தானியேல் 2

2
நேபுகாத்நேச்சாரின் கனவு
1நேபுகாத்நேச்சார் தனது ஆட்சியின் இரண்டாம் வருடத்தில் கனவுகளைக் கண்டதனால், அவனது சிந்தனை குழம்பியது; உறக்கம் அவனை விட்டுச் சென்றது#2:1 விட்டுச் சென்றது – முற்றாக உறக்கமின்றித் தவித்தான் என்று பொருள்.. 2ஆகவே அரசன், தான் கனவுகளில் எவற்றைக் கண்டான் என்று தனக்குச் சொல்லும்படி தன் நாட்டிலிருந்த மந்திரவாதிகளையும், மாந்திரீகரையும், சூனியக்காரரையும், சோதிடரையும்#2:2 சோதிடரையும் கல்தேயர்கள். 4ம், 5ம் வசனங்களிலும் உள்ளது. அழைத்து வரும்படி கட்டளையிட்டான். அவர்கள் அரசன் முன்பாக வந்து நின்றபோது, 3அரசன் அவர்களிடம், “நான் ஒரு கனவு கண்டேன். அது என் சிந்தனையைக் குழப்பமடையச் செய்கின்றது. கனவின் அர்த்தம் என்னவென்று புரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கின்றேன்” என்றான்.
4அப்போது சோதிடர்கள், “அரசே, நீர் நீடூழி வாழ்வீராக! உமது பணியாளர்களான எங்களுக்கு கனவைச் சொல்வீராக! அப்போது நாங்கள் அதன் விளக்கத்தைச் சொல்வோம்” என்றார்கள்.#2:4 இந்த வசனத்திலிருந்து 7ம் அதிகாரத்தின் இறுதிவரை அரமேய மொழியில் எழுதப்பட்டுள்ளது.
5அதற்கு அரசன் சோதிடர்களிடம், “எனது உறுதியான தீர்மானம் இதுவே: எனது கனவைச் சொல்லி, அதன் பின்னர் அதற்குரிய விளக்கத்தையும் நீங்கள் சொல்லாவிட்டால், நான் உங்கள் உடலைத் துண்டாடிப் போடும்படி செய்வேன். உங்கள் வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்குவேன். 6மாறாக நான் கனவில் கண்டவற்றை சொல்லி, அதற்குரிய விளக்கத்தையும் தெரிவிப்பீர்களாயின், நீங்கள் என்னிடமிருந்து அன்பளிப்புகளையும், வெகுமதிகளையும், பெருமதிப்பையும் பெறுவீர்கள். எனவே நான் கனவில் கண்டவற்றைச் சொல்லி, அதன் விளக்கத்தையும் எனக்குச் சொல்லுங்கள்” என்றான்.
7அவர்களோ மீண்டும், “அரசர் தமது பணியாளர்களான எங்களுக்குக் கனவைச் சொல்வாராக! அப்போது நாங்கள் அதன் விளக்கத்தைக் கூறுவோம்” என்று பதிலளித்தார்கள்.
8அதற்கு அரசன், “நான் உறுதியாய்த் தீர்மானித்திருப்பது என்னவென்பதை நீங்கள் அறிந்திருக்கின்றபடியால், நீங்கள் காலத்தைக் கடத்தப் பார்க்கின்றீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். 9இப்போது கனவைச் சொல்லாமற்போனால், உங்களுக்கு ஒரேயொரு தண்டனைதான் இருக்கின்றது. சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் பொய்யும் புரட்டுமானவற்றை எனக்குச் சொல்லி, காலத்தைக் கடத்தப் பார்க்கின்றீர்கள். எனவே இப்போது நான் கனவில் கண்டவற்றை எனக்குச் சொல்லுங்கள். அப்போது அதன் விளக்கத்தையும் உங்களால் சொல்ல முடியும் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்றான்.
10அதற்குச் சோதிடர்கள் அரசனிடம், “அரசர் கேட்கின்ற காரியத்தைச் செய்யக்கூடியவன் பூமியில் ஒருவனும் இல்லை. மேன்மையும், வல்லமையும் உள்ள எந்த அரசனும், இப்படியான செயலைச் செய்யும்படி எந்தவொரு மந்திரவாதியிடமோ, மாந்திரீகரிடமோ, சோதிடரிடமோ ஒருபோதும் கேட்டதில்லை. 11ஏனெனில் அரசர் கேட்பது மிகக் கடினமானது. மனிதர்களால் அல்ல, தெய்வங்களால் மட்டுமே இதை அரசருக்கு வெளிப்படுத்த முடியும். ஆனால் தெய்வங்கள் மனிதர்கள் மத்தியில் வாழ்வதில்லையே!” என்றார்கள்.
