யாத்திராகமம் 30
30
தூபபீடம்
1“நறுமணத்தூளை எரிப்பதற்கு ஒரு தூபபீடத்தை சித்தீம் மரத்தால் செய்வாயாக. 2இது ஒரு முழம் நீளம், ஒரு முழம் அகலம் உடைய சதுர வடிவில், இரு முழம் உயரம் உடையதாக இருக்கவேண்டும்.#30:2 நீளம், அகலம் சுமார் 1 1/2 அடி, அல்லது 45 சென்ரிமீற்றர். உயரம் 3 அடி அல்லது 95 சென்ரிமீற்றர் அதன் கொம்புகள் அதனுடன் இணைந்து இருக்கவேண்டும். 3அதன் மேற்புறத்தையும், அதன் எல்லாப் பக்கங்களையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத் தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு வார்ப்படத்தை அமைப்பாயாக. 4தூபபீடத்தின் தங்கத்தினாலான வார்ப்படத்துக்குக் கீழே இரண்டு தங்க வளையங்களை இரு பக்கங்களிலும் அமைத்து, அதைச் சுமப்பதற்கான தடிகளை அதற்குள் கொழுவும்படி எதிரெதிராக அமைப்பாயாக. 5அந்தத் தடிகளையும் சித்தீம் மரத்தினால் செய்து, தங்கத் தகட்டால் மூடுவாயாக. 6தூபபீடத்தை சாட்சிப் பெட்டியின் முன் இருக்கும் திரைக்கு முன்னால் வைப்பாயாக. அது நான் உன்னைச் சந்திக்கும் இடமான, சாட்சிப் பெட்டியை மூடியிருக்கும் கிருபாசனத்தின் முன்பாக இருக்கும் இடமாகும்.
7“ஆரோன் காலைதோறும் விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போது நறுமணத் தூபம் காட்ட வேண்டும். 8பொழுதுசாயும் நேரத்தில் ஆரோன் விளக்கேற்றும்போது, திரும்பவும் தூபம் காட்ட வேண்டும். இவ்விதமாக தலைமுறை தோறும் இந்த நறுமணத் தூபம் கர்த்தருக்கு முன்பாக ஒவ்வொருநாளும் புகைந்துகொண்டிருக்கும். 9இவற்றைவிட அந்நிய தூபத்தையோ, தகனபலியையோ, தானியபலியையோ இப்பீடத்தின்மேல் செலுத்தாதே. அதன்மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம். 10ஆரோன் வருடத்துக்கு ஒருமுறை இப்பீடத்தின் கொம்புகளின்மேல் பாவநிவர்த்தி செய்யவேண்டும். இந்த வருடாந்த பாவநிவர்த்தி, பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் தலைமுறை தோறும் செய்யப்பட வேண்டும். இந்தத் தூபபீடம் கர்த்தருக்கு மகாபரிசுத்தமானது” என்றார்.
பாவநிவர்த்திப் பணம்
11மேலும் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: 12“நீ இஸ்ரயேலரைக் குடிசனமதிப்பீடு செய்யும்போது, அவர்கள் எண்ணிக் கணக்கிடப்படுகையில் ஒவ்வொருவரும், தன் உயிருக்காக ஒரு மீட்புப் பணத்தைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அப்போது நீ அவர்களை எண்ணிக் கணக்கிடுகையில் அவர்கள்மீது ஒருவித கொள்ளைநோயும் வராது. 13எண்ணிக் கணக்கிடப்படுகின்றவன் ஏற்கெனவே எண்ணிக் கணக்கிடப்பட்டவர்களிடம் கடந்து செல்லும்போது, பரிசுத்த இடத்தின் அளவின்படி அரைச் சேக்கல்#30:13 அரைச் சேக்கல் – சுமார் 5.8 கிராம். கொடுக்க வேண்டும். ஒரு சேக்கல் இருபது கேரா நிறையுள்ளது. இந்த அரைச் சேக்கல் கர்த்தருக்கான ஒரு காணிக்கையாகும்.#30:13 கேரா என்பது எடையின் மிகச் சிறிய அலகு. இது 0.6 கிராம் வெள்ளியைவிடக் குறைவானது 14இருபது வயதுடையவர்களும், அதற்கு மேற்பட்டவர்களுமான எண்ணிக் கணக்கிடப்படுகின்றவர்கள் அனைவரும் கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொடுக்க வேண்டும். 15உங்கள் உயிர்களுக்குப் பாவநிவர்த்தி செய்வதற்கென நீங்கள் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தர்கள் அரைச் சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் கூடாது, ஏழைகள் அதைவிடக் குறைவாகக் கொடுக்கவும் கூடாது. 16நீ பாவநிவர்த்திப் பணத்தை இஸ்ரயேலரிடமிருந்து பெற்று, இறைபிரசன்னக் கூடாரப் பணிக்காக அதைப் பயன்படுத்த வேண்டும். அது உங்கள் உயிர்களுக்குப் பாவநிவர்த்தி செய்யும்படி, கர்த்தர் முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாய் இருக்கும்” என்றார்.
