தானியேல் 3

3
நேபுகாத்நேச்சாரின் தங்கச்சிலை
1நேபுகாத்நேச்சார் அரசன் அறுபது முழம் உயரமும், ஆறு முழம் அகலமும்#3:1 சுமார் 90 அடி நீளம், 9 அடி அகலம் அல்லது 27 மீற்றர் நீளம், 2.7 மீற்றர் அகலம் கொண்டதாக ஒரு தங்க உருவச்சிலையைச் செய்வித்து, அதைப் பாபிலோன் மாகாணத்திலுள்ள, தூரா என்னும் சமவெளியில் நிறுத்தினான். 2அதன் பின்னர் அவன், தான் நிறுத்திய உருவச்சிலையின் அர்ப்பணிப்புக்கு சிற்றரசர்கள், நிர்வாக உயர் அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நியாயாதிபதிகள், உபநியாயாதிபதிகள், மற்றும் அனைத்து மாகாண அதிகாரிகள் ஆகியோர் ஒன்றாய் கூடிவர வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்தான். 3அதன்படி சிற்றரசர்கள், நிர்வாக உயர் அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நியாயாதிபதிகள், உபநியாயாதிபதிகள் மற்றும் அனைத்து மாகாண அதிகாரிகளும் நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தியிருந்த உருவச்சிலையின் அர்ப்பணிப்புக்காக வந்துசேர்ந்து, அதற்கு முன்பாக நின்றார்கள்.
4அப்போது அரச அறிவிப்பாளன் உரத்த குரலில், “நாட்டு மக்களே, இனங்களே, பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களே, நீங்கள் செய்யவேண்டும் என்று அரசன் கட்டளையிட்டிருப்பது இதுவே: 5கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் முதலான எல்லாவித இசைக்கருவிகளின் சத்தத்தை நீங்கள் கேட்டவுடன், நீங்கள் எல்லோரும் இங்கு கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தி வைத்திருக்கும் தங்கச்சிலையை வணங்க வேண்டும். 6அவ்வாறு கீழே விழுந்து வணங்காதவன் எவனோ, அவன் உடனே பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் வீசப்படுவான்” என்றான்.
7ஆகவே கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ் ஆகியவற்றின் சத்தத்தையும், எல்லாவித இசைகளையும் கேட்டபோது, அனைத்து மக்களும், இனங்களும், பல்வேறு மொழிகளையும் பேசும் மக்களும் கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்திய அந்தத் தங்கச்சிலையை வணங்கினார்கள்.
8அந்த நேரத்தில் சோதிடர் சிலர் முன்னே வந்து, யூதர்கள்மீது அபாண்டமாக பழி சுமத்தினார்கள். 9அவர்கள் நேபுகாத்நேச்சார் அரசனிடம், “அரசே, நீர் நீடூழி வாழ்வீராக! 10அரசே! கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் ஆகியவற்றின் ஒலியையும், மற்றும் எல்லாவித இசையையும் கேட்டதும், எல்லோரும் கீழே விழுந்து தங்கச்சிலையை வணங்க வேண்டும் என்று நீர் கட்டளையிட்டீர். 11அவ்வாறு எவனாவது கீழே விழுந்து வணங்காது போனால், அவன் பற்றியெரிகிற நெருப்புச்சூளையினுள் வீசப்பட வேண்டும் எனவும் கட்டளையிட்டீர். 12ஆனால் அரசே! பாபிலோன் மாகாணங்களுக்குத் தலைவர்களாக உம்மால் நியமிக்கப்பட்ட யூதர்கள் சிலர் இருக்கின்றார்கள். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய இவர்கள் உமக்குச் செவிசாய்க்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் உமது தெய்வங்களுக்குப் பணி செய்யாமலும், நீர் நிறுத்திய தங்கத்தினாலான உருவச்சிலையை வணங்காமலும் இருக்கின்றார்கள்” என முறையிட்டார்கள்.
13அதைக் கேட்ட அரசன் நேபுகாத்நேச்சார் கடுங்கோபம்கொண்டு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்துவரக் கட்டளையிட்டான். எனவே அவர்கள் அரசனின் முன்னால் கொண்டுவரப்பட்டார்கள். 14அப்போது நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் எனது தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், நான் நிறுத்தியுள்ள தங்கச்சிலையை வணங்காமலும் இருப்பது உண்மையா?” என்று கேட்டான். 15“இப்போதும் கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் ஆகியவற்றின் ஒலியையும், மற்றைய எல்லாவித இசைகளையும் நீங்கள் கேட்கும்போது, கீழே விழுந்து நான் நிறுத்திய சிலையை வணங்க ஆயத்தமானால் உங்களுக்கு நல்லது. அவ்வாறு நீங்கள் வணங்காவிட்டால், உடனே பற்றியெரிகின்ற நெருப்புச்சூளையினுள் வீசப்படுவீர்கள். அப்போது உங்களை என் கையிலிருந்து விடுவிக்கக்கூடிய தெய்வம் எது?” என்றான்.