12இது அரசனுக்குக் கோபத்தையும் கடும் சினத்தையும் மூட்டியது. அதனால் பாபிலோனில் இருக்கும் அனைத்து ஞானிகளையும் கொன்றொழிக்கும்படி அரசன் கட்டளையிட்டான். 13அவ்வாறே ஞானிகள் கொலைசெய்யப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அப்போது தானியேலையும் அவனுடைய நண்பர்களையும் கொலை செய்வதற்காக, அவர்களைத் தேடுவதற்கு ஆட்கள் அனுப்பப்பட்டார்கள்.
14பாபிலோனின் ஞானிகளைக் கொலை செய்வதற்கு அரச காவல் தளபதியான ஆரியோக் சென்றபோது, தானியேல் அவனுடன் ஞானத்தோடும் சாதுரியத்தோடும் பேசினான். 15அவன் அரச அதிகாரியிடம், “அரசனால் ஏன் இவ்வளவு கடுமையான ஆணை பிறப்பிக்கப்பட்டது?” என்று விசாரித்தான். அப்போது ஆரியோக், நடந்தவற்றை தானியேலுக்கு விளக்கிக் கூறினான். 16உடனே தானியேல் அரசரின் முன்பாகச் சென்று, அவர் கனவில் கண்டவற்றையும், அதன் விளக்கத்தையும் சொல்லுவதற்கு தனக்குக் கால அவகாசம் தரும்படி அரசரிடம் விண்ணப்பம் செய்தான்.
17பின்பு தானியேல் தன் வீட்டுக்குத் திரும்பிப் போய், நடந்தவற்றைத் தன் நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கு விளக்கிக் கூறினான். 18பாபிலோனின் மற்றைய ஞானிகளுடன் தானியேலும் அவனது நண்பர்களும் கொலை செய்யப்படாமல் தப்பும்படியாக, இந்த மறைபொருளை வெளிப்படுத்தும்படி பரலோகத்தின் இறைவனிடம் இரக்கத்துக்காக மன்றாடும்படி நண்பர்களிடம் கேட்டுக்கொண்டான். 19அப்போது, இரவு வேளையில் ஒரு தரிசனத்தின் மூலமாகத் தானியேலுக்கு அந்த மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அப்போது தானியேல் பரலோகத்தின் இறைவனைத் துதித்து, 20இவ்வாறு சொன்னான்:
“இறைவனின் பெயர் காலகாலமாக துதிக்கப்படுவதாக!
ஞானமும், வல்லமையும் அவருடையவையே.
21காலங்களையும் பருவகாலங்களையும் மாற்றுபவர் அவரே;
அரசர்களை நீக்குபவரும், மாற்று அரசர்களை நியமிப்பவரும் அவரே;
அவரே ஞானிகளுக்கு ஞானத்தையும்,
அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுப்பவர்.
22ஆழமானதும், மறைவானதுமான காரியங்களை வெளிப்படுத்துகின்றவர் அவரே;
இருளில் உள்ளதை அவர் அறிகின்றார்,
ஒளியும் அவருடன் தங்கியிருக்கின்றது.
23என் முற்பிதாக்களின் இறைவனே,
உமக்கு நன்றி செலுத்தி உம்மைத் துதிக்கின்றேன்.
நீர் எனக்கு ஞானமும், வல்லமையும் தந்திருக்கின்றீர்.
நாங்கள் உம்மிடம் கேட்டதை நீர் எனக்கு அறியத் தந்திருக்கின்றீர்.
அரசனின் காரியத்தை நீர் எங்களுக்கு அறியத் தந்திருக்கின்றீர்.”
கனவுக்கு விளக்கம்
24பின்பு பாபிலோனின் ஞானிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றும்படி, அரசனால் நியமிக்கப்பட்ட தளபதியான#2:24 தளபதியான – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது ஆரியோக்கிடம் தானியேல் போய், “நீர் பாபிலோன் ஞானிகளை மரணதண்டனைக்குள்ளாக்க வேண்டாம். என்னை அரசனிடம் அழைத்துச் செல்வீராக! அரசனுடைய கனவின் விளக்கத்தை நான் அவருக்குச் சொல்வேன்” என்றான்.
25ஆரியோக் காலதாமதமின்றி உடனே தானியேலை அரசனிடம் அழைத்துச் சென்று, “உமது கனவுக்கான விளக்கத்தைச் சொல்லக்கூடிய ஒருவனை, யூதாவிலிருந்து நாடுகடத்திக் கொண்டுவரப்பட்டவர்கள் மத்தியில் கண்டுபிடித்தேன்” என்றான்.