கழுவுவதற்கான தொட்டி
17அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: 18“நீ கழுவுவதற்கென ஒரு வெண்கலத் தொட்டியை வெண்கலக் கால்களுடன் செய். அதைச் இறைபிரசன்னக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் இடையில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும். 19அதிலுள்ள தண்ணீரால் ஆரோனும், அவன் மகன்மாரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவ வேண்டும். 20அவர்கள் நெருப்பினால் கர்த்தருக்கு செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவந்து, இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் போகும்போதும், குருத்துவ ஊழியம் செய்வதற்கெனப் பலிபீடத்தை அணுகும்போதும், தாங்கள் கொல்லப்படாதபடி தண்ணீரினால் கழுவ வேண்டும். 21அவர்கள் மரணிக்காதபடி தங்கள் கைகளையும், கால்களையும் கழுவ வேண்டும் என்ற கட்டளை, ஆரோனுக்கும் அவன் சந்ததியினருக்கும் தலைமுறை தோறும் நிரந்தர நியமமாயிருக்கும்.”
அபிஷேக எண்ணெய்
22மேலும் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: 23“நீ பின்வரும் தரமான நறுமணப் பொருட்களை எடுக்க வேண்டும். ஐந்நூறு சேக்கல்#30:23 ஐந்நூறு சேக்கல் – சுமார் 6 கிலோ கிராம் திரவ வெள்ளைப்போளம், அதன் அரைப்பகுதி அதாவது இருநூற்றைம்பது சேக்கல்#30:23 இருநூற்றைம்பது சேக்கல் – சுமார் 3 கிலோ கிராம் சுகந்த கறுவாப்பட்டை, இருநூற்றைம்பது சேக்கல், நறுமண வசம்பு 24ஐந்நூறு சேக்கல் இலவங்கப்பட்டை ஆகிய இவையெல்லாம் பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி இருக்கவேண்டும். அத்துடன் ஒரு ஹின்#30:24 ஒரு ஹின் – சுமார் 1 கலன் அல்லது 3.8 லீட்டர் ஒலிவ எண்ணெய் எடுத்துக்கொள். 25இவற்றைக்கொண்டு வாசனைத் தைலம் தயாரிப்போர் செய்வது போல், வாசனைக் கலவையாக பரிசுத்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்துக் கொள். இது பரிசுத்த அபிஷேக எண்ணெயாய் இருக்கும். 26இந்த எண்ணெயை உபயோகித்து இறைபிரசன்னக் கூடாரத்தையும், சாட்சிப் பெட்டியையும் அபிஷேகம் செய். 27மேசையையும், அதிலுள்ள பொருட்களையும், குத்துவிளக்குகளையும், அதன் உபகரணங்களையும், தூபபீடத்தையும் அபிஷேகம் செய்வாயாக. 28தகனபலிபீடத்தையும், அதிலுள்ள அனைத்து பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். 29அவை மகாபரிசுத்தமாயிருக்கும்படியும், அவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாயிருக்கும்படியும் அவற்றை அர்ப்பணம் செய்.
30“அத்துடன் ஆரோனும் அவன் மகன்மாரும், மதகுருக்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அபிஷேகம் செய்து பரிசுத்தப்படுத்து. 31இஸ்ரயேலருக்குச் சொல்ல வேண்டியதாவது: தலைமுறை தோறும் இது எனக்கு பரிசுத்த அபிஷேக எண்ணெயாய் இருக்கவேண்டும். 32இதை ஒரு மனிதனுடைய உடலின்மேல் ஊற்றவோ, இந்தக் கலவை முறைப்படி வேறொரு எண்ணெயைத் தயார்செய்யவோ வேண்டாம். இது பரிசுத்தமானது. நீங்களும் அதைப் பரிசுத்தமாய் எண்ண வேண்டும். 33அதேபோல் நறுமணத் தைலத்தைத் தயாரிக்கும் எவனும், அல்லது மதகுருக்களைத் தவிர வேறு யார்மேலாவது இந்த எண்ணெயைப் பூசும் எவனும் தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்” என்றார்.
நறுமணத்தூள்
34பின்னும் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நறுமணப் பொருட்களை எடுத்துக்கொள். பிசின் கலந்த குங்கிலியம், சாம்பிராணி, அல்பான்பிசின், சுத்தமான நறுமணமுள்ள குங்கிலியம் ஆகியவற்றில் சம அளவு எடுத்து, 35இவற்றை நறுமணத் தைலம் தயாரிப்பவனின் வேலையைப் போல் வாசனைக் கலவையாக நறுமணத்தூளை செய்துகொள்ள வேண்டும். அது உப்பிடப்பட்டு, தூய்மையும், பரிசுத்தமுமாய் இருக்கவேண்டும். 36அதில் சிறிதளவை அரைத்துத் தூளாக்கி, நான் உன்னைச் சந்திக்கும் இடமான இறைபிரசன்னக் கூடாரத்திலுள்ள சாட்சிப் பெட்டிக்கு முன்பாக வைக்கவேண்டும். அது உங்களுக்கு மகாபரிசுத்தமுள்ளதாய் இருக்கும். 37இந்தக் கலவை முறையைக்கொண்டு உங்களுக்கென எந்த நறுமணத்தூளையும் தயாரிக்கக் கூடாது. இதைக் கர்த்தருக்குப் பரிசுத்தமானதாக எண்ணிக்கொள்ளுங்கள். 38அதன் வாசனையை அனுபவிக்கும்படி இதுபோன்ற எதையாவது தயாரிக்கும் எவனும், தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்” என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யாத்திராகமம் 30: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.