யாத்திராகமம் 29
29
மதகுருக்களின் அர்ப்பணிப்பு
1“அவர்கள் மதகுருக்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை பரிசுத்தப்படுத்துவதற்காக நீ செய்யவேண்டியது இதுவே: குறைபாடற்ற ஒரு இளங்காளையையும், இரண்டு செம்மறியாட்டுக்கடாக்களையும் எடுத்துக்கொள். 2புளிப்பூட்டப்படாத மெல்லிய கோதுமை மாவினால் அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துப் பிசைந்த அடைகளையும், எண்ணெய் கலந்த அதிரசங்களையும் தயாரித்துக் கொள்வாயாக. 3அவற்றை ஒரு கூடையில் வைத்து அந்தக் காளையுடனும் இரண்டு செம்மறியாட்டுக்கடாக்களுடனும் காணிக்கையாகக் கொடு. 4பின்பு நீ ஆரோனையும், அவன் மகன்மாரையும் இறைபிரசன்னக் கூடாரத்தின் வாசலின் முன்பாக வரவழைத்து, அவர்களைத் தண்ணீரால் கழுவ வேண்டும். 5அதன் பின்னர் ஆடைகளை எடுத்து, உள் அங்கி, ஏபோத்துடன் அணியும் அங்கி, ஏபோத், மார்பணி ஆகியவற்றை ஆரோனுக்கு அணிவித்து, திறமையாக நெய்யப்பட்ட இடைப்பட்டியினால் ஏபோத்தை அவனுக்குக் கட்டி விடு. 6அவனது தலையில் தலைப்பாகையை அணிவித்து, அதன்மேல் பரிசுத்த தங்கக் கிரீடத்தையும் வைக்கவேண்டும். 7பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, அவன் தலையின்மீது ஊற்றி, அவனை அபிஷேகம் செய்வாயாக. 8அதன் பின்னர் நீ அவனது மகன்மாரை வரவழைத்து, அவர்களுக்கு உள் அங்கிகளை அணிவித்து, 9தலைப்பாகைகளையும் அணிவிக்க வேண்டும். பின்னர் ஆரோனுக்கும் அவன் மகன்மாருக்கும் இடைப்பட்டிகளைக் கட்டவேண்டும். குருத்துவம் ஒரு நிரந்தர நியமமாக#29:9 நிரந்தர நியமமாக அல்லது நிரந்தர நியமத்தால் அவர்களுக்கு உரியதாயிருக்கிறது.
“இவ்விதம் நீ ஆரோனையும், அவன் மகன்மாரையும் திருநிலைப்படுத்த வேண்டும்.
10“அதன் பின்னர் இறைபிரசன்னக் கூடாரத்தின் முன்பாக காளையைக் கொண்டுவர வேண்டும். ஆரோனும், அவனது மகன்மாரும் தங்கள் கைகளை காளையின் தலைமீது வைக்கட்டும். 11அதன் பின்னர், நீ இறைபிரசன்னக் கூடாரத்தின் வாசலில் கர்த்தர் முன்பாக அந்தக் காளையைக் கொன்று, 12அந்தக் காளையின் இரத்தத்தில் சிறிதளவை எடுத்து, உன் கை விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மீது பூசி, மீதியுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்ற வேண்டும். 13பின்பு அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்புகள் அனைத்தையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரு சிறுநீரகங்களையும், அதன்மீதுள்ள கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின்மீது எரிக்க வேண்டும். 14ஆனால் காளையின் இறைச்சியும், தோலும், குடலும் முகாமுக்கு வெளியே எரிக்கப்பட வேண்டும். இது பாவநிவாரணபலி.
15“அதன் பின்னர் செம்மறியாட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து, அதன் தலைமீது ஆரோனும், அவன் மகன்மாரும் தங்கள் கைகளை வைக்கவேண்டும். 16பின்பு அந்த செம்மறியாட்டுக்கடாவைக் கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 17அந்த செம்மறியாட்டுக்கடாவை துண்டுகளாக வெட்டி, அதன் உட்பாகங்களையும், கால்களையும் கழுவி, அவற்றை மற்றைய இறைச்சித் துண்டுகளுடனும், அதன் தலையுடனும் வைக்கவேண்டும். 18அதன் பின்னர் முழு செம்மறியாட்டுக்கடாவையும் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். இது கர்த்தருக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண தகனபலியாகும்.