26அப்போது அரசன், பெல்தெஷாத்சார் என்று அழைக்கப்பட்ட தானியேலிடம், “எனது கனவில் நான் எதைக் கண்டேன் என்று கூறி, அதன் விளக்கத்தையும் கூறக்கூடிய வல்லமை உனக்கு உண்டோ?” என்று கேட்டான்.
27அதற்குத் தானியேல் அரசனிடம் இவ்விதமாய் பதிலளித்தான், “அரசர் வெளிப்படுத்தும்படி கேட்டிருக்கும் இந்த மறைபொருளை அரசருக்கு விளக்கிக் கூற எந்த ஞானியாலோ, மந்திரவாதியாலோ, சோதிடர்களாலோ, குறிசொல்கின்றவர்களாலோ முடியாது. 28ஆனால் அரசே, மறைபொருட்களை வெளிப்படுத்துகின்ற இறைவன் பரலோகத்தில் இருக்கின்றார். வரப்போகும் நாட்களில் நிகழப்போவதை அவரே நேபுகாத்நேச்சார் அரசருக்கு வெளிப்படுத்துகின்றார். அரசர் படுக்கையில் படுத்திருந்தபோது கண்ட கனவும், உமது சிந்தனையை கடந்து சென்ற தரிசனங்களும் இவையே:
29“அரசே, நீர் படுக்கையிலிருந்தபோது எதிர்காலத்தில் நிகழப்போகும் காரியங்களை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினீர். அந்நேரத்தில் மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர்#2:29 மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் – இறைவனைக் குறிக்கின்றது, இனி நிகழப்போவது என்ன என்பதை உமக்குக் காண்பித்தார். 30வாழ்கின்ற மற்றைய மனிதர்களைவிட நான் மிகுந்த ஞானமுள்ளவன் என்பதால் எனக்கு இந்தக் கனவின் மறைபொருள் வெளிப்படுத்தப்படவில்லை; மாறாக, அரசராகிய நீர் அதற்குரிய விளக்கத்தை அறிந்துகொள்ளும்படியும், உமது மனதில் கடந்துசென்றவற்றை நீர் விளங்கிக்கொள்ளும்படியுமே இந்தக் கனவின் மறைபொருள் எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
31“அரசே, நீர் பார்த்தபோது ஒரு பெரிய சிலை உமக்கு முன்பாக நிற்பதைக் கண்டீர். அது மிகப் பெரியதாகவும், மினுமினுப்பாகவும், தோற்றத்தில் பயங்கரமானதாகவும் இருந்தது. 32அச்சிலையின் தலை சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தது. மார்பும், புயங்களும் வெள்ளியினாலும், வயிறும் தொடைகளும், வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருந்தன. 33அதன் கால்கள் இரும்பினாலும், பாதங்களின் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி மட்பாண்டத்தினாலும்#2:33 மட்பாண்டத்தினாலும் – மூலமொழியில் சுடப்பட்ட களிமண் என்றுள்ளது செய்யப்பட்டிருப்பதையும் நீர் கண்டீர். 34நீர் கவனித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பாறாங்கல் வெட்டியெடுக்கப்பட்டது, ஆயினும் மனித கைகளினால் அல்ல. அந்தப் பாறாங்கல், இரும்பினாலும் மட்பாண்டத்தினாலும் செய்யப்பட்டிருந்த அந்தச் சிலையின் பாதங்களில் மோதி அதை நொறுக்கி விட்டது. 35அதேவேளையில், அதில் இருந்த இரும்பும், மட்பாண்டமும், வெண்கலமும், வெள்ளியும், தங்கமும் தூள்தூளாக உடைக்கப்பட்டு, கோடைகாலத்தில் கதிரடிக்கும் களத்திலிருக்கும் பதரைப் போலாகின. காற்று அவற்றை இருந்த இடம் தெரியாதபடி வாரிக்கொண்டு போனது. ஆனால் சிலையை மோதிய அந்த பாறாங்கல்லோ, மிகப்பெரிய மலையாகி பூமி முழுவதையும் நிரப்பிற்று.
36“கனவு இதுவே. இதன் விளக்கத்தை இப்போது நாம் அரசருக்குத் தெரிவிப்போம். 37அரசே நீர் அரசர்களுக்கெல்லாம் அரசராய் இருக்கின்றீர். பரலோகத்தின் இறைவன் உமக்கு ஆளுகையையும், அதிகாரத்தையும், வல்லமையையும், மகிமையையும் கொடுத்திருக்கிறார். 38மனுக்குலம் அனைத்தையும், வெளியின் மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கைகளில் தந்திருக்கிறார். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், எல்லோருக்கும் மேலாக ஆள்பவராக அவர் உம்மையே ஏற்படுத்தியிருக்கின்றார். தங்கத்தினாலான அந்தத் தலை நீரே.
