பொங்கி வழியும்; கர்த்தர் மறுபடியும் சீயோனைத் தேற்றி எருசலேமைத் தெரிவுசெய்வார்’ ” என்றான்.
நான்கு கொம்புகளும் நான்கு கைவினைஞரும்
18அதன் பின்னர் நான் பார்த்தபோது அங்கே எனக்கு முன்னால் நான்கு கொம்புகள் இருந்தன. 19நான் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இவை என்ன?” என்று கேட்டேன்.
அதற்கு அவன், “யூதாவையும், இஸ்ரயேலையும், எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் இவையே” என்று பதிலுரைத்தான்.
20அதன் பின்னர் கர்த்தர் எனக்கு கைவினைஞர்கள் நால்வரைக் காண்பித்தார். 21“இவர்கள் என்ன செய்ய வருகின்றார்கள்?” என நான் கேட்டேன்.
அதற்கு அவர், “யூதாவில் எவனும் தன் தலையைத் தூக்காதவாறு, யூதாவைச் சிதறடித்த பிற இனங்களான இந்தக் கொம்புகளை வெட்டி முறிக்கவும், அவர்களைப் பயமுறுத்தவுமே இந்தக் கைவினைஞர்கள் வருகின்றார்கள்” என்று பதிலுரைத்தார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சகரியா 1: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.