19“அதன் பின்னர் மற்றைய செம்மறியாட்டுக்கடாவையும் கொண்டுவா. ஆரோனும் அவன் மகன்மாரும் அதன் தலையின்மீது தங்கள் கைகளை வைக்கவேண்டும். 20அதன் பின்னர் அந்தக் கடாவையும் வெட்டிக் கொன்று, அதன் இரத்தத்தில் சிறிதளவை ஆரோனுடைய வலதுகாது மடலிலும் அவன் மகன்மாரின் வலதுகாதின் மடலிலும், அவர்களது வலதுகையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூச வேண்டும். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லாப் பக்கங்களிலும் தெளிக்க வேண்டும். 21பலிபீடத்திலுள்ள இரத்தத்திலும், அபிஷேக எண்ணெயிலும் சிறிதளவு எடுத்து, ஆரோனின்மீதும் அவன் ஆடைகளின்மீதும், அவன் மகன்மாரின்மீதும் அவர்களது ஆடைகளின்மீதும் தெளிக்க வேண்டும். அப்போது அவனும், அவன் மகன்மாரும் பரிசுத்தமாக்கப்படுவார்கள்; அவர்களது உடைகளும் பரிசுத்தமாக்கப்படும்.
22“அந்தச் செம்மறியாட்டின் கொழுப்பையும், அதன் கொழுப்புள்ள வாலையும், அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள கொழுப்பையும், இரு சிறுநீரகங்களையும், அவற்றை மூடியுள்ள கொழுப்பையும், வலதுபக்கத் தொடையையும் எடுக்க வேண்டும். (இதுவே திருநிலைப்படுத்தலுக்கான செம்மறியாட்டுக்கடா) 23அவற்றுடன் கர்த்தர் முன்பாக வைக்கப்பட்டிருந்த புளிப்பூட்டப்படாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து ஒரு அப்பத்தையும், எண்ணெய் சேர்த்து சுடப்பட்ட ஒரு அடையையும், ஒரு அதிரசத்தையும் எடுத்துக்கொள். 24அவை எல்லாவற்றையும் ஆரோனின் கைகளிலும், அவனுடைய மகன்மாரின் கைகளிலும் கொடுத்து கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும்பலியாக அசைவாட்ட வேண்டும். 25பின்னர் அவற்றை அவர்களின் கைகளிலிருந்து வாங்கி, பலிபீடத்தின் மேலுள்ள தகனபலிகளுடன் கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு பலியாக எரிக்க வேண்டும். 26ஆரோனின் திருநிலைப்படுத்தலுக்கான செம்மறியாட்டுக்கடாவின் நெஞ்சுப் பகுதியை எடுத்து, பின்னர் அதைக் கர்த்தர் முன்னிலையில் அசைவாட்டும்பலியாக அசைவாட்ட வேண்டும். இது உன் பங்காயிருக்கும்.
27“ஆரோனினதும், அவன் மகன்மாரினதும் திருநிலைப்படுத்தலுக்கான செம்மறியாட்டுக்கடாவின் பாகங்களாகிய அசைவாட்டப்பட்ட நெஞ்சுப் பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் மிகவும் பரிசுத்தமான பங்காக வேறுபிரித்து வைக்கவேண்டும். 28இஸ்ரயேலர்கள் சமாதானபலிகளை கர்த்தருக்குச் செலுத்தும் போதெல்லாம் இந்தப் பாகங்கள் ஆரோனுக்கும் அவன் மகன்மாருக்கும் கொடுக்கப்படவேண்டிய பங்காகும்.
29“ஆரோனுக்குப் பின்னர் அவனது பரிசுத்த ஆடைகள் அவனின் சந்ததிக்கு சொந்தமாகும். அவர்கள் அவற்றை அணிந்து, அபிஷேகம் செய்யப்பட்டு, திருநிலைப்படுத்தப்படுவார்கள். 30அவனுக்குப் பின்னர் அவனுக்குரிய இடத்தில் மதகுருவாக பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்கு இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் வரும் அவனுடைய மகன், அந்த ஆடைகளை ஏழு நாட்கள் அணிய வேண்டும்.