16அதற்கு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அரசனிடம், “ஓ நேபுகாத்நேச்சார் அரசரே! இதைப்பற்றி உம்மோடு வாதாடவேண்டிய அவசியமில்லை. 17அரசே, நாங்கள் பற்றியெரிகின்ற நெருப்புச்சூளையினுள் வீசப்பட்டால், நாங்கள் ஆராதிக்கின்ற இறைவன் அதிலிருந்து எங்களைக் விடுவிக்கக்கூடியவராக இருக்கின்றார். உமது கையிலிருந்தும் அவர் எங்களை விடுவிப்பார். 18அவ்வாறு விடுவிக்காமல் போனாலும், அரசே, நாங்கள் உமது தெய்வங்களுக்கு பணி செய்யவோ, நீர் நிறுத்திய தங்க சிலையை வணங்கவோ மாட்டோம். இதை நீர் அறிய வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம்” என்றார்கள்.
19அப்போது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர்மீது நேபுகாத்நேச்சார் அரசன் கடுங்கோபம் கொண்டான். அவர்களைப்பற்றி அவன் கொண்டிருந்த மனநிலை மாற்றமடைந்தது. அவன் அந்த சூளையை வழமையை விட ஏழு மடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளையிட்டான். 20பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை பிணைத்துக்கட்டி, பற்றியெரிகிற நெருப்புச்சூளையினுள் வீசும்படி தனது படையிலுள்ள வலிமையான போர்வீரருக்குக் கட்டளையிட்டான். 21அவ்வாறே அவர்கள் எல்லோரும் பிணைத்துக்கட்டப்பட்டு, தாங்கள் அணிந்திருந்த மேலுடைகளோடும், காற்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்றும் உடைகளோடும் பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் வீசப்பட்டார்கள். 22அரசன் தனது கட்டளையை அவசரமாக நிறைவேற்ற விரும்பியதாலும், சூளை மிகவும் வெப்பமாயிருந்ததாலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை மேலே சுமந்து சென்ற வீரர்களை தீச்சுவாலைகள் எரித்து விட்டன. 23அதேவேளை இம்மூவரும் உறுதியாக பிணைத்துக்கட்டப்பட்டவர்களாக பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் விழுந்தார்கள்.
24அப்போது அதைப் பார்த்துக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் அரசன் அதிர்ச்சியடைந்து துள்ளி எழுந்து, தனது ஆலோசகர்களிடம், “நாம் மூவரைத்தானே கட்டி நெருப்புச்சூளையினுள் போட்டோம்?” எனக் கேட்டான்.
அதற்கு அவர்கள், “நிச்சயமாக! ஆம் அரசே!” என பதிலளித்தார்கள்.
25அவன், “இதோ பாருங்கள், நான்கு பேர் நெருப்பின் நடுவிலே நடந்து திரிவதைக் காண்கின்றேன். அவர்கள் கட்டவிழ்க்கப்பட்டவர்களாக, எதுவித பாதிப்பும் இன்றி இருக்கின்றார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கின்றான்” என்றான்.
26அப்போது நேபுகாத்நேச்சார் பற்றியெரிகின்ற நெருப்புச்சூளையின் வாயில் அருகே நெருங்கிப்போய், “சாத்ராக்கே, மேஷாக்கே, ஆபேத்நேகோவே, அதிஉன்னதமான இறைவனின் அடியவர்களே! உடனே வெளியேறி இங்கே வாருங்கள்” என்று சத்தமிட்டான்.
அவ்வாறே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள். 27அப்போது சிற்றரசர்களும், நிர்வாக அதிகாரிகளும், ஆளுநர்களும், அரச ஆலோசகர்களும் அவர்களைச் சுற்றி நெருங்கி வந்தார்கள். நெருப்பு அவர்களுடைய உடலுக்கு ஒரு தீங்குகூட விளைவிக்காததையும், அவர்களது தலைமுடி கருகாமல் இருந்ததையும் கண்டார்கள். அவர்கள்மேல் நெருப்பின் புகை வாடையும் இருக்கவில்லை.
28அப்போது நேபுகாத்நேச்சார் சொன்னதாவது: “தமது தூதனை அனுப்பி, தமது அடியவர்களை விடுவித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் இறைவனுக்குத் துதி உண்டாவதாக! அவர்கள் தங்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து அரச கட்டளையை எதிர்த்து நின்றார்கள். தங்கள் இறைவனைத் தவிர வேறு தெய்வத்தை வணங்காமலும், பணிந்துகொள்ளாமலும் இருந்து, அதற்காக தங்கள் உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள். 29ஆகவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் இறைவனுக்கு எதிராக எதையாவது கூறும் எந்த நாட்டு மக்களும், பிறநாட்டவர்களும், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களும் உடல் துண்டாடப்பட்டு கொலை செய்யப்படுவர். அவர்களுடைய வீடுகளும் இடிபாடுகளின் குவியலாக்கப்படும். இது எனது உறுதியான கட்டளை. ஏனெனில், இவ்விதமாகக் காப்பாற்றக்கூடிய வேறு எந்த தெய்வமும் இல்லை” என்றான்.
30அதன் பின்னர் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு பாபிலோன் மாகாண ஆட்சியில் பதவி உயர்வை அரசன் கொடுத்தான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தானியேல் 3: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்