39“உமக்குப்பின் உம்முடைய ஆட்சியைவிட தரம் குறைந்த ஒரு இராச்சியம் தோன்றும். அதற்கு அடுத்ததாக, வெண்கலத்தினாலான மூன்றாவது இராச்சியம் தோன்றி உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும். 40கடைசியாக, இரும்பைப் போன்ற பலமான ஒரு நான்காம் இராச்சியம் தோன்றும். இரும்பு எல்லாவற்றையும் நொறுக்குவதால், இந்த இராச்சியமும் இரும்பானது பொருட்களைத் துண்டு துண்டாக்குவது போல், மற்றைய இராச்சியங்களையும் துண்டுதுண்டாக நொறுக்கி விடும். 41பாதங்களும், கால் விரல்களும் பாதி மட்பாண்டமும், பாதி இரும்புமாய் இருக்கக் கண்டது போலவே, இதுவும் ஒரு பிளவுபட்ட இராச்சியமாயிருக்கும். ஆயினும், மட்பாண்டத்துடன் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே, இரும்பினுடைய வலிமையில் கொஞ்சம் அதிலும் இருக்கும். 42கால்விரல்கள் பாதி இரும்பும், பாதி மட்பாண்டமுமாயிருந்தது போலவே, அந்த இராச்சியமும் பாதி பலமுடையதாயும், பாதி உடையக் கூடியதாயும் இருக்கும். 43இரும்பு மட்பாண்டத்துடன் கலந்திருக்க நீர் கண்டது போலவே, மக்கள் மற்றவர்களோடு கலப்பினமாக இருப்பார்கள். ஆனாலும் மட்பாண்டத்துடன் இரும்பு கலந்து விடாதது போலவே, அவர்களும் ஒன்றித்திருக்க மாட்டார்கள்.
44“அந்த அரசர்களின் நாட்களில் பரலோகத்தின் இறைவன் இராச்சியம் ஒன்றை எழச் செய்வார். அது அழிக்கப்படவோ, அந்த இராச்சியம் பிற மக்களின் அதிகாரத்தில் விடப்படவோ மாட்டாது. அது முன்பிருந்த இராச்சியங்களையெல்லாம் நொறுக்கி அழித்து முடிவுக்குக் கொண்டுவரும். ஆயினும் அதுவோ என்றென்றும் நிலைத்து நிற்கும். 45மனித கையால் வெட்டியெடுக்கப்படாமல் மலையிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட பாறாங்கல்லைப் பற்றிய தரிசனத்தின் அர்த்தம் இதுவே. அந்தக் கல்லே இரும்பையும், வெண்கலத்தையும், மட்பாண்டத்தையும், வெள்ளியையும், தங்கத்தையும் துண்டு துண்டுகளாக நொறுக்கிப் போட்டது.
“மகத்துவமான இறைவன், எதிர்காலத்தில் நிகழப்போவதை அரசருக்குக் காண்பித்திருக்கிறார். கனவு உண்மையானது, விளக்கமும் நம்பத்தக்கது.”
46அப்போது நேபுகாத்நேச்சார் அரசன், தானியேலுக்கு முன்னால் காலில் வீழ்ந்து அவனுக்கு மரியாதை செலுத்தி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும், தூபம் காட்டவும் கட்டளையிட்டான். 47அவன் தானியேலிடம், “உன்னால் இந்த மறைபொருளை வெளிப்படுத்தக் கூடியதாய் இருந்தபடியால், நிச்சயமாக உன் இறைவனே தெய்வங்களுக்கெல்லாம் இறைவனும், அரசர்களுக்கெல்லாம் ஆண்டவரும், மறைபொருளை வெளிப்படுத்துகின்றவருமாய் இருக்கின்றவர்” என்றான்.
48பின்பு அரசன் தானியேலை ஒரு உயர்ந்த பதவியில் அமர்த்தி, அநேக சிறந்த அன்பளிப்புகளையும் கொடுத்தான். அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் ஆளுநனாக்கி, அதன் அனைத்து ஞானிகளுக்கும் அவனைப் பொறுப்பாகவும் நியமித்தான். 49மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் மாகாண நிர்வாகிகளாக நியமித்தான். தானியேலோ அரச சபையில் இருந்தான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தானியேல் 2: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்