31“மதகுருக்களின் திருநிலைப்படுத்தலுக்கான செம்மறியாட்டுக்கடாவை எடுத்து, அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்திலே சமைக்க வேண்டும். 32ஆரோனும் அவன் மகன்மாரும், ஆட்டுக்கடாவின் இறைச்சியையும் கூடையிலுள்ள அப்பங்களையும் இறைபிரசன்னக் கூடாரத்தின் வாசலில் உண்ண வேண்டும். 33பரிசுத்தப்படுத்துவதற்கும் திருநிலைப்படுத்துவதற்குமான பாவநிவர்த்தியாக செலுத்தப்பட்ட அக்காணிக்கைகளை அவர்களே உண்ண வேண்டும். அவை பரிசுத்தமுள்ளவையாகையால், வேறு எவருமே அவற்றை உண்ணக் கூடாது. 34திருநிலைப்படுத்தலுக்கான அந்த செம்மறியாட்டுக்கடாவின் இறைச்சியிலோ அல்லது அப்பங்களிலோ ஏதாவது காலைவரை எஞ்சியிருந்தால், அவற்றை எரித்துவிட வேண்டும். ஏனெனில் அவை பரிசுத்தமானவை, அவற்றை உண்ணக் கூடாது.
35“ஆரோனையும் அவன் மகன்மாரையும் திருநிலைப்படுத்தும்படி, நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்களுக்குச் செய்வதற்கு ஏழு நாட்கள் எடுத்துக்கொள். 36ஒவ்வொருநாளும் பாவநிவர்த்தி செய்யும்படி, பாவநிவாரணபலியாக ஒரு காளையைப் பலியிடு. பாவநிவர்த்தி செய்து பலிபீடத்தை பரிசுத்தப்படுத்து. அதை அர்ப்பணம் செய்வதற்காக எண்ணெயால் அபிஷேகம் செய்து பரிசுத்தப்படுத்து. 37பலிபீடத்துக்காக ஏழு நாட்கள் பாவநிவர்த்தி செய்து அதை பரிசுத்தப்படுத்து. அப்போது பலிபீடம் மகாபரிசுத்தமுள்ளதாயிருக்கும். அதைத் தொடுவது எதுவானாலும் அது பரிசுத்தமாகும்.
38“நீங்கள் ஒவ்வொருநாளும் தொடர்ந்து ஒரு வயதுடைய இரு செம்மறியாட்டுக்குட்டிகளை பலிபீடத்தில் பலியாகச் செலுத்த வேண்டும். 39காலையில் ஒரு செம்மறியாட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு செம்மறியாட்டுக்குட்டியையும் பலி செலுத்துவாயாக. 40முதல் செம்மறியாட்டுக்குட்டியுடன் பத்தில் ஒரு எப்பா#29:40 ஒரு எப்பா – சுமார் 1.6 கிலோ கிராம். அளவான மெல்லிய மாவை, நான்கில் ஒரு ஹின்#29:40 ஒரு ஹின் – சுமார் 1 லீட்டர் அளவான இடித்துப் பிழிந்த ஒலிவ எண்ணெயைவிட்டுப் பிசைந்து, அதையும் நான்கில் ஒரு ஹின் அளவான திராட்சைரசத்தையும் பானபலியாகச் செலுத்த வேண்டும். 41சூரியன் மறையும் வேளையிலும் காலையில் எடுத்த அதே தானியபலியுடனும், அதற்குரிய பானபலியுடனும், மற்றைய செம்மறியாட்டுக்குட்டியை, கர்த்தருக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமணபலியாக பலியிட வேண்டும்.
42“நீங்கள் இந்தத் தகனபலியை தலைமுறை தோறும் இறைபிரசன்னக் கூடாரத்தின் வாயிலிலே கர்த்தருக்கு முன்பாக என்றென்றும் தொடர்ந்து செலுத்த வேண்டும். அங்கே நான் உன்னைச் சந்தித்து உன்னோடு பேசுவேன். 43நான் இஸ்ரயேல் மக்களையும் அங்கே சந்திப்பேன். அந்த இடம் எனது மகிமையால் பரிசுத்தப்படுத்தப்படும்.
44“இவ்வாறு இறைபிரசன்னக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் நான் பரிசுத்தப்படுத்துவேன். மதகுருக்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி ஆரோனையும், அவன் மகன்மாரையும் பரிசுத்தப்படுத்துவேன். 45இப்படிச் செய்து இஸ்ரயேலர் மத்தியில் நான் குடியிருந்து அவர்களின் இறைவனாயிருப்பேன். 46அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த, அவர்களுடைய இறைவனாகிய கர்த்தர் நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்களுடைய இறைவனாகிய கர்த்தர் நானே.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யாத்திராகமம் 29: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.